1939 ல் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டத்திற்கு முன்பு உயர்சாதியல்லாத சாமானியர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதில்லை. இதற்கான ஆதார நூல்களை எழுதினாலும் விளக்கினாலும் இன்று கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும் அனுமதிக்கப் பட்டதைப் போலவே முன்பும் இருந்ததாகவே பலர் கருதுகின்றனர். ஆலயங்கள் கட்டுவதற்கு இடம்,மண் தேர்ந்தெடுப்பது முதல் ஆலயத்தின் மூலவர் மூர்த்தி வரை வர்ணமும் சாதியப்பிரிவினைகள் உண்டென்பதை ஆகமம், சிற்ப, வாஸ்து சாஸ்திர நூல்கள் தெளிவாக விளக்கிக் கூறியும் அதை மக்கள் நம்பத் தயாரில்லை. நாம் நினைப்பது போல் கோயில்கள் பொதுமக்களுக்கானதல்ல, நினைத்தவுடன் யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று விரும்பும் இடங்களில் நின்று தரிசனம் செய்வதற்கு, வழிபாடு நடத்துவதற்கு!.
கோயில் எந்த வர்ணத்திற்கானது, மூலவர் எந்த வர்ணம் மற்றும் சாதியருக்கு அனுக்கிரகம் செய்வார், கோயில் கோபுரத்திற்கு வெளியே யார் நிற்க வேண்டும், கொடிக்கம்பம் வரை யாருக்கு அனுமதி, பலிபீடம் வரை யார் யாருக்கு அனுமதி, வெளிப்பிரகாரம் வரை யாருக்கு அனுமதி, வசந்த மண்டபம் வரை யார் செல்லலாம், உட்பிரகாரத்திற்கு உரியவர் யார் யார், அந்தார மண்டபத்தில் யார் யாருக்கு அனுமதி என்ற அனைத்து விபரங்களும் ஆகம நூல்கள்,சிற்ப சாஸ்திர நூல்களில் எழுதப்பட்டுள்ளன. இந்த நூல்களைப் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் கோயில்கள் பொதுவானவை,அனைத்து மக்களுக்குமானது என்ற கற்பிதங்களை உண்மையென மக்கள் நம்பி வருகின்றனர். ஆலய நுழைவுப் போராட்டத்திற்குப் பதில் ஆலய மறுப்புப் போராட்டம் நடைபெற்றிருந்தால் இன்றைய கோயில்களின் நிலையே மாறிப் போயிருக்கும். சமூகத்தில் கோயில்களின் பங்கும் குறைந்து போயிருக்கும்.

கோயில்கள் பொதுவானவை அல்ல என்பதை விளக்கும் பதிவுகள் பலவற்றை ஆகம சிற்ப வாஸ்து நூல்களின் ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறேன். அந்த வரிசையில், மா.நீலகண்ட சித்தாந்தியார் இயற்றி வெளியிட்ட “தீண்டாதோர் ஆலயப் பிரவேச நிக்ரஹம்(தடை)” எனும் ஆதார நூலைப் பற்றியதே இந்தப் பதிவு. இந்த நூலின் முதற்பாகம் 1932 ல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாவது பாகம் அச்சிடப்பட்டதா என்று தெரியவில்லை.தீண்டத் தகாத சண்டாளர்கள் பற்றியும் அவர்களுக்கு ஆலயப் பிரவேசம் மறுக்கப்பட்டதற்கு ஆதாரமாக பல சனாதன நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்து ஒரே நூலில் ஆசிரியர் வழங்கியிருப்பது சிறப்பு.

இப்போது கோயிலுக்குள் ஹிந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்,அதுவும் ஆகம விதிப்படி உடையணிந்து வரவேண்டும் என பல விதிமுறைகளை வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஶ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் வழக்குத் தொடுத்துள்ளார்.அந்த வழக்கு இப்போது விசாரணையில் உள்ளது.

