அறியப்படாத பிரம்மசூத்திரம் பகுதி – 4

அபசூத்திராதிகரணம்!!

பிரம்ம சூத்திரம் முதல் அத்தியாயம் மூன்றாவது பாதம், 34 லிருந்து 38 வரையள்ள சூத்திரங்கள் “அபசூத்திராதிகரணம்” எனும் தலைப்பில் அமைந்த உள்ள பகுதியாகும்.இந்த அதிகரணத்தில் வேதமந்திரங்களை,பிரம்ம வித்தையை சூத்திரன் கற்றுக்கொள்ளவோ காதால் கேட்கவோ ஏன் அதிகாரமில்லை என்பது நிறுவப்படுகிறது.

எல்லா அதிகரணங்களிலும் பூர்வ பக்ஷி(வேதங்களுக்கு எதிர்கருத்தையுடையவர்கள்) கூறும் கருத்தைக் கூறி அதை நிராகரிப்பதுதான் பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதியவர்கள் கடைப்பிடித்த மரபு ஆகும்.

அந்த வகையில், 34-38 ல் அடங்கிய ஐந்து சூத்திரங்களுக்கும் பூர்வ பக்ஷி கூறும் காரணங்களைக் கூறி, சூத்திரனுக்கு ஏன் பிரம்ம வித்தையில் (வேத மந்திரங்களின் மீது) அதிகாரமில்லை, வேத மந்திரங்களை ஏன் அத்யயனம்(பாராயணம்) அல்லது ஓதுதல் கூடாது, காதால் ஏன் வேத மந்திரங்களைக் கேட்கக் கூடாது என்பதை விளக்குகின்றனர் பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதிய ஆதிசங்கரர் முதல் ஶ்ரீ ராமாநுஜர் போன்ற மேன்மை மிகு ஆச்சாரியர்கள்.

34 ஆவது சூத்திரமானது,புராண உபநிடதங்களில் கூறப்படும் ஜானஸ்ருதி என்ற மன்னனின் கதையைக் குறிப்பிடுகிறது.

தான தர்மங்களில் சிறந்தவன் ஜானஸ்ருதி. அவனுக்கு பறவைகளின் பாஷை தெரியும். ஒருநாள் இரண்டு மகான்கள், அன்னப்பறவைகள் போல தங்களை உருமாற்றிக்கொண்டு பறந்தனர்.

அதில் ஒரு அன்னம் மற்றொன்றிடம், கீழே தெரிகிறானே ஜானஸ்ருதி, அவனுக்கு மறுபிறவி உறுதி என்றது.என்ன உளறுகிறாய்? அவன் செய்கிற தர்மத்துக்கு மோட்சம் நிச்சயம் என்றது இரண்டாவது அன்னம்.

உஹூம்…தானத்துக்கு குபேரபதவி கிடைக்கும்.அதை அனுபவித்ததும் திரும்பவும் இங்கே வர வேண்டும். உனக்கு ரைக்குவரைத் தெரியுமா? அவரது தயவு கிட்டினால் ஒரு வேளை இவனுக்கு மோட்சம் கிடைக்கலாம் என்றது.இதைக் கேட்ட ஜானஸ்ருதி அதிர்ச்சியுற்றான்.

ரைக்குவரைத் தேடிச் சென்றான். ஒரு வயோதிக ஆள் சாலையோரம் புழு அரித்து படுத்திருந்தார். அவர் தான் ரைக்குவர் என்றனர் மக்கள். இவர் எப்படி மோட்சம் போவதற்கு துணைபுரிவார்? இருப்பினும் பறவைகள் பேசியது பொய்யாகாதே! சந்தேகத்துடன் ஜானஸ்ருதி ரைக்குவரை நெருங்கினான். தான் கொண்டு வந்த ரத்தினம், வைரம், தங்கம் அடங்கிய தட்டை அவரிடம் நீட்டி ஏற்றுக்கொள்ள வேண்டினான்.

அடேய்! இது யாருக்கு வேண்டும்? இந்த தங்கமும், வைரமும் என் உடலில் ஊறும் புழுவுக்கு சமமாகுமா! எனக்குள்ள இந்த வியாதியை மனதார ஏற்றுக் கொண்டுள்ளேன். உனது தங்கம் வைரம் ஏதும் வேண்டாம் என்றார். ஜானஸ்ருதி அசந்து விட்டான். செல்வத்தின் மீது ஆசையற்ற இவரே பிரம்ம வித்தை கற்பதற்கு தகுதியான குரு என கண்டுகொண்டான். அவரிடம் தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். இப்படியாக அந்தக் கதை செல்கிறது.

இதில் ரைக்குவர் எனும் யோகி, தன்னை நாடிவந்த ஜானஸ்ருதி என்பவன் க்ஷத்ரியன் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே பிரம்ம வித்தை(வேதமந்திரங்கள்) கற்றுக் கொடுப்பதற்கு தயாரானார் என்கின்றனர் பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதிய ஆச்சாரியர்கள்.

