விவேகானந்தரின் உண்மை முகம்! பகுதி 2 | தினகரன் செல்லையா

விவேகானந்தரின் உண்மை முகம்! பகுதி 2 | தினகரன் செல்லையா

ங்காளத்தில் இந்து சமூகம் பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் என இரண்டு வர்ணங்களாக மட்டுமே பிரிக்கப்பட்டது. வங்காள காயஸ்தர்களும் வைத்யாக்களும்(பரம்பரை வைத்தியர்கள்) பிராமணர்களுடன் சேர்ந்து உயர்ந்த சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்தவர்கள். காயஸ்தர்கள் தங்களை பிரணர்களுக்கு அடுத்த நிலையில் ஆனால் க்ஷத்திரியர்களுக்கு மேலானவர்கள் எனக் கூறிக்கொள்வார்கள்.

விவேகானந்தருக்கு ஹதராபாத் நிஜாம் உட்பட பொருளுதவி செய்த மன்னர்கள் பலர் இருந்தனர். அதில் பெரும்பாண்மையினர் ஹிந்து க்ஷத்திரிய மன்னர்கள் அதிகம்.அதற்கு முக்கிய காரணம் அந்த மன்னர்களைச் சந்திக்கும் போதெல்லாம் கடிதம் எழுதும்போதெல்லாம் க்ஷத்திரியர்களின் புகழை விவேகானந்தர் பாடியதுதான். இந்த வகையில்,இராஜஸ்தானில் உள்ள Khetri (கேத்ரி) மஹராஜாவிற்கு விவேகானந்தர் எழுதிய கடிதம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதுகிறேன்.

(The Khetri Maharaja, specifically Raja Ajit Singh).இந்த மன்னன் க்ஷத்திரிய வர்ணத்தவன் என்பதால் விவேகானந்தர் க்ஷத்திரியர்களைப் புகழ்ந்து தனது கடிதத்தில் எழுதியிருப்பார்.

விவேகானந்தர் வங்காள காயஸ்தர் எனும் வகுப்பைச் சேர்ந்தவர்.அதனால் க்ஷத்திரியர்களின் உயர்வை ஆங்காங்கே தனது எழுத்துக்களிலும் உரைகளிலும் குறிப்பிட்டிருப்பார்.

அதனாலும் அந்த pro க்ஷத்திரிய அணுகுமுறை அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

விவேகானந்தர் சிகாகோ மகாநாட்டிற்கு சென்ற உண்மைக் கதையினை தனிக் கட்டுரையாகவே எழுதலாம். உண்மையில் அந்த மகாநாட்டிற்கு அழைப்பு அனுப்பப்பட்டவர் பச்சையப்பா பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய அளசிங்கப் பெருமாள் எனும் வைணவர். அளசிங்கப் பெருமாள் போன்ற பிராம்மணர்களுக்கு ஹிந்து தர்ம சாஸ்திர விதிகளுக்குப் புறம்பாக கடல்கடந்து கப்பலில் செல்வதற்கு தடை இருந்ததால் அளசிங்கர் அந்த வாய்ப்பினை சென்னைக்கு வந்திருந்த விவேகானந்தருக்கு வழங்கினார். இந்த விவரங்கள் அளசிங்க பெருமாள் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளிலும் அவரைப்பற்றிய இணைய செய்திகளிலும் காணக் கிடைக்கிறது. காயஸ்தரான விவேகானந்தருக்கு கப்பலில் பிரயாணம் செய்வதற்கு சாஸ்திரத்தில் தடை இல்லை, தவிர நுனிநாக்கு ஆங்கிலம் பேசுவதில் வல்லவராகவும் சனாதனம் போற்றும் பிரம்மச்சாரிய சந்நியாசியாகவும் இருந்ததால் அளசிங்கர் விவேகானந்தரை சிபாரிசு செய்து அவரது அமெரிக்கப் பிரயாணத்திற்கு பணம் திரட்ட ஆரம்பித்தார்.அந்த வகையில் விவேகானந்தரின் சிகாகோ பயணத்திற்கு பொருளுதவி செய்தவர்களில் ராமநாதபுரம் சேதுபதி,மைசூர் மஹராஜா,கேத்திரி மஹராஜா,ஹைதராபாத் நிஜாம் எனப் பெரும் பட்டியல் நீள்கிறது. கேத்ரி மஹராஜாவிற்கு விவேகானந்தர் எழுதிய நிரூபம் என் கவனத்தைக் கவர்ந்தது.விவேகானந்தரின் உண்மை முகம் பற்றி அறிந்துகொள்ள இந்தக் கடிதம் பெருமளவில் உதவும் என்பதால் அதை வாசகர்கள் முன் வைக்கிறேன்.

