கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலானப் போரானது பாலஸ்தீன மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 1948 தொடங்கி இன்று வரை பாலஸ்தீன மண்ணில் நடக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கும், அடக்குமுறைக்கும் எதிராக வீரம் செறிந்தப் போரை நடத்தி வரும் பாலஸ்தீன மக்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. அமெரிக்காவும் மற்ற மேற்குலக நாடுகளும் அடாவடித்தனம் செய்யும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
உரிமைக்காகப் போராடுவது பயங்கரவாதமா?
பாலஸ்தீனர்களின் இப்போதைய எழுச்சியான எதிர்ப்பானது அடக்கி வைக்கப்பட்ட கோபத்தின் வெளிப்பாடுதான். இந்திய ஊடகங்கள் இந்த எதிர்ப்பை பயங்கரவாதம் என அலறுகின்றன. பயங்கரவாதம் என்பதற்கு உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை எதுவும் இல்லை. ஒரு தரப்பின் உரிமைப் போராட்டமானது, மற்றொரு தரப்பினருக்கு பயங்கரவாதமாகத் தெரிகிறது.
பயங்கரவாதம் மற்றும் அதன் நவீன வெளிப்பாடு பற்றிப் பேராசிரியர் பென்னோ டெஷ்கே, “நவீன பயங்கரவாதம் என்பது முறைசாரா பேரரசுகளின் காலகட்டத்தை சேர்ந்தது. மேலும் பயங்கரவாதம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் மிகச்சிறந்த வடிவமாக மாறி உள்ளது” என்கிறார். முறையான பேரரசுகளின் காலகட்டத்தில் ஆயுதம் ஏந்தியப் போராட்டம் என்பது ஒரு வகையான ஆதிக்க எதிர்ப்புப் போராக இருந்தது. எதிரிகள் தங்களது நிலத்தை ஆக்கிரமித்ததற்கு எதிராக நடத்தப்பட்டப் கொரில்லா வகையானப் போராகவும் அது இருந்தது.
இந்தியாவில் பகத்சிங், ராம் பிரசாத் பிஸ்மில், அஸ்வகுல்லாகான் போன்றவர்கள் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு கழகம் (Hindustan Socialist Republic Association) அமைப்பை நடத்தினர். இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆயுதம் ஏந்தியப் போராட்டத்தை நடத்த விழைந்தனர். நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய இராணுவமும், இலங்கையில் உருவான விடுதலைப் புலிகள் அமைப்பும் இந்த வகைதான். இதே போலத்தான் சுதந்திர பாலஸ்தீனத்துக்காக நடக்கும் போராட்டமானது பயங்கரவாதம் அல்ல. மாறாக ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் வடிவமாகும். மேற்குலக நாடுகள் இஸ்ரேல் ஒரு இனவெறி கொண்ட நாடு என்பதை ஒப்புக் கொள்வதில்லை. அதே நேரத்தில் பாலஸ்தீன விடுதலைக்காக போராடும் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பென முத்திரை குத்துகின்றன.
ஒபாமா காலத்தில் அமெரிக்க நிலைப்பாடு!
பராக் ஒபாமா இரண்டாவது முறை அதிபராக இருந்தபோது அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஜான் கெர்ரி, இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சனையை தீர்க்கப் போவதாகக் கூறினார். அங்கு யூத குடியேற்ற விரிவாக்கங்களைப் பார்த்த பிறகு, “இஸ்ரேல் பாலஸ்தீனர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கொண்ட ஒரு இனவெறி நாடாக இருக்கும் அல்லது யூத நாடாக இருக்கும் தகுதியை அது இழக்கும். இரண்டு தனி நாடுகள் என்பது இங்கு சாத்தியமல்ல” என்று கூறினார்.
