“ஆறுதல் தருதலும் நியாயம் கற்பித்தலும் மதத்தின் சர்வ வியாபகத் தன்மைகளாகும். மனித சாரம் உண்மையில் நிஜமாக இல்லாததால் அதுவே மனித சாரத்தை அதீத கற்பனையில் நிஜமாக்குகிறது. அதே நேரத்தில் சமய உலகில் வெளிப்படும் துன்பம், உண்மை உலகில் காணப்படும் துன்பத்தின் வெளிப்பாடு
தான், உண்மை உலகில் துன்பத்தின் எதிர்ப்பு குரலும் ஆகும். மதம் என்பது அடக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகும். இதயமற்ற உலகத்தின் இதயம் ஆகும். ஆன்மா அற்ற நிலையில் உள்ள ஆன்மா ஆகும். மதம் மக்களை மயக்கும் அபினி ஆகும்.”

-கார்ல் மார்க்ஸ்.

மதம் பற்றி ஆசான் கார்ல் மார்க்ஸ் இரத்தினச் சுருக்கமாகக் கூறியுள்ள மேற்கண்ட கூற்று எல்லா மதங்களுக்கும், எல்லாக் கடவுளர்களுக்கும் பொருத்தமானதே!

சபரிமலை கண்டனரு – மோகனரு – களின் சதிராட்டமும், தமிழ்நாட்டு பார்ப்பனச் சங்கிகளின் வெறியாட்டமும்!

நீலம் பவுண்டேஷன் கலை நிகழ்வு ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன் பாடகி இசைவாணி என்பவர் ‘ I AM SORRY IYYAPPA ‘ என்ற பாடலை பாடியிருந்தார். அதற்கு முன்பே ம.க.இ.க. கலைக்குழு பாடகிகள் 2018-ம் ஆண்டு வாக்கில் இதேபோன்று “சபரிமலைக்கு வந்தா தீட்டா? தீட்டா? எங்களைத் தடுக்கத் தனிப் பூட்டா? பூட்டா?” என்ற ஐயப்பனைப் பற்றிய பாடல் ஒன்றை பாடியிருந்தனர். இந்த பாடல்கள் இரண்டுமே ஐயப்பனை இழிவு படுத்துவது என்ற நோக்கில் அல்லாமல் பெண்ணுரிமை சார்ந்தே பாடப்பட்டவைகளாகும். சபரிமலையில் பெண்கள் வழிபட, அங்கே உள்ள அர்ச்சகப் பார்ப்பனர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் காலிகள் பழங்கதை ஒன்றை காரணம் காட்டித் தொடர்ந்து மறுத்து வந்தனர். குறிப்பாக பெண்கள் கோயிலுக்குள் வந்தால் தீட்டாகிவிடும் என்ற காரணம் காட்டினர்.

இந்நிலையில் பெண்களின் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில், பெண்கள் சபரிமலையில் வழிபடுவதற்கு தடை ஏதுமில்லை; அவர்களும் தாராளமாக வழிபடலாம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பும் வழங்கி விட்டது உச்ச நீதிமன்றம்.

பார்ப்பனர்களைப் பொருத்தமட்டில் ‘ நீதிமன்றமாவது; மயிராவது’ – என்ற எச்.ராஜா மொழியில் தமக்கு ஒத்து வராத எவற்றையுமே காலில் போட்டு மிதிக்கும் பழக்கப்பட்டவர்கள். அந்த வகையில் இந்த தீர்ப்பையும் அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் இன்றுவரை பெண்களை சபரிமலையில் வழிபட அனுமதிக்காமல் பார்ப்பனர்களும் ஆர்எஸ்எஸ் காலிகளும் தடுத்து வருகின்றனர்.
அதன் வெளிப்பாடே இத்தகையப் பாடல்கள்.

அதுவும் இப்பாடல்கள் பாடி சில ஆண்டுகள் கடந்த பின்னர் ஊடகங்களில் மீண்டும் இது வெளிச்சத்திற்கு வருகின்ற பொழுது குறிப்பாக இசைவாணியை கைது செய்யக்கோரி பலத்த குரல் எழுப்புகின்றனர்.பார்ப்பன வெறியாட்டத்தை வெளிக்கொணர்கின்றனர்.

