பார்ப்பனீயத்தின் மீது நாம் வைக்கும் விமரிசனங்களை தந்திரமாக மொத்த இந்து மதத்தின் மீது வைக்கப்படும் விமரிசனமாக திசை திருப்பி பார்ப்பனீயம் தப்பிக்க முயலும். ஆகவே இந்த கட்டுரையின் துவக்கத்திலேயே தெளிவாக கூறி விடுகிறேன். இந்த கட்டுரையின் நோக்கம் பார்ப்பனீய கருத்துக்கள் எப்படி இந்து மதத்தில் பிறந்த நம்மை இழிவு படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை பட்டியலிடவே. இந்து மதத்தின் மீதான விமர்சனம் அல்ல!

இந்து மதத்தில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டுபவர்கள், இந்து மதத்தில் பிறந்தவர்களே! இந்துமதத்தில் பார்ப்பனீயம் திணித்த வழக்கங்களான உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், தேவதாசி முறை போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து, போராடி, அவற்றை ஒழித்தவர்கள் இந்து மதத்தில் பிறந்த முற்போக்குவாதிகளே! விதவை மறுமணத்தை நடைமுறைப் படுத்தியவர்கள் இந்து மதத்தில் பிறந்த முற்போக்குவாதிகளே!

அந்த மாற்றங்களை கொண்டு வரும் போதெல்லாம் அதை எதிர்த்தவர்கள் பார்ப்பனர்களே. குறைகளை சுட்டிக்காட்டுபவர்களை மதவிரோதிகள் என்றார்கள். ஆனால் யார் மதவிரோதிகள் என்பதற்கும், யார் உண்மையில் மதத்தை காப்பாற்றினார்கள் என்பதற்கும் காலம் பதில் சொல்லி விட்டது.

இந்துமதம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் என்றால், கருவறையில் தமிழை ஏன் ஏற்றுக்கொள்வதில்லை? குறிப்பிட்ட சாதியினரை தவிர பிறரை அர்ச்சகர்களாக ஏன் ஏற்றுக்கொள்வதில்லை? குறிப்பிட்ட சாதியினரை தவிர பிறர் வேதம் கற்பதை ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?

காரணம்: எல்லாவற்றை ஏற்றுக்கொள்வது எண்ணிக்கையில் பெரும்பான்மை வேண்டும் என்பதற்காகவே. அது தேர்தல்களில் பயன்படும். ஆனால், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது, வேதம் கற்பது, கருவறையில் தமிழ் போன்றவை பார்ப்பன ஆதிக்கத்துக்கு வேட்டு வைத்துவிடும் என்பதால் அவற்றை மட்டும் பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

இன்று இந்து மதத்தை பார்ப்பனீயம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதன் பிடியில் இருந்து இந்து மதத்தை மீட்டு விடுங்கள். அதன் பிறகு இந்து மதத்தின் மீது எந்த விமரிசனமும் இருக்காது.

பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட கொண்டு வந்த வேதங்கள், ஸ்ம்ரிதிகள், புராணங்கள், ஆகமங்கள் போன்றவற்றை மட்டும் இந்து மதத்தில் இருந்து ஒழித்து விடுங்கள். அதன் பிறகு இந்து மதத்தின் மீது எந்த விமரிசனமும் இருக்காது.

இவைதான் இந்து மதம் என்றால்… அதில் கூறப்பட்ட வர்ணாஸ்ரம கொள்கைகள்தான் இந்து மதம் என்றால்… விமரிசனங்கள் வருவதை தடுக்க முடியாது.

வேதங்கள், ஸ்ம்ரிதிகள், புராணங்கள், ஆகமங்கள் – இவற்றை ஒழித்துக்கட்டும் அளவுக்கு அவற்றில் என்ன இருக்கிறது? ஒவ்வொன்றாக பார்ப்போம்.

வேதங்கள்

எல்லா மதங்களிலும், தங்கள் புனித நூலை அனைவரும் படிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், நமது மதத்தில் மட்டும்தான், பார்ப்பனர்களை தவிர வேறு யாரும் வேதம் படிக்கக்கூடாது என்று கூறுகிறார்கள். இந்த அநியாயம் வேறு எந்த மதத்திலும் இல்லை. வேதத்தில்தான் இந்து மதத்தை பற்றிய அனைத்து உண்மைகளும் இருப்பதாக சொல்லிக்கொள்வார்கள். ஆனால் அந்த வேதத்தை படித்து புரிந்து கொள்ள இந்து மதத்தவருக்கே உரிமை இல்லை!

பிராமண குழந்தை மட்டும்தான் வேதம் படிக்கலாம் என்று, காஞ்சி சங்கர மடம் நடத்தும் வேத தர்மசாஸ்திர பரிபாலன சபா என்கிற வேதபாடசாலையை சேர்ந்த பார்ப்பனர் ஒருவர் கூறுகிறார். நீங்களே கேளுங்கள்

இவர் சொல்வது உண்மையா? ஆதாரங்களோடு பார்ப்போம். முதலில் வேதத்தில் இருப்பதை பார்த்து விடுவோம்.