அமெரிக்கச் செயலர் கெர்ரி 1967 – க்கு முன்பிருந்ததை போல பாலஸ்தீன எல்லையை வழங்குவதாக உறுதியளித்து இஸ்ரேலுடன் கைதிகளை மாற்றிக் கொள்ளும் ஒப்பந்தம் ஏற்படுத்தவும், மேற்குக் கரையில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதாகவும் உறுதியளித்தார். ஆனால் கடைசித் தொகுதி கைதிகளை விடுவிப்பதில் இஸ்ரேல் முரண்டு பிடித்தது. எனவே ஒப்பந்தம் நிறைவேற்றப் படவில்லை. ஐ.நா சபையில் இஸ்ரேலிய குடியேற்ற நடவடிக்கையை கண்டித்து கொண்டு வந்த தீர்மானம் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தால் தோல்வியை சந்தித்தது. ஒபாமா இஸ்ரேலின் பக்கம்தான் நின்றார். அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை செய்து வருகிறது. Iron dome எனப்படும் வான்வெளிப் பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது. 2012 மற்றும் 2014 – ல் ஹமாசுடனான இஸ்ரேலின் மோதல்களின் போது இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தார்மீக ஆதரவையும் அமெரிக்கா வழங்கியது. ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு என்ற நிலைக்கு உயர்த்துவதற்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் வாக்களித்தனர்.
டிரம்ப் காலத்தில் அரங்கேறிய கேலிக்கூத்துக்கள்!
டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்கத் தூதரகத்தை இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றுவதற்கான அவரது முடிவும், அங்கு நிலவும் நூற்றாண்டு கால பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு முன் பொருளாதார வளர்ச்சிக்கான வலியுறுத்தலும், நெதன் யாகு தலைமையிலான வலதுசாரி அரசுக்கு தைரியத்தை அளித்தன. டிரம்பைப் பொறுத்தவரை அது இன்னொரு வணிக ஒப்பந்தம் அவ்வளவே!
டிரம்ப் தனது ரியல் எஸ்டேட் தொடர்பான சொந்த விவகாரங்களை கவனித்து வந்த அவரது வழக்கறிஞர்களை இஸ்ரேலின் தூதுவர்கள் ஆக்கினார். அதில் ஒருவர், மேற்குக் கரையில் அரங்கேறிய இஸ்ரேலியக் குடியேற்றம் அமைதிப் பேச்சு வார்த்தைகளுக்கு எந்த விதத்திலும் தடையாக இருக்காது என்றார்.
இன்னொருவர் ஒரு படி மேலே போய், “ஆக்கிரமிப்பு” என்ற சொல்லையே அமெரிக்க அரசுத் தரப்பு பயன்படுத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.
அடுத்ததாக டிரம்ப் தனது ரியல் எஸ்டேட் அதிபரின் மருமகனை பாலஸ்தீன – இஸ்ரேல் பிரச்சனைக்கு தீர்வு காண நியமித்தார். மத்திய கிழக்கு பிரதேசங்களின் ராஜந்திரம் மற்றும் அரசியல் நிலைமை குறித்த எந்தவித அனுபவமும் இல்லாத அவர் எப்படி இந்த சிக்கலைத் தீர்க்க முடியும்? அவர் இருதரப்பாரிடமும், “என்னிடம் வரலாற்றைப் பேச வேண்டாம்” என்றார். இப்படியான கேலிக்கூத்தைதான் டிரம்ப் அரசு அரங்கேற்றியது.

ஆக்கிரமிப்புக் குடியேற்றங்களை முன்னின்று நடத்திய இஸ்ரேலியத் தலைவர் யாகோவ் காட்ஸ், குடியேற்ற செயல்பாடுகள் டிரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில் இரு மடங்குக்கு மேல் அதிகரித்ததாகவும், அதற்கு டிரம்ப்புக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 1967 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் மேற்குக் கரையில் (கிழக்கு ஜெருசலேம் உட்பட) 200க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேற்றங்கள் நிறுவப்பட்டன. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ஏறத்தாழ 6,20,000 இஸ்ரேலியர்கள் குடியேறி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
ஜோ பைடனின் பைத்தியக்காரத்தனம்!
