ஒவ்வொருமுறை சென்னை வெள்ளத்தில் மிதக்கும்போதும் நகரை மீட்டெடுக்க தமிழகம் முழுவதிலும் இருந்து முன்களப்பணியாளர்களான துப்புரவு, மின்சாரம் உள்ளிட்ட துறையிலுள்ள தொழிலாளர்கள் வரவைக்கப்படுகின்றனர். அப்படி பலரின் சேவையை – உதவியை பெறும் சென்னை மக்கள் நன்றியுணர்வுடன் நடந்து கொள்ள வேண்டாமா?
இன்று மிக்ஜாம் புயலால் சென்னை புரட்டிப் போடப்பட்டுள்ளது. முறிந்து விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. பழுதான மின்மாற்றிகளும், மின்கம்பங்களும் சரிசெய்யப்படுகிறது. தேங்கிவிட்ட தண்ணீரை இறைப்பது, படிந்துள்ள சகதியை அள்ளுவது, கழிவுநீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை எடுப்பது என தலைநகரை மீட்க ஒரு போராட்டமே நடக்கிறது. டிராக்டர், JCP, புல்டோசர், சரக்கு வாகனங்களை இடைவிடாமல் ஓட்டி வருகின்றனர்.
குப்பை அள்ளுபவர்களை குப்பை லாரியிலேயே அமரவைத்து 300-400 கிமீ அழைத்து வந்ததை ஏற்கனவே பார்த்து நம்மில் சிலர் கண்டித்தும் இருக்கிறோம். ஆனால் இப்பொழுதும் அதே கதை தொடர்கிறது. ஒரு சில சாமானியரின் விமர்சனங்களை அதிகார வர்க்கமா கேட்கப்போகிறது?
இப்பொழுதும் கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்தெல்லாம் துப்புறவு பணியளர்கள் வரவைக்கப்பட்டுள்ளனர். இம்முறையும் அடிப்படை வசதிகளை – தேவைகளை கூட முறையாக செய்து தராமல் உழைக்கும் மக்களை இரண்டாம் தரமாக நடத்துவதாக மக்கள் மத்தியில் இருந்து வந்துள்ள சில தகவல்கள் தெரிவிக்கின்றன. விதிவிலக்ககவே நடந்திருந்தாலும் இவை உடனே களையப்பட வேண்டும். தெரிந்தே நீடித்தால் அதற்கு பொறுப்பான அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.
நம் வீட்டை, நம் தெருவை தூய்மைப்படுத்த முகம் சுழிக்காமல் கையால் (கையுறை அணிந்துதான்) கழிவுகளை அள்ளுபவர்கள் பெரும்பாலானோர் ஒப்பந்த தொழிலாளர்களே. இவர்கள் பணி நிரந்தரம் கோறி போராடியதை நம்மில் எத்தனை பேர் ஆதரித்து கருத்து சொன்னோம்? சென்னையில் போராடியவர்களை நேரில் பார்த்து நன்றியுணர்வை காட்டினோம்? சென்னையின் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் ஒருவர்கூட தேராது!
இன்று அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் துப்புறவு பணியாளர்களுடன் சமமாக அமர்ந்து உணவருந்தினார். இது வரவேற்கக் கூடியதுதான். மோடியோ ஒருபடி மேலே போய் கும்பமேளாவில் குப்பை அள்ளியவர்களுக்கு பாதபூஜையையே செய்து விட்டார். எனவே இது மட்டும் போதாது.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் மீண்டும் தங்களது கடும் உழைப்பின் மூலம் நம் தலைநகரை மீட்டு வருகிறார்கள். நாம் என்ன செய்யப்போகிறோம்?
மீனவர்கள் பைபர் படகுடன் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருப்பவர்களை மீட்க தாமாக முன்வந்து உதவுகின்றனர். அவர்கள் போராடும்போது, சிங்கள கடற்படையால் இழுத்து செல்லப்படும்போது நாம் ஏன் பாராமுகத்துடன் கடந்து செல்ல வேண்டும்? இனி வலியப்போய் ஆதரவு தருவோம்.
தெருவை வெள்ளம் சூழ்ந்த நிலையில், இருட்டில் குழந்தைகளுடன் தூங்காமல் தவிப்பவர்களுக்குத்தான் மின்சாரத்தின் அருமை புரியும். மின்சாரம் இல்லாமல் செல்போன் வேலை செய்யவில்லை.
நமக்கு என்னவானது என்று தெரியாமல் அருகிலுள்ள உறவினர்களும் நண்பர்களும் பதைபதைத்து வெள்ளம் வடியாத போதும் இடுப்பளவு நீரில் நேரில் வருகின்றனர்.
வெளிமாவட்ட, மாநிலத்தவர்களுக்கு இது சாத்தியமில்லை. அவர்கள் அனைவரும் உடனடியாக மின்விநியோகம் சீராகவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். தெருக்களில் தண்ணீரில் நனைந்தபடி மின்இணைப்புகளில் ஏற்பட்ட பழுதை சரிபார்ப்பவர்களை பார்க்கிறோம். ”உழைத்ததற்கு பலன் வேண்டும். பணி நிரந்தரம் செய்! மின்வாரியத்தை தனியாருக்கு விற்காதே” என்று இவர்கள் போராடும்போது, நாம் இவர்களுக்கு ஆதரவு தருவதுதானே மனிதத்தன்மை!
இதையும் படியுங்கள்: தூய்மை பணிக்கு நவீன கருவிகள் பயன்படுத்த கோரி மக்கள் அதிகாரம் மனு!
”காசுக்காகத்தானே வேலை செய்கிறார்கள்?” என்று சிலர் கேட்கக்கூடும். நாம் அப்படி கேட்பவர்களுக்கு ஒரு நாள் துப்புரவு பணிக்கான அதே கூலியை தந்து, ”உன் வீட்டு சாக்கடையில் நீயே இறங்கி, கழிவுநீரை இறைத்து, சகதியை அள்ளி சுத்தம் செய்துகொள்” என நிர்பந்திப்போம்.
எளிய மனிதர்களான, கடும் உழைப்பாளிகளான அனைவரும் நமக்காகத்தான் உழைக்கின்றனர் என்பதை சென்னையில் வாழ்கின்ற மக்கள் நன்றியுடன் மனதில் நிறுத்த வேண்டும். இவர்களின் உழைப்பை மட்டும் உறிஞ்சிவிட்டு உரிமைகள் தராமல் நவீன கொத்தடிமைகளாக நடத்தி வஞ்சிக்க அரசோ, அதிகாரிகளோ, ஒப்பந்ததாரர்களோ முயற்சித்தால் நாம் அறச்சீற்றம் கொள்ள வேண்டும். சென்னைவாசிகளிடம் இப்படிப்பட்ட நன்றியுணர்வை எதிர்பார்ப்போம்.
- இளமாறன்