உத்திரபிரதேசம் கான்பூரில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது இஸ்லாமிய கணவன் தன்னை கட்டாய மதமாற்றம் செய்வதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையில் சில இந்துத்துவ கும்பல்களின் தொடர் மிரட்டல் காரணமாகவே அவர் அப்படியொரு புகார் கொடுத்ததாக பின்னர் கூறினார். உத்திரபிரதேச அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள மதமாற்ற தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி இந்துத்துவா கும்பல்கள் இருமதத் தம்பதிகளை வலுக்கட்டாயமாகப் பிரித்தும், முஸ்லிம்களுக்கு எதிரான சதிக்கோட்பாடுகளை பரப்பியும் வருகின்றன என்றும், பல பத்தாண்டுகளாக சட்டத்தைமீறி கலப்புமணங்களைத் தடுத்தும், முஸ்லீம் ஆண்களை குறிவைத்தும் இந்துத்துவா கும்பல்கள் இவ்வாறு செயல்பட்டுவருகின்றன என்றும் பத்திரிக்கையாளர்கள் பெட்வா சர்மா மற்றும் அஹ்மர்கான் கூறுகிறார்கள்.

உ.பி. அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு சட்டவிரோத மதமாற்றம் தொடர்பான அவசர சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்து-முஸ்லீம் கலப்புமணங்களைத் தடுப்பதற்காக இச்சட்டம் கொண்டுவரப்படவில்லை என்று சொல்லப்பட்டாலும் இச்சட்டத்தைப் பயன்படுத்தியே இந்துத்துவ பொறுக்கி கும்பல்களாலும், போலீசாலும் தம்பதிகளை மிரட்டுவதும், முஸ்லீம் ஆண்களை பொய் வழக்குகளில் சிறையிலடைப்பதும் நடந்துவருகிறது. இக்கும்பல்களால் உருவாக்கப்பட்ட “லவ் ஜிகாத்” என்ற கருத்தாக்கம் சில பத்தாண்டுகளாக மக்களிடையே பரப்பப்பட்டு சமுதாயத்தை ஒற்றை திசையை நோக்கித்தள்ளியும், பெண்களின் முன்னேற்றத்தை முடக்கியும் வருகிறது. சமுதாயத்தைப் பிளந்து மக்களை மோதவிட தேசியவெறி, கலப்புமண எதிர்ப்பு, மதமாற்றம் போன்ற கருத்தாக்கங்கள் சிறந்த கருவிகளாக இக்கும்பல்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை மட்டுமே சமுதாயத்தில் ஒரு சாரரின்ஆதிக்கத்தை நிறுவுகின்ற காரணியாக இல்லை, மாறாக சமுதாயத்தில் நிலவுகின்ற பிற்போக்குத்தனமும், மத சம்பிரதாயங்களும் கலப்புமணங்களை எதிர்த்தும் அத்தகைய தம்பதிகளை பலியிட்டும் வருகிறது. அங்கித் சக்சேனா என்ற இளைஞர் ஒரு முஸ்லீம் பெண்ணை காதல்மணம் புரிய இருக்கும்போது அப்பெண்ணின் குடும்பத்தாரால் கொலை செய்யப்பட்டதும் நினைவுகூறத்தக்கது. காஷ்மீரில் அதே போன்று இரண்டு சீக்கிய பெண்கள் முஸ்லீம் இளைஞர்களை திருமணம் புரிவதிலிருந்து பலவந்தமாகத் தடுத்து அவர்களில் ஒரு பெண்ணை சீக்கிய இளைஞனுக்கு மணமுடித்தனர்.

