இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே வறுமை, செல்வ சமத்துவமின்மை மற்றும் நிதி சேர்க்கை!

0

“இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே வறுமை, செல்வ சமத்துவமின்மை மற்றும் நிதி சேர்க்கை” என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையானது பாரிஸில் உள்ள மக்கள்தொகை பகுப்பாய்வு கணக்கீட்டு நிறுவனத்தை (Institute National d’etuds demographiques) சேர்ந்த சாவி திவாரி( Chhavi Tiwari), இந்தோ- ஆஸ்திரேலிய நிறுவனமான NGN – ஐ சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கோலி ( Srinivas goli), ஜேஎன்யு பல்கலையின் கீழ் செயல்படும் பிராந்திய மேம்பாட்டு ஆய்வு மையத்தை (Centre for the study of Regional Development) சேர்ந்த முகம்மது ஜாகித் சித்திக் (Mohammad Zahid Siddiqui), சர்வதேச மக்கள் தொகை அறிவியல் கழகத்தை ( International Institute for Population Sciences) சேர்ந்த பிரதீப் எஸ் சால்வே (Pradeep S Salve) ஆகிய நான்கு அறிஞர்களால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இவர்கள் இந்த ஆய்வுக்கான தரவுகளை, 2014 -15 ஆம் ஆண்டு உ.பி யில் உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் தலித் முஸ்லிம்களின் சமூக மற்றும் கல்வி நிலையை மதிப்பிடுவதற்காக Giri Institute of Development Studies (GIDS) மூலம் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகளைப் பயன்படுத்தினர். இந்த ஆய்வு முடிவானது, உத்தரபிரதேசத்தில் பல்வேறு சாதிப் பிரிவினரிடையே உள்ள நுகர்வு செலவுகள் மற்றும் நில உடமைகள் குறித்து புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக இந்தியாவில் சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள் சாதிய அடிப்படையில் வேறுபடுகிறது. அதாவது ஆதிக்க சாதியினர் பெருமளவு சொத்துக்களைக் குவித்து வைத்திருப்பதை ஆராய்ச்சியாளர்களும் கல்வியாளர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும் அவர்களது மதிப்பீடுகள் மற்றும் அளவீடுகள் முஸ்லீம் மற்றும் இந்து தலித்துகள் வறுமையில் இருப்பது, ஒதுக்கி வைக்கப்படுவது குறித்த ஆய்வில் போதுமான கவனத்தை செலுத்த வில்லை. சமீபத்தில் வெளியான இந்த ஆய்வுக் கட்டுரை, உ.பி யில் வறுமை, செல்வ சமத்துவமின்மை மற்றும் நிதி சேர்க்கையில் துணை சாதிப்பிரிவுகள் மட்டத்தில் மதிப்பிடப்பட்ட ஆய்வில் இந்து தலித்துகள் மற்றும் தலித் முஸ்லிம்களின் நுகர்வு செலவானது மற்ற சாதிகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என தெரியவந்தது.

அதேபோல உ.பி யில் நிலமற்ற குடும்பங்களில் அதிகம் காணப்படுவது பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் முஸ்லிம்களும் இந்துக்களும்தான் (பாசி மற்றும் சமர்). இந்தப் பிரிவினர் தான் அதிகபட்ச வறுமை நிலையிலும் உள்ளனர். இதற்கு மாறாக பார்ப்பனர்கள், தாகூர்கள் மற்றும் பிற இந்து ஆதிக்க சாதிகள் அதிக சொத்துக்களை குவித்து, வறுமை இல்லா (அல்லது மிகக் குறைந்த வறுமை) நிலையில், சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளனர்.

 

கூடுதலாக ஆதிக்க சாதி பிரிவுகளில் உள்ள வருமான ஏற்றத்தாழ்வுகள் ஏனைய பிற்படுத்தப்பட்ட இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் தலித் சாதி பிரிவுகளில் காணப்படும் வருமான ஏற்றத் தாழ்வுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. இதுபோன்ற சமூக எதார்த்தத்தை வெளிக்கொணர்ந்துள்ள இந்த ஆய்வானது, ஒரு குடும்பத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைகளை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளது.

