செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் அவரது பணிகளை நினைவுகூர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தன் வாழ்நாள் முழுவதும் சனாதன தர்மம் என்கின்ற பார்ப்பனக் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போராடிய பெரியார் ஆர் எஸ் எஸ் பாஜகவிற்கு நினைவில் மட்டுமல்ல, கனவிலும் அச்சுறுத்தலாக தெரிந்து கொண்டிருக்கிறார்.
மத்திய நிதி அமைச்சரான நிர்மலா மாமி “ராமன் கழுத்தில் செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக சென்றதை எண்ணி எண்ணி மனம் நொந்து கொண்டிருப்பதாக” கதை அளந்தார். ‘ஹைகோர்டாவது, மயிராவது’ என்று பார்ப்பன கொழுப்புடன் பேசிய எச் ராஜாவோ “பெரியார் விபச்சாரிகளுடன் கூத்தடித்துக் கொண்டிருந்தார்” என்ற பொருள்பட அவரது வாழ்க்கையைப் பற்றி இழிவு படுத்தி பேசிக் கொண்டிருந்தார்.
இந்திய ஒன்றியத்தில் பூணூல் ஆட்சி நடக்கிறது என்ற துணிச்சலில் சவுண்டி பார்ப்பான் முதல் அதிகார வர்க்கத்தில் உள்ள பார்ப்பனர்கள், அரசியல் கட்சியில் உள்ள பார்ப்பனர்கள் அனைவரும் ஒரே குரலில் பெரியாருக்கு எதிர்ப்பாக முழங்கிக் கொண்டிருந்தனர். தந்தை பெரியார் பிறந்த நாளை பயன்படுத்தி திராவிட இயக்கங்களை ஒழித்துக் கட்டும் நோக்கில் பல முனைகளில் இருந்து தாக்குதல் தொடுக்கப்பட்டது.
திராவிட இயக்கங்களின் மீது ஏன் இந்த வெறுப்பு?
“1870 இல் தொடங்கி நீதிக்கட்சி ஆட்சிக்கு வரும்வரை பார்ப்பனர் அல்லாதவர் ஒற்றை விழுக்காடு மட்டுமே கல்வி கற்றவர்களாகச் சூழல் இருந்தது. ஆட்சிப் பணி, நீதித்துறை, கல்வித்துறை என்று அனைத்தையும் 3.1 சதவீதம் மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் எப்படி ஆதிக்கம் செலுத்தினார்கள் என்ற புள்ளி விவரத்தோடு, நீதிக்கட்சி ஆட்சி மாணவர்களின் கல்விக்கு உதவியதோடு கல்வி நிலையங்களில் விகிதாச்சார முறையில் வேலை ஒதுக்கீடு முறை அமலுக்கு வந்ததையும், இராஜாஜியின் ஆட்சியில் கல்விக்கூடங்களை மூடியதும், ஓமந்தூரார் ராமசாமி ஆட்சியில் வகுப்புவாரி வேலை வாய்ப்பும், அதைக் கடுமையாகப் பார்ப்பனர்கள் எதிர்த்ததோடு ஓமந்தூராரைத் தாடி வைக்காத பெரியார் என வசைபாடியது தான் அன்றிருந்த நிலைமை”, என்று நீதி கட்சியின் வரலாற்றை குறிப்பிடுகிறார் விடுதலை ராஜேந்திரன்.
“Communal GO என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை பனகல் அரசர் தலைமையிலான அரசால் செப்டம்பர் 16, 1921இல் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் பின்வரும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன:
“பார்ப்பனரல்லாதவர்கள் அரசு அலுவலகங்களில் பெற்றுள்ள இடங்களை அதிகரிக்க, பல்வேறு ஜாதியினருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக வருவாய்த் துறையில் பிறப்பிக்கப்பட்ட நிலை ஆணை 128 (2)ல் தெரிவிக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை அரசின் எல்லாத் துறைகளுக்கும், எல்லா மட்டங்களுக்கும் செயல்படுத்த வேண்டும். எல்லாத் துறைகளின் தலைவர்களும், பணி நியமனம் செய்யும் அதிகாரம் படைத்த அதிகாரிகளும், எதிர்காலத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பும் போது இந்த வழிமுறையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்புகளை அளிக்கும்போது, 12 இடங்களாக அவற்றைத் தொகுத்து வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டும். அதன்படி, 12 இடங்களில் 2 இடங்கள் பார்ப்பனர்களுக்கும், ஐந்து இடங்கள் பார்ப்பனரல்லாதவர்களுக்கும், இரண்டு இடங்கள் இஸ்லாமியர்களுக்கும், இரண்டு இடங்கள் கிறிஸ்தவர், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ – இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும். ஒரு இடம் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவருக்குத் தரவேண்டும்.
சதவீதப்படி பார்த்தால், பிராமணர் அல்லாதவர்களுக்கு 44%, பிராமணர்களுக்கு 16%, முஸ்லிம்களுக்கு 16%, ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு 16%, பட்டியல் இனத்தவர்களுக்கு 8% என இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.” என்று இந்தியாவில் நீண்ட காலமாக நிலவி வந்த சனாதன தர்மம் என்ற பார்ப்பன கொடுங்கோன்மையை முதன் முதலில் சட்டப்படியாக ஒழித்துக் கட்டிய வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற அரசாணை நிலை நாட்டியதை குறிப்பிடுகிறார் வாலாசா வல்லவன்.