மற்றொரு சீக்கிய பெண்ணான தன்மீத் இஸ்லாமிய மதத்துக்கு மாறி தன்னுடன் படித்த முஸ்லீம் வாலிபரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர்கள் சீக்கியர்களின் கோபத்துக்கு பயந்து தலைமறைவானார்கள். சீக்கியர்கள் தங்களது பெண் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாகவும், கடத்தப்பட்டதாகவும், ஒரு முஸ்லிமுக்கு கட்டாயமாக  மணம் முடித்துவைக்கப்பட்டதாகவும் கூறி போராட்டங்களில் இறங்கினர். பின்னர் தன்மீத் தான் விருப்பப்பட்டுதான் மதம் மாறியதாகவும், முஸ்லீம் இளைஞரை மணம் முடித்துக்கொண்டதாகவும் ஒரு வீடியோ வெளியிட்டார்.

அங்கித் சக்சேனா மற்றும் சீக்கிய பெண்கள் போன்ற தனிப்பட்ட விவகாரங்களில் மட்டும்தான் மத அரசியல் உள்ளது என்பதில்லை, மாறாக சாதி/மத அரசியல்தான் இன்றைய இந்திய சமுதாயத்தில் நிலவும் கலாச்சார/பண்பாட்டு ரீதியிலான பிரச்சினைகளுக்கு மிகமுக்கியக் காரணியாக உள்ளது. சமீபத்தில் பியூ ஆய்வு மையம் (Pew Research Centre) நடத்திய ஆய்வில் இந்திய மக்கள், அவர்கள் எந்த மதமாக இருந்தாலும், தங்களின் மத சம்பிரதாயங்களுக்கும், அதன் சட்டத்திட்டங்களுக்கும் உட்பட்டுதான் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவருகிறது.

இந்த ஆய்வானது 26 மாநிலங்களில் 17 வகையான மொழிகளைப் பேசும் சுமார் 30,000 பேரிடையே நடத்தப்பட்டது. இது மொத்த மக்கள் தொகையில் ஒரு சிறிய பகுதிதான் என்றாலும், இந்த ஆய்வு சமுதாயத்தில் மதங்களின் பிடி எவ்வளவு இறுக்கமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. அதில் 80 சதவீத இஸ்லாமியர்களும், 64 சதவீத இந்துக்களும் வேற்று மதத்தாருடன் திருமணம் செய்யவே கூடாது என்றனர். இந்துக்களில் பெரும்பாலானவர்கள் மதமும் தேசியமும் பின்னிப்பிணைந்துள்ளதாகக் கூறினர். எழுத்தாளர் லெபோ டிசேகோ (Lebo Diseko) கூறுவதைப்போல, “இந்தியர்கள் ஒரேநேரத்தில் மத நல்லிணக்கத்தையும், தங்கள் மதத்துக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிந்து இருப்பதையும் விரும்புகின்றனர். அதாவது அவர்கள் ஒற்றுமையாகவும் அதேநேரத்தில் பிரிந்தும் வாழ்கின்றனர்.” பொதுவாக இந்து-முஸ்லீம் திருமணங்களை தனிப்பட்ட பிற்போக்கான குடும்பங்கள்தான் எதிர்த்துவந்தன, ஆனால் தற்போது சட்டபூர்வமாகவே அதனைச் செய்வதற்கு சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இத்தகைய சட்டங்கள் இருமத திருமணங்களை தடுப்பதற்காக இல்லாமல் கட்டாய மதமாற்றத்தையும், மோசடியான மதமாற்றத்தையும் கட்டுப்படுத்த மட்டுமே என்றுகூறி பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தியாவிலும் தெற்காசிய நாடுகளிலும் கலப்புமணங்கள் என்பது மிக மிகக்குறைந்த அளவில்தான் நடக்கின்றன. ஆனால் மதச்சார்பற்ற நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் 2010 முதல் 2014 ஆண்டுகளுக்கு இடையில் திருமணம் செய்தவர்களில் ஏறக்குறைய 40 சதவீதம் பேர் இருமதத் தம்பதிகள்தான், இது 1960-ஆம் ஆண்டுக்கு முன்னாள் 19 சதவீதமாக இருந்தது. இதிலிருந்து மதங்களின் பிடிமானம் தளர்வடையும் சமுதாயங்களில் இருமத திருமணங்கள் ஒரு பொதுவான விசயமாக மாறிவருகிறது என்பதை உணரமுடிகிறது. நவீன மேம்பட்ட சமுதாயத்தை நோக்கிய பயணத்தில் மக்களை பீடித்திருக்கும் பிற்போக்கு நிலப்பிரபுத்துவ பண்பாடுகளைக்களைய மதச்சார்பின்மை தொடர்பான செயல்பாடுகளை அனைத்துத் தளங்களிலும் நாம் முடுக்கிவிடவேண்டியுள்ளது.

