சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் பல நூற்றாண்டுகளாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள் என்பதை எதிர்த்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் எமது தோழமை அமைப்புகள் ஏறக்குறைய பத்தாண்டு காலம் போராடி சிற்றம்பல மேடையில் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்டினோம்.
நமது முப்பாட்டன் நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை திறந்துவிடு என்று போராட்டத்தை நடத்தினோம்.
ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு விழித்துக் கொண்டுள்ள தமிழக இந்து அறநிலையத்துறை தீட்சிதர்கள் 2000 ஏக்கருக்கு மேல் நிலத்தை விற்பனை செய்துள்ளார்கள் என்று இப்போது செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலத்திட்டு மட்டுமின்றி தீட்சிதர்களின் பல்வேறு விதமான அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தி 2014 ஆம் ஆண்டு நாங்கள் நடத்திய மாநாடு மற்றும் அதன் தீர்மானங்களை மீள் பதிவு செய்கிறோம்.
தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
*****
16-2-2014 அன்று ஞாயிறு காலை 9.30 மணிக்கு சிதம்பரம் G.M. வாண்டையார் மண்டபம் நந்தனார் அரங்கத்தில் மாநாடு தொடங்கியது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி-கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளின் புரட்சிகர அமைப்புகள் இணைந்து இந்த எழுச்சிமிகு மாநாட்டை நடத்தின.
மாநாட்டுத் தீர்மானங்கள்.
1.சிதம்பரம் நடராசர் கோவிலை அறநிலையத்துறை கட்டுபாட்டுக்கு கொண்டுவர நூறாண்டுகளாக நடக்கும் வழக்கில், தீட்சிதர்களுடனும் சுப்பிரமணியசாமியுடனும் கள்ளக்கூட்டு சேர்ந்து, கோயிலை தீட்சிதர்களின் உடைமையாக்குவதற்கு தமிழக அரசு வழி செய்துள்ளது. பொதுக்கோயில் என்று சந்தேகத்திற்கிடமின்றி பல்வேறு தீர்ப்புகளில் நிலைநாட்டப்பட்ட தில்லைக் கோயிலையும் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அதன் சொத்துக்களையும், கோயிலின் அர்ச்சகர்களான தீட்சிதர்களுக்குத் தாரை வார்க்கும் வகையில் அநீதியான முறையில் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். பார்ப்பனச் சூதுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இத்தீர்ப்பையும், இதனை சாத்தியமாக்கிய தமிழக அரசையும் இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் தனிச்சட்டமொன்று இயற்றுவதன் மூலம் நடராசர் கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசைக் கோருவதுடன், இக்கோரிக்கையை வலியுறுத்திப் போராட எல்லாக் கட்சிகளையும், இயக்கங்களையும் தமிழ் மக்களையும் இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.
2. சிதம்பரம் நடராசர் கோவிலில் தீண்டாமை வெறியின் காரணமாக தீட்சிதப் பார்ப்பனர்களால் சதித்தனமாக அகற்றப்பட்ட ஆளுயர நந்தனார் சிலையை அதே இடத்தில் நிறுவவும், தீட்சிதர்களால் அடைக்கபட்ட நந்தனார் நுழைந்த தெற்கு வாயில் தீண்டாமைச்சுவரை அகற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இம்மாநாடு கோருகிறது.