“இசைவாணியை கைது செய்” – என முழங்கும் நடிகை கஸ்தூரி & புகார்கள் அளிக்கும் பார்ப்பனக் கும்பல்!

அகில பாரத இந்து மகா சபா சென்னை மாவட்ட தலைவர் ஆனந்தன் என்பவர் திரு வி க நகர் காவல் நிலையத்திலும், அதே மகாசபையின் வடசென்னை மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயபிரகாஷ் செம்பியம் காவல் நிலையத்திலும் பாடகி இசைவாணியை கைது செய்யக்கோரி புகார் அளித்து உள்ளனர். நடிகை கஸ்தூரி ‘என்னை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தீர்கள்; எங்கள் இந்துமத கடவுளை இழிவு படுத்திப் பாடிய பாடகியை ஏன் கைது செய்யவில்லை?’ என்று ‘அறிவுபூர்வமாக’ கேள்வி எழுப்பியுள்ளார்!

மேற்கண்ட புகார் மனுக்களின் சாரம் இதோ:-

“அமைதிப் பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில், மதக் கலவரத்தைத் தூண்டுகின்ற வகையில் இயக்குனர் ரஞ்சித் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கானாப் பாடகி இசைவாணி ‘ஐ ஆம் சாரி ஐயப்பா, நாங்கள் உள்ளே வந்தால் என்ன தப்பா, காலம் மாறிப்போச்சு, நான் தாடிக்காரன் பேத்தி’ எனப் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

சென்னை மாநகரத்தில் மதக் கலவரத்தையும், பயங்கரவாதத்தையும் ஏற்படுத்தும் விதமாக ஐயப்பனையும் அவரை வணங்கும் பக்தர்களையும், இழிவுபடுத்தும் வகையில் இந்தப் பாடலை பாடியுள்ளார். மேலும் யுடியூப் மூலமாக உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளதால் பா ரஞ்சித் மற்றும் இசைவாணியை கைது செய்ய வேண்டும் ”

இதுதான் காவல் நிலையங்களில் பார்ப்பனர்கள் முன் வைத்துள்ள கோரிக்கை. ‘அறிவு மேதை’ நடிகை கஸ்தூரியும் இதே கோரிக்கையை தனது கைதோடு ஒப்பிட்டு வலியுறுத்துகிறார்.

இரண்டும் ஒன்றா கஸ்தூரி மேடம்?

கஸ்தூரி கைது செய்யப்பட்டதற்கான காரணமோ.. ‘தெலுங்கு மொழி பேசும் பெண்கள் சில நூற்றாண்டுகள் முன்னர் வரை தமிழ்நாட்டு அரசர்களின் அந்தப் புறங்களில் (பரத்தையராக) சேவை செய்ய வந்தவர்களே’ என இழிவு படுத்திப் பேசி தமிழ் தெலுங்கு மொழி பேசும் நல்லுறவு கொண்ட மக்களிடையே குரோத மனப்பான்மையை உருவாக்கி பெரும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினார்.
அதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார். நீண்ட நாள் சிறையில் பூட்டி வைக்கப்பட வேண்டிய கஸ்தூரி பார்ப்பனக் கூட்டத்தின் செல்வாக்கால் ஒரே நாளில் விடுதலையாகி வெளிவந்து விட்டார்.

இசைவாணி பாடிய பாடலோ உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பெண்ணுரிமையை வலியுறுத்தும் பாடல் ஆகும். ‘தரம் கெட்ட கஸ்தூரியின் பேச்சும், பெண்ணுரிமை வலியுறுத்தி இசை வாணி பாடிய பாடலும் சமன் செய்து பார்க்கக்கூடிய விடயமா? இரண்டும் ஒன்றாகி விடுமா கஸ்தூரி?

அடேங்கப்பா…! நாட்டை அமைதிப் பூங்காவாக வைத்திருக்க சங்கிகளுக்குத் தான் எவ்வளவு அக்கறை?

