தெய்வீக திருமணங்களில் பெண்ணின் வயது ஐந்து!

"இத்தகைய உபதேசம் எனக்கு வேண்டாம். உமது பெண்ணை என் மனம் நாடுகிறது. தாம் கன்னிகாதானம் செய்யாவிடில் உயிர் விடுவேன்.இப்பாவம் உம்மைச்சாரும்" என்றார்.

வைதிக திருமணங்களில் பெண்ணிற்கு ஐந்து வயது இருந்தால் போதும்.வேதியர்களால் வேத மந்திரங்கள் ஒலிக்க நடந்ததாக கூறப்படும் இத்தகைய திருமணங்களை தெய்வீகத் திருமணங்கள் என சனாதன நூல்கள் குறிப்பிடுகின்றன.இதற்கு ஶ்ரீமன் நாராயணன்- பூமாதேவியின் திருமணமோ, ஶ்ரீராமன் – சீதாதேவியின் திருமணமோ விதிவிலக்கல்ல!
என்னங்க கதை விடுகிறேன் என எண்ணுகிறீர்களா?! நூல்களின் ஆதாரங்களுடன்தான் எழுதுகிறேன்.

முதலில் விவாஹ மந்த்ரார்த்த போதினி நூல் விளக்கும் தெய்வீகத் திருமணங்கள் எனும் தலைப்பு குறிப்பிடும் ஒப்பிலியப்பன் கோயில் ஶ்ரீமன் நாராயணன் மற்றும் பூமா தேவியின் திருமணம் பற்றிய செய்தி :

ஒப்பிலியப்பன் கோயிலில் – ஸ்ரீமன் நாராயணணின் விருப்பத்திற்கேற்ப மார்க்கண்டேய மஹரிஷி தம் புதல்வியான பூமிதேவியை – உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாத ஐந்து வயது குழந்தையான பூமிதேவியை நாராயணனுக்கு வேத கோஷங்கள் முழங்க மணமுடித்து கொடுத்ததாகவும் அதனாலேயே அந்த க்ஷேத்ரத்தில் உப்பு இல்லாமல் பெருமாளுக்கு ஸகல நைவேத்யங்களும் செய்யப்படுகின்றன என்பதும் ஐதீகம்.

இதே திருமணம் பற்றி ஒப்பிலியப்பன்(உப்பிலியப்பன்) கோயில் தலபுராணச் சுருக்கம் நூல் தெரிவிப்பது யாது எனில்;

மார்க்கண்டேயரிடம் வளரும் பூமி தேவி மணப் வருவம் அடைந்தாள், முனிவரோ இவளுக்குத் தக்க கணவனை எங்கே தேடமுடியும் என்று பெருங் கவலை கொண்டார். திருமாலும் திருவுளமிரங்கி வயது முதிர்ந்த அந்தணனாக, நோயாளி போல மாய வேடம் பூண்டு மார்க்கண்டேயரிடம் வந்தார். அப்படி வந்தருளிய தினம் பங்குனி மாதம் ஏகாதசியும் திருவோண நட்சத்திரமுங் கூடிய நன்னாளாகும். மார்க்கண்டேயரும் வந்த பெரியவரை முறைப்படி வணங்கி வரவேற்று ஆதனத் திருத்தித் தண்டமிட்டு வரலாற்றைக் கேட்டார். முதியவரும், “ஏ முனிவரே ! எனக்கு மனைவி மக்கள் ஒருவரும் இல்லை. சிறிது காலம் இல்லறத்திலிருந்து ஒரு புத்ரனைப் பெற்றாலல்லாமல் நற்கதியில்லை எனப் பெரியோர்கள் கூறுகின்றார்கள். ஆதலால் உன் பென்ணை எனக்கு மணம் செய்வித்து என் கருத்தை நிறைவேற்றவேண்டும்” என்றார்.

மார்க்கண்டேயர் “சுவாமி ! பெரியவரே ! இவ்வளவு முதிய பருவத்தில் எனது சிறுமியை எப்படிக் கொடுப்பது?’ நீங்கள் தான் என்ன நன்மை அடைய முடியும்? இப் பருவத்தில் இத்தகைய எண்ணத்தைக் கைவிடுவதே மேல்”என்று மறுமொழி கூறினார்.

மாயனான முதியவரோ “இத்தகைய உபதேசம் எனக்கு வேண்டாம். உமது பெண்ணை என் மனம் நாடுகிறது. தாம் கன்னிகாதானம் செய்யாவிடில் உயிர் விடுவேன்.இப்பாவம் உம்மைச்சாரும்” என்றார்.