1. வாழ்க்கை முறையின் பற்றாக்குறை/போதாமை – வறுமையும், செலவுகளும்:

இந்த ஆய்வு சராசரி தனிநபர் செலவினம் மற்றும் சாதி, உட்சாதி பிரிவு மட்டங்களில் வறுமையின் அளவினை கணக்கிட்டது. சராசரி தனிநபர் செலவினமானது, சாதிய ஏற்றத்தாழ்வுகளை போலவே மிகவும் பரந்த ஏற்றத்தாழ்வை கொண்டிருப்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. பார்ப்பனர்களும், தாகூர்களும், ஏனைய இந்து பொதுப் பிரிவினரை விட அதிகமாகவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் அனைத்து மத தலித் பிரிவினரை விட மிகவும் அதிகமாகவும் செலவழிக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட பிரிவில் வரும் ஜாட்கள் மட்டும்தான் பார்ப்பனர்களுக்கு இணையாக தனிநபர் செலவினத்தில் ஈடுபடுகின்றனர். மற்ற சாதிகளுடன் ஒப்பிடுகையில் பாசிகள் (தலித்) தான் மிகக்குறைந்த தனிநபர் செலவினம் செய்யும் நிலையில் உள்ளனர். சமூக மற்றும் பொருளாதார விசயங்களில் ஆழமாக வேரூன்றி இருக்கும் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் ஏதோ ஒரு வகையில், ஒரு வடிவில் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது.

 

இந்தியாவில் சாதிய அடிப்படையிலான சமூக அடுக்கு முறையானது வறுமை நிலைகளிலும் பிரதிபலிக்கிறது என்பதையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. அதாவது சாதி அடிப்படையில் கிராமப்புறத்தில் நிலவும் வறுமையின் அளவீடுகளை தெரிவிக்கிறது. தலித் முஸ்லிம்கள் (52.5%), தலித் இந்துக்கள் (51.9%), பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள்(32%) பிற்படுத்தப்பட்ட இந்துக்கள்(38%) இதர முஸ்லிம்கள் (31.3%), பொதுப்பிரிவு இந்துக்கள் (14.4%) என்ற அளவில் வறுமை நிலையில் உள்ளனர். சாதி உட்பிரிவுகளில் தாகூர்கள் மிகக்குறைந்த அளவாக 9%, இவர்களைத் தொடர்ந்து பார்ப்பனர்கள் 15.9% மற்றும் பொது சாதிக்குழுக்கள் 20% என்ற அளவில் உள்ளனர்.

நகர்ப்புறங்களில் தனிநபர் செலவினமானது, தாகூர்கள், பார்ப்பனர்கள், இதர பொதுப்பிரிவு இந்துக்கள், குருமிகள் மற்றும் ஜாட்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்து பொதுப்பிரிவினர், பார்ப்பனர்கள் மற்றும் தாகூர்களின் நகர்புற வறுமை கணிசமாக குறைவாகவே உள்ளது. முஸ்லிம்கள், தலித் முஸ்லிம் மற்றும் இந்துக்கள், இதர பிற்படுத்தப்பட்ட இந்துக்களை விட குர்மிகள் மற்றும் ஜாட்களின் வறுமைநிலை குறைவாகவே உள்ளது. தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் தொடர்ந்து வறுமையில் வாடுகின்றனர் என்ற வாதத்தை வலுப்படுத்தும் ஆதாரமாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.

2. நில உரிமை மற்றும் வரலாற்று ரீதியான புறக்கணிப்பு:

பயிரிடக்கூடிய அல்லது பயிரிட முடியாத நிலவுடமை யானது செல்வ சமத்துவமின்மையை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது நிலம் வைத்திருக்கும் ஆதிக்க சாதிகள் தங்களது சமூக அரசியல் மற்றும் பொருளாதார முதலீட்டை வைத்து சமூகத்தில் முக்கிய இடத்தை பெறுகின்றனர் அடுத்ததாக அரசியலில் பெரும் மேலாதிக்கம் செல்வக் குவிப்பு என்ற சுழற்சியை அவர்களுக்கு வழங்குகிறது கிராமப்புற பொருளாதாரத்தை பொருத்தவரை நிலவுடமை அல்லது நிலப்பயன்பாட்டு உரிமை போன்றவையே பொருளாதார நிலை மற்றும் அதிகார உறவுகளின் கருவியாக உள்ளது.