கிருஷ்ண யஜுர் வேதத்தில், 7.1.1 என்கிற சுலோகத்தின் மொழிபெயர்ப்பு கீழே இருக்கிறது. மத்திய அமைச்சகத்தின் வலைத்தளத்தில் இந்த மொழிபெயர்ப்பு இருக்கிறது.

Link: http://vedicheritage.gov.in/flipbook/Krishnayajurveda_Taittiriya_Samhita_Tamil_Vol_10/#book/25

தலையில் இருந்து பிராமணன் பிறந்தான், தோளில் இருந்து சத்திரியன் பிறந்தான் என்று வேதத்தில் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். அதில் கூடுதலாக இன்னொரு செய்தியும் இருக்கிறது.

தலையில் இருந்து பிராமணன் மட்டும் பிறக்கவில்லையாம். அக்கினியும் பிறந்தானாம். வெள்ளாடும் பிறந்ததாம். அதே போல, தோளில் இருந்து சத்திரியனும் பிறந்தான், இந்திரனும் பிறந்தான், பள்ளை ஆடும் பிறந்தது. வயிற்றில் இருந்து, வைசியனும் பிறந்தான், விசுவே தேவர்களும் பிறந்தார்கள், பசுவும் பிறந்தது. காலில் இருந்து சூத்திரனும் பிறந்தான், குதிரையும் பிறந்தது, ஆனால் எந்த தேவர்களும் பிறக்கவில்லை.

ஆகவே, பிராமண சத்திரிய வைசியர்கள் என்ற மூவண்ணத்தார்க்கு பணிவிடை செய்வதே  சூத்திரர்களுக்கும் குதிரைக்கும் இடப்பட்ட பணிகள். சூத்திரர்களுக்கு யாகம் செய்யும் உரிமை கிடையாது. காலில் இருந்து பிறந்தமை கொண்டே, சூத்திரர்களும் குதிரையும் காலினால் செய்யும் தொழிலால் பிழைக்கின்றனர்.

இதுவே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை அடிப்படையாக வைத்து, பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதிய ஆதி சங்கரர், தனது பிரம்ம பாஷ்யம் நூலில் அபஸூத்ராதிகரணம் என்கிற ஒரு அத்தியாயம் முழுக்க, சூத்திரர்களுக்கு ஏன் வேத கல்வி கூடாது என்று வாதிடுகிறார்.

Link http://www.sankaracharya.org/library/BrahmaSutra.pdf

பார்ப்பனர்கள் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்பார்கள். இந்த உபநயனம் என்பது சூத்திரர்களுக்கு கிடையாது என்று பிரம்ம சூத்திரத்தில் இருப்பதை விவரிக்கிறார் ஆதி சங்கரர்.

இறுதியாக எப்படி முடித்திருக்கிறார் என்று பாருங்கள். சூத்திரர்கள் வேதத்தை கேட்பதோ, படிப்பதோ, அதை புரிந்து கொள்வதோ கூடாது. வேதத்தை கேட்ட சூத்திரனின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும். சூத்திரன் ஒரு நடமாடும் சுடுகாடு. அதனால் அவனருகில் வேதத்தை வாசிக்க கூடாது. வேதத்தை உச்சரித்தால் அவன் நாக்குகள் வெட்டப்பட வேண்டும். அதை மனப்பாடம் செய்தால், அவன் உடல் கூறு போடப்பட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட பிரம்ம சூத்ர பாஷ்யம் நூல், ஆதி சங்கரரின் பெயரில் இயங்கி வரும் வளைத்தளத்தில் இருக்கிறது. மேலும் காஞ்சி சங்கர மடத்தின் வலைத்தளத்திலும் இருக்கிறது. Link https://www.kamakoti.org/kamakoti/articles/Essence%20of%20Brahma%20Sutras.pdf

பிரம்ம சூத்திரத்துக்கு ராமானுஜர் எழுதிய உரையான ஸ்ரீ பாஷ்யத்திலும் இதே கருத்து இருக்கிறது. அந்த வரிகளை கர்நாடக அரசு சமஸ்கிருத கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் M.A. ஆழ்வார் படிப்பதை இந்த காணொளியில் கேட்கலாம்.

வேதத்தில் இருப்பதை சூத்திரர்கள் தெரிந்து கொள்ளத்தான் இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் எழுதப்பட்டதாம். ஏன், வேதத்தில் இருப்பதை நேரடியாக படித்து தெரிந்து கொண்டால் என்ன தவறு? பார்ப்பனர்கள் இப்படி எழுதி வைத்ததற்கு காரணம் வேறு எந்த சமூகத்தினரும் தங்களுக்கு போட்டியாக வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். வேதத்தில் என்ன இருக்கிறது என்று நாம் கேட்டால், அதில் இருப்பது எல்லாம் புராணங்களில் இருக்கிறதே! அதைப்பார்த்து தெரிந்து கொள் என்பார்கள்.

தொடரும்…

  • பூதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here