மார்க்கண்டேயர், சுவாமி! தமக்கு உற்றார் உறவின ரின்மையால் என் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் அவளே உணவு சமைத்துப் பரிமாறி உபசரிக்க வேண்டியது தலைசிறந்த கடமையாயிற்றே. இவள் உணவின் சுவைகூட அறியாதவள். சமையலில் உப்புச் சேர்த்துச் சுவைபட எப்படிச் சமைக்க முடியும். இதனால் உங்கட்குக் கோபம் வந்து தண்டிக்க நேரும். இதையறிந்து எனக்குங் கோபம் வரும். உம்மைச் சபிக்க நேருமே இதைக் காரணமாகக் கொண்டாவது இந்த எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்றும் மீண்டும் வேண்டினார். வந்த கிழவரோ ஒரே பிடிவாதமாய்த் தான் முதலில் கூறியதையே கூறினார். மார்க்கண்டேய முனிவரோ திருமாலைத் தியானித்துப் பலவாறு துதித்து இந்த ஆபத்தில் காப்பாற்றியருள வேண்டினார். அத்துடனும் இந்த சமயத் தில் தம் புதல்வியையும் கூப்பிட்டு இப்போது “ஏ பெண்ணே நீ முனிவர் கூறுவதையறிவாய். அவரோ பிடிவாதமாய் உன்னை மணக்காவிட்டால் உயிர்விடுவேன் என்று கூறுகிறார் உன் கருத்தை யறிவிப்பாய்” என்றார். மங்கை ” ஐயோ! இக்கிழவனை மணப்பதைக்காட்டிலும் உயிர்விடுவேன்'” என்றாள்.இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்து மார்க்கண்டேயர் எம்பெருமானைத் தியானித்தார். திடீரென முதியவர் உருவமறைந்தது. திருமால் சங்கு சக்ர பீதாம்பரதாரியாய்க் காட்சியளித்தார். உடனே முனிவரும் மகளும் கண்ணாக் கண்டு ஆடிப்பாடித் தொழுது துதித்தனர்.

“ஏ முனிவரே ! உமது பக்திக்குக் கட்டுப்பட்டேன் உம் பெண்ணாக வந்த பூமிதேவியை எனக்கு மணஞ் செய்வித்து என்னை மணமகனாகப் பெறுவீர் இதுதானே உமது எண்ணம். மேலும் உணவில் உப்பிடவும் அறியாதவள் என்று சொன்னபடி எனக்கு உப்பே வேண்டாம். உள்ளன்பே வேண்டும். அன்போடு கூடிய உபசாரமே அமுதமாம். எனக்கு அமுது செய்வித்தபிறகு அதை அன்புடன் உண்பார்க்கும் அதுவும் அமுதமாயிருக்கும் இத்தலத்தில் நான் உப்பிட்ட பண்டம் உண்ணேன். என் ஸந்நிதியில் உப்பிட்ட பண்ணடத்தைக் கொண்டு வருபவனும் என் கோபத்திற்கு ஆளாவான்” என்றருளினார்.

இப்படியான கதைகளே வைதிகர்களின் பால்ய விவாஹத்திற்கு காரணமாக அமைந்தன. இப்புராணக் கதையினை நம்பி ஒப்பிலியப்பன் கோயிலில் இன்று வரை உப்பில்லாத பிரசாதம் வழங்கப்படுகிறது.

விவாஹங்களுக்கு மந்திரங்கள் என வழங்கப்படும் ஸம்ப்ரதாயமான ஹிந்து திருமணங்களில் பிரயோகிக்கப்படும் வேத மந்த்ரங்கள் – ரிக் வேதத்தின் பத்தாவது அத்யாயத்திலிருந்து பிறந்தவை ஆகும். இந்த மந்த்ரங்களோடு தான் சூரிய பகவானின் மகள் சூரியாவை – சோமனுக்கு கல்யாணம் செய்துவைத்ததாக கூறப்படுகிறது.

இந்த மந்திரங்களை பிரயோகித்து வைதிக விவாஹங்களில் பூப்படையாத சிறு பெண்களுக்கும் விபரம் அறியாத பாலகர்களுக்கும் திருமணம் செய்ததுதான் கொடுமையிலும் கொடுமை.

சீதைக்கு ஶ்ரீ ராமனுடன் விவாஹம் நடக்கும் போது அவளது வயது ஆறு என்கிறது வால்மீகி இராமாயணம். ஆம்,கல்யாணத்தின்போது சீதைக்கு வயது ஆறேதான்.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 47 இந்தக் கொடுமையை விளக்குகிறது;

கல்யாணத்தின்போது சீதாவுக்கு 6 வயது. ராமனுக்கு 12 வயது.என்ன சொல்கிறார் இவர். கம்பராமாயணத்தலே கம்பர் வேறு மாதிரியல்லவா சொல்லியிருக்கிறார்.