அதன் ஒரு பகுதி இது,

“முற்காலத்திய இந்தியாவானது பிரஜைகளில் பிரஹ்ம க்ஷத்திரியரென்கிற இருவகுப்பினருடைய அதிகார அபேக்ஷையுள்ள ஏற்பாடுகளுக்கு யுத்தசங்கமாயிருந்தது. க்ஷத்திரியர்கள் தங்களுக்குச் சட்டப்படி ஆகாரமென்று எண்ணியிருந்த மகா ஜனங்களிடத்தில் அவர்கள் செய்யும் கொடுமைகளை ஒருகால் புரோஹீதர்கள் (பிராஹ்மணர் கள்) தவிர்க்கிறவர்களாயிருந்தார்கள். மற்றொருகால் பிராஹ்மணர்கள் ஜனங்களைக் கட்டியாள வேண்டுமென்ற கருத்துடன் அபரிமிதமான மதச் சடங்குகளைக் கற்பித்துச் செய்துவந்த கொடுமைகளைத் தவிர்ப்பதற்கு முன் வந்தவர்கள் க்ஷத்திரியர்கள். பிராஹ்மணன் கேவலம் “கர்மி”யாகவும்,  க்ஷத்திரியன் “ஞானி”யாகவும் இருந்தான். நமது சரித்திரத்தின் முற்பாகத்திலேயே இவ்விருதிறத்தாருக்கும் சண்டை நேரிட்டுவிட்டது. இதைச் சுருதிகளில் ஈன்றாய்க் காணலாம்.

ஸ்ரீ கிருஷ்ணன் க்ஷத்திரிய தர்மத்தையும் ஞானத்தையும் கைக்கொண்டவர்களுக்குத் தலைவராய் எழும்பிச் சமரஸத்துக்கு வழியைக் காண்பித்த போது சற்று அமைதியுண்டாயிற்று. அதன் பயன்தான் தத்துவஸாரமாயும் ஸமரஸ ஸித்தாந்த சேகரமாயும் அமைந்து விளங்கும் கீதாசாஸ்திரம், ஆயினும், இவ்விரு திறத்தாருக்குள்ளும் நேர்ந்த கலகத்துக்குக் காரணம் இன்னும் அழியாமல் இருந்தமையால், அதன் காரியமும் வெளிப்பட்டே தீரவேண்டியதா யிருந்தது,

