டி.எம் கிருஷ்ணா கர்நாடக இசையில் ‘புதுமையை’ புகுத்தியவர். புதுமை என்றால் பழமையான பார்ப்பனியத்திற்கு எதிரான புதுமை என வாசகர்கள் புரிந்துக் கொள்ளலாம். ஆம், அவர் கர்னாடக இசை பார்ப்பனர்களின் இசை என்று இருந்ததை பன்முகப்படுத்த விரும்பினார்.
அவாள் சும்மா விடுவாளா என்ன! வரிந்துக் கட்டிக் கொண்டு வந்துட்டாள்… அதனாலேயே ஒரு கட்டத்தில் “கலை பன்மைத்துவத்துக்கு எதிராகச் சூழல் இருப்பதாகக் கூறி இனி மார்கழி சீஸன் கச்சேரிகளில் பங்கேற்க மாட்டேன்” என்றே அறிவித்தார் டி.எம்.கிருஷ்ணா.
இந்தியாவில் பார்ப்பனிய வர்ணாசிரம படிநிலையின் விளைவாக அவாள் வசிக்கும் தெருவில் கீழ்சாதி மக்கள் நடக்கக் கூடாது. அப்படியே நடந்துப் போகும் நிலை ஏற்படுத்தினாலும் செருப்பு அணியக் கூடாது. கோவிலுக்குள் நுழையக் கூடாது, போராடி நுழைய உரிமை பெற்றாலும் கருவறைக்குள் எங்களாவவை தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை என மக்களால் உருவாக்கப்பட்டதை சூழ்ச்சியால் அபகரித்தது.
இப்படி அனைத்தையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட பார்ப்பனிய கும்பல் இசையையும் தனக்கானதாக மாற்றிக் கொண்டது. கர்னாடக இசையை தங்களது பார்ப்பன சமூகத்தை தவிர வேறு யாரும் கற்கக் கூடாது என்பதில் உறுதியாய் உள்ளது.
இதற்கு எதிராக கலகம் செய்து வருபவர் தான் கர்னாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள். இசையை எப்படி ஒரு சாதியினருக்கான சொத்தாக கருத முடியும் என்ற அவரது கருத்தை சமூகத்தில் சமத்துவத்தை நேசிக்கின்ற அனைவரும் ஆதரிக்கிறார்கள். இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய டி.எம்.கிருஷ்ணா “கர்னாடக இசையில் 99 சதவீதத்திற்கும் மேலாக பிராமணர்களே உள்ளனர்” என்கிறார்.
‘செபஸ்டியன் அண்ட் சன்ஸ்’ என்ற நூலை எழுதி விவாதத்தை எழுப்பினார். மிருதங்கம் தயாரிக்கும் கலை குறித்து ஆய்வு செய்து எழுதினார். குறிப்பாக மிருதங்கத்தில் பயன்படுத்தும் பசு தோல் குறித்த கள ஆய்வும் அதுகுறித்த அவரது பல்வேறு பேட்டிகளும் பார்ப்பனர்களுக்கு ஆத்திரத்தை கிளப்பியது.
4 வருடம் முன்பு விகடனுக்கு அளித்த பேட்டியில் மிருதங்கம் தயாரிக்க பயன்படுத்தப்படும் தோல் குறித்து விளக்கியிருப்பார். “குறிப்பாக எல்லா மாட்டுத் தோல்களையும் பயன்படுத்த முடியாது என்றும் பெண் எருமை மாட்டின் தோலையும், பசு மாட்டின் தோலையுமே மிருதங்கங்கத்திற்கு பயன்படுத்துவார்கள் என்றும் இறந்த மாட்டின் தோல் உதவாது” என்றும் கூறியிருப்பார்.
படிக்க: டி.எம். கிருஷ்ணா எதிர்ப்பு: பார்பனர்களின் பதற்றம் சங்கி அரசியல்! இரண்டும் கலந்த கலவை.
