அறியப்படாத பிரம்மசூத்திரம்

வேதங்களின் சாரமே வியாசர் படைத்த “பிரம்ம சூத்திரம்” நூல் ஆகும்.இந்த நூலானது சூத்திர வடிவிலானது. ஒவ்வொரு சூத்திரமும் ஒரே ஒரு வரியைக் கொண்டிருக்கும்.தமிழில் குறள் எனும் பாடல் வடிவமானது இரண்டு வரிகளைக் கொண்டிருக்கும்.

பிரம்ம சூத்திரமானது 555 சூத்திரங்களைக் கொண்டுள்ளது என அத்வைதிகளும், 545 என விஸிஷ்டாத்துவைதிகளும் கூறுகின்றனர்.

சூத்திரம் என்ற சொல்லுக்கு பஞ்சால் ஆன நூல் அல்லது நாற்(string),புத்தகம்,
ரகசியம், உபாயம் என பல பொருள்கள் உண்டு. பிரம்ம சூத்திரம் என்பது பிரம்மத்தைப் பற்றிய விசயங்களை அழகாக மாலை போலக் கோர்வையாகத் தொகுத்து வியாசர் கொடுத்துள்ளார் என்கின்றனர்.

வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரம் நூலானது நான்கு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பாதங்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதமும் ஒன்றோ, அல்லது பல அதிகரணங்களை உள்ளடக்கி, மொத்தம் 192 அதிகரணங்களைக்(topic) கொண்டுள்ளது. இதில் அதிகரணம் என்பது பிரம்ம சூத்திர நூலின் சிறப்பம்சமாகக் வேதாந்திகள் கருதுகின்றனர்.

இந்த நூலில் முதலில் கூறப்படும் நான்கு சூத்திரங்களில்(சதுர் சூத்ரி) அத்வைதம் நிலைநாட்டப்படுவதாக அத்வைதிகள் கருதுகிறார்கள், அதே போன்று விஸிஷ்டாத்துவைதம் நிறுவப்படுவதாக ஶ்ரீ ராமானுஜரைப் பின்பற்றுகிறவர்களும், துவைதம் நிலைநாட்டப்படுவதாக மாத்வரை பின்பற்றும் துவைதிகளும் கருதுகின்றனர்.

இந்திய தத்துவ மரபை இரண்டாகப் பிரிப்பார்கள்.ஒன்று ஆஸ்திக தரிசனம், இன்னொன்று நாஸ்திக தரிசனம். நாஸ்திக தரிசனம் என்பது வேதங்களை ஏற்றுக் கொள்ளாதவை.நாஸ்திக தரிசனத்தில் சார்வாகம், சமணம்,பௌத்தம் என்ற மூன்று தரிசனங்களும்(மதங்கள்), ஆஸ்திக தரிசனங்களாக சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சா, உத்தர மீமாம்சா என ஆறு தரிசனங்களும்(மதங்கள்) உண்டு.

சார்வாகம்: பொருள்கள்தான்(matter) சத்யம், கண்ணால் காண்பதை(பிரத்தியக்சத்தை) மட்டும் நம்புகிறவர்கள்,அனுமானத்தைக் கூட நம்புவதில்லை. ஐந்து பூதங்களில், கண்ணிற்குப் புலப்படாத ஆகாசத்தை சாருவாகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஈசுவரனையும் இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.இவர்களது வாதத்தை சுபாவ வாதம் என்றழைக்கின்றனர் வேதாந்திகள்.உலகம்,பிரபஞ்சம் உயிர்கள் தோன்றியவை அனைத்தும் இயற்கையாகவே தோன்றுபவை எனும் கருத்தை உடையவர்கள்(by nature).’யாவத் ஜீவம் சுகம் ஜீவேத்’ எவ்வளவு காலம் வாழ்கிறோமா அவ்வளவு காலமும் சுகமாய் ஜீவிப்பது அதுவே சாருவாகர்களின் குறிக்கோள்.இறந்தவர்கள் ஒருநாளும் திரும்பி வரப் போவதில்லை,அதனால் வாழும் காலத்தில் சந்தோசமாய் வாழக் கற்றுக் கொள் என்பது இவர்களது தத்துவம்.இப்போது இந்த மதத்தவர்கள் யாரும் இல்லை.இவர்களின் தத்துவ விளக்கங்களை வேதாந்திகளின் நூல்களைக் கொண்டே அறிய முடிகிறது.

சமணம்: ஸ்தாபகர் ரிஷபதேவர்.குருவே கடவுள் என்ற கருத்தை உடையவர்கள். ஸ்வேதாம்பரக,திகம்பரக என இரு பிரிவுகள் உண்டு. ஸ்யாத் வாதம் என்பது இவர்களது தத்துவங்களில் ஒன்று. எல்லா judgement ம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை,காலத்திற்கும்,நிபந்தனைகளுக்கும் உட்பட்டவை என்பதே சமணம். உலகை ஜீவன் அஜீவன் என இரண்டாகப் பிரிக்கிறார்கள். மகாவீரர் உட்பட இவர்களது 24 ஆச்சாரியர்களும் முக்தர்களாக அழைக்கப்படுகிறார்கள்.பக்தர்களாக இருக்கும் நாம் 24 ஆச்சாரியர்களின் உபதேசங்களின் படி வாழ்ந்தால் அவர்களைப் போல் முக்தர்களாக ஆக முடியுமாம். அகிம்சை யைத் தவிர பத்து பண்புகளை சமணம் முன்வைக்கிறது.

