
பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் தாய் நிறுவனமாக உள்ள மெட்டாவின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் புத்தாண்டுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது நிறுவனங்களில் உள்ள 72,400 பணியாளர்களில் செயல் திறன் குறைந்தவர்களை கணக்கெடுத்து வேலை விட்டு துரத்தும் திட்டம் தான் அது.
“செயல் திறன்” குறைதல்!
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் அந்நிறுவனம் கூறும் உழைப்பை – அதாவது மூளை சார்ந்த உழைப்பையோ, அல்லது உடல் சார்ந்த உழைப்பையோ – செலுத்திவிட்டு தமக்கான கூலியை சம்பளமாக பெற்றுக்கொள்வார்.
அப்படி ஒரு ஊழியரின், தொழிலாளியின் உழைப்பால் தமக்கு லாபம் கிடைக்கும் பட்சத்தில் எந்த ஒரு நிறுவனமும் அந்த ஊழியரை, தொழிலாளியை வேலையை விட்டு நீக்குவது சட்ட விரோதம். ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு தான் எந்த சட்டமும் பொருந்தாதே.
அப்ரைசல் எனும் கோடாரி!
கார்ப்பரேட்டுகளின் நியதிப்படி ஒரு நிறுவனம் சொல்லும் வேலை மட்டும் அதன் ஊழியர் செய்தால் போதாது. தனது சக ஊழியரை விட விசுவாசமாக, திறமையாக, விரைவாக வேலையை முடிப்பவராக தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இப்படி தொடர் சுற்றுக்களாக நீடிக்கும் ஓட்டப்பந்தயத்தில், ஒவ்வொரு சுற்றிலும் புதிய இளைஞர்கள் களமிறக்கப்படுகிறார்கள். மொத்தமுள்ள 72,400 பேரில் மூத்த ஊழியர்கள் பல சுற்று ஓடிக் களைத்திருக்கும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் புதியவர்களின் செயல் துடிப்பை மிஞ்ச வேண்டிய நெருக்கடி உருவாக்கப்படுகிறது.
கார்ப்பரேட்டுகள் உருவாக்கியுள்ள இந்த கொடூரமான நிலைமைகளில், எந்த சுற்றில் நாம் சுனங்குகிறோமோ அப்பொழுது ஈவிறக்கம் இல்லாமல் தூக்கி எறியப்பட்டு விடுவோம் என்பதுதான் கார்ப்பரேட்டுகள் உருவாக்கி இருக்கும் அப்ரைசல் நியதி.
இம்முறை தொழிலாளர்களிடையே உருவாக்கும் பிரச்சனை எது?
சக தொழிலாளியை அப்ரைசலைக் கொண்டு போட்டுத் தள்ளுவதால், தொழிலாளர்களுக்குள் போட்டி மனப்பான்மை போய், எதிரிகளாக ஒருவரை ஒருவர் நிறுத்தும் சூழலில், தங்களுக்குள் தனிமைப்பட்டுக் கொள்வதும் நடக்கிறது. எனவே ரோமானிய கிளாடியேட்டர் போல எதிரியை வீழ்த்தியவர்கள் விழுந்தவனை பற்றி சிந்திக்க தயாராக இருப்பதில்லை.
தற்போது புத்தாண்டு பரிசாக தமது வேலையை இழக்க உள்ள 3600 ஊழியர்கள் பற்றி மெட்டாவில் வேலையில் தொடர உள்ள பிற ஊழியர்கள் பாரா முகத்துடன் கடந்து செல்லவே வாய்ப்பு அதிகம். இந்த லட்சணத்தில் ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனத்திலும் மனித வள மேம்பாட்டு துறை என்று இருக்கிறது.
சக்கையாகப் பிழிந்து விட்டு வீசி எறிவது!
மனித வளத்தை மேம்படுத்த கார்ப்பரேட்டுகள் துளி கூட விரும்புவதில்லை. அவர்களின் கண்ணோட்டத்தில் மனிதர்களே தேவையில்லை. எந்திரங்களாக மாற்றப்பட்டு விட்ட உணர்வுகள் மரத்துப் போய்விட்ட அடிமைகள் மட்டுமே போதும்.
அவர்களின் கண்ணோட்டத்தில் தேவைப்படுபவர்கள் எல்லாம் ஊழியர்கள், அதிகாரிகள், நுகர்வோர்கள் மட்டுமே.
ஒருவர் இளமை துடிப்புடன் இருக்கும் போது அவரின் மன உடல் வலிமை அதிகமானதாக இருக்கும். அவனின் செயல்திறன் மிகவும் மேம்பட்டதாகவும் இருக்கும். அதே நேரம் அந்த இளைஞனின், இளைஞியின் குடும்ப தேவைகள் பொருளாதார தேவைகள் ஒப்பீட்டு அளவில் குறைவானதாகவே இருக்கும்.