ஏழைகளின் மீதும் அஞ்ஞானிகளின்மீதும் அதிகாரம் செலுத்தவேண்டுமென்கிற எண்ணம் இவ்விருதிறத்தவருக்கும் இருந்தபடியினால், மறுபடியும் சண்டை பலமாய் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்திய கிரந்தங்கள் சொற்ப மாகையினால் இச் சண்டைகளைப்பற்றி நன்றாய் நாம் தெரிந்துகொள்ள இடமில்லை; ஆயினும், கடைசியில் க்ஷத்திரியர்களுக்கும் ஞானத்துக்கும் சுதந்திரத்துக்கும் ஜயம் உண்டாயிற்று; சடங்குகள் குன்றின; அவற்றில் அநேகம் அடியோடே மறைந்தன. இவ்வெழுச்சிதான் பௌத்த சீர்திருத்த மெனப்படுவது. அது மத விஷயத்தில் கர்மமாகிய சடங்குகளினின்று விமோசநத்தையும், ராஜாங்கத்தில் ராஜாக்களால் புரோஹிதராகிய பிராஹ்மணர்களுக்குத் தோல்வியையும் உண்டாக்கிவிட்டது. முற்காலத்தில் இந்தியாவில் தோன்றிய இரண்டு மஹான்களாகிய
ஸ்ரீ கிருஷ்ணரும்,புத்தரும் க்ஷத்திரியராயிருப்பதும், ஸ்திரீ புருஷ பேதமும் பிறப்புத் தாரதம்மியமுமின்றி ஞானத்தை யாவருக்கும் பொதுவாகச் செய்துவிட்டதும் நன்றாய் யோசிக்கத் தகுந்த விஷயம். புத்தமதமானது அதி அற்புதமான தனது நீதியிலேயே தனது பலத்தைப் பொருத்தி யிருந்தும், கடவுள் என்கிற சிந்தையைக் கட்டோடே ஒழித்து விட்டமையாலும், அதினுடைய சக்தியை யெல்லாம் கேவலம் நிவிர்த்தியில் செலுத்திவிட்டமையாலும், அது தன்னுடைய ஜந்ம பூமியிலேயே மடிந்து போகநேரிட்டது. போனதுபோக, அம்மதத்தில் நின்ற பாகம் குருட்டு நம்பிக்கையுள்ள சடங்குகளைப் போதித்ததன்றித், தான் எவற்றை நீக்க வந்ததோ, அந்த மதச்சடங்குகளைக் காட்டிலும் நூறு பங்கு அதிக அநாகரிகமான சடங்குகளை உண்டாக்கிக் கொண்டது. அது ஒருவாறு வேதங்களில் சொல்லியிருக்கிற பசு யஜ்ளுங்களை நடக்கவொட்டாமல் அடக்கினபோதிலும், இந்தத் தேசத்தைக் கோவில்கள், விக்கிரகங்கள், குறிகள், குருமாரின் எலும்புகள் முதலியவற்றால் நிறைத்துவிட்டது.

ஆரியர்களும், மங்கோலியர்களும், அநேக முரட்டு ஜாதிகளும் சேர்ந்த ஒரு கலப்பு மதத்தை அது உண்டாக்கினமையால், பயங்கரமான வாமாசாரங்கள் உற்பத்தியாவதற்குத் தன்னை யறியாமலே இடம் கொடுத்துவிட்டது. முக்கியமாய் இந்தக் காரணங்களால்தான், ஸ்ரீ சங்கராசாரியர் முதலிய ஸந்நியாஸிகளால் மஹானான புத்ததேவருடைய மதம் இந்தியாவினின்று துரத்தப்பட்டது. மானிட ரூபமெடுத்த மஹாத்மாவாகிய ஸாக்ஷாத் புத்த பகவானாலேயே பிரவஹிக்கும்படி செய்யப்பட்ட பிராணனென்கிற நதியானது தீக்காற்றுள்ள குட்டையாய்விட்டது. இந்தியாவோ, ஸ்ரீ சங்கராசாரியரும், அவருக்குப் பின்னால் சீக்கிரமாய் ஒருவருக்குப்பின் ஒருவராய் ஸ்ரீ ராமாநுஜரும், ஸ்ரீ மத்துவரும் புறப்படும் வரையில், பல நூற்றாண்டுகள் காத்திருக்கவேண்டியதாயிற்று. இக்காலத்தில் இந்தியாவின் சரித்திரம் புதிய மாதிரியாய்விட்டது. முற்காலத்திய பிரஹ்ம க்ஷத்திரியர்கள் மறைந்துவிட்டார்கள். ராஜரிஷி பிரஹ்மரிஷி ஸ்தானமாயும், ஆரியாவர்த்தமாயும், ஸ்ரீ கிருஷ்ணன் புத்தன், இவ்விருவர்களுடைய ஐந்ம பூமியாயுமிராகின்ற விந்திய ஹிமய மலைகளுக்கு நடுவிலுள்ள மத்தியப் பிரதேசம் மௌனமாய்விட்டது. மௌனமாகவே, இந்தியாவின் தென்கோடியிலே, மாறுபட்ட நடையுடை பாவனைகளுடைய ஜாதிகளிலிருந்தும், பூர்வீக பிராஹ்மண வம்சபாரம்பரியத்துடன் சம்பந்தம் பாராட்டுங் குலங்களிலிருந்தும், ஹீநஸ்திதியடைந்து விட்ட பௌத்த மதத்துக்குப் பிரதிவாதிகள் கிளம்பினார்கள். ஆரியாவர்த்தத்திலிருந்த பிராஹ்மணர்களும் க்ஷத்திரியர்களும் என்னவானார்கள்? இங்கும் அங்கும் சிலர் தாங்கள் பிராம்மணர் க்ஷத்திரியர்களென்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; மற்றவர்களெல்லாம் மறைந்தனர்.

