கடந்த மாதம் திண்டிவனத்தில் 6 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவனை சக பள்ளி மாணவர்கள் அவனது சாதிப்பெயரை சொல்லி நெருப்பில் தள்ளினார்கள். 6ஆம் வகுப்பு மாணவன் என்றால் வயது 11 தான் இருக்கும். இது போல் பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது.
சாதி; பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதில் தொடங்கி அரசின் உதவிகளை பெறவும், வேலைகளில் சேர்வதற்க்கும் தனியாரோ அரசு வேலையோ இரண்டிலும் என, அனைத்திலும் சாதி இல்லாமல் எதுவும் இல்லை. இந்திய மக்களின் வாழ்க்கையில் சாதி ஒரு தீய அங்கமாகவே மாறி உள்ளது. அந்த அளவுக்கு மக்களின் வாழ்வில் பார்ப்பனிய கட்டமைப்பு உட்புகுந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளியில் சாதிக் கயிறு கட்டி வரக்கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவித்த உடன் மத விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்று பாஜகவின் ஹெச்.ராஜா பொங்கினார். உடனே செங்கோட்டையன் அறிவிப்பை வாபஸ் பெற்றார். தற்போதைய திமுக ஆட்சியிலும் சாதிக்கயிறு கட்டுவதில் பள்ளியில் மோதல் ஏற்பட்டு 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் உயிரிழந்தான். இவை அனைத்திற்கும் காரணம் சாதி தான்.
சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள். மதத்தின் பெயரில் படுகொலை செய்கிறார்கள். மதவெறியும் சாதி வெறியும் சேர்ந்து மக்களை பொது வாழ்விலிருந்து பிரித்தாளுகிறது. தன் சாதிக்காரன் கொலைகாரனாகவோ, கொள்ளைக் காரனாகவோ, ஊழல்வாதியாகவோ இருந்தாலும் கூட அவனை ஆதரிக்கும் அளவுக்கு சாதிவெறி தலைக்கேறியுள்ளது. இது ஒருவகை போதை.
இது போன்ற சூழ்நிலையில் தான் கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன் மகளுக்கு “சாதியில்லை மதமில்லை” என்ற சான்றிதழை வாங்கியுள்ளார். கோவை மாவட்டம் கேகே புதூரை சேர்ந்த இவர் தனது மூன்றரை வயது மகளை பள்ளியில் சேர்க்க திட்டமிட்டு 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விண்ணப்பித்துள்ளார். அனைத்து விண்ணப்பங்களிலும் சாதி மதம் குறிப்பிடவில்லை. அதனால் அனைத்து விண்ணப்பங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. பள்ளியில் அவரது மகளுக்கு சீட் கிடைக்கவில்லை.
தொடர் முயற்சியாக அவர் “சாதி, மதம் இல்லை” என்ற சான்றிதழ் வாங்க கோவை கலெக்டர் அணுகியுள்ளார். கலெக்டர் வருவாய் துறையை பார்க்க சொல்லியுள்ளார். பலவித போராட்டங்களுக்குப் பிறகு சாதி இல்லை மதம் இல்லை என்ற சான்றிதழை பெற்றுள்ளார் இதுகுறித்து அந்த குழந்தையின் தந்தை கூறியதாவது;
“பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது சாதி, மதம் குறிப்பிடத் தேவை இல்லை. இதை 1973-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை கூறுகிறது. இது குறித்து பள்ளிகளுக்கு தெரியாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. அதிகாரிகளிடம் அரசாணையைக் காண்பிக்கும் போது அவர்கள் குழப்பமடைந்தனர். வருவாய் துறையினரை சந்தித்து பேசும் போது அவர்களுக்கு தெரியவில்லை. பிறகு கோவை கலெக்டரை சந்தித்தபோது தாசில்தாரை தொடர்பு கொள்ள சொன்னார்.
பின்னர் இதனை விண்ணப்பிப்பதன் மூலம் எனது மகளுக்கு சாதி அல்லது மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை விட்டு விடுகிறேன் என்றும், எதிர்காலத்தில் மாற்றவோ அல்லது திருத்தவோ முடியாது என்பதை நான் அறிவேன் என்று எழுத்து பூர்வமாகவும், முத்திரை தாளில் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் விவரங்களை இணைத்து கொடுத்த பிறகு ஒரு வாரத்தில் “சாதி இல்லை, மதம் இல்லை” என்ற சான்றிதழை பெற்றேன்” எனக்கூறினார்.
Also read : ஆதிக்கசாதி திமிருக்கு முடிவுக் கட்டு!
மேலும், “இது பள்ளி அதிகாரிகளின் தவறு அல்ல. நமது கல்வி முறையால் தான் இது போன்ற விதிமுறைகள் இருப்பதை மக்கள் அறியாமல் உள்ளனர்” என்று அவர் கூறினார். “ஆனால் கல்வி தான் என்னை சாதி எதிர்ப்பு, நாத்திக சித்தாந்தத்திற்கு இட்டுச் சென்றது. எனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை. நான் பல்வேறு மத நூல்களை படித்துள்ளேன். மதங்களை கடந்து வந்துள்ளேன். அனைத்து மதத்திலும் நான் பொதுவாக கண்டது என்னவென்றால் அவர்கள் பெண்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சிக்கு எதிரானவர்கள். சாதி என்பது மதத்தின் விளைபொருள் ஒருவரை பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனக் கூறுவது எப்படி நியாயமாகும்? பாரதியார், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் எழுத்துக்களும், திருக்குறளும் அவருடைய நிலைப்பாட்டை வலுப்படுத்த உதவியது” என்றும் அவர் கூறினார்.
“சாதியில்லை மதமில்லை என்ற சான்றிதழ் பெறுவது எளிமையானது ஆனால் இதுபோன்ற வழி இருப்பது எத்தனை பேர் அறிவார்கள். நான் என் மகளுக்கு பெற்ற சான்றிதழ் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் என நம்புகிறேன்.”
இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக பார்ப்பனியத்தால் அடிமைப்பட்ட சமூகம் மேலெழுந்து வர இட ஒதுக்கீடு முக்கியமானது, அவசியமானது. அதற்கு சாதிச் சான்றிதழும் கட்டாயம். இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் சாதி மதத்தினால் சமூகம் சீரழிந்து போகும் என்பதை உணர்ந்து சாதியில்லை மதமில்லை என்பதை நோக்கி செல்வதை வரவேற்கலாம். அதே நேரத்தில் ஒட்டு மொத்த சமூகமும் இதை நோக்கிச் செல்ல பொருளாதார சுரண்டலற்ற, வர்க்கபேதமற்ற சோசலிச சமுதாயமே தீர்வு.
- நந்தன்