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறதாம்! அதைப் பாழ் படுத்தி மதக் கலவரங்களையும், பயங்கரவாதத்தையும் இந்த பாடல்கள் மூலம் உருவாக்க எத்தனிக்கிறார்களாம்! எனவே ஐயப்பன் குறித்துப் பாடிய இசைவாணியையும், இயக்கிய இயக்குனர் ரஞ்சித்தையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டுமாம்!

இவற்றைக் கூறுவது யார்? வடநாடு முழுவதும், குறிப்பாக பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் முழுவதும் பார்ப்பன ஆர் எஸ் எஸ் சங்கி கூட்டங்கள் கட்டவிழ்த்துவிட்டு மதக் கலவரங்களையும், சாதிக் கலவரங்களையும் உருவாக்கி எண்ணற்றோரைக் கொன்று குவித்தும், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளங்களையும்,
குடியிருப்பு வீடுகளையும் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளி அப்பட்டமான பாசிச பயங்கரவாதத்தை ஏவி விடும் இந்த கும்பல் நமக்கு வேதாந்தம் ஓதுகிறது.

ஏன், தமிழ்நாட்டில் கூட கோவையிலும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டிலும் மதக்கலவரத்தை ஏற்படுத்தி இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் கொன்றொழித்தவர்கள் இந்தப் பார்ப்பன ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் அன்றி வேறு யார்?

சிறையில் அடைப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய அந்தக்
கொலைக் குற்றவாளிகள், பெண்கள் மீதான பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட இழி பிறவிகள் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு இந்துத்துவம் பேசுகிறது; இந்து கடவுள்களை உயர்த்திப் பிடிக்கிறது! வீதி உலா வருகிறது. இவை அவர்களுக்கு வெட்கக்கேடானது என்பதே புரியாது. ஏனெனில் அவர்களது வளர்ப்பும், வார்ப்பும் பரம்பரையாக ரத்தத்தோடு ஒன்று கலந்து விட்ட ஒன்றாகிவிட்டது!

இப்படிப்பட்ட கேடுகெட்ட இழி செயல்களில் நேரடியாகவே மிருகங்களை விட கேவலமாக நடந்து கொள்ளும் இவர்கள், ஒரு பாடகி இசைவாணி பெண்ணுரிமை சார்ந்து பாடிய பாடலால், அமைதி பூங்காவான தமிழ்நாடு, பயங்கரவாதக் கலவரம் பூமியாக மாறிவிடப் போகிறது என பதறுகிறார்கள் என்றால் இது நல்ல வேடிக்கையான ஒன்றன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

அப்பாவிப் பக்தர்களும் திருந்திட முன்வர வேண்டும்!

மக்களுக்கு எண்ணற்ற வாழ்வாதாரப் பிரச்சினைகள், தீர்க்கப்பட முடியாமல் துன்பங்களும், துயரங்களும் நீடித்துக் கொண்டே தான் உள்ளன. அதற்காக பல்வேறு கடவுள்களை வழிபட்டு அதன் மூலமாக நிவாரணம் தேடலாம் என அப்பாவித்தனமாக கருதுகிறார்கள். அப்படிப்பட்ட பக்தி வழிபாட்டை கூட உங்களுக்கு திருப்தியை உண்டு செய்யும் எனில் வீட்டு அளவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பதாலும், மகரஜோதியை கண்கொண்டு பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாலே தமக்கு ஏற்பட்டுள்ள துன்ப துயரங்கள் அனைத்தும் பறந்தோடி செல்வ செழிப்பும் நிம்மதியும் தழைத்தோங்கும் எனக் கனவு காணுகின்றார்கள்-இந்த அப்பாவி உழைக்கும் மக்கள்.

ஆனால் உழைக்கும் மக்கள், நம்பிக்கைதான் வாழ்க்கை என்று சப்பைக் கட்டு கட்டாமல் ஒவ்வொன்றையும் ஆயிரம் முறை ஆராய்ந்து பார்க்கும் போது தான் நம்முடைய பிரச்சனைக்கான வழி ‘மகர விளக்கில்’ இல்லை என்பதுவும் ‘தனிச் சொத்துடைமை’ யில் தான் இருக்கிறது என்பதுவும் புரியவரும்.

