கொள்கைகளற்ற வெற்று பிம்பமாக மாற்றப்படும் அம்பேத்கர்!


ந்த ஏப்ரல் 14, 2022 அன்று பல்வேறு அரசியல் கட்சிகள் அம்பேத்காரின் ஆண்டு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடியதை ஊடகங்களின் வாயிலாகக் கண்டுகளித்தோம். கடந்த சில பத்தாண்டுகளாக பெரும்பாலான அரசியல் கட்சிகள் சமூக நீதிக்கான இந்த மாபெரும் தலைவருக்கு மாலை அணிவித்து வருகின்றன. இப்படியான அம்பேத்கர் புகழ்பாடும் கிளப்பில் சமீபத்தில் இணைந்துள்ளது RSS பின்புலம்கொண்ட அன்னா ஹசாரே இயக்கத்தின் தயாரிப்பான ஆம் ஆத்மி கட்சி. இந்து தேசியவாதத்தின் பல்வேறு துணை அமைப்புகளும், பாஜக-வும் சமீபகாலமாக அம்பேத்கரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதிலும், தாங்களும் அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் என்று காட்ட பல சூழ்ச்சிகளை மேற்கொள்வதிலும் முன்னணியில் உள்ளன. இந்த ஆண்டு பல்வேறு RSS அமைப்புகள் இதையொட்டி நிகழ்ச்சிகளை நடத்தின. பாஜக, ‘சமூக நீதி வாரம்’என்று பசப்பியது. சமூக நலன், அதிகாரமளித்தல் மற்றும் சமூக செயல்முறைகளில் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் அம்பேத்கரின் பணிகளை பாஜக முன்னிறுத்தியது. அதன் ஒரு பகுதியாக ஒடுக்கப்பட்ட/ஒதுக்கப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த செய்தியை பரப்புவதற்காக தலித் வீடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். RSS-ன் துணை அமைப்பான ABVP நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமூக உள்ளடக்கம் (social inclusion) குறித்தான அம்பேத்காரின் பணிகளை  பிரச்சாரம் செய்வதை நோக்கமாக அறிவித்தது.

இது நம் காலத்தின் மிகப்பெரிய முரண்பாடாக இருக்கலாம். அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் கடுமையாக எதிர்த்த  இந்து தேசியவாதத்தைத்தான் RSS மற்றும் அதன் துணை அமைப்புகள் தூக்கிப்பிடிக்கின்றன.  இது மதச்சார்பின்மை, சோசலிசம், ஜனநாயகம் மற்றும் சமூக நீதியுடன் கூடிய இந்திய தேசியம் என்ற அம்பேத்கரின் கருத்துக்கு முற்றிலும் எதிரானது. இந்து தேசியவாதிகளால் பரப்பப்பட்ட பிராமண இந்து மதத்தின் முதுகெலும்பான சாதி-வர்ண அமைப்பை அம்பேத்கர் இறுதிவரை எதிர்த்தார். இந்து சமுதாயத்தில் சீர்திருத்தத்திற்கான அவரது போராட்டங்களில், அது சாவ்தார் குளம் போராட்டமாகட்டும் அல்லது கலராம்  கோவில் நுழைவுப் போராட்டமாகட்டும், அன்றைய இந்து மகாசபை-RSS அவரை ஆதரிக்கவில்லை. இந்து தேசியவாதிகள் அவருடைய முயற்சிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தனர். அம்பேத்கர் ஒருபுறம் இந்து தேசியவாதத்தின் கருத்தியல் அடிப்படையான பிராமண இந்து மதத்தில் உள்ளார்ந்த சாதி மற்றும் பாலின படிநிலைக்கு எதிரான கிளர்ச்சியாக மனுஸ்மிருதியை எரித்தார், மறுபுறம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்காக பாடுபட்ட இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பியாக இருந்தார்.