இந்த நூலில் சண்டாளர் ஆலயப் பிரவேசஞ் செய்யக் கூடாது என்பதற்கு சிவாகம மேற்கோள், விஷ்ணுவும் பாஞ்சராத்திராகமத்திற் கூறல், சண்டாளர் என்போர் யார், தேவர்களுக்குள்ளும் நான்கு ஜாதிகளுண்டென்பது போன்ற தலைப்புகளில் அத்தியாயங்கள் உண்டு. இந்தத் தலைப்புகளில் கூறப்பட்ட சில விசயங்களை மட்டும் கீழே தருகிறேன்;

சண்டாளர் முதலாயினார் ஆலயப் பிரவேசஞ் செய்யக்கூடாது என்பதற்குச் சிவாகம மேற்கோள்:

சிவாகமம் சிவபெருமானாற்றிருவாய் மலர்ந்தருளப்பட்டதென்பதை எல்லாப் பிராமாணிகர்களும் யோக்கியதையுடன் ஒப்புக்கொள்வர். சிவாகமமின்றிச் சிவமுமில்லை. சிவாலயமுமில்லை. ஆதலின் ஆலய விஷயத்தில் ஆகமமே பிரமாணம்.

கோடி கிரந்தங்களாய் விரிந்துள்ள சிவாகம மகோததியில் ஒருவன் வீழ்ந்து கஷ்டப்பட்டு ஆராய்ந்தால் அடியிற் கண்ட இரத்தினங்களாகிய சுலோகங்கள் நன்கு பெறப்படும், சிவா கமங்களுட் பிரதமமாகிய காமிகாகம உத்தரபாகப் பிராயச்சித்தி விதிப்படலத்துள் சண்டாளப் பிரவேச பிராயச் சித்தம் வருமாறு:

குரங்கு கோழி முதலியன, புறா,பன்றி, நாய், கோட்டான்,கழுரு, காக்கை, ருது ஸ்திரீ, திருடன், கழுதை.

பதிதர்கள்(வர்ண தர்மங்களைப் பின்பற்றாதவர்கள்), மரணா சௌசமுள்ளவர்கள்(மரண தீட்டுள்ளவர்கள்), பாதகர்கள், பிறவித் தீட்டுள்ளவர்கள், மறைவாகப் பிறந்தவர்கள், கெட்ட ரோகிகள், கர்மங்களை விட்டவர்கள், ப்ரதிலோமக் கலப்பினால் பிறந்தவர்கள்.

குரு முதலிபவர்களுக்குத் துரோகம் செய்தவர்கள், தீக்ஷை யற்ற பிராமணர் முதலிய மூன்று வர்ணத்தார்கள், மற்ற நாற்கால் ஜெந்துக்கள், பக்ஷிகள் பாம்புகள்.

மற்றத் தாழ்ந்த ஜாதிகள், வேறு தீக்ஷைபெற்ற மனிதர்கள், சிற்பிகள், பாணர்கள், சண்டாளர்கள், வண்ணான் முதலியவர்கள்.

இவர்களால் பீடமாவது இலிங்கமாவது, விக்கிரகமாவது தொடப் பட்டாலும், கர்ப்பகிருகம் அல்லது பிரதிமா மண்டபம் நுழை யப்பட்டாலும், (இதுவரையிற் சிவலிங்கம் அல்லது மற்ற விக்கிர கங்கள் தொடப்பட்டாலும் கர்ப்பக்கிருகம் பிரதிமா மண்டபம் நுழையப்பட்டாலும் என்று கூறப்பட்டது.

அல்லது மறைவாகப் பிறந்தவர்கள், கெட்ட ரோகிகள், கர்ம ப்ரஷ்டர்கள்,ப்ரதிலோமக் கலப்பினாற் பிறந்தவர்கள், குரு முத லானவர்களுக்குத் துரோகஞ் செய்தவர்கள், தீக்ஷையற்ற பிரா மணர்முதலிய மூன்று வர்ணத்தார்கள் இவர்கள் பரிவார தேவதா லயத்திலாவது உள் மண்டபத்திலாவது இரண்டாவது மண்டபத் திலாவது நுழைந்தால் பிராயச்சித்தம் செய்யவேண்டியது.

இதுவரையிற் பொதுவிதி திருவாய் மலர்ந்தருளினார். இனிச் சிறப்பு விதி கூறுகின்றார்.

