பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி பரப்ப துடிக்கும் விஸ்வகர்மா யோஜனாவை பற்றி எச்சரிக்கையுடன் பரிசீலிக்க வேண்டியுள்ளது . இத்திட்டத்திற்காக நான்கு ஆண்டுகளுக்கு மொத்தமாக 13 ஆயிரம் கோடியை ஒதுக்கி இருக்கிறார் மோடி. இந்தத் திட்டத்தை தமிழகத்தில் எதிர்ப்பது நியாயமானதா ? என்று கேள்வி கேட்கும் சங்கிகளின் உள்நோக்கத்தை பரிசீலிப்போம்.
17.10.2024 அன்று தினமணி நாளிதழில் நடுப்பக்க கட்டுரையில் அர்ஜுன் சம்பத் விஸ்வகர்மா யோஜனாவை பற்றி எழுதியுள்ளார் . ஊடக விவாதங்களில் ரவுடி சங்கியாக நடந்து கொள்ளும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விவரமாக எழுதக்கூடியவர் என்பது நம்பும்படியாக இல்லை தான். அவரின் பெயரில் அவர் புகைப்படம் போட்டு கட்டுரை வந்துள்ளதால் அவர் எழுதியதாகவே எடுத்துக் கொள்வோம் .
எப்படி சப்பைக்கட்டு கட்டுகின்றனர் சங்கிகள்?
விஸ்வகர்மா யோஜனா என பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தில் மோடி அரசு சாதியை முதன்மைப் படுத்த வில்லையாம் . தமிழ்நாட்டில் மட்டும் 140க்கும் மேற்பட்ட சமூகங்கள் – எச்சரிக்கையாக பார்க்கவும் சாதிகள் அல்ல – இந்தத் திட்டங்களின் மூலம், தமது பாரம்பரிய தொழில்களை சிறப்பாக செய்து, உயர்ந்த நிலைக்கு வர முடியுமாம்; தொழில் முனைவோர் ஆகவும் மாற முடியுமாம். இப்படி தொடங்குகிறது கட்டுரை.
குடும்பத் தொழிலை தந்தையின் தொழிலை செய்வதன் மூலம் நமது பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது. நமது பாரம்பரிய தொழில்களை “குலத்தொழில்” என்று முத்திரை குத்துவதால் நாம் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. செய்யும் தொழிலே தெய்வம் என்றெல்லாம் அர்ஜுன் சம்பத்தின் பெயரில் வந்துள்ள கட்டுரை சிலாகிக்கிறது.
சந்தையில் யார் வெல்ல முடியும்?
பொருட்களை உற்பத்தி செய்வதில் யாரால் இயந்திரங்களின், நவீன தொழில்நுட்பங்களின் பங்களிப்பை உயர்த்த முடிகிறதோ, அவர்களால் தான் வெல்ல முடியும் . உள்ளூர் அளவிலான தேவைக்கான உற்பத்தியை, மாநிலம் தழுவிய அல்லது ஒட்டுமொத்த நாடு தழுவிய தேவைக்கான உற்பத்தியை செய்பவர்கள் தான் தாக்குப்பிடிக்க முடியும் . உலக சந்தைக்கான உற்பத்தியை செய்பவர்களோ, தமது துறையில் உள்ள தொழில் போட்டியாளர்கள் அனைவரையும் வீழ்த்தி, போட்டி நிறுவனங்கள் அனைத்தையும் கைப்பற்றியோ அழித்தோ ஏகபோகமாகவும் முற்றாதிக்கம் செலுத்த முடியும்.
விஸ்வகர்மா யோஜனா: படிக்காதே! அப்பன் தொழிலை செய்! தலை விரித்தாடும் பச்சை பார்ப்பனியம்!