இப்பிராஹ்மணர்கள், ஏதஷ ஷேஸப்ரஸுதாநாம் ஸகாஸாஷஹா ஜந்மநாம் ஸ்வம் ஸ்வம் சரித்ரம் பக்ஷேரந் ப்கீஸிவ்யாம் ஸர்வமாநவா

—மநுஸ்ம்ருதி. 2. 20.

என்றபடி, தங்களிடத்திலேயே உலகமெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டுமென்று தற்புகழ்ச்சி செய்துகொண்ட போதிலும், தென்தேசத்தாருடைய காலடியில் உட்கார்ந்து மிகவும் வணக்கமாய்ப் பிராயச்சித்த வேஷதாரர்களாய்க் கற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று. இத் தென் தேசத்தாராலேயே வேதமானது இந்தியாவுக்கு வேதாந்தரூபமாய் மறுபடியும் கொண்டு வரப்பட்டது. கிருஹஸ்தர்களும் ஆரணியகங்களைப் படிக்க ஆரம்பித்தனர். புத்த மதம் பரவுங்கால் வாஸ்தவமாய்ப் படித்தவர்கள் க்ஷத்திரியர்களே; அவர்களில் பெரும்பாலார் பௌத்தர்களாயினர். சீர்திருத்தம் செய்வதிலும், தம் மதத்தில் ஜனங்களைச் சேர்ப்பதிலும் அதிக ஆவலுள்ளவர்களாய் அவர்கள் அந்தந்த ஜனங்களுடைய பாஷைகளையே விருத்தி செய்துவந்தமையால், க்ஷத்திரியர்கள் ஸம்ஸ்கிருக பாஷை கற்பதையும் வேதத்தை அப்பியஸிப்பதையும் விட்டு விட்டார்கள். ஆகையால்,தெற்கிலிருந்து வந்த இம்மதச் சீர்திருத்தமானது பிராஹ்ணர்களுக்கு மாத்திரம் அநுகூலமாயிற்று.மற்ற இந்திய மஹா ஜனங்களுக்கோ அவர்கள் முன் பார்த்திராத விலங்குகளை உண்டாக்கிவிட்டது.

