ஜாஸ் அகமது (மார்க்சிய இலக்கிய கோட்பாட்டாளர் மற்றும் அரசியல் விமர்சகர்) 9-3-2022 அன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81. அவரது இறப்பு இந்தியாவிலுள்ள இடதுசாரிகளுக்கு பேரிழப்பாகும்.

தனது இறுதி மூச்சு வரை உலக அளவில் சோசலிசம் ஒன்றே உழைக்கும் மக்களின் மாற்று என்று அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.
தத்துவம்-சித்தாந்தம்-அரசியல்-பொருளாதாரம்-மக்களின் திரட்சி என்று அனைத்துத் துறைகளிலும் ஆய்வுகளை முன்வைத்தவர். உலக இலக்கியங்களை ஆராய்வதிலும், விவாதிப்பதிலும் மார்க்சிய கோட்பாடுகளை கண்டறிய முனைந்து கொண்டே வாழ்ந்தார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் (அன்றைய பிரிட்டானிய ராஜ்ஜியத்தில்) முசாபர்நகரில் பிறந்தார். பிரிவினையைத் தொடர்ந்து பெற்றோர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர்.
கல்விக்குப் பிறகு தில்லி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சமகால ஆய்வு மையத்தில் வருகைப் பேராசிரியராக இருந்தார். அமெரிக்கா, கனடா பல்கலைக்கழகங்களில் வருகைப் பேராசிரியராக இருந்தார்.

இந்து குழுமத்தில் இருந்து வெளியாகும் செய்தி இதழான “Frontline”-ல் தலையங்க ஆலோசகராகத் தொடர்ந்து பணியாற்றினார். அவ்விதழில் சர்வதேச நிகழ்வுகள் பற்றிய இவரது களஆய்வு கட்டுரைகள் புகழ்பெற்றவை.

தனது இறுதி காலத்தில் UC இர்வின் மனிதநேய பள்ளியில் ஒப்பீட்டு இலக்கிய துறையில் தலைமைப் பேராசிரியராகவும் இருந்தார்.

அறிவுத் துறையில் ஆய்வு என்பது கோட்பாட்டோடு நிற்பதில்லை, மார்க்சிய அடிப்படையில் அது நடைமுறைக்கு வழிகாட்டி. நடைமுறை மூலம் செயலுக்கு, உலகை சோசலிசத்திற்கு மாற்றுவது என்பதில் உறுதியாக நின்று தற்காலத்தில் எதிர்ப்புரட்சி செயல்படுத்தும் வலதுசாரி கும்பல்களுக்கு எதிராக சோசலிச மாற்றை முன்வைத்தும், எதிர்ப்புரட்சி தளங்களுக்கு எதிராக விமர்சனங்களைத் தொடுத்தும் இடதுசாரி அணிகளில் பங்கு வகித்தார்.

சோவியத் அரசியல் நிறுவனங்கள்-வடிவங்களில் ஆய்வு, நிலைப்பாடு, உலகில் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களின் ஊடே ஏகாதிபத்திய எதிர்ப்பில் களஅளவிலும் உறுதியாக குரல் கொடுத்தது; இந்தியாவில் ஆளும் வர்க்கங்கள், முக்கியமாக அவர்களின் பிரதிநிதிகளான காங்கிரஸ், ஆர்எஸ்எஸ்-ன் மாற்றம், வளர்ச்சிகள், சிதைவுகள்; குறிப்பாக ஆர்எஸ்எஸ் “தேசியம்” என்பதை வடிவமைத்துக் கொண்டே வந்தது; காந்தி-நேரு (1962 காலகட்டங்களில்) ஆர்எஸ்எஸ் தேங்கியது பிறகு வாய்ப்புகளை வடிவமைத்து திட்டப்படி அணிகளை உருவாக்கியது; மதவெறியை, கலவரங்களை, இனப்படுகொலைகளை நடத்தியது; தன் அதிகாரத்தை சிறிதுசிறிதாக “அரசின்” மையத்தில் திரளவைத்தது போன்ற அபாயங்களை-நடைமுறைகளை ஓயாது எதிர்த்தார்.

மார்க்சிய படிப்பு, கற்பித்தலில் மாணவர்களிடமும், ஆய்வாளர்களிடமும் விவாதங்களைத் தூண்டி விடுவதற்கு – விட்டுவிடாது தொடர்ந்தவர் ஐஜாஸ். ஆனால் சோவியத்-சீன மக்கள் கம்யூனைத் தொடர்ந்து (சிதைவுகள் நேர்ந்த பிறகு) மக்களாட்சி மாற்றை எந்த வடிவத்தில் தொடர்ச்சியாக முன்வைக்க வேண்டும் என்று விவாதங்களை மார்க்சிய தளத்தில் ஆழப்படுத்தாமல் தவறவிட்டதற்கான காரணங்களை விவாதங்களின் போது கூட வரம்பு கட்டி நின்று கொண்டதை நாம் கவனிக்கிறோம்.

ஐஜாஸ் என்ற கம்யூனிச-சோஷலிச உள்ளத்தை நாம் தொட்டு சந்தித்த காலங்கள் உண்டு. தமிழகத்தில் 2003_ ஆம் ஆண்டில் நடைபெற்ற பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் பேச்சாளராக அவரை அழைக்கச் சென்றபோது கம்யூனிஸ்ட் அணிகளை சமமாக நடத்தியதை, நமது செயல்பாடுகளை (நம் ஏடுகளைப் பக்கம் பக்கமாக விளக்கிச் சொல்லி பார்த்து/கேட்டு) அறிந்து கொள்வதில் இளைஞர் போல துடிப்பும் ஆர்வமும் காட்டியதை நேரில் கண்டிருக்கிறோம்
அவரது எழுத்துக்களை ஆய்ந்து விவாதிப்பது கம்யூனிச அணிகளுக்கு பயன்தரும். இலக்கியம், வரலாறு, விமர்சனம் கோட்பாடு, தத்துவம் ஆகிய துறைகளில் ஊடறுப்பு, குறியீடுகள் பற்றிய இவரது முக்கிய நூலான “கோட்பாடு, வர்க்கங்கள், நாடுகள், இலக்கியங்கள்” (Theory, Classes, Nations, Literature) நூல் ஆழமான விவாதங்களை கோருவதாகும். தத்துவத் துறையில் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் திட்டமிட்ட தாக்குதல்களை அடையாளம் கண்டு எதிர்த்தார். பின்அமைப்பியல், பின் நவீனத்துவ கருத்துகள் எவ்வாறு வர்க்கப் போராட்டத்திற்கு எதிராகக் களம் கண்டது என்ற வரலாற்றை ஐஜாஸ்சிடம் நாம் கற்க வேண்டியது அவசியமாகும்.
எதிர்ப்புரட்சி அலை வீசும் இந்திய அரசியல், சமூக, பண்பாட்டு தளத்தில் கார்ப்பரேட்களையும், காவிகளையும் ஓயாது தாக்கிய செயல்பாட்டாளரான ஐஜாஸ் அகமது அவர்களுக்கு தோழமையுடன் எமது அஞ்சலியை செலுத்துகிறோம்!
தோழமையுடன்,

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here