புதிதாக படித்து முடித்து, இப்படி இளமை துடிப்புடன் ஒரு நிறுவனத்துக்குள் வருபவர்கள் தமது அதிகபட்ச பங்களிப்பை நிர்வாகத்திற்காக தருவது சாத்தியமே. 10 வருடம் கடந்த பின்னர் அதே செயல்திறனை அதாவது படைப்பூக்கம் கொண்ட புதுமையான செயல்திறனை எதிர்பார்த்தால் அது சாத்தியம் இல்லை.
அதே நேரம் செய்கின்ற வேலையில் அனுபவம் அதிகரித்துள்ளதால், அந்த அடிப்படையில் வழக்கமான வேலையை விரைவாக முடிக்கும் ஆற்றலை கொண்டிருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
படிக்க: ♦ ஐடி துறையில் ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு! எதிர்த்துப் போராடாமல் தீர்வில்லை!.
வயதும் அனுபவம் கூடுவதற்கு ஏற்ப புறநிலையில் ஊழியர்களின் குடும்பத் பொறுப்புகளும் , பொருளாதாரத் தேவைகளும் கூடிக் கொண்டு வாழ்க்கை நெருக்கடியும் அதிகமாகி கொண்டிருக்கும். இந்நிலையில் செயல் திறனை காரணம் காட்டி வேலையை விட்டு துரத்தினால், இதன் பின்னர் புதிய நிறுவனத்தில் சேர்ந்து, அங்கு செயல் துடிப்பை நிரூபித்து கொள்ள வாய்ப்போ வயதோ இருக்குமா? நிச்சயமாய் இருக்காது.
L&T யின் விசமத்தனம்!
சமீபத்தில் தொழிலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை எதற்காக விடுப்பு விட வேண்டும்? மனைவியின் முகத்தைப் பார்த்து போரடித்துப் போயிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு வர வேண்டியதுதானே? ஆலோசனை சொல்லியுள்ளார் எல்&டி நிறுவனர். இதை மகேந்திரா நிறுவனர் “எனது மனைவியின் முகத்தைப் பார்த்தால் அவரிடம் நேரம் செலவிட பிடிக்கும் “ என்று கூறி கண்டித்தும் உள்ளார்.
இதிலிருந்து பெறப்படும் முடிவு எது?
கார்ப்பரேட்டுகளுக்கு தேவைப்படும் வரை தான் நாம் இந்த சமூகத்தில் வாழ்ந்து கொள்ளலாம். குடும்பமோ, பொறுப்புகளோ, தனிப்பட்ட வாழ்க்கை கடமைகளோ உழைப்பாளர்களுக்கு இருக்க தேவையில்லை. அப்படி இருந்தாலும் அதற்கு கார்ப்பரேட்டுகளின் கண்ணோட்டத்தில் மதிப்பேதும் இல்லை என்பதுதான் கார்ப்பரேட் நடைமுறையாக உள்ளது.
படிக்க: ♦ பிக் டெக் நிறுவனங்களின் பணி நீக்க ஊழித் தாண்டவம்!
இந்த கண்ணோட்டத்தில் இருந்து தான் நம்மை தேவையில்லை என்று எந்த ஒரு நிமிடத்திலும் முடிவு எடுத்து விரட்ட முடியும். தனது EMI எனும் மாதாந்திர சுலப தவணைகளை கட்ட முடியாமல், தோற்றுப் போனவனின் மனோ நிலைக்கு தள்ளவும் முடியும்.
ஒரு நொடியில் தனது வீடு, கார், குழந்தைகளின் படிப்பு என அனைத்தும் பறிக்கப்பட்டு விடும். அதன்பின் அந்த சமூகத்தில் வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப்படும்.
இன்று கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்களிடையே தற்கொலைகள் அதிகரிப்பதற்கும் மிக முக்கியமான காரணமாக அப்ரைசல் அச்சுறுத்தல் உள்ளது. தற்போது விரட்டப்பட உள்ள 3,600 பேரில் எத்தனை பேர் இந்த நிலைக்குத் தள்ளப்படுவார்களோ தெரியாது. இதிலிருந்து, மெட்டாவின் மார்க் ஜூகர்பெர்க் போன்ற கார்ப்பரேட் முதலைகளை நாம் கொலைகாரர்கள் என்றுதானே பார்க்க முடியும். கார்ப்பரேட் படுகொலைகளை தடுக்க உழைப்பாளிகளாக, சக மனிதர்களாக ஒன்றிணைவோம்.
- இளமாறன்