பிரிட்டன் காலனியாதிக்கம் வரும் வரையில் இந்தியாவை மன்னர்கள் ஆண்டு வந்தாலும், அவர்களின் குல குருக்களாகவும், சமூகத்தில் மேல் நிலையில் இருந்த பார்ப்பனர்களின் ஆதிக்கம் பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலும் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. மாறாக இந்து மதக் கொடுங்கோன்மை என்ற பார்ப்பன கொடுங்கோன்மை கோட்டை கட்டி பாதுகாக்கப்பட்டது என்று தோலுரிக்கின்றார் தர்ம தீர்த்த அடிகளார்.
இத்தகைய சூழலில் முதன்முறையாக தனது அதிகாரத்தின் மீது கேள்வி எழுப்பிய நீதிக்கட்சி அதன் பின்னர் வந்த திராவிட இயக்கங்களின் மீது பார்ப்பன கும்பலுக்கு இயல்பாகவே கோபமும், ஆத்திரமும் நீக்கமற நிறைந்து கிடக்கிறது. இந்தப் பின்னணியில் தான் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை பல வகையிலும் பயன்படுத்துகிறது ஆர்எஸ்எஸ்.
ஆர்எஸ்எஸ் என்பதே பார்ப்பன கும்பலின் மேலாதிக்கத்தை நிலை நாட்டுகின்ற பயங்கரவாத அமைப்பு என்பதை தந்தை பெரியார் காலத்திற்குப் பிறகு 90 -களில் துவக்கத்தில் இருந்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சையில் நடைபெற்ற பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் பார்ப்பன பயங்கரவாதம் என்று வரையறை செய்து அதனை கோட்பாடாகவே முன்வைத்து புதிய கண்ணோட்டத்தை உருவாக்கியது.
தந்தை பெரியாரின் பணிகளை முழுமையாக புரிந்து கொள்ளாத அல்லது புதிய தலைமுறைக்கு சென்று சேர்ந்து விடக்கூடாது என்று இருட்டடிப்பு செய்கின்ற பார்ப்பன கும்பல் தன்னுடன் கருப்பு பார்ப்பனர்களையும், பதிலி பார்ப்பனர்களையும் இணைத்துக் கொண்டு பெரியாருக்கு எதிராக நான்காந்தர முறையில் பிரச்சாரங்களை மேற்கொள்கிறது.
சனாதனத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் வாதங்களை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ள தமிழிசை முதல் கூலிக்கு மாரடிக்கும் யூடியூபர்கள் வரை அரை நூற்றாண்டுக்கு முன்பு இருந்த நிலைமையை அப்பட்டமாக மறைக்கின்றனர். கேவலம் வயிற்றுப் பிழைப்புக்காக வரலாற்று உண்மைகளை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களின் முகத்திரையை கிழிக்கின்ற கீழ்க்கண்ட முகநூல் பதிவுடன் இந்த கட்டுரையை முடிப்போம்.
“சனாதனத்தை தூக்கி பிடித்து வக்காலத்து வாங்கும் சீமாட்டிகளே!
வாசனைப்பூ என பெயர் சூட்டிக்கொண்டு
வாயில் வந்ததை பேசித் திரியும்
வண்டார் குழலிகளே!
உங்கள் வீடுகளில் பாட்டிமார், அத்தை,மாமிமார்கள் கணவனை இழந்து பல காலம் வாழ்ந்து மறைந்தது அறிந்திருந்தால் அந்த ஒற்றைப் பெண்கள் அடுப்படியிலும், வீட்டு வேலைகளிலும் தேய்ந்து போனதை கண்டு மனம் கசிந்திருந்தால் இப்படி கண் மூடித்தனமாக பேச வாய் எழாது!!
என் அம்மாவின் அம்மா, 6 குழந்தைகள். 40 வயதில் தாத்தாவை இழந்தபின் 72 வயதில் சாகும் வரை சட்டை போடாமல் உழைத்தே தேய்ந்தவள் !!
வளர்ந்த பிள்ளைகளும், பிற ஆண்களும் எதிர்ப்படும் போதெல்லாம் இழுத்து இழுத்து போர்த்திக்கொண்டு..கூனிக்கூனி..ஒதுங்கி நிற்பது இப்போதும் எனக்கு வலிக்கிறது!
அம்மாவின் மாமா மனைவி.. அம்மாமிப்பாட்டி! மிக சிறு வயதில் கணவன் இழந்து, பிள்ளை இல்லாததால் உறவினர் அனைவருக்கும் ஓடி ஓடி வேலை . மழித்த தலையும், பழுப்பில் சிகப்பு கரை போட்ட புடவை..80 வயது வரை… வீட்டின் கடை கோடியில் , அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் ஏதோ வேலை செய்து கொண்டே இருப்பாள்..கூடவே சதா சர்வ காலமும் சிடு சிடுவென இருக்கும் அவரது தங்கை பாட்டியும் அதே கோலத்தில். யார் எதிரிலும் இவர்கள் வந்து விட கூடாது.
ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து வந்து பாப்பா (என் அம்மா) கொஞ்சம் கல்கண்டு கொடேன்! ராப்பூரா இலுமல்! என்று கேட்கும் அவரின் குரல் இப்போதும் கேட்பதால், மனம் ரணமாக!
இது போல அக்கம் பக்கம் அனைவர் வீட்டிலும் ஒரு சருகு போன்ற பாட்டி வாழ்ந்து கொண்டிருந்தது தான் உண்மை!
அய்யோ இந்த பாட்டிகளையெல்லாம் எங்காவது அழைத்து போய் பட்டு பட்டாக துணிகள் வாங்கி கொடுத்து, நன்றாக வைத்து கொள்ள மாட்டோமா எனயேங்கிய மனது!
பார்ப்பன கும்பலின் கன்னத்தில் அறைவதற்கு நாமும் அவருடன் இணைந்து நிற்போம்.
- பா.மதிவதனி