ஜூன் 2023 – ல் பைடன் அரசாங்கம் மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எந்த நிதியும் வழங்கப் போவதில்லை என அறிவித்தது. அப்படியானால் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் டிரம்ப்பின் திட்டத்திற்கு எதிரானதாக கொள்கை மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்க்கு, அப்படியெல்லாம் இல்லை என்று பைடனின் வெளியுறவுத்துறை கூறியது.
கடந்த ஆகஸ்டில் இஸ்ரேலிய ராணுவத்தின் வடக்குப் பகுதியின் முன்னாள் தலைவரான அமிராம் லெவின், “57 ஆண்டுகளாக இங்கு ஜனநாயகம் இல்லை. முழுமையான இனவெறிதான் உள்ளது. இஸ்ரேலிய ராணுவம் மேற்குக் கரையில் நாஜி ஜெர்மனியைப் போல போர்க் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது” என்றார்.
இந்தக் கூற்றுக்கு நேர்மாறாகத்தான், தற்போதைய வலதுசாரி நெதன்யாகுவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக உள்ள பென் கிவீர் மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஸ்மோர்ட் ரிச் ஆகியோர், சுதந்திர பாலஸ்தீன நாடு என்பதை கடுமையாக எதிர்க்கின்றனர். இருவருமே பாலஸ்தீனத்துக்கு எதிராக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பாலஸ்தீனர்கள் மீது வெறுப்பை உமிழ்வதே இவர்களுக்கு முழு நேர வேலையாக உள்ளது. பென் கிவீர், “எனது குடும்பம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சுதந்திரமாக பயணிப்பதே பாலஸ்தீனர்களின் சுதந்திரத்தை விட மிக முக்கியமானது” என ஆகஸ்டில் அறிவித்தார்.
இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனர்களின் எதிர்ப்பைப் பதிவு செய்ய வன்முறையே அவர்களின் விருப்பமான உத்தியாக இருந்து வருகிறது என்பதாக ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்க ஒருங்கிணைந்த முயற்சி நடக்கிறது. இப்படியானக் கதையை உண்மையாக்க, இஸ்லாமும் அதைப் பின்பற்றுபவர்களும் வன்முறைக் கருத்தியலுக்கு எளிதாக ஆளாகிறார்கள் என்ற பொய்யான செய்தியைக் கட்டமைக்கிறார்கள்.
பாலஸ்தீனர்களின் துயரம் தொடர்கிறது!
மொத்தத்தில் பாலஸ்தீனர்களின் வாழ்க்கை என்பது பரிதாபமானதாக உள்ளது. 2007-ல் நிகழ்ந்த காஸாப் பகுதியின் முற்றுகைக்குப் பிறகு ஐந்தில் நான்கு குழந்தைகள் மனச்சோர்வு, துக்கம் மற்றும் அதிர்ச்சியால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தற்கொலை குறித்து எண்ணுகின்றனர்.
காசாவில் கிடைக்கும் நீரில் 90% அசுத்தமானது மற்றும் மனித நுகர்வுக்கு தகுதியற்றது. இங்கு வாழும் பலஸ்தீனியர்களை விட, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியேறிய இஸ்ரேலியர்களின் தண்ணீர் நுகர்வு நான்கு மடங்கு அதிகமாகும். அதாவது ஒரு பாலஸ்தீனியரின் சராசரி நுகர்வு ஒரு நாளைக்கு 73 லிட்டர் மட்டுமே. அதேசமயம் இஸ்ரேலியர்கள் சராசரியாக 300 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர்.
கடந்த ஆண்டு வரை காஸாவில் வேலையின்மை விகிதம் 46 சதவீதமாக இருந்தது. பாலஸ்தீனியர்களின் எதிர்ப்பு என்பது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் வெளிப்பாடுதான். நெதன்யாகுவும், அவரது பாசிசக் கூட்டாளிகளும் பாலஸ்தீனர்களை ஒழிப்பதில் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை. அதைவிட மோசமானது உலகின் செல்வாக்கு மிக்க நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதுதான்.
