பாலபிரஜாபதி அடிகளாரின் தொண்டுகள் தடைகளின்றித் தொடர அவரது பாதுகாப்பு உறுதி செய்யவேண்டும்.


எல்லோரும் சமம் என்ற உயர்ந்த நோக்குடன் தமிழில் வழிபடும் அய்யா வழி சமூகத்தைச் சிறுபான்மை மதமாக அங்கீகரித்து உரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை “அய்யா வழி” வழிபாட்டு முறையினர் எழுப்பிவருகின்றனர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த மக்களைக்கொண்ட அய்யாவழியினர்
சிறுபான்மை மதத்தினராக அங்கீகாரம் பெற்றால், கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க முடியும். சிறுபான்மையினருக்கான நிதி உதவிகள் கிடைக்கும். ஜெருசலேம், ஹஜ் யாத்திரை செல்வதுபோல, , கன்னியாகுமரியில் உள்ள சாமித்தோப்பு “தலைமைபதி” (தலைமை வழிபாட்டு இடம்) க்கு வந்து ஒன்றுகூட உதவும் என்றவகையில் இக்கொரிக்கைகள் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழகம், கேரளா, மகாராஷ்டிர ஆகிய இடங்களில் சுமார் இரண்டாயிரம் அய்யாவழி பதிகள் உள்ளன.

சாதி, ஆண், பெண் பேதமின்றி பதிகளில் பணிவிடை செய்வது, பூசை, அபிசேகம், ஆராதனை, படையல் போன்ற சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி வழிபாடு செய்வது, “அனைவரும் கடவுளின் அம்சம்தான்” என்ற ஆன்மீக அடிப்படையில் கண்ணாடி முன் நின்று “தன்வழிபாடு” முறையில் வழிபாடு செய்பவது போன்ற சனாதன தர்மத்திற்கு எதிரான சிறப்பு அம்சங்கள் கோண்டது அய்யா வழி வழிபாட்டுமுறை.

தனித் தன்மையுடன் இயங்கிவரும் அய்யா வழிபாட்டு வாழ்வியல் முறையை “திருசெந்தூர் கடலில் இருந்து வைகுண்ட பரம்பொருளாக ஐயா வைகுண்டர் அவதரித்தார். தர்மவாழ்வுக்கு அழைத்துச்செல்ல நாராயணன் எடுத்த அவதாரம் வைகுண்டர் அவதாரம்.” போன்ற கற்பனைகள் விதைக்கப்பட்டு
“சனாதன இந்து” கட்டமைப்பிற்குள் கொண்டுவர முயற்சிகள் ஒருபக்கம் தொடர்ந்து மேற்கொள்ளபடுகிறது.
இன்னொரு பக்கம் “நாங்கள் இந்துக்கள் அல்ல’ என்று குரல் எழுப்புகின்ற அய்யா வழியினருக்கு எதிராக காவி பயங்கரவாதிகள் சதிச்செயலில் ஈடுபட்டு தாக்குதல்களை தொடுத்தும் வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதிஒழிப்பு சீர்திருத்தவாதியாக திகழ்ந்த அய்யா வைகுண்டரின் வழிமுறைகளை கட்டிக் காத்தும், பரப்பியும் வரும் பாலபிரஜாபதி அடிகளார் அவர்களை தாக்குதல் இலக்காக குறிவைத்து மதவெறியர்கள் தற்போது செயல்பட்டு வருகிறார்கள்.

நாங்கள் “இந்துக்கள் அல்ல” என்று கர்நாடக மாநில லிங்காயத்துகளின் கோரிக்கையை ஏற்று அண்மையில் கர்நாடக அரசு அவர்களுக்கு மைனாரிட்டி அந்தஸ்து வழங்கியது. அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் வள்ளலாரைப் பின்பற்றும் சுத்த சன்மார்க்கத்தினரும் தனி மதக்கோரிக்கை விடுத்துள்ளனர்.

அய்யா வழியினரும் தங்களை தனி மதமாக அறிவிக்கக் கோருகிறார்கள் என்பது சனாதன இந்து மதத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனால் அய்யாவழி தலைமைபதி பாலபிரஜாபதி அடிகளார் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது

பாலபிரஜாபதி அடிகளாருக்குத் தக்கபாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சி. பி. ஐ.(எம்) தோழர்கள் கே.பாலகிருஷ்ணன் தலைமையில்18.9.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். திராவிடர் கழக தலைவர் திரு. கி.வீரமணி அவர்களும் தமிழ்நாடுஅரசு பாதுகாப்புத் தரவேண்டுமென வலியுறுத்தி அறிக்கை விடுத்துள்ளார்.

அயோத்தியில் ராமன் கோயில் கட்டுவதற்கு இடையூறாக இருந்த மகத்துகளை ஒழித்துக்கட்டியதையும்,, சனாதன இந்துமதத்திற்கு எதிராக எழுதியும் பேசியும் வந்த அறிவுஜீவிகள் கொன்றோழிக்கப்பட்டதையும் நாம் மறக்க முடியாது.

பாலபிரஜாபதி அடிகளாரின் தொண்டுகள் தடைகளின்றித் தொடர அவரது பாதுகாப்பு உறுதி செய்யவேண்டுமென நாமும் வலியுறுத்தி குரல்கொடுப்போம்.

நன்றி:
தோழர்.இராவணன். மக இ க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here