3.சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு சொந்தமாக 2571 ஏக்கர் நிலம் உள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்திலேயே குறிப்பிட்டுள்ளது. இது நாள் வரை அந்த நிலங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறித்தோ, அவற்றின் வருவாய் குறித்தோ தீட்சிதர்கள் முறையாக கணக்கு கொடுத்த தில்லை என்பதையும் அரசு குறிப்பிட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான மனைகளைத் தங்களது உடைமை போல மோசடி செய்து ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு தீட்சிதர்கள் விற்றுள்ளது தொடர்பான குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படாமல் உறங்குகின்றன. இத்தகைய தீட்சிதர்களை உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்வதுடன், எல்லா தீட்சிதர்களின் சொத்து விபரங்கள் குறித்தும் நேர்மையான நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் எனவும் சொத்துக்களை மீட்க வேண்டும் எனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
4.சிதம்பரம் நடராசர் கோவிலில் 1282 கிராம் தங்கம் மற்றும் 2780 கிராம் வெள்ளி நகைகளைக் காணவில்லை என நகைமதிப்பீடு செய்த போது கண்டறிந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால் தீட்சிதர்கள் மீது இதுவரை கிரிமினல் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. நகை திருட்டு குற்றத்துக்காக தீட்சிதர்களைக் கைது செய்வதுடன், அவர்களால் களவாடப்பட்ட நகைகளை மீட்கவும் வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
5 சிதம்பரம் கோவிலில் சாதாரண மக்கள் நடராசரை தரிசிக்க வரும்போது தீட்சிதர்கள் கட்டாய கட்டணம் வசூலிக்கின்றனர். பணம் கொடுக்க முடியாதவர்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கின்றனர். மக்களின் வழிபாட்டு உரிமையைத் தங்களது வழிப்பறி உரிமையாக மாற்றிக் கொண்டுள்ள இத்தீட்சிதர்களை உரிய கிரிமினல் குற்றப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
6.சிதம்பரம் நடராசர் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சமஸ்கிருதம் முற்றிலும் தடை செய்யப்பட்டு தமிழ் மட்டுமே வழிபாட்டு மொழியாக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் வழிபாடு தெரியாத அல்லது செய்ய மறுக்கின்ற அர்ச்சகர்களை பணி நீக்கம் செய்யவேண்டும் என்றும் தமிழக அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.
7.கருவறைத்தீண்டாமை ஒழிய அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடத்த தமிழக அரசு திறமையான மூத்த வழக்கறிஞரை நியமித்து தமிழக மக்களின் குரலாக போராடி வெற்றிபெற வேண்டும் இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
8.தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் வருமானங்களையும் கோவில் பராமரிப்பு பணிக்கு போக மீதி தொகையை அந்தந்த ஊர்களில் உள்ள நகராட்சி பள்ளிகள், நகராட்சி மருத்துவமனைகளுக்கு பயன்படுத்தும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
9.கோவில்கள்,மடங்கள் உள்ளிட்ட அனைத்து மத நிறுவனங்களின் சொத்துக்களையும் மக்கள் சொத்தாக மாற்றும் வகையிலும், மதநிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் எல்லா விதமான சலுகைகளையும் ரத்து செய்யும் வகையிலும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அனைத்து மக்களும் போராட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
10. மக்களை மூடர்களாக்கும், புதுச்சாமியார்கள், திடீர் கோவில்கள், அருள்வாக்கு பேர்வழிகள் போன்ற ஆன்மீக வியாபாரிகளை மக்கள் புறக்கணிப்பதுடன், மத நம்பிக்கையின் பெயரால் தொழில் நடத்தும் இத்தகைய காவிக் கிரிமினல்களை சிறையில் தள்ள மக்கள் முன் வர வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
11.சிதம்பரம் கோயிலை தமிழ் மக்களிடமிருந்து பறித்து தீட்சிதப் பார்ப்பனர்களுக்கு உடைமையாக்குவதிலும், தமிழ் வழிபாட்டுரிமையைத் தடுப்பதிலும் முன் நின்று, வெறியோடு செயல்படும், இந்து முன்னணி, பாரதிய ஜனதா உள்ளிட்ட பார்ப்பன பாசிசக் கும்பல் தமிழகத்தில் தலையெடுக்க விடாமல் விழிப்புடனிருந்து முறியடிக்க வேண்டும் என்றும், அவர்களுக்குத் துணை போகும் தமிழின விரோதிகளை அடையாளம் கண்டு அறவே புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழ் மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
12.நகை களவு, கோவில் சொத்து மோசடி, கிரிமினல் குற்றங்கள், கோவில் உள்ளே மது, மங்கை, மாமிசம்,என்று உல்லாசமாக திரியும் தீட்சிதர்கள் புனிதர்கள் அல்ல, தீட்சிதர்களில் ஒருவர் தில்லை நடராசன் என்ற மூட நம்பிக்கையில் பாவம், புனிதம், என்ற அறியாமையின் அடிமைத்தனத்திற்கு பலியாகாமல் தீட்சிதர்களின் ஆதிக்க வெறிக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் தயக்கமின்றி சுயமரியாதை உணர்வுடன் சமரசமின்றி போராட வேண்டும் என இம்மாநாடு அறைகூவி அழைக்கின்றது.