34 ஆவது சூத்திரத்திற்கு சுவாமி சிவானந்தர்,சங்கர பாஷ்யம்(பிரம்ம ஶ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள்),ராமாநுஜரின் ஶ்ரீ பாஷ்யம்(ஶ்ரீ அஹோபில தாசன் க.ஶ்ரீதரன்),ஶ்ரீ நீலகண்ட சிவாச்சாரியாரின் பிரம்ம சூத்திர சிவாத்துவத சைவபாடியம்(காசிவாசி செந்தில்நாதையர்) கூறியுள்ள விளக்க உரையினைக் கீழே தருகிறேன்.

Sugasya tadanadaras ravanat tadadravanat suchyate hi 1.3.34 (97)

(King Janasruti) was in grief on hearing some contemptuous words used about him by the sage in the form of a swan; owing to his approaching Raikva, overwhelming with that grief, Raikva called him Sudra; for it (the grief) is pointed at by Raikva.

This Sutra refutes the view and denies the right to the study of the Vedas for Sudra. The word ‘Sudra’ does not denote a Sudra by birth which is its conventional meaning, because Janasruti was a Kshatriya king. Here we will have to take the etymological meaning of the word which is, “He rushed into grief (Sukam abhi dudrava) or as “grief rushed on him” or as “he in his grief rushed to Raikva”. The
following Sutra also intimates that he was a Kshatriya. (Brahma Sutras-Sawmi Sivananda)

சுகஸ்ய ததநாதரச்ரவணாத் ததாத்ரவணாத் சூச்யதேஹி (1-3-34)

(பதவுரை) (சூத்ர:)=சூத்திர ஜாதியிற் பிறந்தவன் (ஸ்ரௌத ப்ரம்ஹ வித்யாதிகாராபாவவான்)-உபநிஷந் மூலகமான ப்ரம்ஹ வித்தையில் அதிகாரமற்றவனே ஆவான்.

ஆகவே சோகத்தாலோடி வந்தவன் ஜானஸ்ருதி என்பதைக் குறிப்பிடவேண்டி (சுசா)= சோகத்தால் (ஆத்ரவதி) = ஓடிவந்தவன் என்ற பொருளில் சூத்ர என்ற சப்தம் பிரயோகம் செய்யப்பட் டிருப்பதாகக் கொள்ளுவதிலிருந்து ஜாநஸ்ருதி க்ஷத்திரியன் என்பதால் ஜாதி சூத்திரனுக்கு ஸ்ரௌத ப்ரம்ஹ வித்தையிலதிகாரம் கிடையாது என்று சொன்னது பொருத்தமானதே.(34)
(பிரம்ம சூத்திரம்-சங்கர பாஷ்யம்-தமிழில் பிரம்மஶ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள்)

1-3-34 :க்ஷத்ரியத்வகதே:ச

ஜானஸ்ருதி ஒரு க்ஷத்ரியன் என்று அறியப்படுவதால் சூத்திரர்களுக்கு உபாஸனை அதிகாரம் இல்லை

விளக்கம்:ஜானமஸ்ருதி மிகவும் அதிகமாக தானம் கொடுப்பவனாகவும், பலருக்கும் அன்னதானம் செய்பவனாகவும் கூறப்பட்டுள்ளான். அதிகாரங்கள் சூத்திரர்களுக்கு இல்லை. எனவே ஜானஸ்ருதி ஒரு க்ஷத்ரியனே ஆவான். ஆக, இவனை ‘சூத்திரா’ என்று குறிப்பிட்டது ஜாதியின் காரணமாக இல்லை. எனவே, சூத்திரர்களுக்கு ப்ரஹ்ம உபாஸனை அதிகாரம் இல்லை.
(ஶ்ரீ ராமாநுஜரின் ஶ்ரீ பாஷ்யம்-தமிழில் ஶ்ரீ அஹோபில தாசன் க.ஶ்ரீதரன்)

அவன் க்ஷத்திரியன் என அறியப்படுதலானும்(1:3:34)

தனக்குக் கீழே இரைக்குவர் இருந்த மகாவிருஷருடைய தேசத்தின் ‘இரைக்குவபர்ணக் (கிராமங்கள்) இவைகள்’ என்னுஞ் சுருதியினால், கிராமங்கள் (இரைக்குவர்க்கு அவன்) கொடுத்தவனாக (உபாக்கியான) முடிவிற் கூறப்படுகின்றனன். இவ்வியல்பினலாய இலிங்கங்ளினால் ஜாநசுருதி க்ஷத்திரியனாக அறியப்படுகின்றான்.

(ஶ்ரீ நீலகண்ட சிவாச்சாரியாரின் பிரம்ம சூத்திர சிவாத்துவத சைவபாடியம்-தமிழில் காசிவாசி செந்தில்நாதையர்)

ஶ்ரீ நீலகண்ட சிவாச்சாரியார் ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்திற்கு முற்பட்டவர் என்கிறார் ஆசிரியர் காசிவாசி செந்திநாதையர்.

மற்ற சூத்திரங்களை அடுத்த பதிவுகளில் காண்போம்…

தினகரன் செல்லையா

முந்தைய பதிவுகள்

♦ அறியப்படாத பிரம்மசூத்திரம் – தினகரன் செல்லையா
அறியப்படாத பிரம்மசூத்திரம் பகுதி 2
அறியப்படாத பிரம்மசூத்திரம் – பகுதி3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here