“வாஸ்து” என்பது Civil Engineering ல் ஒரு Subject ஆக கர்நாடக மாநில பொறியியற் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக 9.11.2022 ஆம் தேதி இந்தியன் எக்பிரஸ் நாளேடு விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.வாஸ்துவை பொறியியற் பாடத்தில் சேர்த்தால் மாணவ மாணவியர் எதையெல்லாம் படிக்க வேண்டிவரும் என்பதை தெளிவு படுத்தவே இந்தப் பதிவை எழுதுகிறேன்.

வாஸ்து மற்றும் சிற்ப சாஸ்திர நூல்கள் பற்றி பல பதிவுகளை முன்பு எழுதியிருந்தாலும் இந்தப் பதிவில் புலிவலம் R.கோபாலய்யரால் எழுதப்பட்ட ஶ்ரீ லலிதா நவரெத்தனமென்னும் மனையடி சாஸ்திரம் (முதற் பாகம்)எனும் நூல்பற்றி சில தவகல்களை எழுதுகிறேன். இதை வாசித்தாலே வாஸ்து சாஸ்திரம் பற்றியும் வாஸ்து எதைப்பற்றியது என்பதைத் ஓரளவு அறிந்து கொள்ள இயலும்.

ஶ்ரீ லலிதா நவரெத்தனமென்னும் மனையடி சாஸ்திரம் நூல் பல சாஸ்திரங்களிலுள்ள கிரந்த ஸ்லோகங்களை ஆதாரமாய் கொண்டுள்ளது என எழுதுகிறார் புலிவலம் R.கோபாலய்யர்.

“முழக்கோல் இலட்சணம்;

பிராம்மணாளுடைய வீடு அங்குல அளவால் அளக்கக்கூடியவை. ஆலயங்கள், மடம், சத்திரம் இவைகளும் தேர், வாகனம், சிலைகள் இதுகளை அங்குல அளவாக அளந்துகொண்டு செய்யலாம். மற்ற வருணத்தார்களுக்கு அங்குல அளவு கூடாது.”

“பூமியின் வாசனை;

நல்ல வாசனையுள்ள பூமி பிராமணாளுடையது, ரத்த வாசனையுள்ள பூமி க்ஷத்திரியர்களுடையது, தேன் வாசனையுள்ள பூமி வைசியாளுடையது, கள்ளு வாசனையுள்ள பூமி சூத்திராளுடையது.”

இதையும் படியுங்கள்: சூத்திரன் சுடுகாட்டிற்குச் சமமானவன்! தினகரன் செல்லையா

“ருசி;

தித்திப்பு ருசியுள்ள பூமி பிராமணாளுடையது, கசப்பு ருசியுள்ள பூமி க்ஷத்திரியாளுடையது, புளிப்பு ருசியுள்ள பூமி வைசியாளுடையது,துவர்ப்பு ருசியுள்ள பூமி சூத்திராளுடையது.”

“ரூபம்;

கெட்டியாயுள்ள பூமி மேட்டுபூமி வடக்கு கிழக்கு பள்ளமுள்ள பூமி பிராமணாளுடையது. உயரமாயுள்ளது க்ஷத்திரியாளுடையது. ஸமபூமி வைசியாளுடையது. மேடு பள்ளமாயுள்ள பூமி சூத்திராளுடையது. சகல வருணத்தார்க்கும் சமபூமி சகல சுபத்தைக் கொடுக்கும்.”

“நான்கு வருணத்தார்களுக்கும் உரிய பூமி;

குசம் தர்ப்பை இவைகளுள்ள பூமி பிராமணாளுடையது. அருகுள்ள பூமி க்ஷத்திரியாளுடையது. பல புஷ்பக்கொடியுள்ளது வைசியாளுடையது. புல்லுள்ள பூமி ஆற்றோரம் பாரைகளுள்ள பூமி சூத்திராளுடையது.”

“வீடு கட்டக்கூடாத இடங்கள்;

சுடுகாடு, புத்துக்கள், ஆசாரமில்லாத ஜனங்கள் வசிக்குமிடம், ஆலய மில்லாத ஊர், தேவமந்திர நிவாஸ பூமி, பூவிவரத்தோடு கூடியதாயுமுள்ள கெட்ட பூமிகளை சிற்பர்கள் வர்ச்சிக்கவேண்டியது.”

“பூமியின் நிறம்;

வெள்ளை நிறமான பூமி, பிராமணாளுடையது. சிவப்பு நிறமான பூமி, க்ஷத்திரியாளுடையது. பசுமை நிறமானபூமி, வைசியாளுடையது. கருப்பு நிறமுள்ளபூமி, சூத்திராளுடையது. தன் வர்க்க வருணம் போலுள்ள பூமியானது தன் வர்க்கங்களையே பரிபாலிக்கும் வர்க்கங்களின் அதிபர்களையும் இரக்ஷிக்கும். வெளுப்பு வர்ணமுள்ள பூமியானது எல்லா வர்ணத்தார்களுக்கும் சுபத்தைக் கொடுக்கும்.”