மேலும் பேசிய அவர் பசுவை தெய்வமாக வணங்குபவர்கள் தான் கர்னாடக இசைக் கச்சேரியில் கொல்லப்பட்ட பசுமாட்டின் தோலில் செய்யப்பட்ட மிருதங்கத்தின் வாசிப்பை ரசித்து கேட்பார்கள் என்று அவர்களது பசு அரசியலின் முரணை அம்பலப்படுத்தியிருப்பார். மேலும் கர்னாடக இசையில் அம்பேத்கர், பெரியார் குறித்த பாடலை அவர் பாடினார். இவை தான் பார்ப்பனர்கள் மத்தியில் ஆத்திரத்தை உண்டாக்கி அவருக்கு எதிராக பார்ப்பன கும்பல் தீவிரமாக செயல்பட தொடங்கியது.
தமிழ்நாட்டு பார்ப்பன கும்பலுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்த பெரியாரை ஆதரித்து பாடல் பாடினால் சும்மாவா இருக்கும் குடுமி கும்பல். அவருக்கு எதிராக அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அவாளைக் கொண்டு அரசியல் சகுனி வேலைகளை செய்தது. ஆனால் டிஎம்.கிருஷ்ணாவோ கொஞ்சமும் வளைந்துக் கொடுக்கவில்லை. டெல்லியில் அவர் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடையை ஏற்படுத்தியது பார்ப்பன பாசிச கும்பல். ஆனால் மறுநாளே அரவிந்த் கெஜ்ரிவால் துணையுடன் நிகழ்ச்சியை நடத்தினார்.
அல்லாவை பற்றியும், கிறுத்துவ பாடலையும், மத ஒழிப்பை குறித்த பாரதிதாசன் பாடலையும் பாடியுள்ளார் டி.எம்.கிருஷ்ணா. இவையனைத்தும் பார்ப்பனர்களுக்கு அவர் மீதான வெறுப்பை அதிகரித்தன. ஆனாலும் அவர் கர்னாடக இசை பஜனையாக இல்லாமல் எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்பதில் இதுவரை உறுதியாக உள்ளார்.
படிக்க: பாட்டுக்கும் பார்ப்பனருக்கும் என்ன சம்பந்தம்? டி.எம்.கிருஷ்ணாவை ஆதரிப்போம்!
மார்கழி சீசனில் பாடாமல் புறக்கணித்த அதே நேரத்தில் பார்ப்பன கும்பலால் தாழ்த்தப்படும் குப்பங்களுக்கும், சேரிகளுக்கும் சென்று வெகுஜன மக்கள் மத்தியில் கச்சேரிகள் பாடுவது, சாதியத்துக்கு எதிராக முழங்குவது என்று அவர் தொடர்ந்து போராடினார். இவைகள் சர்ச்சையை உண்டாக்கின. கர்நாடக இசைமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியை பிராமணியம் விழுங்கி விட்டது என்று அவர் எழுதிய கட்டுரையால் பார்ப்பனர்கள் பொறுக்க முடியாமல் கத்தினார்கள். இந்த நேரத்தில் தான் அவருக்கு எம்.எஸ்.சுப்புலெட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டது. எம்.எஸ்.சுப்புலெட்சுமி பெயரில் டிஎம் கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என நீதிமன்றம் வரை சென்றது பார்ப்பன கும்பல்.
இந்நிலையில் தான் 10 ஆண்டுகளுக்கு பின் மியூசிக் அகாடமியின் 98வது ஆண்டு மார்கழி கச்சேரிகளின் ஒரு பகுதியாக டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரி கிறிஸ்துமஸ் நாளன்று நடைபெற்றது. பார்ப்பன கும்பலோ “கிருஷ்ணாவின் நடவடிக்கைகளால் கர்நாடக இசை ரசிகர்கள் அவரை வெறுத்து விட்டனர் இந்த நிகழ்ச்சியை கர்நாடக இசை ரசிகர்கள் புறக்கணிப்பார்கள்” சாபம் விட்டது. கர்னாடக இசைக்கு பார்ப்பனர்கள் மட்டும் தான் ரசிகர்களாக இருக்க முடியும் என்ற அவர்களின் நினைப்பு பொய்யாகிவிட்டது.
மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் அரங்கு நிறைந்த கூட்டத்தோடு எல்லா மரபுகளையும் உடைத்தெறிந்துவிட்டு லுங்கி – பீச் சர்ட்டுமாக சபாவுக்குள் நுழைந்த கிருஷ்ணாவுக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர். கச்சேரியும் பஜனையாக இல்லாமல் தனது கருத்துக்களை பரப்பும் வகையில் நடத்தி கலகம் செய்துள்ளார். அதில் குறிப்பாக “ராமரோ, கிறிஸ்துவோ, அல்லாவோ… எல்லா இறையருளும் ஒன்று தான்” என்றும் “எல்லா மனிதரும் ஒன்று தான்” என்று சமய நல்லிணக்கம் பரப்பும் வகையில் பாடிய கிருஷ்ணா, கச்சேரியின் இறுதி பாடலாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “சுதந்திரம் வேண்டும்” பாடலைப் பாடி அரங்கத்தை அதிர விட்டார்.
அவரது இசையை அங்கீகரித்த இசையின் உண்மையான ரசிகர்கள் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பினர். இதைப்பற்றி புகழ்ந்து எழுதிய டிவிட்டர்வாசிகள் பக்கம் சென்று வன்மத்தை கக்கி வருகிறது பார்ப்பன எலைட் கும்பல்.
லுங்கி என்பது உழைக்கும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் உடை. இதை அணிந்து ‘புனிதமான’ கர்னாடக இசை நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா என்பது தான் அவாள்களின் கொந்தளிப்புக்கு காரணம். ஏற்கனவே பகுத்தறிவு பாடல்கள், சமத்துவம் பேசும் பாடல்கள் என அவாளை புண்படுத்தி வரும் டி.எம்.கிருஷ்ணா லுங்கி கட்டிக் கொண்டு கலகம் செய்தது பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இசையை எப்படி ஒரு சாதிக்கு மட்டுமே சொந்தமானதாக மாற்ற முடியும்? அனைவருக்கும் பொதுவானதாக இருந்தால் அது பஜனையாக இல்லாமல் பொதுமக்களுக்கு பயன்படுவதாய் மக்களுக்கு சமூக சமத்துவ கருத்தை போதிப்பதாய் இருக்க வேண்டும் அதுவே ஒரு சிறந்த கலைக்கு உதாரணமாய் இருக்க முடியும். அதைத்தான் செய்கிறார் டி.எம்.கிருஷ்ணா
பார்ப்பனியம் அனைத்தையும் விழுங்கப் பார்க்கிறது. அதற்கேற்ப கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உருவாக்கியுள்ளது. இதனை நாம் அனுமதிக்க முடியாது டி.எம்.கிருஷ்ணா லுங்கி கட்டிக் கொண்டு மெட்ராஸ் மியூசிக் அகாடமிக்கு வந்ததன் மூலம் பார்ப்பனியத்திற்கு எதிராக கலகம் செய்துள்ளார். இதனை நாம் வரவேற்பதோடு அவருக்கு ஆதரவாய் நிற்பது பார்ப்பனியத்தை எதிர்த்து சமர் புரிந்துக் கொண்டிருக்கும் நம் ஒவ்வொருவருடைய அவசியமான கடமை.
- நலன்
பார்ப்பனியத்தின் திமிரை கட்டுரையின் ஆசிரியர் நன்றாக அம்பலப்படுத்தி உள்ளார். படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது கட்டுரையும் எளிமையாக இருக்கிறது.
பார்ப்பனர்களை கதறவிடும் டி எம் கிருஷ்ணா அவர்களின் கலகத்திற்கு
ஆதரவாக குரல் கொடுப்போம்.