இன்று மிகப்பெரும் கார்ப்பரேட்டுகளின் பிடியில், ஏகாதிபத்தியங்களின் பிடியில், தொழில்துறை சென்று கொண்டுள்ளது; சேவை துறையும் சென்று விட்டுள்ளது . உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள தொழில் பிரிவுகளை கட்டுப்படுத்துவதாகவும், மேலாதிக்கும் செலுத்துவதாகவும், சர்வதேச நிதி மூலதனம் செல்வாக்கு செலுத்தி வருகிறது. சர்வதேச நிதி மூலதன அருளாசி கிடைக்கப் பெற்றவர்கள் தான் தமது தொழிலில் முன்னேற முடியும்.
மோடி வித்தை பலிக்குமா?
தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், காலனி தைப்பவர், சிற்பி, கொத்தனார், சவர தொழிலாளர்கள், பூக்காரர், தையல்காரர், கவசம் செய்பவர்கள், பூட்டு செய்பவர்கள், பொம்மை பாய் விரிப்புகள் செய்பவர்கள், கூடை முடைபவர்கள், மீன் வலை தயாரிப்பாளர்கள் என அனைவரையும் விஸ்வகர்மா என்று வகைப்படுத்துகிறது மோடி கும்பல் . விஸ்வகர்மா என்பது பொதுப் பெயராகத்தான் வைக்கப்பட்டுள்ளது என்றே ‘நம்புவோம்’.
எளிய உற்பத்தியில் உள்ள கைவினைஞர்களான இவர்கள் யாருடன் தொழிற்போட்டியில் மோத வேண்டி உள்ளது ? பல ஆயிரம் கோடி முதலீட்டுடன் உற்பத்தி, வினியோகம், விற்பனையில் கோலோச்சும் கார்ப்பரேட்டுகளை தான் வெல்ல வேண்டியுள்ளது. சினிமா ஹீரோக்கள், ஹீரோயின்களை கொண்டும், கிரிக்கெட் வீரர்களைக் கொண்டும் விளம்பரப்படுத்தப்பட்டு, வணிக முத்திரை என்று அழைக்கப்படும் பிராண்டுகளை பார்த்து வாங்க நம்மை பழக்கப்படுத்தும், மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் தமது பொருட்களை சந்தைப்படுத்தி வரும் பகாசுர நிறுவனங்களைத்தான் எதிர்க்க வேண்டியுள்ளது.
உதாரணமாக, இலங்கையின் DAMRO நிறுவனம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் தமது பர்னிச்சர் ஷோரூம்களை நிறுவியுள்ளது. இந்த நிறுவனத்துடன் நமது மரத்தச்சர்கள் போட்டிப் போட முடியுமா?
பிள்ளையைக் கிள்ளி, தொட்டிலை ஆட்டும் அயோக்கியத்தனம்!
ஒன்றிய அரசின் பிடியில் உள்ள ரயில்வே துறையில் கைவினைப் பொருட்களை விற்பதற்கான மிகப்பெரும் சந்தைக்கான வாய்ப்பு உள்ளது . உதாரணமாக நீண்ட தொலைதூர பயணத்தில் இருக்கும் போது, உணவு மற்றும் தின்பண்டங்களை கட்டாயமாக வாங்கியே தீர வேண்டியுள்ளது .
நிலக்கடலை உற்பத்தியும், அதிலிருந்து கடலை மிட்டாய் உற்பத்தியும் சிறு தொழிலாக தான் நடக்கிறது . அப்படி சிறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கடலை மிட்டாய்களை வந்தே பாரத் ரயிலில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முன் வருமா? ரயில்வே பிளாட்பார்ம்களில் உள்ள கடைகளில், ஐந்து ரூபாய் கடலை மிட்டாய் விற்பனைக்கு கூட தடைவிதித்து ஆதிக்கம் செலுத்துகின்றன கார்ப்பரேட்டுகளின் பிராண்டுகள்.