அம்பேத்கர் மனுஸ்மிருதியை எரித்த பத்தாண்டுகளுக்குப் பிறகு RSS தலைவர் கோல்வால்கர் அப்புத்தகத்தைப் புகழ்ந்து பாடினார். இந்நூல் பார்ப்பன இந்து மதத்தின் அடிப்படையான சாதிய படிநிலையை நிலைநிறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பிற்கு எதிர்ப்பு RSS முகாமிலிருந்து தான் வந்தது. புதிய அரசியலமைப்பில் இந்தியாவின் பண்டைய மதிப்பீடுகள் (மனுஸ்மிருதி என்று பொருள்) என்று எதிர்ப்பு தெரிவித்தது. இடஒதுக்கீட்டிற்கு முற்றிலும் எதிரான RSS மற்றும் அதன் துணை அமைப்புகள் 1980-களில் அகமதாபாத்தில் தலித் எதிர்ப்புக் கலவரங்களையும், 1986-ல் OBC எதிர்ப்புக் கலவரங்களையும் நடத்தின. மண்டல் கமிஷன் அமலுக்கு வந்தவுடன் அதை நேரடியாக எதிர்க்காமல் மக்களை பிளவுபடுத்த  கமண்டல், ராமர் கோயில் பிரச்னையை முன்வைத்தனர்.

சாதி மற்றும் பாலின படிநிலையைப் பாதுகாக்கும் RSS-ன் உண்மையான நிகழ்ச்சி நிரலைக் காட்டுவதற்குப் பதிலாக, தங்கள் உத்தியை மாற்றி, தலித்-OBC-களை இணைத்து அடிபணியச் செய்ய பல்வேறு அமைப்புகளை உருவாக்கினர். சமூக நல்லிணக்க மன்றம் நடத்தி அம்பேத்காரின் சாதி ஒழிப்புக்கு மாறாக சாதிகளின் பங்கைப் பற்றி பேசுகிறார்கள். இதையே RSS-ன் சித்தாந்தவாதியான தீனதயாள் உபாத்யாயா, “ஒருங்கிணைந்த மனிதநேயம்” என்று முன்வைத்துள்ளார்.

தீனதயாள் உபாத்யாயா

இந்த சமூகப் பொறியியலின் காரணமாகவே எதிரிகளாக முன்னிறுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராக தலித்துகளையும் ஆதிவாசிகளையும் RSS மற்றும் அதன் துணை அமைப்புகளால் அணிதிரட்ட முடிந்தது. தலித்-OBC சமூகத்தினரிடையே பணியாற்ற அவர்கள் பல உத்திகளைக் கடைப்பிடித்துள்ளனர். இந்து சமுதாயத்தின் அனைத்து தீமைகளுக்கும் காரணமாக முஸ்லீம்களை சித்தரித்து அவர்களுக்கு எதிராக “இந்து ஒற்றுமை” மீது கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர். 2002-ஆம் ஆண்டு குஜராத் படுகொலையில், தலித்-ஆதிவாசிகள் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடத் தூண்டப்பட்டபோது, ​​வன்முறையின் ஏற்பாட்டாளர்கள் தயாரித்த அழித்தொழிக்கப்படவேண்டியவர்களின் பட்டியலே இதற்கு சாட்சி.

2017-ஆம் ஆண்டு உ.பி.யில் நடந்த தேர்தலின் போது, ​​காங்கிரஸும் சமாஜ்வாதியும் முஸ்லீம்களுக்கு ஆதரவானவர்கள் என்றும், இந்துக்களுக்கு (தலித்-ஆதிவாசிகள்) பாஜக மட்டுமே என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. RSS-ன் துணை அமைப்புகளான சமாஜிக் சம்ரஸ்தா மஞ்ச், வனவாசி கல்யாண் ஆசிரமம், சேவா பாரதி, VHP போன்ற அமைப்புகளின் பிரதான பணி தலித்-ஆதிவாசிளை இந்து தேசியவாதத்திற்குள் இழுப்பதுதான்.

ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில், சபரி மற்றும் ஆஞ்சநேயர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. பிற ஒதுக்கப்பட்ட சமூகங்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் சுஹேல் தேவ் போன்ற பல உள்ளூர் நாயகர்களின் சின்னங்கள் முஸ்லீம் விரோத வாசகங்களுடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. முஸ்லீமான காசி மியானுக்கு எதிராக இந்து மதத்தைக் காக்க சுஹேல் தேவ் போராடினார் என்று வரலாற்றைத் திரித்துக் கூறி அம்மக்களிடம் கருத்துருவாக்கம் செய்கிறார்கள்.