சாகுபடி செய்யக்கூடிய நிலங்களில் சாதிய உட்பிரிவினர் வசம் உள்ள நிலவுடமை பற்றிய ஆய்வின் முடிவுகள் மோசமான சித்திரத்தை நமக்கு வழங்குகின்றன. நிலமற்ற குடும்பங்களில் முஸ்லிம் பிரிவினரும் தலித் முஸ்லிம்களும் தான் மிக அதிகமான அளவில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் தலித் இந்து பிரிவினரான பாசி மற்றும் சாமர்கள் உள்ளனர். மாதிரியில் எடுக்கப்பட்ட 20% பொது இந்து சாதிப் பிரிவினர் பயிரிடக்கூடிய நிலத்தில் 30% க்கும் அதிகமாக வைத்திருந்தனர். சாதிகளுக்கு இடையே உள்ள நில வினியோகம் அச்சுறுத்தும் வகையிலான வேறுபாடுகளை கொண்டிருந்தது. உதாரணமாக பார்ப்பனர்கள் நிலத்தின் பங்கில் 15%, அடுத்து தாகூர்கள் 11% யாதவ் 10% பிற இந்து சாதிகள் 6%, ஜாட்கள் 8%, குர்மிகள் 4% என்ற அளவில் வைத்துள்ளனர். எடுக்கப்பட்ட மாதிரி மக்கள் தொகையில் இவர்களது சதவீதம் முறையே 10, 7, 10, 4, 5, 3 ஆகும். மாதிரிக்கு எடுக்கப்பட்ட மக்களில் முஸ்லிம்களும் தலித் பிரிவினரும் எஞ்சியுள்ள 25% சாகுபடி நிலத்தை வைத்திருந்தனர். இது இந்து பொதுப்பிரிவினர் மற்றும் இந்து தலித்துகள் இடையே பெரிய ஏற்றத்தாழ்வை காட்டுகிறது.

நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கான சராசரி நில அளவையும் இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இந்து பொதுப்பிரிவினர் – 2.9 ஏக்கர், முஸ்லிம் பொதுபிரிவினர்- 2.07, இதர பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் 1.97, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் 1.09, தலித் முஸ்லிம்கள் 1.05 ஏக்கர்களை வைத்திருக்கும் நிலையில் குர்மிகள் 3.28, தாகூர்கள் 3.08, ஜாட்கள் 2.94, யாதவர்கள் 2.45 மற்றும் பார்ப்பனர்கள் 2.8 ஏக்கர்களை சராசரியாக வைத்துள்ளனர்.

மொத்தத்தில் வரலாற்று ரீதியாக பின்தங்கிய சாதிகள், மக்கள் தொகையில் அதிகம் இருந்தாலும் விவசாய நிலத்தில் குறைந்த பங்கையே கொண்டிருக்கின்றனர். தலித் இந்துக்கள், தலித் முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், இதர பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் ஆகியோர் நிலமற்றவர்களாக அல்லது சிறு நில உடைமையாளர்களாகவோ இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலம் விற்பனை குறித்தான புள்ளிவிபரங்கள் படி, தலித்துகள் கணிசமான விகிதத்தில் தங்கள் நிலத்தை மற்ற ஆதிக்க சாதிகளுக்கு விற்றுள்ளனர்.

3. சொத்துக்குவிப்பு, வீட்டு நிலைமைகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றில் பற்றாக்குறை:

வரலாற்று ரீதியாக ஏற்றத்தாழ்வு மற்றும் வேறுபாடுகளை இங்குள்ள பல அடுக்கு சாதி அமைப்பானது நிலைநிறுத்துகிறது. சாதியப் படிநிலைகளை ஒப்பிடுகையில் செல்வ சமத்துவமின்மை குறித்து ஒப்பீட்டளவில் குறைவான ஆய்வுகளே நடந்துள்ளன. விவசாய நிலவுடமை இல்லாதவர்கள் அளித்த தரவுகளின்படி, பல்வேறு உட்சாதி பிரிவினரிடையே உள்ள குடும்ப சொத்து மதிப்புகளை இந்த ஆய்வு ஆராய்ந்தது. சாதிவாரியாக குடும்பங்களின் பொருளாதார நிலை குறித்த முடிவுகள் சுவாரசியமான தகவல்களை வெளிக்காட்டின.