க்ஷத்திரியர்கள் இந்தியாவுக்கு முதுகெலும்பு போன்றவர்கள். அவர்கள்தாம் சாஸ்திராபிவிருத்திக்கும் சுயேச்சைக்கும் ஆதாரமாயிருந்தவர்கள். தேசத்திலுள்ள மூடத்தனத்தை நாசமாக்க அவர்கள்தாம் அடிக்கடி முயன்றவர்கள். பிராஹ்மணர்களுடைய கொடுமை விருத்தியாகாதபடி அடங்கமாயிருந்தவர்களும் அவர்கள்தாம். அவர்களிற் பெரும்பாலார் அஞ்ஞாநத்தில் அழுந்திவிட்டமையாலும், மற்றவர்கள் மத்திய ஆசியாவின் முரட்டு ஜாதியாருடன் விவாக சம்பந்தங்கள் செய்துகொண்டு பிராஹ்மணருடைய ஆளுகையை ஸ்தாபிக்கக்கையில் கத்தியெடுத்துத் தாமே முன்வந்தமையாலும், இந்தியாவாகிய பரதநாடு முழுகிப் போய்விட்டது. மறுபடியும் க்ஷத்திரியன் முன்போல் எழும்பி, மற்றவர்களுடைய காலில் போட்டிருக்கும் விலங்கைத்தறிக்கும் வரையில் இந்தியா எழும்ப வழியில்லை. புரோஹிதர்களே இந்தியாவுக்கு ஓர் சாபமாய் முடிந்தார்கள். ஒரு மனிதன் தன்னுடைய சகோதரனை ஹீனனாக்கி விட்டுத் தான் அந்தக் கதியினின்று தப்பித்துக்கொள்ள முடியுமா? ராஜாஜி! உங்களுடைய மூதோரால் கண்டுபிடிக்கப்பட்ட சிரேஷ்டமான உண்மையானது உலகம் ஒன்றே என்பது. அதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவன் மற்றவனுக்குக் கெடுதி செய்தால் தனக்கே செய்துகொண்ட மாதிரியல்லவோ?
பிராஹ்மணரும் க்ஷத்திரியரும் செய்த கொடுமையானது தொடர் வட்டியுடன் அவர்கள் தலைமேலேயே வந்து விடிந்தது. அவர்களுடைய கர்ம்மமானது ஆயிரம் வருஷங்களாய் அவர்களை ஹீநஸ்திதிக்குக் கொண்டு வந்து விட்டு அடிமைகளாக்கிவிட்டது.

“இஹைவ தைர்ஜித: ஸ்வர்மோ
யேஷாம் ஸாம்யே ஸ்மிதம் மநஜ.”

“சமத்துவத்தில் மனது வைத்தவர்கள் இந்த ஜன் மத்திலேயே முக்தி யடைந்திருக்கிறார்கள்” என்று உங்களுடைய முன்னோர்களில் ஒருவர் சொல்லி யிருக்கிறார். அவரைக் கடவுளுடைய அவதாரமென நம்புகின்றார்கள்- நாமனைவரும் அவ்வாறே நம்புகிறோம். அவருடைய வாக்கி யத்துக்குப் பொருளில்லையா? அது வீண்போகுமோ? ஒருகாலும் வீண்போகாதென்று நமக்குத் தெரியும். அப்படியாபின் சாதி, பிறப்பு முதலிய வேற்றுமைகளின்றி யாவத் சிருஷ்டிகளையும் சமதிருஷ்டியாகப் பார்ப்பதற்கு விரோதஞ் செய்வது பெரிய தப்பாகும். சமதிருஷ்டியாய்ப் பாராதவர் ஒருவரும் முக்தி யடையார்கள்.

ஆகையால், கனம் பொருந்திய இராஜ புத்திரரே! வேதாந்த விசாரணை செய்து, அதின்படி நடந்துகொள்ளும் நீர் பல பேர் செய்த பாஷ்யங்களைப் பின்தொடரவேண்டிய அவசியமில்லை. உம்முடைய உள்ளத்திலிராநின்ற பரமாத்மா சொல்லுமாறு அர்த்தஞ் செய்துகொள்ளும் முக்கியமாக, எல்லாவற்றிலும் கடவுளிருக்கிறார்; எல்லாம் ஏகஸ்வரூபமேயென்னும் உயர்ந்த தத்துவத்தை அறிந்து கொள்ளும்.