தலித் பகுதிகளில் RSS-ன் துணை அமைப்புகளின் தொண்டு மற்றும் கல்விப் பணி சேவைகள் என்பது முந்தைய காங்கிரஸ் அரசைப்போல் உரிமையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அப்போது தகவல் அறியும் உரிமை என்பது உணவு உரிமை, சுகாதார உரிமை மற்றும் கல்வி உரிமை போன்றவற்றால் செயல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போதைய பாஜக அரசாங்கம் மேலே குறிப்பிடப்பட்டவற்றையெல்லாம் ஒரு தொண்டு மாதிரி செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு தேர்தலில் இலவச ரேஷன் திட்டத்தின் மூலம் ஏழைகள் பலனைப் பெறுவதற்கு பாஜக தான் காரணம் என்றும் அவர்கள் பாஜக திட்டங்களின் பயனாளிகள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்து தேசியவாத அமைப்புகளின் இருப்பே ஓரங்கட்டப்பட்டவர்கள் பாஜக-விடம் ஈர்க்கப்படுவதற்கு ஒரு பெரிய காரணியாகும். இவ்வமைப்புகள் தங்கள் வேலை செய்யும் பகுதிகளில் பிராமணீயமயத்தைப் புகுத்துகிறார்கள். தங்களின் வழிபாடுகள் சமஸ்கிருதமயமாக்கப்படுவதால் தலித் மற்றும் பிற விளிம்புநிலை சமூகங்கள் தாங்களும் உயர் சாதியினரால் கௌரவமாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் உணர்கிறார்கள், அதன் மூலம் பாஜக-வுக்கு தங்கள் தேர்தல் விசுவாசத்தைக் காட்டுகிறார்கள். அதுமட்டுமில்லாது RSS-ன் துணை அமைப்புகள் மட்டுமே தலித் சமூகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளன.

RSS-ன் அரசியல் செயல்திட்டமான “இந்து ராஜ்ஜியம்” என்பது, அம்பேத்கர் கூறியதைப்போல, பெரும் பகுதி மக்களுக்கு, குறிப்பாக தலித் மக்களுக்கு பேரழிவாக இருக்கும் என்ற நிலையில் இந்து ராஜ்ஜியத்துக்காக அதன் தேர்தல் அல்லாத துணை அமைப்புகளின் உழைப்பால் பெரிய தேர்தல் வெற்றிகளை பாஜக அறுவடை செய்கிறது. 2014-லிருந்து பல தலித்-OBC பகுதிகளில் பாஜக பெரும்பலத்தோடு இருக்கிறது.

2014 பொதுத்தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற தலித் வாக்குகள் பெரிதும் உதவியது. தற்போது நாடாளுமன்றத்தில் 84 இடங்கள் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 2014-ஆம் ஆண்டில் அவற்றில் 40 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது என்று Study of Developing Societies (CSDS) நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 மற்றும் 2019-க்கு இடையில் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு இருமடங்காக அதிகரித்துள்ளது. 2021 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூட பாஜகவுக்கான ஆதரவு உயர் சாதியினரை விட தலித்துகள் மற்றும் OBC-கள் மத்தியில் அதிகமாகி வருவதை நாம் காண்கிறோம்.

இவை அனைத்தும் OBC மற்றும் தலித் மக்களின் இடஒதுக்கீட்டை அரித்துக்கொண்டிருக்கும் பாஜகவின் கொள்கைகளுக்கும், கடந்த சில ஆண்டுகளாக தலித்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் அதிகரிப்புக்கும் மத்தியிலும் நடந்துகொண்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட பிரிவினரை குறிவைத்து RSS மற்றும் அதன் துணை அமைப்புகள் தங்கள் செயல்தந்திரத்தில் செய்த மாற்றம் அவர்களுக்கு தேர்தல் மட்டத்தில் பெரும் வெகுமதியை அளித்துள்ளது.

ஆங்கிலத்தில்: Dr Ram Puniyani

தமிழில்: செந்தழல்

நன்றி: countercurrents

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here