தூய்மை பணிக்கு நவீன கருவிகள் பயன்படுத்த கோரி மக்கள் அதிகாரம் மனு!


நீலகிரி மாவட்டம்,
கோத்தகிரி
சிறப்பு நிலை பேரூராட்சி
தலைவர் ,
செயல் அலுவலர் , மற்றும்
துப்புரவு ஆய்வாளர்

ஆகியோருக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் நீலகிரி மாவட்ட செயலாளர் தோழர் ஆனந்தராஜ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கொடுத்த மனுவில்…

பொது கழிப்பிடங்கள், இலவச பொது சிறுநீர் கழிப்பிடங்கள் ஆகியவற்றில் தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் தங்களது அளப்பரிய பணியால் தூய்மைப்படுத்தி நம்மை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கின்றனர்.

அவர்களுக்கு சிறிய துடப்பம் மட்டுமே கருவியாக வழங்கப்படுகிறது. கையால் தூய்மைப் படுத்துகின்றனர். பல இடங்களில் கையுறைகள் கூட போதுமானளவு வழங்கப் படுவதில்லை.

தூய்மைப் படுத்தும் பணியில் நவீன கருவிகளால், நவீன முறையில் தூய்மை பணி செய்யப்படாததால் கிருமிகள் சேர்ந்து, உப்பு போன்ற படிவம் படிந்து துர்நாற்றத்துடன் நோய் பரப்பும் கூடாரமாக பொது கழிப்பிடங்கள் இருக்கின்றது.

எனவே பொதுக் கழிப்பிடங்கள், சிறுநீர் கழிப்பிடங்களில் கையடக்க வாட்டர் சர்வீஸ் பம்ப் (compressor water service pump) கருவிகள் வாங்கி தூய்மைப்படுத்துவதால் சுகாதாரமான சுற்றுப்புற சூழல், பாதுகாப்பதோடு மக்கள் நோய் தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கப்படுவர்.

தூய்மை பணியாளர்கள் தடை செய்யப்பட்ட முறையான (மனிதக் கழிவுகளை மனிதனே தூய்மைப்படுத்துவது) கையால் தூய்மைப்படுத்தும் அவலத்தில் இருந்தும் விடுபடுவர்.

 

 

எனவே தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நவீன கருவிகள் மூலம் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டு முன்னுதாரண மான பணியை செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று மனு கொடுக்கப்பட்டது.

இதனை வரவேற்ற தலைவர் மற்றும் அதிகாரிகள்.. “சரியான ஆலோசனை வழங்கியுள்ளீர்கள்” என்று அங்கீகரித்ததோடு “இது போன்ற மக்கள் மீதான அக்கறை கொண்ட திட்டங்களை வரவேற்கிறோம்” என்றனர்.

மேலும் சில அருகமை கிராமங்களில் கழிப்பிட வசதி மேம்படுத்தி தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. சரி என ஏற்றுக் கொண்டனர். “மக்கள் பிரச்சனையை கூறுகிறீர்கள் நன்றி !”என்று கூறி தேநீர் கொடுத்து உபசரித்தனர். அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பொது மக்களாகிய நாம் கவனிக்க வேண்டியதும், நடைமுறைப் படுத்த வேண்டியதும் …

நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் நவீன மயமாக்கல், டிஜிட்டல் மயமாக்கல், எந்திரமயமாக்கல், “டிஜிட்டல் இந்தியா” என்று இடையறாது விளம்பரங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் வாகனங்கள் வரை அனைத்திலும் நவீனம் -புதுமை புகுத்தப்படுகிறது.

ஆனால் காலம் காலமாக தூய்மைப் பணியில் மட்டும் தொழிலாளர்கள் நேரடியாக சிறிய அட்டை, துண்டு தகரம், துடைப்பம், மண்வெட்டி போன்ற “நவீன(!)” கருவிகளை கொண்டே தூய்மைப்படுத்த நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். அதிலும் சாதி ரீதியாகவும் குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் தான் குறைந்த கூலிக்கு தூய்மை பணியில் ஈடுபடுத்தி சுரண்டப் படுகின்றனர்.

எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி நேரடியாக, கைகள் கொண்டு தூய்மை பணியில் ஈடுபடுவதால் பணியாளர்கள் புதுப்புது வகையான தொற்றுகள், நோய்கள், காயங்களினால் ஏற்படும் நோய் தொற்று, சுவாசக் கோளாறுகள், தோல் பிரச்சனைகள், மரணங்கள் … என பல்வேறு இன்னல்களை அனுபவிக் கின்றனர்.

மருத்துவ கழிவுகள், உடல் பாகங்கள், இறந்த விலங்குகள் , மனித எச்சங்கள், அழுகிப்போன உணவு கழிவுகள் என பல்வேறு கழிவுகளை கையாள்வதில் மரணத்தை உருவாக்கக் கூடிய நோய்களாலும், மன உளைச்சலாலும், சமூகப் புறக்கணிப்புக்கும் ஆளாக்கப் படுகின்றனர்.

