சிவந்த கண்ணுடனும்
விரிந்த மயிருடனும்
காம்பவுண்ட் சுவர் அருகில்
இருந்த சிறு நிழலில்
உட்கார்ந்து இருந்தாள்.

பக்கத்தில் கட்டப்பட்டு இருந்தது போர்வை மூட்டை.

அதை தூக்கி சுமந்தால்

அவள் ஒரு வேர்வை மூட்டை.

“குடிக்கத் தண்ணீர் வேண்டுமா?”

என்றேன்.

கண்ணோரம் எட்டிப் பார்த்த துளி கண்ணீருடன் தலையாட்டினாள்.

தண்ணீர் குடித்த பின் பெயர் கேட்டேன் .”திரோபதை”என்றாள்.

“வடநாடா” ?எனக் கேட்டதும்

தலையசைத்தாள்.

“புருசன் என்ன செய்கிறார்”? என்றதும் “எத்தனையாவது புருசன்”? என்றாள்.

திடுக்கிட்ட நான், “எத்தனை புருசன்”? என்றேன் .

“கட்டிய கணவனின் காதலோடு புகுந்த வீடு சென்றேன்.

புருசனோ, தன் அம்மாவிடம் பழம் ஒன்று கொண்டு வந்திருக்கிறேன் என்றான்.

மாமியாரோ, உன் சகோதரா்களுடன் பகிர்ந்து கொள் என்றாள்.

அவர் உடன் பிறந்த 4 பேரும் சமயத்துக்கு காத்திருந்தது போல என்னை பங்கிட்டுக் கொண்டனர்”.

அய்யையோ! எனப் பதறி “உன் புருசன் எப்படி ஒத்து கொண்டான்?. அவன் உன்னை காதலித்தாக சொன்னாயே” என்றேன்

“அது நாடகக் காதல்” என்று சொல்லி சிரித்தாள் திரோபதி.

“உன் மாமியார் கிழவியை உதைக்கணும் ” என்றேன் கோபத்துடன்!

“அவள் நல்லவள்” என்றாள், அவள் .

“எப்படி “? என்றேன்.

“நல்லவேளை அவள் பழத்தை சகோதரர்களிடம் பகிர் என்றாள், ஒருவேளை ஊராருடன் பகிர்ந்து உண்! என சொல்லி இருந்தால் என் நிலைமை என்னாவது? என்றாள் விரக்தியுடன்!”

“சரிமா 5 பேரும் உன்னை நல்லா பார்த்துக் கொண்டார்களா?” என்றேன்.

திரோபதை “ம்ம்ம் சூதாட்ட மேடையில்” என்றாள்.

நான் “புரியவில்லை ஆன்லைன் ரம்மியா?” என்றேன்.

“இல்லை ,இது ஆண்கள் லைன் ரம்மி , விற்க எதுவும் இல்லாததால் என்னை சூதாட்டதில் வைத்து தோற்றானுங்க,

ஜெயித்தவனோ என் புடவையை இழுத்தான், என் அண்ணன் வந்து புடவை கொடுத்து காப்பாற்றினான்” என்றாள்.

“அடடே! உங்க ஊரிலும் ஒரு நல்லவன் இருக்கானே!” என்றேன்.

“கிழிச்சான்! அவன் கொண்டு வந்து கொடுத்த புடவை எல்லாம் எங்கள் ஊர் குளத்தில் குளித்த பெண்களுடையது.

அவர்களை மானபங்கப்படுத்திவிட்டு வந்து என் மானத்தை காப்பாற்றினான்” என்றாள்.

“அப்புறம் என்ன ஆனது?” என்றேன். “இந்த பிரச்சனையில் இரண்டு ஊருக்கு அடிதடி. உங்க சங்காதமே வேணாம்டானு தமிழ்நாட்டுக்கு வந்துட்டேன் சார்” என்றாள்.

“நான் இங்கே பிறந்து இருந்தால் 5 பேருக்கு முந்தி விரிக்காமல் கவுரவமாக கணவன் ஒருவனைக் கட்டி சுயமரியாதையுடன் பெரியாரின் பேத்தியாக வாழ்ந்து இருப்பேன்!”

என்று சொன்னபடி பெட்சீட் மூட்டையை தலையில் தூக்கி வைத்து வியாபாரத்துக்கு நடக்கத் தொடங்கினாள், திரோபதை.

  • கவிஞர் செல்வி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here