புனேவில் செயல்படும் எர்னஸ்ட் அண்ட் யங் (Ernst & Young) என்ற பிரிட்டிஷ் கணக்கு தணிக்கை நிறுவனத்தில் பணிபுரிந்த அன்னா செபாஸ்டியன் என்ற 26 வயது பட்டைய கணக்காளர் (CA) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருத்த நிலையில் கடந்த ஜூலை 20 அன்று பணிச்சுமை காரணமாக மரணமடைந்துள்ளார். இதற்குமுன் மும்பையைச் சேர்ந்த Soshals app என்ற ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர் அதீத வேலைப்பளு காரணமாக உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் ஒருநாளைக்கு 18 மணிநேரம் உணவு டெலிவரி வேலைசெய்துவந்த 55 வயதுடைய ஒரு GIG தொழிலாளி தனது வாகனத்திலேயே உயிரிழந்துள்ளார். லக்னோ HDFC வங்கியில் பணிபுரிந்துவந்த சடஃப் பாத்திமா என்ற பெண் ஊழியர் வங்கியில் பணியிலிருந்தபோதே மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார். இவையெல்லாம் “Hustle Culture” என கார்போரேட் முதலாளிகளாலும், முதலாளித்துவ அடிவருடிகளாலும் கொண்டாடப்படும் முதலாளித்துவ கொடுங்கோன்மையின் ஒருசில எடுத்துக்காட்டுகளே.

குறிப்பிட்ட வேலை நேரத்திற்கு மேல் ஓய்வின்றி உழைப்பதை கூடுதல் உழைப்பு, கூடுதல் வருமானம், வேலை உயர்வுக்கான கூடுதல் வாய்ப்பு, கூடுதல் நிறுவன நலன் (இலாபம்) என்று ஒரு பண்பாடாக மாற்றி வருகின்றனர் கார்ப்பரேட்டுகள். இதைத்தான் இன்போசிஸ் கிருஷ்ணமூர்த்தியும், “வாரத்துக்கு 72 மணிநேரம் வேலைசெய்ய தொழிலாளர்கள் தயாராக வேண்டும்” என்று கூறினார். அதைத்தான் கார்ப்பரேட் நிறுவனங்களும் தொழிலாளர்களின் வேலைநேரம் குறித்து எந்த வரம்பும் இருக்கக்கூடாதென அரசுகளை நிர்பந்தித்து தொழிலாளர் சட்டங்களை மாற்றவேண்டும் என்று நெருக்கடி கொடுத்துவருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக சிரமேற்கொண்டு 44 தொழிலாளர் நலச் சட்டங்களைத் தூக்கியெறிந்துள்ளது. பாஜகவை எதிர்க்கும் கட்சிகளும் குறிப்பாக தமிழகத்தில் திமுக-வும், கர்நாடகத்தில் காங்கிரஸும் வேலை நேரத்தை உயர்த்தி சட்ட திருத்தங்களைக் கொண்டுவந்தன. இதில் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாக பின்வாங்கியது திமுக அரசு. ஆனால் கர்நாடகாவில் IT ஊழியர்களின் வேலைநேரத்தை 12 மணிநேரமாக நீடித்து சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த Hustle Culture என்பது ஒன்றும் தொழிலாளர் உலகத்துக்குப் புதியது இல்லை. உரிமைக்கான போராட்டத்தையே தங்களது முதலாளிகளுக்கு இலாபத்தை தரும் கூடுதல் உழைப்பாக கொடுத்து, “போராட்டமென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்” என்று இந்திய தொழிலாளர்களுக்கு வகுப்பு எடுக்கும் முதலாளித்துவ கையாட்களால் புகழப்படும் ஜப்பானில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான். ஓய்வில்லாத பணிச்சுமையால் பல்வேறு மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் தொழிலாளிகள் திடீரென மரணிப்பதும், தற்கொலை செய்துகொள்வதும் அன்றாட நிகழ்வாகிப்போய் இத்தகைய மரணங்களைக் குறிக்கும் கரோஷி (Karoshi) என்ற ஒரு புதிய கலைச்சொல்லே அங்கு உருவாகிவிட்டது. இன்னும் காலங்கள் கடந்து பின்னோக்கிப்போனால் முதலாளித்துவம் உலகில் தோன்றியபோதே இத்தகைய கொடுமைகள் தொடங்கிவிட்டது என்பதற்கு வரலாறு நெடுகிலும் சான்றுகள் உள்ளன.