“ராமரை சீதை பார்த்த போது, சீதையின் தேகம் வெட்கத்தாலும் வெப்பத்தாலும் சூடேறியது. அவள் படுத்திருந்த பஞ்சு மஞ்சம் இந்த சூடு தாங்கமுடியாமல் எரிய ஆரம்பித்தது. விரகச் சூடு தாங்காமல் அவளது பொங்கிய மார்பகம் அனல் கக்கியது.

சீதை தன் கழுத்தில் போட்டிருந்த கருகமணி மாலைகள் இந்த சூடு தாங்க முடியாமல் அறுந்து உதிர்ந்து, கீழே உருண்டோடுகின்றன. ராமனை… இப்படியாக சீதையை பாதித்தாள். அவனது கனவுகளை சோதித்தாள்” என்றல்லவா கம்பர் எழுதியிருக்கிறார்.

அப்படிப் பார்த்தால் சீதைக்கு கல்யாண பயத்தில் வயதுக்கு வந்த வயதாகத்தானே இருக்க முடியும் என்று நமக்கு நியாமான சந்தேகம் எழலாம்.

கம்பர்.. தமிழ்ச் சூழலில் கல்யாண பருவத்தில் சீதையை குழந்தையாக காட்டவேண்டாம் என நினைத்திருக்கலாம்.
ஆனால், வால்மீகி ராமாயணத்தில்,

தோஷாத் தாரக்தியாம்பதி
சிந்தையா மான தர்மாத்மா
சோபாத்யாய சபாந்த்த வஹா

என்கிறார் ராமன். சின்னப் பிள்ளையாக இருக்கும்போது அவனுக்கு 12 வயது ஆகும்போதே அவனது கல்யாணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார் தசரத சக்கரவர்த்தி.

விஸ்வாமித்ரரோடு ராமன் ஜனகராஜனின் அரண்மனைக்கு வரும்போது தனுஸ் அதாவது வில்லை ஒடிப்பவர்களுக்கு சீதையை திருமணம் செய்து தருவேன் என்கிறான் ஜனகன். ராமன் வில்லை ஒடித்தான். ஒடித்துவிட்டு நான் சீதையை கல்யாணம் செய்வதற்காக வில்லை ஒடிக்கவில்லை என் பலத்தை நிறுவுவதற்காகவே ஒடித்தேன் என சொல்கிறான். அதன்பிறகு தசரதன் சொல்லி பிறகு ராம சீதா கல்யாணம் நடக்கிறது.

கல்யாணம் எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால், கல்யாணத்தின்போது ராமனுக்கு 12 தான். சீதைக்கு வயது ஆறேதான். இதுதான் வால்மீகி காட்டும் வயது.

வனவாசத்தின்போது சீதாதேவி ஆஞ்சநேயரிடம் சொல்கிறாள்.
“அஷ்டாதஸ வருஷானி மம ஜென்மணி கன்யதே
நான் என் 18-ஆவது வயதில் வனவாசம் செய்ய வேண்டியதாயிற்று. எனது 6-ஆவது வயதில் கல்யாணமாகி 12 வருடம் ராமரோடு வாழ்ந்தேன். அதன்பிறகுதான் காடு புகும்படி விதி விளையாடிவிட்டது.” என சீதாதேவி ஆஞ்சநேயரிடத்திலே சொல்கிறார்.

பதின்மூன்று வயது சிறுவன் ஆறு வயது பெண் குழந்தையை பார்த்ததைத்தான் கம்பன்,

‘அண்ணலும் நோக்கினார்; அவளும் நோக்கினாள்’ என்று புளுகியிருக்கிறார்.

கம்பனை வைத்து பொருளையும் புகழையும் சேர்க்கிறவர்கள் இது பற்றி வாய் திறப்பார்களா?

இந்த ஆதாரங்களைக் காணுகையில் ஶ்ரீராமன் கல்யாண சித்திரங்கள் முதல் சிற்பங்கள் அனைத்தும் பொய்யான பிம்பத்தைக் கட்டமைத்துள்ளதை அவதானிக்க இயலும். இனி எத்தனை காலம் இந்தப் பொய்கள் நிலைக்கும் என்பதே கேள்வி!

ஆதார நூல்கள்:
1.ஒப்பிலியப்பன் கோயில் தலபுராணச் சுருக்கம் 1955 பதிப்பு
2.விவாஹ மந்தரார்த்த போதினி, 2021 மறுபதிப்பு
3.இந்துமதம் எங்கே போகிறது
4.இராமாயணம் பாலகாண்டம்,சுந்தர காண்டம்

தினகரன் செல்லையா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here