13.தில்லை நடராசர்கோவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என கூச்சலிடும் பி.ஜே.பி.சங்பரிவார அமைப்புகளின் பார்ப்பன பாசிச அபாயத்திற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ஒருங்கிணைப்பு :
மனித(மக்கள்) உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு.
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
விவசாயிகள் விடுதலை முன்னணி.
தமிழ்நாடு-புதுச்சேரி.
தில்லை கோயிலிலிருந்து தீட்சிதர் பார்ப்பனர்களை விரட்டி அடித்து சூத்திர-பஞ்சமர் மக்களை அர்ச்சகர்கள் ஆக்கும் வரை தமிழர்கள் ஓயக் கூடாது! கோயில் நிலங்கள், நகைகள், வெள்ளிகள், கோடிக் கணக்கான பணம் அனைத்தையும் ஏப்பமிடுகின்றனர் – தில்லை தீட்சிதர் அயோக்கியன் கூட்டம்! இதற்கு சகுனி சு.சாமி
பெருந்துணையாய் நிற்கிறான்–பார்ப்பனப் பாசத்தில்! இவன்தான் ‘ராமர் பாலம்’ கட்டப்பட்டது என்று வாய் கூசாமல் புளுகியவனாயிற்றே! எல்லா இழிவுகளுக்கும் உச்ச நீதிமன்றமே ஒத்தூதுகிறது! மகஇக, மக்கள் அதிகாரம், விவிமு, புஜதொமு, புமாஇமு, ம.உ.பா.மை….
போன்ற புரட்சிகர அமைப்புக்கள் சார்பாக
சிவனடியார் ஆறுமுகசாமி மை தில்லைக் சிற்றம்பல மேடையில் நிறுத்தி தேவாரம் பாடச் செய்ய பல ஆண்டுகளுக்கு முன் பெரும் போராட்டத்திற்கிடையில் வெற்றிகரமாக நடத்திக் காண்பித்தோம்! அப்போராட்டத்தில் நானும் பங்கேற்றது பசுமையாக நினைவிலுள்ளது! வெற்றி விழா பொதுக்கூட்டம் தில்லையில் நடந்த போதும் எமது பகுதியிலிருந்து திரளாகக் கலந்து கொண்டோம்! ஆனாலும் சு.சாமியைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அம்மா J.J.
ஆதரவுடன் ஒரு போலியான துண்டுச் சீட்டை
உச்ச நீதி மன்றத்தில் காட்டி தில்லை நடராஜர் கோயில் எமது தீட்சிதர் கொள்ளைக் கூட்டத்திற்கே சொந்தம் என இன்று வரை உரிமை கொண்டாட அனுமதிப்பது தமிழ் மண்ணுக்கு இழுக்கு! வாருங்கள் தில்லை நடராஜர் கோயிலை மீட்டெடுப்போம்! நமது முப்பாட்டன் நந்தன் நுழைந்த – மூடப்பட்ட தெற்குப் சுவரை புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்குவோம்! வாயிலைத் நினைப்போம்! கோயில் சொத்துக்கள் அனைத்தையும் மீட்டெடுப்போம்! தில்லை நடராஜர் கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம்! அதற்கு தமிழ் மக்கள் வீறு கொண்டு எழுந்து களம் காண்போம்!
முந்தைய பதிவில் கண் பார்வைக் குறைபாடுகள் காரணமாக சில எழுத்துப் பிழைகள் ஏற்பட்டுள்ளன. திருத்தி படிக்கவும்.
தவறுக்கு வருந்துகிறேன்.