கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தொழிற்சங்க சட்டத்திற்கு உட்பட்டு, சங்கம் சேரும் உரிமை, கூட்டுப் பேர உரிமை போன்றவற்றின் அடிப்படையில் செயல்பட முயற்சித்து, நிர்வாகத்தால் நசுக்கப்பட்டு நிற்கிறார்கள் சாம்சங் ஆலை தொழிலாளர்கள். இது குறித்து ஏற்கனவே நமது தளத்தில் கட்டுரை வந்துள்ளது.

சாம்சங்  தொழிலாளர்கள் போராட்டம் உணர்த்தும் உண்மை என்ன?

சி ஐ டி யு வில் தம்மை இணைத்துக் கொண்டுள்ள சாம்சங் தொழிலாளர்கள், முறைப்படி முன்கூட்டிய நிர்வாகத்திடம் நோட்டீஸ் கொடுத்து, தமது கோரிக்கையை தெளிவுபடுத்தியும், அது செவிமடுக்கப்படாத சூழலில்தான் தற்போது போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

இதற்கு எதிர்வினையாக, சாம்சங் நிறுவனமானது, தொழிலாளர்களின் மனைவி உள்ளிட்டவர்களிடம் தனது HR களின் மூலம் பேசி, பழம், தீனி உள்ளிட்ட அன்பளிப்புகளை அனுப்பி சரி கட்ட முயற்சிக்கிறது. இதுகுறித்து ஒரு தொழிலாளியின் மனைவி ஹெச் ஆர் அதிகாரியிடம் நியாயமாக கேள்விகளை முன்வைத்து பேசிய ஒலிப்பதிவு வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதாவது இங்கு தொழிலாளர்களாக இருப்பவர்கள் சுதந்திரமானவர்களா? அல்லது, கார்ப்பரேட்டுகளின் நவீன கொத்தடிமைகளா? – என்பதுதான் பிரச்சனை.

தற்போது விவாதிக்கப்படும் சாம்சங் நிறுவனமானது, தென்கொரியாவை சேர்ந்தது. சென்னையை போலவே நொய்டாவிலும் தமது ஆலையை அமைத்துள்ளது. எதற்காக இந்தியாவில் தமது ஆலையை நிறுவி, இங்கிருந்து உற்பத்தி செய்து, விற்பனை மற்றும்  ஏற்றுமதி செய்கிறது சாம்சங் நிறுவனம்? பன்னாட்டு கம்பெனிகளின் விருப்பப்பூர்வ தேர்வாக இந்தியா போன்ற நாடுகள் இருப்பது ஏன்?

மேற்கண்ட கேள்விகளுக்கான பதில் ஒன்றும் விடை கண்டுபிடிக்க முடியாத சிக்கலான கணித சூத்திரம் அல்ல. ஏகாதிபத்தியங்கள் தமது நாட்டில், தமது தொழிலாளர்களுக்கு தரும் சம்பளத்துடன் ஒப்பிட்டால், இந்தியா போன்ற நாடுகளில் தரப்படும் கூலி என்பது மிக மிக மலிவானது. அவர்கள் நாட்டில் உள்ள வேலை நேரத்திற்கும், நமது நாட்டில் அமலில் உள்ள வேலை நேரத்திற்கும் துளியும் பொருந்தவில்லை.

அதாவது, நம் நாட்டில், கடந்த காலங்களில், விவசாய பண்ணைகளில் மாடு, எருமை, குதிரைகளுக்கு தீவனத்தை மட்டும் போட்டுவிட்டு கடுமையாக வேலை வாங்குவோம் அல்லவா? அதை போலத்தான் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி, நமக்கும் நமது குடும்பத்தினருக்கும் கால் வைற்றுக் கஞ்சியை மற்றும் ஊற்றிவிட்டு  கடுமையாக கசக்கி பிழிந்து கொள்ள முழு சுதந்திரம் தரப்பட்டுள்ளது. மோடி அரசின் சட்டத்தொகுப்பு அதையே முன்னிருத்துகிறது.

திமுக அரசு பெருமை கொள்ள முடியுமா?

சமீபத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்று, அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான கூட்டங்களில் கலந்து கொண்டு, தமிழகம் திரும்பி உள்ளார். அவர் அமெரிக்காவில் இருக்கும் போது, இங்கு சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனாலும் முதலீடுகள் குவிகிறது. அதாவது, அந்நிய முதலீடுகள் இந்தியாவை, தமிழகத்தை விருப்பபூர்வமானதாக பார்க்கின்றன. நம்மை சுரண்ட , கொள்ளை அடிக்க, கொழுக்க, நாக்கில் எச்சில் ஊறியபடி வரிசை கட்டி வருகின்றனர் கார்ப்பரேட்டுகள்.

அதாவது, நமக்காக வேலை வாய்ப்புகளை உருவாக்க முதல்வர் சுற்றுப்பயணம் செல்லவில்லை. நம்மை ஒட்டச்சுரண்டி கொழுக்க நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அழைப்பதற்காகவே சுற்றுப்பயணம் சென்றுள்ளார். முதல்வர் ஸ்டாலினை இப்படி விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?

ஒருவேளை இங்குள்ள தொழிலாளர்களின் உரிமையை, அவரது குடும்பத்தினரின் நல்வாழ்வை உயர்வாக கருதி இருந்தால் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்திருப்பார்? தமது மாநிலத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்கள் இங்குள்ள சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சேர்த்திருப்பார். அப்படி இதுவரை எதுவும் நடந்ததாக செய்திகள் வெளிவரவில்லை.சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை முதல்வர் கண்டித்ததாக கூட ஒரு அறிக்கை இதுவரை வரவில்லை.