முதலாளித்துவ வரலாறு நெடுகிலும் முறையான ஓய்வு நேரத்திற்காக தொழிலாளர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்கள் மற்றும் 1917 ரசியப் புரட்சியின் விளைவாக உலக முதலாளித்துவம் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று வேலைநேரத்தை 8 மணிநேரமாக ஆக்கியது. ஆனால் உலகளவில் பெருகிவரும் நிதிமூலதனத்தின் செல்வாக்கும், பாட்டாளி வர்க்கத்தின் பலவீனமான நிலையும் மீண்டும் முதலாளித்துவ கொடுங்கோன்மையை நிறுவி வருகிறது. உழைக்கும் மக்களுக்கு எதிரான பாசிஸ்டுகளை பதவியில் அமர்த்தியும், உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளின் மூலமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்களை பணியவைத்து தங்களின் இலாப வேட்டைக்காக தொழிலாளர்களுக்கான உரிமைகள் ரத்து, வேலைநேரம் நீட்டிப்பு போன்ற சட்ட திருத்தங்களை முன்வைக்கின்றன. இந்தியாவில் நிரந்தரத் தொழிலாளிகள் இல்லாமல் ஆக்கும் NEEM, NAPS, கான்டிராக்ட் போன்ற திட்டங்களைக் கொண்டுவருவதன் நோக்கமும் இதுதான்.

Hustle culture மூலமாக தங்கள் நிறுவனங்களில் ஏற்படும் மரணங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாத கார்போரேட்டுகளின் லட்சணம் அன்னா செபாஸ்டியனின் அம்மா எழுதியுள்ள கடிதம் மூலம் அம்பலமாகியுள்ளது. அன்னாவின் மரணம் குறித்து அந்நிறுவனத்திலிருந்து யாரும் விசாரிக்கக்கூட இல்லையென்றும், அவரது இறுதிநிகழ்வில் நிறுவனத்தின் சார்பில் ஒருவர்கூட வரவில்லையென்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்திருக்கும் அந்நிறுவனத்தின் இந்திய தலைமை செயல்அதிகாரி ராஜிவ் மேமானி, “நிறுவனத்தின் சார்பில் யாரும் வராததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், இனிமேல் இப்படி நடக்காது” என்றும் கூறியுள்ளார்.

இந்த துயரமான அகாலமரணம் குறித்து பேசியுள்ள பார்ப்பன பாசிஸ்ட்டான நிர்மலா “பணிச்சுமையை திறமையாக கையாளத்தெரியாததாலேயே இத்தகைய மரணங்கள் ஏற்படுவதாகவும், தொழிலாளிகள் கடவுளை நம்பவேண்டும், கடவுளைத் தேடவேண்டும், தங்களது ஆத்மசக்தியை வளர்த்துக்கொள்ளவேண்டும், அதுதான் இத்தகைய சூழ்நிலையிலிருந்து காப்பாற்றும். வீடுகளிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பக்தியை சொல்லிக்கொடுக்கவேண்டும் அப்போதுதான் இத்தகைய மனஅழுத்தங்களிலிருந்து அவர்கள் வெளிவரமுடியும்” என்று தனது கார்போரேட் அடிமைத்தனத்தை வழக்கமான பார்ப்பன திமிருடன் கூறியுள்ளார்.

Hustle culture மட்டுமல்ல எல்லாவகையான உழைப்புச்சுரண்டலுக்கும் முடிவுகட்டவேண்டுமென்றால் அனைத்துத் தொழிலாளிகளும் பாட்டாளிவர்க்க உணர்வுகொண்டு முதலாளித்துவத்தை எதிர்த்து போராடுவதுதான் விடுதலைக்கு ஒரேவழி. அதற்கு முதல்படியாக பாட்டாளிவர்க்க விடுதலைக்கு வழிகாட்டும் மார்க்சிய-லெனினியத்தை சரியாக உள்வாங்குவோம் உயர்த்திப்பிடிப்போம்!

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here