இதுதான் முத்திக்கு வழி. அசமமாய்ப் பார்ப்பது பந்தத்துக்கு ஆதாரம். எந்த மனிதனாயினும், எந்த ஜாதியானாயினும், எல்லாருடைய தேகமும் ஒனறென்று நினையாமல் சரீர சுயேச்சையடையார்கள்; மனது ஒன்றென்று நினையாமல் மனச்சுயேச்சையும் அடையார்கள், ஆசை, அஞ்ஞானம், அசமமான திருஷ்டி இம்மூன்றும் துக்கத்துக்குக் காரணம். ஒன்றுக்கொன்று இன்றியமையாத் துணையாக இவைகள் செல்லும். ஏன் ஒரு மனிதன், தான் மற்ற மனிதர் அல்லது மிருகங்களைக் காட்டிலும் சிரேஷ்டனென்று எண்ணிக்கொள்ள வேண்டும்? கடைசிவரையில் எல்லாம் ஒன்றுதான்.”

படிக்க:

🔰 விவேகானந்தரின் உண்மை முகம்! | தினகரன் செல்லையா

“இராஜ புத்திரராகிய நீங்கள் முற்காலத்தில் கீர்த்தியை வகித்திருந்தீர்கள், நீங்கள் ஹீன ஸ்கிதிக்கு வந்ததினால் இந்தியாவிலுள்ள மற்ற ஜாதியாரும் ஹீனஸ்திதியை அடைந்துவிட்டார்கள். அதிகாரத்தைச் செலுத்தப் பார்க்காமல், ஏழைகளுக்குச் சகாயஞ் செய்யும்பொருட்டும், அஞ்ஞானிகளுக்கு அறிவூட்டும் பொருட்டும் பிராமணரும் க்ஷத்திரியரும் ஒன்றுசேர்ந்தாலன்றி, இந்தியா அபிவிருத்தி யடைவதற்கு வழியில்லை.”

என் பிரியமுள்ள ராஜனே! மதத்துக்கு ஆதார பூதமாயும், சகாயமாயு மிருந்த ராஜவம்ஸ திலகரே! ராம கிருஷ்ணர்களுடைய ஸந்ததியில் பிறந்தவரே! நீர் தூர நின்று விடுவீரோ! அப்படிச் செய்யமாட்டீரென்று எனக்குத் தெரியும். மதத்தை மறுபடியும் ஒருமுறை காப்பதற்கு நீர்தான் முதலில் கைகொடுப்பீரென்பது எனக்கு நிச்சயம். மேலும், வம்சபாரம்பரிமாய் சாஸ்திரப் பயிற்சிக்குப் பேர் போன ராஜவம்சத்திற் பிறந்து சகல கலைகளையுங் கற்றிருப்பருடன், ஞாநிகளால் சிறந்ததென மதிக்கப்பட வேண்டிய பரிசுத்த சீலத்தையும், எல்லையற்ற ஜீவகாருண்யத்தையும், பூஷணமாகக் கொண்ட ராஜா அஜித்சிங்கு என்னும் பெயருடன் விளங்கும் உம்மை நான நினைக்குங்காலத்தும், ஸநாதந தர்மத்தை உத்தரிப்பதற்கு உம்மைப்போன்றவர் கைகொடுக்க ஸித்தமாயிருக்கும் பொழுதும்,நமது மதத்துக்கு நற்காலம் உண்டென நம்பாமல் இருக்க என்னால் முடியவில்லை.

ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய ஆசீர்வாதம் உனக்கு என்றென்றைக்கும் உண்டாகுக. நீர் பலபேருடைய க்ஷேமத்தின் பொருட்டும் ஸத்தியத்தின் அபிவிர்த்தியின் பொருட்டும் நீடுழி வாழ்க.