சண்டாளன் பாணகன் முதலானோர் நுழைந்தால் அதிகமாகச் சாந்தி செய்யவேண்டியது.

குரங்கு கோழி முதலியவைகள் கர்ப்பகிருஹத்தில் நுழைந்தால் ஸம்புரோக்ஷணமில்லாமல் திருமஞ்சனமும் சாந்தி ஹோமமுஞ் செய்ய வேண்டியது.

இருது ஸ்திரீ(பூப்பு எய்தியவள்), பாதகம் செய்தவர்கள் இவர்கள் கர்ப்ப கிருஹத்தில் நுழைந்தால் முன் சொன்னபடி ஸம்புரோக்ஷணம் மாத்திரஞ் செய்யவேண்டியது.

சண்டாளன் முதலானவர்கள் கர்ப்பகிருஹத்தில் நுழைந்தால் சாந்தி ஹோமத்துடன் ஸம்புரோக்ஷணமுஞ் செய்யவேண்டியது. இந்த மாதிரி முறையே பிராயச்சித்தம் மூவகைப்பட்டிருக்கும்.

முற்சொன்ன மூவகைப்பட்டவர்கள் அர்த்த மண்டபத்திலாவது முதல் மண்டபத்திலாவது இரண்டாவது மண்டபத்திலாவது நுழைந்தால் கிரமமாக சாந்தி ஹோமத்தையுந்
திக்குஹோமத்தையும் ஸம்புரோக்ஷணத்தையுஞ் செய்ய வேண்டியது.

ருது ஸ்திரீகள் தொட்டால் அல்லது உள்ளே நுழைந்தால், சண்டாளர்கள் இக்காரியங்களைச் செய்தாலென்ன ப்ராயச்சித்தஞ் சொல்லப்பட்டதோ அதையே செய்யவேண்டியது.

முன் சொன்ன மூவகைப்பட்டவர்களும் பிரதிமா மண்டபத்தில் நுழைந்தால் கிரமமாகச் சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், திக்கு ஹோமம் இவைகளைச் செய்யவேண்டியது.

பிராமணர்களையும் மற்ற தீக்ஷை பெற்றவர்களையுந் தவிர மற்றவர்கள் தீக்ஷையின்றிப் பரிவார தேவதைகளின் ஆலயத்திற்குள் நுழைந்தாலும் இதே பிராயச்சித்தஞ் செய்யவேண்டியது.

இந்தப் பரிவார தேவதைகளின் ஆலயத்திற்குள் புறா, காக்கை, யாது, பாம்பு முதலியவைகள் துழைந்தாலுந் தோஷங் கிடையாது.

சண்டாளன் முதலானவர்கள் உள் மண்டலத்திற்குள் நுழைந்தால் மூர்த்தி ஹோமமும் இரண்டாவது மண்டலத்தில் நுழைந்தால் சாந்தி ஹோமமுஞ் செய்யவேண்டும்.

எல்லாப்பிராயச்சித்தங்களிலும் பசுவின் சாணியினால் மெழுகு முதலானவைகள் பொதுவானவை. பரிவார தேவதையின் ஆலயத்திற்குச் சொன்ன பிராயச்சித்தமே சமயலறைக்கும் வைத்துக்கொள்ள வேண்டியது.

இனி விஷ்ணுவும் பாஞ்சராத்திராகமத்திற்(வைணவ ஆகம நூல்கள்) கீழ் வருமாறுரைத்தல் காண்க:

பாஞ்சராத்திரம் ஜயாக்ய ஸம்ஹிதை:

ஹே ரிஷியே, சண்டாளன் முதலியவர்களுள் எவனாவது கோயிலில் நுழைந்தால் அங்குள்ள மட் பாண்டங்களை யெல்லாம் எறிந்துவிட்டு மற்றப் பாத்திரங்களை அஸ்திர மந்திரத்தாற் புரோக்ஷித்து ஸ்நானஞ் செய்து அங்கே நின்றுகொண்டு கபில மந்திரத்தை ஆயிரத்திருநூறு முறை ஜெபித்துக் கோயில் முழு வதுஞ் சுத்தி செய்ய வேண்டியது.