பௌத்தம்: புத்தரின் காலத்திற்குப் பிறகு பௌத்தம் 18 பிரிவுகளாக இருந்ததாக வேதாந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. ஜெகத் ஆனது சூன்யம் என்ற கருத்தை உடையவர்கள் பௌத்தர்கள். தவிர சூன்யம் மட்டுமே உண்மை என்பது மாத்யமிகள் எனும் பௌத்த பிரிவினர்களின் வாதம்.இப்போதுள்ள பௌத்தர்கள், சூன்யம் எனக் குறிப்பிடுவது உபநிடதங்களில் குறிப்பிடப்படும் பிரம்மத்தைத் தான் எனக் கூறுகின்றனர்.இந்தக் கருத்தை வேதாந்தம் ஏற்றுக் கொள்கிறது.பௌத்தம் கூறும் நான்கு பேருண்மைகளில் “துக்கம்” என்பது முதலாவது உண்மை,அதாவது உலகமானது துக்கத்தால் நிறைந்துள்ளது என்பதாகும்.துக்கத்திற்கான காரணம் உண்டு,அதை விலக்குவதற்கான வழிமுறைகளும் உண்டென பௌத்தம் கூறுகிறது. ‘காரணத்தை நீக்கினால் காரியம் போய்விடும்’ ஆகவே துக்கதிற்கு என்ன காரணமோ அதை நீக்கினால் மோட்சம் உண்டு என்கிறார்கள். அஷ்டாங்க யோகம் போன்று எட்டு விதமான value systems இன்றைய பௌத்த போதனைகளில் உண்டு.
இவற்றில் சாமானிய தர்மத்தை பின்பற்றி வாழ வேண்டும் என்பதும் mindfulness என்பதும் உண்டு. பௌத்தம் ஆன்மாவை ஏற்பதில்லை.ஈசுவரனைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

சாங்கியம்(சாங்கிய மதம்): இதை உருவாக்கியவர் கபில முனிவர் ஆவார். ப்ரகிருதிக்கும் புருஷனுக்கும் முதலில் தத்துவத்தைக் கூறுகிறது, பிறகு
ப்ரகிருதியும் புருஷனுக்கு நிகரான தத்துவம் என்கிறது சாங்கியம்.
சாங்கியம் கூறும் ஸ்ருஷ்டி தத்துவத்தை அத்வைதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். உலகமும் உண்மை புருஷனும் உண்மை எனும் தத்துவத்தை உடையது சாங்கியம்.ஈசுவரன் என்கிற தத்துவமேஅவசியமில்லை,
பிரக்கிருத்திக்கே ஒரு சக்தி இருக்கு பலனைக் கொடுப்பதற்கு என்கிறது சாங்கியம்.இது ஒரு மதமாக பின்பற்றப் படவில்லை.

யோக தரிசனம் : இந்த தரிசனத்தை உருவாக்கியவர் பதஞ்சலி மகரிஷி.மனதை நெறிப்படுத்தும் முறைகளைப் (Mind discipline)பற்றித்தான் யோகம் கூறுகிறது.அஷ்டாங்க யோகம் எனக் கூறப்படும் எட்டு முறைகளையும் எல்லா ஆஸ்திக மதங்களும் ஏற்றுக் கொள்கின்றன. ஈசுவரனை ஏற்றுக் கொள்கிறது யோகம்.உலகம் சத்தியம் ஆத்மா பல எனக் கூறும் யோக தத்துவங்களை அத்வைதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. இது ஒரு மதமாக உருவெடுக்கவில்லை.

நியாயம் (நியாயம் அல்லது தர்க்க தரிசனம் அல்லது மதம்): இதைத் தோற்றுவித்தவர் கௌதம முனிவர்.

வைசேசிக தரிசனம் அல்லது மதம்:
இதைத் தோற்றுவித்தவர் கணாத முனிவர்.

நியாயமும் வைசேசிகமும் ஒன்றாகி இன்றைய நாட்களில் தர்க்க மதமாகப் போதிக்கப்பட்டு வருகிறது. தர்க்கம் கூறும் அனுமானம், பிரத்தியக்சப் பிரமாணம், அனுப்லப்தி போன்றவைகளை அத்வைதிகள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

மேலுள்ள நான்கு மதங்களும் வேதத்தை ஏற்றுக் கொண்டன ஆனாலும் தர்கத்திற்குத்தான் முக்கியத்துவம் தருகின்றன. வேதத்தை ஒரு support ஆத்தான் இந்த மதங்கள் கருதுகின்றன.