அவர்களைப் பொறுத்தவரை இஸ்ரேல் மீதான ஹமாசின் திடீர் தாக்குதல் என்பது பிரச்சனைக்குரிய, மனிதாபிமானமற்ற பயங்கரவாதத் தாக்குதல் என்பதாகும். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனியர்கள் அனுபவிக்கும் துன்பங்கள், துயரங்கள் மற்றும் உயிரிழப்புகள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
இந்த தாராளமய உலகில் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்படுபவர்களே இரு வகையினராக உள்ளனர். சீனாவினால் பாதிப்புக்குள்ளாகும் திபெத்தியர்கள் குறித்தான விஷயம் உலக அளவில் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இஸ்ரேலால் பாதிக்கப்படும் பாலஸ்தீனியர்கள் குறித்து இந்த உலகம் கவலை கொள்வதில்லை.
இஸ்ரேலிய வலதுசாரிக்கு ஆதரவாக இந்திய வலதுசாரி!
நாம் எதிர்பார்த்ததைப் போலவே இந்தியாவின் வலதுசாரி மோடியின் ஆட்சி இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கிறது. ஜியோனிஸ்டுகள் உலக அளவில் யூதர்களை சியோனிசத்துடன் சமன்படுத்துவதில் வெற்றி பெற்றதைப் போலவே, இந்துத்துவாவுடன் இந்து தேசத்தை சமன்படுத்தும் பணியை இந்துத்துவப் பாசிச சக்திகள் விரைவாக நிறைவேற்றி வருகின்றன.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஹிட்லரால் யூதர்கள் இரக்கமற்ற இனப்படுகொலைக்கு ஆளான போது பாசிச RSS – ன் இரண்டாவது தலைவரான கோல்வால்கர், “நாம் அல்லது நமது வரையறுக்கப்பட்ட தேசம்” என்ற நூலில், “ஜெர்மானிய இனப்பெருமை இப்போது தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. அதன் இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையைத் தக்க வைத்துக் கொள்ள யூதர்களை அழித்ததன் மூலம் இனப் பெருமிதம் உயர்ந்த நிலையில் வெளிப்பட்டது. இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் வேற்றுமைகளின்றி ஒன்றாக இணைவது சாத்தியமற்றது என்பதை ஜெர்மனி காட்டியுள்ளது” என்று எழுதியுள்ளார்.
இதையும் படியுங்கள்:
- பாலஸ்தீன மக்கள் மீதான ஆக்கிரமிப்பு, இன அழிப்பு போரை நிறுத்து! ஆர்ப்பாட்டம்
- பாலஸ்தீனம் அழிகிறது! நமது எதிர் வினை என்ன?
அப்படி யூத இன மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை ஆதரித்த ஆர்எஸ்எஸ் இயக்கம்தான் இப்போது பாலஸ்தீனர்களை இனப் படுகொலை செய்யும் யூதர்களை (இஸ்ரேலை) ஆதரிக்கிறது. ஆக மொத்தத்தில் இனப் படுகொலைகளை ஆதரிப்பதுதான் இந்துத்துவ பாசிஸ்டுகளின் நிலைப்பாடு என்பதை தெளிவாக நிரூபித்து இருக்கிறார்கள்.
எழுச்சியான மக்கள் போராட்டமே தீர்வாக அமையும்!
அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய பாசிச சக்திகள், அடாவடித்தனம் செய்யும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இலங்கையில் தமிழர்களின் நிலப்பரப்பில் சிங்களப் பேரினவாதம் நடத்திய ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலையைப் போலவே பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலிய இனவெறி அரங்கேறி வருகிறது. வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தி, இஸ்ரேல் போர் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது.
மனித குலத்துக்கு எதிரான இந்தப் போர் நடவடிக்கைகளை எதிர்த்து முறியடிப்பது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் முன்னே சவாலாகவே உள்ளது. பல்வேறு நாடுகளில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. இத்தகைய மக்களின் போராட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம்தான் பாசிஸ்டுகளுக்குப் பாடம் புகட்ட முடியும்.
செய்தி ஆதாரம்:
theleaflet.in
ஆக்கம்: குரு