ஐயப்பன் வரலாறு தான் என்ன? ‘மகர விளக்கு’ அற்புதம் தான் என்ன?

ஐயப்பன் புராண வரலாறு ஒன்றா? இரண்டா? ஒரு கடவுளுக்கு எத்தனை விதமான கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்? அவற்றை எழுத்து வடிவமாக்கவே கை கூசுகிறது. அத்தனையும் ஆபாச குப்பைகள். இந்த ஆபாசக் குப்பைகளுக்குள் போவதை பின் ஒரு சந்தர்ப்பத்தில் வைத்துக் கொள்ளலாம்!

மகர ஜோதி அல்லது மகர விளக்கு என்பது ஐயப்பனின் மகிமையால் தென்படும் ஒளி என்றும் மகரஜோதி தெரியும் நாளன்று முதலில் ஒரு பருந்து பறக்கும் எனவும், சரியாக மாலை 6 மணிக்கு மகரஜோதி தெரியும் என்றும் சரடு விடுகிறார்களே அது உண்மையா?

சபரிமலை பொன்னம்பலமேட்டில் தென்படும் மகரஜோதி என்பது கேரளா அரசின் மின்வாரியத்தால் செய்யப்பட்ட செட்டப் தான் (அப்போதைய) ஜீப் டிரைவர் கோபி என்பவராலும் அதற்கு பின்னர் பலராலும் கற்பூரத்தை பெரிய பாத்திரத்தில் உள்ளே கொட்டி பற்ற வைத்துத் தூக்கி காண்பிக்கப்படும் ஜோதி தான் மகரஜோதி என்ற ரகசியம். இதனை கொச்சியில் இருந்து வெளிவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு 18-01-1981-ல் அம்பலம் ஆக்கியது. ஜோதியை கும்பிட வேண்டும் என்றால் ‘கோபி’யைக் கும்பிட்டாலே போதும்.

அதற்கு முன் 1970-களிலேயே மகரஜோதி என்பது அப்பட்டமான பொய் என்பதை கேரளத்தைச் சேர்ந்த வடசேரி எம்.ஆர்.சோமநாதன் (நாயர்) அம்பலப்படுத்தினார். மூடநம்பிக்கை யற்ற 3 அரசு அலுவலர்களை பொன்னம்பலம் மேட்டிற்குச் சென்று பரிசோதித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும்; ‘அற்புதத்தின்’ பெயரால் ஆயிரம் ஆயிரம் மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்குவது- அறியாமையில் மூழ்கடிப்பது கொடூரமான செயல் என 16-12-1973 ‘ஜனயுகம்’ மலையாள இதழில் எம். பிரபா என்பவர் அம்பலப்படுத்தினார்.

சில ஆண்டுகளுக்கு முன் கையும் களவுமாக பிடிபட்ட பந்தம் பிடித்து வந்த மின்வாரிய ஊழியர்களை இழுத்து வந்தார்கள் கேரள பகுத்தறிவாளர் கழத்தினர். ‘மகர ஜோதி’ புரட்டை வெளிச்சமாக்க விசாரணை கோரினர். கடைசியாக சபரிமலை பொன்னம்பலமேட்டில் தெரியும் ‘மகரஜோதி’ என்று அழைக்கப்படும் வெளிச்சம் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு, மின்வாரியம் மற்றும் வனத்துறை ஊழியர்களின் ஒத்துழைப்போடு அரங்கேற்றும் கைவரிசையே தவிர, அது சுயமாகத் தோன்றும் ‘அருள் ஒளி’ அல்ல என முன்னாள் கேரள முதல்வர் ஈ.கே. நாயனார் கேரளப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜோசப் இட முருகுவிடம் 06-01-1990-ல் அறிவித்து அம்பலப்படுத்தினார். ஆனால் மக்களின் நம்பிக்கையை தகர்க்க நாங்கள் விரும்பவில்லை என்பதாக ஈ.கே.நாயனாரும் பின்னால் வந்த அச்சுதானந்தனும் நழுவிக் கொண்டனர். அவ்வளவே!