சிறிய உற்பத்தியாளர்கள் கார்ப்பரேட்டுகளுடன் போட்டிப் போட வழிகாட்டி ஒன்றிய அரசால் துணை நிற்க முடிந்துள்ளதா ? அரசு நிர்ணயிக்கும் தரத்தில், கண்ணைக் கவரும் பேக்கிங்கில் தரும் அளவிற்கு ஆலையாக மாற்றிட கோடிக்கணக்கில் வங்கி கடன் தர ஒன்றிய அரசு முன்வருமா ? சிறு குறு தொழில் செய்யும் அனைவரையும் கை தூக்கி விடும் எண்ணம் உள்ளதா ? விதிவிலக்காக கோவில்பட்டியில் பல கோடி முதலீட்டில் ஒன்றிரண்டு நிறுவனங்களை உருவாக்கினாலும், அது சிறு குறு தொழில் முனைவோர் பட்டியலில் சேராதுதானே!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வீடு கூட்டும் துடப்பத்தை வெவ்வேறு புல் வகைகளில் இருந்து தயாரிக்கின்றனர். தமது குடிசைக்கு வெளியில் உற்பத்தி செய்து, தலைச்சுமையாக சுமந்து வந்து, தெருத்தெருவாக கூவியும், சாலையோரங்களில் கடை விரித்தும் தானே விற்க முடிகிறது. இவர்கள் பெருநகரங்களின் சூப்பர், ஹைப்பர் மார்க்கெட்களில் தமது துடைப்பங்களை சந்தைப்படுத்த இதுவரை வாய்ப்பு கிடைத்துள்ளதா? இல்லையே.
பிரம்பு நாற்காலிகள் இன்னமும் சாலையோரங்களில் மரங்களில் தொங்க விட்டும், சாலையோரங்களில் காட்சிப்படுத்தப்பட்டும்தானே விற்பனையாகிறது. ஆனால் நாம் நமது பாரம்பரிய அறிவை பாதுகாக்க வேண்டுமாம்.
முன்னோர்களின் தொழில்நுட்ப அறிவால் உயர முடியுமா?
கைத்தறி பட்டுத்தொழிலுக்கு புகழ் பெற்றவை காஞ்சிபுரம் ஆரணி பகுதிகள். சென்னைக்கு மிக அருகில் உள்ள இப்பகுதிகளில் இருந்து உற்பத்தியாகும் கைத்தறி சேலைகள் தான் சென்னையின் பிரபலமான ஜவுளிக்கடைகளில் விற்பனையாகிறதா?
ஆயிரம் ரூபாய் மதிப்புடைய கைத்தறி ரகங்களை மோடியின் குஜராத்தில் இருந்து வெறும் 200 ரூபாய்களுக்கு இறக்குமதி செய்து விற்பனை சக்கை போடு போடுகிறது. அதிநவீன லூம்களின் உற்பத்தி பொருட்களோடு கைத்தறிகள் எப்படி போட்டியிட முடியும்? அவர்களின் அறிவை பாதுகாப்பதால் இனி என்ன பயன்? கைத்தறிகள் விறகு கட்டைகளாக அடுப்புக்குள் போகின்றன. மோடி ‘தாராள மனதோடு’ ஒதுக்கியுள்ள தொகையான 13,000 கோடி ரூபாயானது கைத்தறி தொழிலை பாதுகாக்கவா போகிறது ? அதன் நோக்கமும் அது இல்லை.
மண் பானைகள் நம் உடலுக்கு ஆரோக்கியமானவைதான் . நாம் அனைவரும் மண்பானைகளை வாங்கி பயன்படுத்த வாய்ப்புள்ளதா? நம் வருமானத்திற்கு அது கட்டுப்படி ஆகிறதா – இல்லையே. அலுமினியம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், காப்பர் பாட்டம் பாத்திரங்களோடு மண்பானைகள் போட்டியிட்டு சந்தையில் நீடித்திருக்க முடியுமா?
விதிவிலக்காக மேட்டுக்குடிகளின் கௌரவத்தை பறைசாற்றுவதாகவே நீடிக்கிறது . மண்பாண்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரவேற்பறையில் தண்ணீர் பானைகள் ஆகவும், அலங்கார பூக்களின் ஜாடிகளாகவும் – வாயிலில் பூத்தொட்டிகளாகவும் தானே காட்சி தருகிறது.