மலக்குழி தொட்டிகள், கழிவு நீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் விஷவாயுத்தாக்கி மரணம் அடையும் அவலமும், அவர்கள் குடும்பம் நடுத்தெருவில் விடப்படும் கொடுமையும் நாள்தோறும் நடப்பதை தடுக்க கூட முடியாமல் கையறு நிலையில் மக்கள் இருக்கின்றோம். அவர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் கூட கிடைப்பதில்லை.

ஆறுதலோ, உயிரிழப்பிற்கு சிறிய நஷ்ட ஈடு மட்டுமே தீர்வல்ல.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமைக்கு எதிராக பெயரளவுக்கு சட்டங்கள் இயற்றப்பட்டாலும் நடைமுறையில் இல்லாதது நம் கண் முன்னே காணப்படும் இழிநிலை.

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்டும், சந்திரனில் குடியேறும் திட்டமும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும், மேட்டுக்குடியினர், அதிகார வர்க்கத்தினர், வீடுகளில் நுழைந்தாலே விளக்கு எரியும் கருவிகளும், கையை நீட்டினாலே தண்ணீர் கொட்டும் சென்சார் தொழில்நுட்பமும் ,ஒரு செல் கிடைத்தாலே இன்னொரு உயிரினத்தை உருவாக்கும் குளோனிங் முறை, ஆளில்லா விமானம், டிரைவர் இல்லா வாகனங்கள் என்று அனைத்திலும் நவீனத்தையும், அறிவியலையும் புகுத்தும் முதலாளித்துவமும், அதை அங்கீகரிக்கும் அரசுகளும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட வேலை முறைகளில்- பார்ப்பனிய சாதியம் மற்றும் முதலாளித்துவ ஆதாய சுரண்டல் அமைப்பு முறையை பாதுகாக்கும் பொருட்டு எந்தவித கூச்சநாச்சமும், இன்றி தொடர்ந்து இந்த அவலங்களை அனுமதிக்கிறது.

எந்த மேட்டுக் குடியினரும் தனது கழிவறையை கூட தானே சுத்தம் செய்வதில்லை. உழைக்கும் மக்களின் வாழ்வாதார “தற்காப்பு” நிலையை, வறுமையை பயன்படுத்தி மேலும் ,மேலும் முதலாளி வர்க்கம் ஆளும் வர்க்கம் சுரண்டுகிறது. இதற்கு இந்திய பார்ப்பனிய சாதிய கட்டமைப்பு சமூகம் உறுதுணை யாகவும் இருக்கிறது.

தூய்மை பணியாளர்கள் வேலைக்கு சேரும் சிலரும், தங்களது ஆளுமையை பயன்படுத்தி தூய்மை பணியில் ஈடுபடாமல் டிரைவர், பிளம்பர், எலக்ட்ரீசியன், அலுவலக உதவியாளர் போன்ற வேலை முறைக்கு மாற்றிக் கொண்டு தப்பித்து விடுகின்றனர்.

ஒடுக்கப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் , சாதியப் படி நிலை யில் அடிமட்டத்தில் உள்ள மக்களும் உங்கள் “தலையெழுத்து” என்று தொடர்ந்து இந்தப் பணியை செய்ய நிர்பந்திக்கப் படுகின்றனர். சமூகப் புறக்கணிப்புக்கும் ஆளாகின்றனர்.

மேற்கண்ட அவலங்களை போக்க …துப்புரவு தூய்மைப் பணிகளில் நவீன கருவிகள் போர்க்கால அடிப்படையில் பயன்படுத்திட வேண்டும். இதற்கென நாடு முழுவதும் கொண்டுவர தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். மக்களாகிய நாம் பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறை கட்டமைப்புக்கு எதிராக களத்திலும் போராட வேண்டும்.

சமூக சிந்தனையுடன் செயல்படும் இளைஞர்களை குழுவாக அமர்த்தி நிதி ஒதுக்கி, அதற்கான ஆய்வுகளை‌ ஊக்குவித்து , நவீன உபகரணங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும்.

தூய்மை பணியாளர்கள் குழந்தைகளுக்கு தனி கவனம் செலுத்தி உயர் கல்விகள் படிக்க வைத்து மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்திட வேண்டும். ஊதியம் , மருத்துவ பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து பிரிவினரையும் அனைத்து வேலைகளையும் ஈடுபடுத்துவதால் மட்டுமே ஒரு சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட வேலை அடிமை முறையிலிருந்து விடுதலை பெற முடியும்.

செய்தி :
மக்கள் அதிகாரம்
நீலகிரி மாவட்டம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here