ர்நாடகா மாநிலத்துக்கு உட்பட்ட தனியார் துறை மற்றும் அரசு வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவுக்கு, 16.07.24 (செவ்வாய்க்கிழமை) கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் துறையில் நிர்வாக வேலைகளில் 50 விழுக்காடும், நிர்வாகமல்லாத பணிகளில் 75 விழுக்காடும், அரசுத்துறையில் சி மற்றும் டி கிரேடு பணிகளில் 100 விழுக்காடும் இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. தொடர்ந்து சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து சட்டமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை நடைமுறைப்படுத்த தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ரூ.10000 முதல் 25000 வரை அபராதமும், தொடர்ந்து தவறிழைத்தால் ஒவ்வொரு நாளுக்கு ரூ.100 அபராதமும் தொடர்ந்து செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டது.

15 ஆண்டுகளுக்கு மேல் கர்நாடகாவில் வசித்து கன்னட மொழி பேச, படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும். நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் கிடைக்கவில்லை எனில், அரசுடன் சேர்ந்து தொழிலாளிக்கு மூன்றாண்டுகளுக்கு பயிற்சி தந்து வேலை தர வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

சரோஜினி மகிசி அறிக்கையை நடைமுறைப்படுத்தக்கோரி கடந்த காலங்களில் பந்த், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தன கர்நாடக இனவெறி அமைப்புகள். (1983-ல் இந்தியாவில் இடஒதுக்கீடு பரிந்துரைக்க குழு அமைக்கப்பட்டு, அதில் இடம் பெற்றவர் சரோஜினி மகிசி) கர்நாடகாவில் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென அவரது அறிக்கை பரிந்துரை செய்திருந்ததால் அதை நடைமுறைப்படுத்த வேண்டுமென போராடினர்.

ஹரியானா மற்றும் ஆந்திராவில் இதே கோரிக்கைக்காக சட்டமியற்றிய போது அதை நீதிமன்றங்கள் தடுத்து நிறுத்தியது. 2020-ம் ஆண்டில் ஹரியானா சட்டமன்றம் 75% உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீடு சட்டமியற்றிய போது அதை 2023 ஹரியானா நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதேபோல ஆந்திராவில் 2020-ம் ஆண்டு அதே 75% உள்ளூர் மக்களுக்கு வேலைகளில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த முயன்ற போது அந்த ஆண்டிலேயே ஆந்திரா நீதிமன்றம், “அரசியலமைப்புக்கு எதிரான சட்டம்” என கூறி நிறுத்தியது.

மசோதா குறித்த தகவல் வெளியான உடன் கர்நாடக முதலாளிகள் கடும் கொதிப்பில் உள்ளனர். ஆர்.கே.மிஸ்ரா, கிரன் மஜும்தார் ஷா, போன்ற முதலாளிகள் எக்ஸ் தளத்தில் கடுமையாக அரசை சாடியுள்ளனர். இன்ஃபோசிஸ்-ன் முன்னாள் சி.எஃப்.ஒ மோகன் தாஸ் பாய், இது ஒரு பாசிச மசோதா என குறிப்பிட்டு கண்டித்துள்ளார். இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன முதலாளிகள் கூட்டமைப்பு, கர்நாடகவின் ஜிடிபி-ல் 25% பங்களிக்கக்கூடிய, இந்தியாவில் சிலிக்கான் வேலி என்று அறியப்படும் பெங்களூரில், சிறந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் தேடி பணியமர்த்த வேண்டியுள்ளது. இம்மசோதா அதற்கெதிராக உள்ளது என கண்டித்துள்ளதோடு, கர்நாடகவில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகும் எனவும் எச்சரித்துள்ளது.

முதலாளிகளின் தரப்பில் கடும் கண்டனம் எழுந்த நிலையில் கர்நாடகா ஐடி துறை அமைச்சர் பிரயங் கார்க்கே “பேசி முடுவெடுத்தபின் தான் இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்படும்” என கூறினார். தொடந்து முதல்வர் சித்தராமையா இடஒதுக்கீடு குறித்தான தனது டிவிட்டை டெலிட் செய்தார். தற்போதைய கர்நாடக அரசின் இந்த மசோதவுக்கு இந்திய முதலாளிகள் கடும் அதிருப்தி மற்றும் கண்டனம் தெரிவித்த நிலையில் வேறு வழியின்றி தற்காலிகமாக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதுமே வேலையின்மை பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில் தன் நாட்டு மக்களின் கோபத்தை தணிக்கவும், குறிப்பிட்ட அளவு பிரச்சினையை சரிசெய்துகொள்ளவும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதை அந்தந்த நாட்டு அரசுகள் செய்கின்றன‌. அந்த பிரச்சினைக்கு அடிப்படையான முதலாளித்துவ பொருளாதார கொள்கையை தூக்கியெறிய முன்வருவதில்லை.

