எழுதப் படிக்கத் தெரியாதவன் நாட்டை ஆள்வதா? அண்ணாமலையின் ஆதிக்க சாதித் திமிர்!


திமுகவில் உள்ள 90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. விமானத்தில் ஏறத் தெரியாது. இதனால் டெல்லிக்குச் சென்று தமிழகத்திற்கு தேவையான நிதியை அவர்களால் பெற்று வர முடியாது.”

சென்னையில் பார்ப்பன கோட்டையான மயிலாப்பூரில் திராவிட மாயை என்று ஒரு தற்குறி எழுதிய நூலை வெளியிடுவதற்கு சென்ற பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை இவ்வாறு சாதி ஆதிக்க திமிருடன் பேசியுள்ளார்.

திமுகவை மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்றழைக்கப்பட்ட இந்து பத்திரிக்கை முதல் பார்ப்பன பாசிச ஜெயாவின் கிச்சன் கேபினட்டுகளாக பணியாற்றிய ஆர். வெங்கட்ராமன், துக்ளக் சோ, டிஎன் சேஷன், ஓடுகாலி சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பன கும்பல் வரை, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த தலைவர்களைக் கொண்ட கட்சி என்பதால் இழிவாகவும் தரக்குறைவாகவும் தொடர்ந்து பேசி அவமானப்படுத்தி உள்ளனர்.

தொண்ணூறுகள் வரை தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்த இலக்கியவாதிகள் என்றழைக்கப்பட்ட ஜெயகாந்தன் உள்ளிட்ட பார்ப்பனர்கள், திரைப்படத்துறையில் கொடிகட்டிப் பறந்த பாலச்சந்தர் வகையறாக்கள், ஊடகத்துறையில் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பன கும்பலான விகடன் பாலசுப்ரமணியம், இந்து தினமணி ஆசிரியர் குடும்பம் உள்ளிட்ட அனைத்தும் சமூகநீதி பேசிய திராவிட இயக்கத்தை சாதியை சொல்லி தான் இழிவுபடுத்தி வந்தார்கள்.

பல நூற்றாண்டுகளாக பிறரது கல்வியை மறுத்து ஆதிக்கம் புரிந்து வந்த பார்ப்பனர்களும், வேளாளர் சாதிகளும், வெள்ளாள கவுண்டர்களும் குறிப்பாக திமுகவை வசை பாடியும், பேசியும் இழிவுபடுத்தியும் வந்துள்ளனர்.
நாமக்கல், கரூர், சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட ‘கொங்கு பெல்ட்’ என்றழைக்கப்படும் கொங்கு கவுண்டர்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை என்பது இன்றளவும் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த சாதியினரின் திருமண மண்டபங்கள் துவங்கி கோவில் திருவிழாக்கள் வரை அனைத்திலும் சம உரிமை மறுக்கப்பட்டே வருகிறது.
இந்த உண்மையை, ‘அண்டா பிரியாணியை அப்பளத்தில்’ மறைக்கும் அண்ணாமலை திருவாரூரில்தான் சாதி ஆதிக்கம் நிறைந்து உள்ளதாகவும், தீண்டாமைக் குற்றங்கள் அதிகம் உள்ளதாகவும் அந்தக் கூட்டத்தில் கதையளந்து உள்ளார்.

இடதுசாரி இயக்கங்கள் போராடிய டெல்டா மாவட்டங்களில்தான் குறைந்தபட்சம் வழக்கு பதிவு செய்ய முடிகிறது. இவரைப் போன்ற கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் ஆதிக்கம் புரியும் ‘கொங்கு பெல்ட்’ இலட்சணத்தை பொள்ளாச்சியும், உடுமலையும் உலகிற்கு எடுத்துக் காட்டியது.

சமீபத்தில் இறந்து போன மூத்த இலக்கிய எழுத்தாளர் கி ராஜநாராயணன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு “திராவிட இயக்கம் மேலிருந்த தீண்டாமைக்கு தமிழ் இலக்கியவாதிகளின் பார்ப்பன பார்வைதான் காரணம். திராவிட இலக்கியங்களை மணிக்கொடி போன்றவர்களுடன் சேர்ந்து நாங்களும் புறக்கணித்தே வந்துள்ளோம். அது தவறு என்று உணர்கிறேன்” என்று நேர்மையாக தெரிவித்தார்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன்

இது திராவிட இயக்கம் தோன்றியபோது செயல்பட்ட இலக்கியவாதிகளின் மனசாட்சிக்கு ஒரு கண்ணாடி போல நமக்கு ஆதாரமாக உள்ளது.இந்த வரிசையில் கொங்கு கவுண்டர் ஆன அண்ணாமலை தனது சாதி ஆதிக்கத் திமிருடன் ஒடுக்கப்பட்ட மக்களை சேர்ந்த அமைச்சர்களை ஆங்கிலம் படிக்க தெரியாது, விமானம் ஏற தெரியாது, டெல்லி சென்று நிதி வாங்க தெரியாது என்று இழிவுபடுத்துவதை அனுமதிக்கக்கூடாது. அந்தப் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு வெட்டிமை தொழில்களை செய்ய பணிக்கப்பட்ட மக்களுக்கு, மலம் அள்ளுவது, செருப்பு தைப்பது, முடி வெட்டுவது, துணி துவைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்ற மக்களுக்கு, நிலவுகின்ற அரசு கட்டமைப்பை பயன்படுத்தி இந்தியாவிலேயே 69 சதவீத இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்த காரணத்தினால் அரசு பதவிகளில் மட்டுமின்றி, சமூக வாழ்விலும் ஓரளவு பார்ப்பன- வேளாள சாதிகளுக்கு போட்டியாக சுயமரியாதையுடன் வாழ துவங்கியுள்ளனர்.
மீண்டும் ஆர்எஸ்எஸ் நிறுவத் துடிக்கும் பார்ப்பன இந்து ராஷ்டிரத்தில், நிபந்தனையற்ற முறையில் சூத்திர அடிமைகளாக வாழ்வதற்கு பெரும்பான்மை மக்களை ‘நாம் அனைவரும் இந்துக்கள்’ என்று ஒன்று திரட்டும் அண்ணாமலைகள் தமிழகத்தின் இழிவாக கருதப்படவேண்டும்.

பெரும்பான்மை மக்களின் வரிப்பணத்தில் லக்னோவில் ஐ ஐ எம் படித்துவிட்டு, பின்பு ஐபிஎஸ் முடித்து, போலீஸ் அதிகாரியாக உலாவந்த அண்ணாமலை இதுபோன்று ஆதிக்கசாதி திமிருடன் தைரியமாக பேசுவதை அனுமதிக்கக்கூடாது.
இப்படிப்பட்ட நான்காம் தர கழிசடை பேச்சாளர்களின் நிழலில் தான் திமுக எதிர்ப்பாளர்கள் பதுங்கி உள்ளனர் என்பது கவனிக்கவேண்டிய அம்சம்.

  • சண்.வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here