உரிமையை ரகசியமாகவா அனுபவிக்க முடியும்?

ஆலைகளில் சங்கம் தொடங்கி அதை அங்கீகரிக்கும்படி கடிதம் தந்தால், உடனே அச்சுறுத்தல், பழிவாங்கல், பணியிட மாற்றம், வேலை விட்டு நீக்கம் என்ற அணுகு முறையையே அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் பின்பற்றுகின்றன; இதற்கு சாம்சங்கும் விதிவிலக்கல்ல.

இதிலிருந்து ஒரு ஆலையில் தொழிலாளர்கள் சங்கமாக திரள விரும்பினால், சட்டப்படி ஏழு பேர் சேர்ந்து ஒரு சங்கத்தை பதிவு செய்வது சாத்தியம் என்றாலும் கூட, போதிய அளவு தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாகவே பேசி, நாம் ஒன்று பட்டு இருப்பதன் அவசியத்தை புரிய வைத்து, நிர்வாகத்தின் சுரண்டலை நம்மால் தட்டிக் கேட்க முடியும் என்ற தைரியத்தையும் நம்பிக்கையையும் ஊட்டி வளர்த்து, அதன் பின்னரே பகிரங்கமாக பதிவு செய்து அறிவிக்க முடியும். அதுவரை உறுப்பினர் சேர்ப்பதையோ, சங்கம் தொடங்குவதையே “கள்ளக்காதல்” போன்று ரகசியமாக ஒளிந்து கொண்டு தான் செய்ய வேண்டியதாக நம் நாட்டின் நிலைமை மாற்றப்பட்டுள்ளது. பாரதி திரப்படத்தில்  “ இன்று தேசபக்தியை கூட கள்ளக்காதல் போல ரகசியமாகத்தான் காட்ட முடிகிறது” என்று ஒரு வசனம் வரும். அன்றாவது நாடு அடிமைப்பட்டிருந்தது; இன்று அதைவிட நிலைமை சீர்கெட்டல்லவா உள்ளது.

தொழில்துறையில் மட்டும்தான் இந்த அவலம் என்று இல்லை; கல்வித் துறையிலும் இதுதான் நடக்கிறது. மாணவர்கள் தான் விரும்பிய மாணவர் அமைப்புகளில் உறுப்பினராக சேர்ந்தாலோ, மாணவர் அமைப்புகள் விநியோகிக்கும் பிரசுரம் உள்ளிட்டவற்றை வாங்கி படித்தாலோ, பள்ளி கல்லூரி நிர்வாகங்களால் மிரட்டப்படுகின்றனர்; விடுதி வார்டன்களால் அச்சுறுத்தப்படுகின்றனர். இன்றைய மாணவர்கள் தான் நாளைய கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிலாளர்கள், அல்லது ஊழியர்கள், விதிவிலக்காக அதிகாரிகள். எனவே வர்க்க ஒற்றுமையை முளையிலேயே கிள்ளிவிட துடிக்கிறது கார்ப்பரேட் கும்பல்.

அதாவது, நம் நாட்டில் சங்கம் வைப்பதையோ, அமைப்பாக ஒன்று சேர்வதையோ, ஒரு தீவிர குற்றம் போல திணிக்க பார்க்கின்றனர் கார்ப்பரேட்டுகள்.காவல்துறையின் Q பிரிவு வரை ஏவப்பட்டு, இதற்காக கல்லூரி வாசல்களில் கண்காணித்து திரிகின்றனர். தமது இன்ஃபார்மர்களை வகுப்பறைக்குள்ளும் அனுப்பி வருகின்றனர்.

வெளிப்படையாக நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை, பிரெஞ்சுக்காரர்களை, டச்சுக்காரர்களை, நாம் எதிர்த்து களமாடியுள்ளோம். ஆனால், நாமே வலியச் சென்று “வாருங்கள்! வாருங்கள்! ”  என்று கரம்பிடித்து அழைத்து வந்து, தொழில் தொடங்க வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களிடம், நாம் காலனிய காலத்தை விட மிக மிக கொடிய, நவீன கொத்தடிமைகளாகவே மாற்றப்பட்டு வருகிறோம்.  கொண்டாடப்படும் உற்பத்திப் பெருக்கமும், தொழில்துறையின் வளர்ச்சியும், ஜிடிபி யின் ஏற்றமும் நமக்கானதாக இல்லை.  மொத்தத்தில் ஆட்சியாளர்களும் நாட்டு குடிமக்களான  நம்முடன் இல்லை என்பதையே கண்முன்னே பார்க்கும் சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

கார்ப்பரேட்டுகள் தொழிலாளர்கள் ஒன்று சேர்வதையோ, உரிமைகள் கேட்பதையோ, அமைப்பாக திரள்வதையோ அனுமதிக்க மறுத்தாலும், நசுக்க நினைத்தாலும், அதையும் மீறி செங்கொடி உயர பறக்கவே செய்கிறது. போராட்டக்களம் சூடு பிடிக்கவே செய்கிறது. கண்டன குரல் வலுக்கவே செய்கிறது. இனியும் நாம் எத்தனை நாட்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டிருப்பதாக பிதற்றிக் கொண்டிருக்கப் போகிறோம்? விழித்துப் பார்ப்போம் உழைப்பவர்களுடன் , உரிமையை கேட்பவர்களுடன் கரம் கோர்ப்போம். உழைக்கும் வர்க்க ஒற்றுமையை கட்டியெழுப்பி கார்ப்பரேட்டுகளுக்கும், அவர்களின் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரவர்க்க தாசர்களுக்கும் தக்க பாடம் புகட்டுவோம்.

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here