இந்தியாவிலும் வேலையில்லா திண்டாட்டம் கடும் அதிர்வலைகளை, தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் குஜராத்தின் லார்ட்ஸ் பிளாசா ஹோட்டலில் 10 காலிப்பணியிடங்களுக்கு 1800 பேர் விண்ணப்பித்து கடும் நெரிசல் உண்டாகிய செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேற்று 17.07.24 தேதியில் மும்பையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் 2200 காலி பணியிடங்களுக்காக 25000 பேர் திரண்ட இளைஞர் கூட்டம், அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

படிக்க: வேலையின்றி தவிக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள்: இந்தியாவில் உயிர் வாழ்வதே கடினம்!

இந்தியாவில் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச்7% இருந்தது, ஜூனில் 9.2% அதிகரித்துள்ளது. இந்திய பட்டதாரிகள் 30% பேர் வேலையில்லை என்பதும் உலகளவில் இந்தியாவுக்கு முதலிடம் என்பதுமான உண்மையை மறைத்து ஆட்சி நடத்தினாலும், வேலைக்காக வீதியில் அலையும் இளைஞர் கூட்டங்களின் வீடியோக்கள் நாட்டின் வேலையின்மை நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. மேலும் தொழிற்துறை வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வாக நடந்துள்ளது. இது புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

அதிகாரிகள் முதல் தினக்கூலிகள் வரை வடமாநில தொழிலாளிகள் தென் மாநிலங்களுக்கு படையெடுப்பதில் முதலாளிகளுக்கு எவ்வகையிலும் கவலையில்லை. இந்த வேலையில்லா பட்டாளம் தான் எல்லா துறை முதலாளிகளின் அட்சய பாத்திரமாக உள்ளது. இவர்களை குறைந்த கூலிக்கு பணியமர்த்தி ஒட்டச் சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கும் இந்திய, உலக முதலாளிகளுக்கு, இது போன்ற மாநில சட்டங்கள் கடும் தலைவலியாகவே இருக்கிறது. அதனால் தான் முதலாளிகள் சங்கங்கள் கொதிக்கிறது. தேசிய, மொழி, சாதி, மத, இன ரீதியான என எந்த கூட்டிணைவும் முதலாளிகளுக்கு பிரச்சனை இல்லை. மாறாக அதை வரவேற்கவே செய்கிறார்கள். அதுவே அவர்களின் லாபத்துக்கு, சுரண்டலுக்கு தடையாக இருக்குமானால், எந்த எல்லைக்குச் சென்றும் அதை முறியடிக்கிறார்கள். அதை இனவாதம், பாசிசம் என்கிறார்கள்.

படிக்க: சாதி, மதம், இனம் பொறுத்துத் தான் விடுதலை கிடைக்குமா..?

ஆனால், இனவாதம் காவிரி தண்ணீரை தமிழகத்துக்கு தர மறுக்கும்போது அதைக் கண்டித்து அசோசெம், நாஸ்காம், சிஐஐ என எந்த முதலாளிகள் சங்கமும் போர்க்கொடி உயர்த்துவதில்லை. சொல்லப்போனால் காவிரி வறண்டு தமிழக நெற்களஞ்சியம் அழிந்தால் மீத்தேன் உறிஞ்ச வசதியாய் இருக்குமென அதை வரவேற்கிறார்கள். முதலாளித்துவ நலன்களுக்கு ஏற்ப தேவைப்பட்டால் நாடுகளுக்கிடையில், மாநிலங்களுக்கிடையில் கோடுகளை வரைந்து கொள்வதும், தேவையில்லை என்றால் அழித்துக்கொள்வதும் தான் முதலாளித்துவ சமூகத்தின் கோட்பாடு.

வேலையில் உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீடு தற்காலிகமாக மக்களை சமாதானப்படுத்தவே செய்யும். இந்தியாவில் வேலையின்மை பிரச்சினைக்கு அடிப்படை காரணமாக உள்ள மறுகாலனியாக்க கொள்கைகளையும் அதனை தீவிரமாக நடைமுறைப்டுத்தும் கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தையும் தூக்கியெறிவதே முழுமையான தீர்வை நோக்கி முன்னேற்றும்.

  • செல்வா

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here