மார்ச் – 4:

ஒடுக்கப்பட்ட மக்களின் தலை நிமிரச் செய்த அய்யா வைகுண்டர்!

தென்னிந்தியாவில் பார்ப்பன இந்து மதத்தின் கொடுமைகளை எதிர்த்துப் போராடி தனி வழிபாட்டு முறையை முன்வைத்த  சீர்திருத்தவாதிகள் பலர் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் அய்யா வைகுண்டர்.

19-ஆம் நூற்றாண்டுகளில் கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானம் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதி ஆதிக்கமும், அடக்குமுறைகளும் விவரிக்க முடியாத அளவிற்கு தலைவிரித்தாடியது.

இன்று நாடார்கள் என்று அழைக்கப்படுகின்ற சாணார்களையும், கேரளத்தில் ஈழவர்களையும், “பறையர்களை தொட்டால் தீட்டு, சாணர்களை பார்த்தாலே தீட்டு” என்று இழிவுபடுத்தி அடக்கி ஒடுக்கி வந்தது பார்ப்பன (இந்து) மதம்.

பெரும்பான்மை உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட மக்களை பள்ளிக்கூடம், நீதிமன்றம், ஆலயங்கள், மேல்சாதியினர் வசிக்கும் தெரு, அவர்கள் பயன்படுத்தும் குளம், கிணறு ஆகியவற்றின் அருகில் கூட செல்ல கூடாது, அதுமட்டுமின்றி கொடூரமாக ‘நான் தூங்கப்போகிறேன்’ என்று கூட சொல்லக்கூடாது தரையில் விழ போகிறேன் என்று தான் கூற வேண்டும்.

உழைப்பில் ஈடுபட்டு பண்ணைகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும்,ஆதிக்க சாதிகளுக்கும் சொத்துக்களை உருவாக்கிக் கொடுத்த மக்களை பார்ப்பன (இந்து) மதம் இவ்வாறு தான் இழிவுபடுத்தியது.

திருவிதாங்கூர் மன்னராட்சி கொடுங்கோன்மையின் கீழ் மக்கள் அணிந்துகொண்டு உள்ள தாலி முதல் வைக்கும் பீலி வரை, குறிப்பாக சொல்லப்போனால் ஆண்களின் மீசை, பெண்களின் மார்பு, முதியோரின் ஊன்றுகோல், மண்வெட்டி, அருவாள், ஓலைப் பெட்டி ஆகிய உபகரணங்கள், வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, கிளி, புறா, தாவரங்கள் அனைத்தின் மீதும் நூற்றுக்கும் மேற்பட்ட வரி விதித்து சுரண்டலுக்கு உள்ளாக்கி வந்தனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் செருப்பு அணியக்கூடாது, அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், இடுப்புக்கு மேல் உடலை துணியால் மறைத்து வைக்க கூடாது, எப்போதும் திறந்த மார்புடன் தான் இருக்க வேண்டும், கோவில்களில் நுழைவதற்கு அனுமதி இல்லை, பெயரை கௌரவமாக வைத்துக்கொள்ளக்கூடாது, மேல் சாதியினர் பேசும்போது பத்தடி தள்ளி நின்றுதான் பேசவேண்டும், ஓடு வேய்ந்த வீடுகளில் வாழக்கூடாது, வெயிலுக்கு குடை பிடிக்கவும், பசுமாடு வளர்ப்பதற்கும், ஆதிக்க சாதியினர் ஏவும் வேலையை செய்து விட்டு அதற்கு கூலி கேட்கவும் கூடாது, பெண்கள் இடுப்பில் தண்ணீர் குடம் சுமப்பது நகை அணியக் கூடாது போன்ற அளவிற்கு ஒவ்வொரு அம்சத்திலும் சாதிய அடக்குமுறை தலைவிரித்தாடியது.

இத்தகைய சமூக கொடுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராக தனது போர் குரலை உயர்த்தியவர்தான் அய்யா வைகுண்டர்.

“இன்று முதல் இகாபரா தஞ்சமென ஒன்று போல் எல்லோரும் ஒரு புத்தியாய் இருங்கோ,  அவனவன் தேடும் முதல் அவனவன் வைத்து ஆண்டிருங்கோ, எவனேவனுக்கும் பதறி இனி மலைக்க வேண்டாம்” என்று ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்த 18 சாதிகளை ஒன்றிணைத்து தனி வழிபாட்டு முறையை உருவாக்கினார். இந்த வழிபாட்டு முறையே அய்யாவழி என்று அழைக்கப்படுகிறது.

கன்னியாகுமரி சாமித்தோப்பு பகுதியில் அனைவரும் சமமாக நீர் எடுப்பதற்கு பொருத்தமாக பொதுக்கிணறு ஒன்றை உருவாக்கினார். இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு அடங்கி கிடப்பது தேவையில்லை அதை எடுத்து தலைப்பாகை கட்டிக்கொண்டு, நெற்றியில் திருநீறு அணிந்து கொள்வதற்கு பதிலாக திரு மண்ணை எடுத்து ஒளி வடிவில் சாத்திக் கொள்வது, தலைநிமிர்ந்து கோவிலுக்குள் செல்வது மட்டுமின்றி, பார்ப்பன கும்பலால் முன்வைக்கப்பட்ட காயத்ரி மந்திரத்திற்கு பதிலாக தமிழ் மொழியிலான உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, அகண்ட நாமம் என்ற மூன்று மந்திரங்களையும் முன்வைத்தார்.  உருவ வழிபாடு செய்வது தேவையில்லை என்று முன் வைத்தார்.

தனது வழிபாட்டு முறையை முன்வைத்து அவர் போதித்த போதனைகள் அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகிய தொகுப்புகளாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தலைநிமிர்ந்து நிற்பதற்கு போராடிய அய்யா வைகுண்டர் என்ற போராளியின் பிறந்த தினமான மாசி மாதம், அதாவது மார்ச் நான்காம் தேதியை கொண்டாடுவோம். அன்றைய தினம் துவங்கி சமத்துவம் போதித்த அய்யா வைகுண்டர் வழிபாட்டு முறையை நாடு முழுவதும் பரப்புவோம்.

பிறப்பால் ஏற்றத்தாழ்வு போதித்து, இன்றளவும் மக்களை சாதிகளாகப் பிரித்து வைத்து வருண – சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்ற பார்ப்பன (இந்து) மதத்திற்கு எதிராக கலகத்தில் இறங்குவோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here