அனைத்துப் பக்தி மார்க்கங்ளுக்கும் ஆணிவேர் முதலாளித்துவ நிலப்பரத்துவ ஆளும் வர்க்கங்களே!

தொழிலாளி வர்க்கம் தன் உரிமைகளுக்காக போராடும்போது அவர்களை அடக்கி ஒடுக்கிட முதலாளிகளும் நிலப்பரப்புகளும், அதிகாரவர்க்கமும் – அடக்குமுறை இயந்திரங்களான போலீசு, ராணுவம், சிறை கொட்டடிகள் போன்ற ‘பலத்தை’ மட்டுமே நம்பி இருப்பதில்லை. கடவுள், சாதி, மத போதைகளையும் நம்பி இருக்கிறது. இந்தப் போதைகளில் மூழ்கிப் போகின்ற ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களால் தன்னுடைய அவல நிலைமைக்கான உண்மைக் காரணத்தை உணர முடியாது. தன்னுடைய எதிரி யார் என்பதையும் உணரவும் முடியாது. சுரண்டிக் கொழுக்கும் முதலாளியையோ- நிலப்பிரபுவையோ அவனுக்கு அடியாள் வேலை செய்யும் அரசாங்கத்தையோ எதிர்த்துப் போராடாமல் கடவுள் மீது பாரத்தைப் போட்டு ஓடிக்கொண்டிருக்க முடியும். இதைத் தான் ஆளும் வர்க்கம் விரும்புகிறது.

ஆலை மூடல்களை நடத்தும் முதலாளிகளை ஐயப்பன் தண்டிப்பாரா?

தினசரி ஆலை மூடல் வேலை பறிப்புகளை சந்தித்து கொண்டிருக்கும் தொழிலாளி வர்க்கத்தை மடக்கி வைப்பதற்கு மதம் என்னும் போதை கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும் என்பதை முதலாளிகளும், மதப் பீடங்களும் நன்றாகவே உணர்ந்துள்ளனர். இதற்கான செலவையும் கூட முதலாளிகளே ஏற்றுக் கொள்கின்றனர். பிரம்மாண்ட கோவில்கள், வானுயர்ந்த சிலைகள், ஆரவார பூஜைகள் என்றெல்லாம் வாரி இறைக்கின்றனர். கடவுளையே ஸ்பான்சர் செய்யும் முதலாளிகளுக்கு, நிலப் பிரபுகளுக்கு மதம் என்னும் போதை வஸ்துவை சப்ளை செய்வது கடினமான ஒன்று அல்ல. இதிலிருந்து தெளிவதைத் தவிர உழைக்கும் மக்களுக்கு வேறு வழி ஏதுமில்லை.

பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளி வர்க்கம், இத்தகைய மூடத்தனங்களிலிருந்து முற்றாக விடுபட வேண்டும். உழைக்கும் மக்களுக்கான விடியல் என்பது உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்தில் தான் இருக்கிறது. அதற்கான போராட்டத்தில் கடவுள்களையும், மதங்களையும் வேரறுப்போம்.

பார்ப்பனர்களும் குறிப்பாக அர்ச்சகர்களும், ஆர்.எஸ்.எஸ் – பாஜக – சங்பரிவார் – சங்கிக் கூட்டங்களும் கட்டவிழ்த்து விடும் சகல விதமான பொய்களையும், புனைச்சுருட்டுக்களையும் புறம் தள்ளுவோம்! பெண்ணுரிமைப் பாடகி இசைவாணியைக் கைது செய்யக் கோரும் இந்தப் பிழைப்புவாத பார்ப்பன செப்பிடி வித்தைக்காரர்களின் விதண்டாவாத கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் குப்பையில் தள்ள வேண்டும்! தள்ளாவிட்டால் இசைவாணிக்காக போர் குரல் எழுப்புவோம்! களம் காண்போம்!

  • எழில்மாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here