முனீச்வார்களே! தீட்டுள்ளவர்களாவது, மஹா பாதகங்களைச் செய்பவர்களாவது, சண்டாளர்களாவது, பிரசவித்த ஸ்திரீ களாவது, மாதவிடாய் பெற்ற ஸ்திரீகளாவது, மிலேச்சாகளாவது, புல்கஸர்களாவது, முதல் மண்டபத்திற்குள்ளேனும் முதல்
ஆவரணத்திலேனும் நுழைந்தால் ஆலயத்தை முற்கூறியபடி சுத்தஞ் செய்து,
அதமோத்தமப்படி முற்கூறியவாறு புருஷோத்தமனுக்கு அபிஷேகஞ் செய்ய வேண்டியது. முற்கூறப்பட்டவர்கள் இரண்டாவது ஆவரண முதல்,வீதி ஆவமணம் வரையிலுள்ள இடங்களில் நுழைந்தால் ஆலயத்தைச் சுத்திசெய்து அதமாதமப்படி பகவானுக்குத் திருமஞ்சனஞ் செய்விக்க வேண்டியது.

முற்கூறிய சந்தர்ப்பங்களிற் சாந்திஹோமஞ் செய்து பிராமணர்கட்குப் போஜனஞ் செய்விக்க வேண்டியது.

ஹே ருஷீஸ்வார்களே சண்டாளர்களாவது சக்கிலிகளாவது தெரியாமல் விஷ்ணுவாலயத்தில் ஒரு மாதம் வரையில் வசித்து விட்டால் மட் பாத்திரங்களை யெறிந்துவிட்டு ஆலயத்தைச் சுத்தி செய்து பசுவின் சாணத்தால் மெழுகிப் பிறகு முழுவதும் அக்கினியினாற் சுத்தி செய்யவேண்டியது.

பிறகு புண்யாஹவாசனஞ் செய்வித்துப் பஞ்ச கெளவியத்தினால் ஆலய முழுதும் புரோக்ஷித்துப் பிறகு தோஷங்களைப் போக்கு வதற்காகப் பசு மந்தையை ஆலயத்தில் இருக்கும்படி செய்ய வேண்டியது. வேதங்களை நன்கு கற்றுணர்ந்த பிராமணர்களால் மஹா சாந்தி மந்திரத்தை ஜெபிக்கச் செய்து, பிராமணங்கட்குப் போஜனஞ் செய்வித்துத் தக்ஷிணை கொடுக்க வேண்டியது.

இம்மாதிரி ஒரு மாதமாவது(கரு)தினங்களாவது, ஏழு, ஐந்து, அல்லது மூன்று தினங்களாவது செய்ய வேண்டியது. பிறகு மறுபடியும் ஆலயத்தைச் சுத்திசெய்து பிம்பத்திற்குப் பசு நெய்யால் அபிஷேகஞ் செய்வித்துக் கிரமப்படி சம்புரோக்ஷணஞ் செய்ய வேண்டியது.

சண்டாளன், பிரஸவித்த ஸ்திரீ, ருதுஸ்திரீ இவர்கள் தொட்ட அல்லது பிணம் விழுந்து கெடுக்கப்பட்ட கிணற்றிலிருந்து எடுக்கப் பட்ட ஜலத்தினால் ஸ்வாமிக்குப் பூஜை செய்யப்பட்டால் உத்த மோத்தமமாக ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்துவைக்க வேண்டியது.

சண்டாளர் என்னும் பதம் தீண்டாதாரையே
குறிக்குமெனல்;

மனுஸ்மிருதி(ரு)ம் அத்தியாயம் (அரு)ம் சுலோகம் சொல்லுகின்றது. அதன் பொருளாவது:- பறையன், தூரஸ்திரீ, பதிதன், பிரசவித்தவள், பிணம், பிணத்தைத் தொட்டவன், இவர்களைத் தெரியாமல் தொட்டால் ஸ்நானஞ் செய்தாற் பரிசுத்தனாகிறான் என்பதே.

தொடரும்…

தினகரன் செல்லையா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here