“பூமியை பூஜை செய்யவேண்டிய விதி;

பரீக்ஷக்கப்பட்ட பூமியில் பசுவின் சாணியினால் மெழுகி கோலம் முதலிய அலங்காரங்கள் செய்து பிராமணர்களையும் ஜோதிஷ சாஸ்திரிகளையும் பூஜித்து கிரகஸ்தன் எவ்வளவு பூமி வீடு கட்டுவதற்காக வேண்டுமோ அவ்வளவு பூமியையும் பஞ்ச கௌவியத்தினாலும் ஓஷதி ஜலங்களினாலும் பஞ்சாமிருதத்தினாலும் புரோஷித்துச் சுத்திகா மண்ணினால் பூமியை சுத்தி செய்து,…”

“சங்குஸ்தாபனம்;

சங்கு செய்யப்படும் மரங்களில் கணுபோரை புள்ளி நெளிவு இருக்கப்பட்டது கூடாது. இதில் தேவர்களுக்கு தந்தம் சந்தனம், அரசர்களுக்கு கருங்காலி வன்னி, வைசியர்களுக்கு, வேங்கை, தேக்கு, சூத்திராளுக்கு புளி அத்தி, உத்தமம். இவையில்லாத மரங்கள் கூடாது.”

“சுவர்களின் உயர்வு லெக்ஷணம்;

10-சாண் உயரம் பிராமணர்களுக்கும் 16- சாண் க்ஷத்திரியருக்கும் 9-சாண் வைசியருக்கும் 8-சாண் உயரம் சூத்திரருக்காம் இவைகளுக்குக் குறைவாயிருக்கக் கூடாது.”

“இத்தனைக் கட்டுகள் கட்டலாம்;

பிராமணர்களுக்கு நான்குகட்டு, க்ஷத்திரியர்களுக்கு மூன்று; வைசியர்களுக்கு இரண்டு, சூத்திரர்களுக்கு ஒன்று கட்டுவது உத்தமம். எல்லா ஜாதியார்களுக்கும் ஒரேகட்டாயிருப்பது உத்தமம்.”

“மரங்கள் வெட்டவேண்டிய விதி;

1.தேவதாருசந்தனம், வன்னி, இலுப்பை, தேக்கு, பூவாசு இவைகள் பிராமணர்களுக்கு சிலாக்கியம்.

2. கருங்காலி, வில்வம், மருதமரம், சிம்சுவா, விருக்ஷம், ஆச்சா, தேக்கு, இதுகள் க்ஷத்திரியர்களுக்காம்.

3. கருங்காலி, சிந்து, சந்தனம், திந்துகம், அர்ச்சுனவிருக்ஷம், வைசிரா,மாமரம்

வைசியர்களுக்காம்.

4. மாமரம், முள்ளுள்ளமரங்களும், மற்ற பாலுள்ள மரங்களும், சூத்திரர்களுக்காம்.”

“சல்லி நிர்ணயம்;

கோவில்களுக்கு 7 – சாண் ஆழமும் பிராமணாளுக்கு 6-சாண் ஆழமும், வைசியர்களுக்கு 4 -சாண் ஆழமும், சூத்திரர்களுக்கு 3-சாண் ஆழமும் வெட்டிப்பார்க்கவேணும்.”

“சல்லிய விஷயம் விசுவகர்மபிரகாசிகையிலுள்ளபடி;

இந்தவிதமாக செய்துவைத்த ஆசாரியருக்கு பசுவை தானங் குடுக்க வேண்டும். இதரர்களுக்கு தக்ஷிணை தாம்பூலம் கொடுக்கவேண்டும்.

பிராமணர்களுக்கு போஜனம் செய்விக்கவேண்டும் இந்த பிரகாரம் செய்வானேயானால் சகலவிதமான கஷ்டங்களினின்று விடுவிக்கப்பட்டு தீர்க்காயிசு உடையவனாகியும் புத்திர(மகன்),

பெளத்திர(பேரன்)சகல சம்பத்தையும் அடைவார்கள்.”

“ஜாதிப் பொருத்தம்;

முன் ஆய மொத்தத்தை 9-ல் பெருக்கி 4-ல் வகுத்த மிச்சம் ஜாதி. 1பிராம்மணன் மிகுந்த சுபகரமுண்டாம்.2க்ஷத்திரியன் ஜயமும் வெற்றியுமுண்டாம். 3 வைசியர் தனமுஞ் செல்லமுண்டாம். 4 சூத்திரர் தான்னிய முதலிய துண்டாம் மத்திய பலன்.”

இப்படி புரட்டிய பக்கமெல்லாம் வர்ணம் சாதியைப் பற்றிய குறிப்புகளை மேலுள்ள நூல் மட்டுமல்லாது எல்லா வாஸ்து நால்களிலும் காணமுடிகிறது. வாஸ்து சாஸ்திரத்தை ஒரு மாநில அரசே பொறியியற் பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது வேதனைக் குரியது.

  • தினகரன் செல்லையா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here