விஸ்வகர்மா யோஜனா பயிற்சியில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளமும், பயிற்சி முடித்தவுடன் ஒரு லட்சம் ரூபாய்க்கு கடன் உதவியும், அதை சரியாக கட்டி விட்டால், பின்னர் 3 லட்சம் வரை 5% வட்டி கடனும் தருவதாக அறிவித்துள்ளது மோடி அரசு.
1லட்சம் ரூபாய் வட்டியில்லா கடனை வாங்கி, இந்த மூலதனத்தை கொண்டு ஆயிரம் கோடி முதலீட்டுடன் நிற்கும் கார்ப்பரேட்டுகளுடன் போட்டி போடுவது எப்படி ? தமது உற்பத்தி பொருளை பிராண்டிங் செய்து இணைய வர்த்தகத்தில் இறங்கி சர்வதேச போட்டியில் சாதிப்பது எப்படி? யார் காதில் பூ சுற்றப் பார்க்கிறீர்கள்? இப்படி கேள்விகளை எழுப்பி வானதி சீனிவாசன், அர்ஜுன் சம்பத் போன்ற சங்கிகளை நடுத்தெருவில் வைத்து அம்பலப்படுத்த வேண்டும்.
கைவினைஞர்களாக உள்ள, சிறு குறு தொழில்களை பாரம்பரியமாக செய்து வரும் கிராமப்புற மக்களாக உள்ள நம்மை, வாழ்க்கையில் முன்னேற விடாமல் நமது அப்பன் தொழிலிலேயே உழன்று கிடந்து சாகவேண்டும் என சங்கி கூட்டம் விரும்புகிறது. அவர்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நமது பிள்ளைகளை தொழில் நகரங்களில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நவீன கொத்தடிமைகளாக அனுப்பவும் எத்தனிக்கிறது.
அதாவது கிராமப்புறத்தில் இருந்தாலும் வாழ்க்கையில் முன்னேறி விடக்கூடாது; படித்து தொழில் நகரங்களை நோக்கி வந்தாலும், நிரந்தரவேலை, உத்தரவாதமான சம்பளம், சலுகைகள், போனஸ் என நாம் உயர்ந்து விடக்கூடாது. இதற்காகத்தான் ஒருபுறம் விஸ்வகர்மா யோஜனா திட்டமும், மறுபுறம் தொழிலாளர் நல சட்டங்களை ஒழித்து கட்டுவதும் என இருமுனை தாக்குதல்களை தொடுத்து வருகிறது பாசிச மோடியின் அரசு.
நாம் என்ன செய்ய வேண்டும்?
அம்பானி, அதானி, டாட்டா போன்ற தேசங்கடந்த தாகு முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடிகளை கடனாக வாரி வழங்குவதையும், பின்னர் அவற்றை ஹேர் கட், ரைட் ஆஃப் என்று பெயரிட்டு தள்ளுபடி செய்வதையும் அம்பலப்படுத்த வேண்டும்.
இதற்கு நேர் எதிராக, சிறு குறு கைவினைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயை பிச்சையாக போடுவதன் மூலம், தம் தொழிலை கைவிட்டு கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களுக்கு புலம்பெயர்வதை தடுக்கும் நோக்கத்தில், கேடாக முன்னெடுக்கப்படும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை திரை கிழிக்கவும் வேண்டும் .
கார்ப்பரேட்டுகளால் தொழில் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுவரும் சிறுகுறு நிறுவனத் தொழிலாளர்களையும் கைவினைஞர்களையும் ஒன்றிணைத்து, கார்ப்பரேட் காவி பாசிசத்துக்கு எதிரான மக்கள் முன்னணியாக வளர்த்தெடுக்க வேண்டும். கார்ப்பரேட்டுகளை அவர்கள் காலடியிலேயே எதிர்க்கும் தொழிற்சங்கங்களை, போராட்டத்தில் கார்ப்பரேட்டுகளால் நேரடியாக நசுக்கப்படும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டக் களத்தில் சிறுகுறு கைவினைஞர்களுடனும் ஒன்றாக சேர்ந்து களம் காண வைக்கவும் வேண்டும்.
- இளமாறன்