இருமதத் திருமணங்களுக்கான எதிர்ப்பில் சாதி/மத அரசியல் மற்றும் மத பிற்போக்குத்தனம் எதுவாக இருந்தாலும் தம்பதிகள் துன்புறுத்தப்படுவது, அவர்களது திருமணத்தையே ஒரு குற்றச்செயலாகப் பார்ப்பது, அவர்களை பலவந்தமாகப் பிரித்து ஆண்களை சிறையிலடைப்பது, மற்றும் பெண்ணை தன் சொந்த சாதி/மதத்தில் மறுமணம் செய்துவது போன்ற விளைவுகள் என்னவோ ஒன்றாகத்தான் உள்ளன. பெண்களின் கருத்துகள், விருப்பங்கள் அனைத்தும் அடக்கப்பட்டும், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமலும் புறக்கணிக்கப்படுகின்றன. கேரளாவில் ஒரு யோகா மையம் இரண்டு திருமணமான பெண்களை தங்கள் இந்து-அல்லாத கணவர்களிடமிருந்து பிரிக்கப் பயன்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

மதவாதத்தின் எழுச்சி, அதன் “லவ் ஜிஹாத்” என்ற கருத்துருவாக்கம் மக்களின் பிற்போக்கான மதநம்பிக்கையில் பெரும் வீச்சை உண்டாக்கியுள்ளது. அதிலும் மதஅடிப்படைவாதிகளின் ஆட்சிக்காலத்தில் அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

இருமதத் திருமணங்களுக்கு ஏற்படும் இருவகைப்பட்ட எதிர்ப்புகளின் முக்கியமான காரணி சமுதாயத்தில் பரவியிருக்கும் ஆணாதிக்க சிந்தனைமுறைதான். அத்தகைய சமுதாயத்தில்தான் பெண்களின் சமூக வாழ்வு மற்றவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆணாதிக்கம் என்பது மதத்திலிருந்து பிரிக்கவொண்ணா ஒரு அம்சமாக உள்ளது.  இந்தியாவில் மதத்தின் பிடி இன்னும் இறுக்கமாகவே இருக்கக் காரணம் மதச்சார்பின்மை தொடர்ந்து பலவீனமாக இருப்பதே. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று தேசிய இயக்கம் சென்றுகொண்டிருக்கும்போதே அவற்றை எதிர்க்கும் வகையிலான பழங்காலப் பெருமை, சாதி-பாலியல் ரீதியிலான அடுக்குமுறைகளைப் போற்றும் பிற்போக்குத்தனமும் கூடவே வளர்ந்து வருகிறது.

நவீன இந்தியாவை உருவாக்க நேரு எதிர்கொள்ளவேண்டிய முக்கிய சவால்கள் குறித்து அவரிடம் கேட்டபொழுது, “நம்மிடம் மதச்சார்பற்ற அரசியலமைப்புச்சட்டம் இருந்தாலும் நமது சமுதாயம் இன்னும் மதங்களின் பிடியில் உள்ளதுதான்” என்று சரியாக சொன்னார். அதுவே உண்மையும்கூட!

கட்டுரை: Dr. ராம் புனியானி.

தமிழில்: செந்தழல்.

https://countercurrents.org/2021/07/religion-sectarian-nationalism-and-interfaith-marriages/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here