 

 

ஜாட்களில் 55%, தாகூர்களில் 43%, பார்ப்பனர்கள் 38%, இந்துப் பொதுப்பிரிவினர் 37%, யாதவ்கள் 31% என்ற அளவில் செல்வந்தர்களாக உள்ளனர். மறுபுறம் பாசி, சமர் மற்றும் இதர தலித் இந்துக்கள், தலித் முஸ்லிம்கள், இதர முஸ்லிம் குடும்பங்களில் 40% பேர் மிகவும் வறிய நிலையில் – சொத்துக்கள் அற்றநிலை – உள்ளனர்.

4. கடன் மற்றும் நிதி நிலைமைகள்:

இந்த ஆய்வில் கடன் நிலைகள் குறித்தும் ஆராயப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் கடன் வாங்கியுள்ளீர்களா? என குடும்பத்திடம் கேட்கப்பட்டது. அடுத்து கடன் வாங்குவதற்கான காரணம், மூன்றாவதாக கடன் வாங்குவதற்கான ஆதாரம் குறித்தும் கேட்கப்பட்டது. இது குடும்பங்களில் சாதி நிலை காரணமாக கடன் மற்றும் கடன் கிடைப்பதற்கான கட்டுப்பாடுகள் போன்றவற்றை கண்டறிய உதவியது.

ஆய்வின்படி குடும்பத்தின் சொத்து நிலைக்கு மாறாக கடந்த மூன்று ஆண்டுகளில் கடன் வாங்கிய குடும்பங்களில் ஜாட்டுகள் 43%, இவர்களைத் தொடர்ந்து தாகூர்கள், குர்மிகள், சமர்கள், பாசிகள் மற்றும் பார்ப்பனர்கள் அதிகமாக உள்ளனர். பெரும்பாலான ஆதிக்க சாதியினர் விவசாய நடவடிக்கைகளுக்காக கடன் வாங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 4- ல் 3 பங்கு தாகூர்கள் விவசாயத்திற்காக கடன் பெற்றனர். அவர்களைத் தொடர்ந்து ஜாட்டுகள் – 66%, பார்ப்பனர்கள் – 60%, யாதவர்கள் – 46%, குருமிகள் – 33%, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் – 33% என்ற அளவுகளில் கடன் பெற்றுள்ளனர்.

 

திருமண விழாக்களுக்காக வாங்கப்பட்ட கடன்கள் பெரும்பாலும் லோத்கள், யாதவர்கள், தலித் இந்துக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. சமூக, பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர், பாசி மற்றும் சமர்கள் உடல்நலக் காரணங்களுக்காகவும், திருமண சடங்குகள் மற்றும் குடும்ப கடமைகளை நிறைவேற்றவும் கடன் வாங்கியுள்ளனர். கல்விக்கான கடன்கள் இதர இந்து பொதுப் பிரிவினரிடையே அதிகமாக காணப்பட்டது. இவர்களைத் தொடர்ந்து லோத்கள் மற்றும் சமர்கள் உள்ளனர்.

கடன் பெறுவதற்கான ஆதாரங்களைத் தீர்மானிப்பதில் அவர்களது சமூக, பொருளாதார நிலை முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்ட சாதிகள் பெரும்பாலும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உள்ளூரில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடமிருந்து கடன்களை பெற்றுள்ளனர். கணக்கெடுப்பு முடிவுகளின்படி அன்சாரி முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்றுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து தலித் இந்துக்கள் – 57%, பாசிகள் – 48.2%, குர்மிகள் – 48%, இதர பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் – 44.5% என்ற அளவில் உள்ளனர்.

கௌஷல் ஷ்ரொப் (Kaushal shroff)

கட்டுரை மூலம்:

https://m.thewire.in/article/economy/what-does-the-caste-wealth-gap-look-like-in-india

தமிழில் ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here