சேலம் தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியலின மக்களை ஆதிக்க சாதிவெறி கும்பல் அனுமதிக்காததால், இரு பிரிவினரிடையே மோதல் உருவாகி கலவரமாக மாறியுள்ளது.
ஆண்டுகள் பல கடந்து தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்தாலும் கிராமப்புறங்களில் பார்ப்பனிய கட்டமைப்பில் சிக்கிய சாதி வெறியர்கள் இன்னும் மாறவில்லை. பார்ப்பனியம் இந்த சாதி வெறி மோதல்களையும் சாதிய கட்டுமானத்தையும் விரும்புகிறது.
இந்தியாவின் முதல் குடிமகனாகிய குடியரசுத் தலைவராகவே இருந்தாலும் கூட தாழ்த்தப்பட்டவராக இருந்தால், நாங்கள் கருவறையில் அனுமதிக்க மாட்டோம் என்கிறது பார்ப்பனிய சனாதன கும்பல். இதை ஒப்பிடுகையில் தீவட்டிப்பட்டி பட்டியலின மக்கள் எம்மாத்திரம்?
தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில். இந்த கோவிலில் அனைத்து சாதி மக்களும் சென்று வர அனுமதி உண்டு. ஆனால் இந்த ஆண்டு திருவிழாவின்போது ஆதிக்க சாதி கும்பல் பட்டியலின மக்களை உள்ளே விட மறுக்கிறது.
தீவட்டிபட்டி கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சாதிகளை சேர்ந்த 500 குடும்பங்களும் இந்த கிராமத்திற்கு அருகே உள்ள நாச்சினாம்பட்டியில் 200 பட்டியலின குடும்பங்களும் உள்ளன.
இந்த ஆண்டுக்கான திருவிழா சில நாட்களுக்கு முன்பு தான் துவங்கியுள்ளது. கடந்த மே 1-ஆம் தேதி இரவு ஆதிக்க சாதியினர் தங்களை கோவிலுக்குள் விட மறுக்கிறார்கள் என குற்றம் சாட்டிய மக்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மே 2 ஆம் தேதி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். ஆதிக்க சாதி வெறியர்கள் ஏற்றுக்கொள்ளாததால் அன்று மதியமே இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கியுள்ளனர். பின்னர் இது கலவரமாக மாறியுள்ளது. இந்த கலவரத்தில் இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன். ஆனால் போலீசார் வேண்டுமென்றே வீட்டுக்குள் புகுந்து தாக்கியதாகவும் கைது செய்ததாகவும் கூறுகிறார்கள் நாச்சியம்பட்டி கிராம மக்கள். பெண்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளது காவல்துறை .இந்த கலவரத்திற்கு பட்டியலின மக்கள் தான் காரணம் என்பது போல் கட்டமைக்கிறது அதிகார வர்க்கமும் போலீசும்.
1972 முதல் பெரிய மாரியம்மன் கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் ஒரு பொது சொத்து. இந்த கோவிலில் அனைவரும் வழிபாடு செய்ய உரிமை உள்ளது. ஆனால் ஆதிக்க சாதி கும்பலோ கோவிலுக்கு வெளியில் நின்று தான் அவர்கள் வழிபட வேண்டும் என்கிறார்கள். இதற்கு காவல்துறையும், அதிகார வர்க்கமும் சமரசம் பேசுவது அயோக்கியத்தனம்.
முறைப்படி பட்டியலின மக்களை கோவிலுக்குள் பாதுகாத்து அழைத்துச் செல்ல வேண்டிய போலீசும் அதிகாரவர்க்கமே அதை செய்யாமல் இந்த கலவரத்திற்கு காரணமாய் இருக்கிறது.
தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவு, ஆதிக்க சாதிவெறியினரால் சாதி கலவரங்களாக மாற்றப்படுகிறது. மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்காததால் மேல்பாதி கிராமத்தில் இரு தரப்பினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது. பிரச்சினை தீரும் வரை கோவிலுக்கு சீல் வைத்தது காவல்துறை. இது குறித்து நமது தளத்தில் மேல்பாதி கோவிலுக்குள் சாதிவெறி என்ற கட்டுரையை வெளியிட்டு இருந்தோம்.
தமிழ்நாட்டின் கிராமப்புற கோவில்கள் பலவற்றில் இன்னும் தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களை அனுமதிக்காத கொடுமைகள் நடந்து வருகிறது. கிராமத்தில் ஊரை விட்டு வெளியேயோ அல்லது ஒதுக்குப்புறமாகவோ தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். ஊருக்குள் அவர்கள் ஒன்று கலக்காதவாறு சாதிய கட்டமைப்பை பாதுகாத்து வருகிறார்கள். ஆதிக்க சாதி மக்கள். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் நிலங்கள் வாங்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதிப்பதில்லை.
சில ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காததால் அவர்களுக்கு என்று ‘தனி’ கோவில்களை கட்டிக்கொள்கிறார்கள். இந்த சாதிய தாக்கம் இந்தியா முழுமைக்கும் நீடிக்கிறது. நகர்ப்புறங்களில் தொழில்துறை வளர்ச்சி, வாழ்நிலைமைகள் காரணமாக இது மாதிரியான நிலைமைகள் இல்லை அல்லது வெளிப்படையாக இல்லை.
இந்திய சமூகத்தில் பார்ப்பனிய சாதிய கட்டமைப்பு அடி ஆழம் வரை வேறூன்றி உள்ளது. அதனால் தான் குடியரசுத் தலைவராக இருந்தாலும் கூட கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறது பார்ப்பனியம்.
ஆதிக்க சாதி வெறி கும்பலோ அடுத்த தலைமுறை அப்பாவி இளைஞர்களிடம் சாதி வெறியை கடத்த பார்க்கிறது. இளைஞர்களும் சாதிய மாயையில் சிக்கி தன்னுடைய வாழ்க்கை மை சூறையாடும், வேலையின்மையை உருவாக்கிய பொது எதிரியான ஆர்எஸ்எஸ் பாஜகவை எதிர்த்து நிற்காமல் சாதிய வலையில் சிக்கி விழுகிறார்கள்.
மதவெறியை கிளப்பிவிட்டு இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று கலவரத்திற்கு அழைக்கும் ஹெச். ராஜா, அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக சங்கிகள் நவ துவாரங்களையும் மூடிக் கொண்டு இருப்பதிலேயே தீவட்டிபட்டி கலவரத்தை வரவேற்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தமிழக அரசு இந்த கலவரத்திற்கு காரணமான ,கோவிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்காத, ஆதிக்க சாதிவெறி கும்பலை கைது செய்வதோடு, பொய் குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட அப்பாவி பட்டியல் இன மக்களை விடுதலை செய்ய வேண்டும். ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நிற்கும் காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.
சாதிவெறி தமிழ்நாட்டில் தலை தூக்குவதை தடுக்க ஆர்எஸ்எஸ் பாஜகவையும் சாதி வெறி கட்சி, அமைப்புகளையும் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்தும் அகற்ற வேண்டும். அவற்றை பொது எதிரியைக் கொண்டு எதிர்த்துப் போராடி வீழ்த்த இளைஞர்கள் முன்வர வேண்டும்.
- மாரிமுத்து