இனி அடுத்து வரும் பூர்வ மீமாம்சா மற்றும் உத்தர மீமாம்சா இரண்டும் வேதத்தைப் பிரதானமாகக் கருதும் மதங்களாகும்.

பூர்வ மீமாம்சா: வேதத்தின் முதற் பகுதியான கர்ம காண்டத்தைப் பின்பற்றும் மதம் இது. இதை சூத்திர வடிவமாக எழுதி முறைப் படுத்தியவர் ஜைமினி மகரிஷி ஆவார். 12 ஆயிரம் சூத்திரங்களை எழுதியிருக்கிறார்.ஜைமினி ஒரு பூர்வ பக்ஷி அல்ல, அதாவது வியாசர் குறிப்பிடும் பிரம்மஞான தத்துவத்திற்கு(அத்வைத/விஸிஷ்டாத் துவைதம்/துவைதம்) எதிரான கருத்து எதையும் ஜைமினி கூறவில்லை. இவரது சூத்திரங்களுக்கு விளக்க உரை (பாஷ்யம்) எழுதியவர் சபரர் ஆவார்.ஜைமினியின் சூத்திரங்களுக்குத் தனியாக பாஷ்ய நூல்களை எழுதியவர்கள் குமாரிலப் பட்டரும் பிராபாஹரஹர் என இருவர்.பிரபாஹரர் என்பவர் குமரிலப்பட்டரின் சீடர் ஆவார்,இவர்கள் இருவரும் தோற்றுவித்த மதம் தான் பூர்வ மீமாம்சா மதம். வேதாந்தமெல்லாம் பயனில்லை,முக்தியை (சொர்க்கம்,பிரம்மலோகம்) அடைவதற்கு கர்மமே போதும், ஞானம் அவசியமில்லை, ஈசுவரன் என்பவன் அவசியமில்லை,
வேதத்திற்கே அந்த சக்தி உண்டு என்கிறது பூர்வ மீமாம்சா.

உத்தர மீமாம்சா: வேதத்தின் பிற்பகுதியா ஞான காண்டம் அதாவது உபநிடதங்களைக் கொண்டு உருவான மதம்.இதுதான் வேதாந்திகளான வைதிகர்கள் பின்பற்றும் மதம். இதில் அத்வைதம்,வஸிஷ்டாத் துவைதம்,துவைதம் போன்ற பல உட்பிரிவுகள் உண்டு.ஜைமினி மகரிஷி வியாசரின் சீடர் என்றே அறியப்படுகிறார்.
வியாச பகவான் பிரம்ம சூத்திரத்தை எழுதியதிலிருந்து உத்தர மீமாம்சா வானது இன்று வரை வேதாந்த வைதிகர்களால் பின்பற்றப்படுகிறது.

உபநிடதங்களுக்கு அர்த்த நிர்ணயம் செய்த வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கவுரை, அதாவது பாஷ்யம் எழுதியவர்களில் ஆதிசங்கரர், ஶ்ரீராமானுஜர், மாத்துவாச்சாரியார், திருநீலகண்ட சிவாச்சாரியார், வல்லபாச்சாரியார் என பலர் உண்டு. பிரம்ம சூத்திரத்திற்கு, சாரிரக சூத்திரம் மற்றும் வேதாந்த சூத்திரம், பாதராயண(வியாசரின் இன்னொரு பெயர்) சூத்திரம் என்றும் பெயர்கள் உண்டு.
உத்தர மீமாம்சா வானது இன்றைய தேதியில் மூன்று மதங்களாகப் பிரிந்துள்ளது, அது அத்வைதம்,விஸிஷ்டாத் துவைதம், மற்றும் துவைதம் ஆகும்.

என்ன தைரியம் இருந்தால் கடவுளையும் உன்னையும் ஒன்று எனக் குறிப்பிடுவாய் என துவைத மற்றும் விஸிஷ்டாத்துவைதிகள், அத்வைத வாதிகளைக் குற்றம் கூறுவதும், உங்களுக்கு என்ன தைரியம் இருந்தால் நான் வேறு கடவுள் வேறு எனக் கூறுவீர்கள் என அத்வைதிகள் மற்றவர்களைக் குற்றம் கூறுவதும் வழக்கம். இந்தச் சண்டைக்கு இப்போது வரை விடிவு இல்லை என்பதே உண்மை. விஸிஷ்டாத் துவைதத்தையும், துவைதத்தையும் அத்வைதிகள் ஒரு படிநிலையாக ஏற்றுக் கொண்டாலும் அத்வைதமே இறுதி என்கிறார்கள் சங்கரரைப் பின்பற்றும் அத்வைதிகள்.

எல்லாம் சரி,பிரம்ம சூத்திரத்திற்கும் சூத்திரன்,பெண்கள், அவர்ணர்களுக்கும் என்ன தொடர்பு?! அடுத்த பதிவுகளில் பார்ப்போம்…

தினகரன் செல்லையா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here