இவ்வாறு ஸதாகாலமுங் பிரார்த்திக்கும் விவேகாநந்தன்”

——————
இப்படியாக கடிதத்தை முடிக்கும் விவேகானந்தர் அறிந்தும் அறியாமலும் பல உண்மைகளை இக்கடிதத்தில் குறிப்பிடுகிறார். குறிப்பாக பௌத்தம் அழிந்ததற்கு ஶ்ரீ ஆதிசங்கரரும் அதன் பின் தோன்றிய ஆச்சார்யர்களும் காரணம் என விவேகானந்தர் குறிப்பிடுகிறார். தனக்கு உதவிய பிராம்மண அளசிங்க பெருமாள் முதல் க்ஷத்திரிய மன்னர்கள் வரை பலர் உள்ளதால் சாதி எனும் நிலைப்பாடு வரும்போதெல்லாம் விவேகானந்தரின் கருத்து சனாதனத்தை ஆதரிப்பதாக அதாவது வர்ணாஸ்ரமத்தை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது. விவேகானந்தரின் மனப் போராட்டத்தை அவரது உரைகளிலும் விவாதங்களிலும் கேள்வி பதில்களிலும் கடிதங்களிலும் காண முடிகிறது. உண்மையை அவர் உணர்ந்திருந்தாலும் அதை தீர்க்கமாக வெளிப்படுத்த இயலாத நிலை அவருக்கு. இவரது இரட்டை நிலைப்பாட்டினை சனாதனிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதற்கு தக்க சான்றுகளே “இராம கிருஷ்ண” மடமும்,விவேகானந்தா கல்வி நிறுவனங்களும், அவரது பிராம்மண சீடர்களும்.

விவேகானந்தர் பற்றிய மறுவாசிப்பு அவசியம் எனக் கருதி தொடர் கட்டுரைகளை எழுதுகிறேன். உதவிய நூல்களின் பட்டியலைக் கீழே தருகிறேன்.

உதவிய நூல்கள்:
1. மஹேச குமார சர்மா அவர்கள் எழுதிய “விவேகாநந்த விஜயம்” -1912 பதிப்பு
2. Tamil-VEDANTA PHILOSOPHY-வேதாந்த தத்துவம்-A New Book of SWAMI VIVEKANANDA-[A Lecture and interesting Conversation with the learned professors and students of the Harward University.]
ஸ்ரீ ஸ்வாமி விவேகாநந்தர் அமெரிக்கா:- ஹார்வார்ட் கலாசாலையில் செய்தருளிய
அற்புத உபந்நியாசமான ‘வேதாந்த தத்துவம்’
[கலாசாலைமானவர்கள் கேள்விகட்கு சுவாமிகள்
அளித்த விடைகளுடன்.]மொழிபெயர்ப்பாசிரியர்:-
ஆர். நாராயண ஸ்வாமி அய்யர்-1923

3.The Complete works of Swami Vivekananda Vol 3
4.ஏ.கே செட்டியார் எழுதிய “குமரி மலர்” -1959 பதிப்பு
5.Madras Musings Vol XXII No.4 June 1-15,2012
6.”Lectures from Colombo to Almora-1897
7. “ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் அருளிய
இந்தியப் பிரசங்கங்கள்”திரு. தி. சு. அவினாசிலிங்கம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது-1943 பதிப்பு
8.”Alasinga Perumal
-AN ILLUSTRIOUS DISCIPLE OF SWAMI VIVEKANANDA”-A Saga of Commitment, Dedication and Devotion to His Guru by
Swami Sunirmalananda-2012

9. “ராஜம் அய்யர் சரிதை”-இது மைலாப்பூர் பி. எஸ்.ஹைஸ்கூல் முதல் உதவிபோதகரான
ஏ. எஸ். கஸ்தூரிரங்கய்யர், பீ. ஏ. எல். டி
அவர்கள் செய்தது-1909 பதிப்பு

இன்னும் வரும்

நன்றி:  தினகரன் செல்லையா

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here