ரூர் செல்லாண்டிபாளையம் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் சாயம் மற்றும் சலவைப் பட்டறைகள் பல இயங்கி வருகின்றன இந்த சாயப்பட்டறைகளில் பெரும்பாலும் அருந்ததிய மக்களே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

இந்த மக்களின் ஏழ்மை நிலையும், பார்ப்பனியத்தின் படிநிலையில் கீழ்நிலையாக்கப்பட்ட சமூகப் படிநிலையும் இவர்களை ஆபத்து மிகுந்த சாயப்பட்டறை தொழிலுக்குள் இழுத்து விடுகிறது. அருந்ததிய மக்களின் அவல நிலையும், அறியாமையும் சாயப்பட்டறை முதலாளிகளுக்கு பெரும் முதலீடாகிறது. இந்த மக்களை தங்கள் விருப்பப்படி வேலை வாங்கி கசக்கி பிழியலாம் இவர்களுக்கு ஆதரவாக யாரும் பறிந்து பேச வர மாட்டார்கள்.  அப்படியே வந்தாலும் அவர்களை சரிகட்டி விடலாம். இவர்களின் உழைப்பை பொருளாதார ஈடின்றி இலவசமாக சுரண்ட     முடியும் என்கிற நிலைமைகள் சாயப்பட்டறை முதலாளிகளுக்கு அதிக பலன் தருவதால் வேலைக்கு அமர்த்தி சுரண்டி வருகின்றனர். கேட்பாரற்ற நிலையில், இவர்களை கொத்தடிமைகளை போல் நடத்துகின்றனர்.  குறைந்த கூலி அதிக வேலைப்பளு என்ற முதலாளிய சுரண்டல் கோட்பாட்டு வலையில் சிக்கி பெரும் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு சுமார் 40 கட்டு நூலை வேதிக் கரைசல் நீர் தொட்டியில் இருந்து எடுத்து பிழிந்து உலர வைக்கிறார். ஆனால் அவருக்கு கொடுக்கப்படும் கூலியோ மிக மிக அற்பமானது. நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 200 மட்டுமே கூலியாக பெறுகின்றனர்.  இங்கு குறைந்தபட்ச கூலி சட்டம் எல்லாம் வெறும் செல்லாக்காசாகும். இத்தகைய கொடூர சுரண்டல் தொழிலாளர் அதிகாரிகளின் ஒப்புதலோடு தான் நடக்கிறது என தனியே சொல்லத் தேவையில்லை.

இது தவிர சாயத்தொழிலில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் தோல் மற்றும் உடலுருக்கி நோயை உருவாக்கக்கூடிய ஆபத்து நிறைந்தது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சிலர் இறந்தும் போய் உள்ளனர். இந்த பாதுகாப்பற்ற சாயப்பட்டறைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய தொழிற்சாலை ஆய்வாளர்கள் சாயப்பட்டறை முதலாளிகள் வீசும் எலும்புத்துண்டுகளை கவ்விக்கொண்டு திரிவதால் வடமாநிலத் தொழிலாளியோ, உள்ளூரில் இருக்கும் அருந்ததியர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்களோ செத்து மடிவது குறித்து கண்டு கொள்வதில்லை.

இப்படியாக பெரும் துயரில் வாழும் இந்த சாயப்பட்டறை தொழிலாளர்களின் வறுமையை அறிந்த பிரபு என்ற பண மோசடி பேர்வழி இவர்களுக்கு ’முத்ரா’ நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல தொழிலாளர்களிடம் ரூ.5,000 , ரூ.10,000  என பணம் வசூல் செய்து பல மாதங்கள் ஆகியும் கடன் வாங்கித் தராமல் இழுத்தடிப்பு செய்து வெந்த புண்ணில் வெந்நீர் ஊற்றியுள்ளார். ஒருகட்டத்தில் பிரபு மீது சந்தேகம் வர தொழிலாளர்களில் சிலர் கொடுத்த பணத்தை திரும்பத் தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் அவரோ, ”பணம் தர முடியாது. உங்களால் முடிந்ததை பாருங்கள்” என்று அவருக்கே உரிய பாணியில் பேசி பேச்சை முறித்துக் கொண்டார்.

இந்நிலையில் செய்வதறியாது தவித்துக் கிடந்த தொழிலாளர்களை ம.க.இ.க கலைக்குழு தோழர் அரசப்பன் நேரில் சென்று சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முயற்சி எடுத்தார்.  தோழர் அரசன், தோழர் வழக்கறிஞர் ஜெகதீசன் மற்றும் ஆதித்தமிழர் பேரவையின் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் தோழர் MTC சுப்பிரமணி ஆகியோர் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நடவடிக்கை கோரி விண்ணப்பம் செய்தனர். பிறகு சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சென்று நடவடிக்கை எடுக்க கோரினர். காவல் உதவி ஆய்வாளர் நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

குறைந்த கூலியில் சிக்கிக் கொண்டவர்கள் கடன்பெற்று தந்த பணத்தையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்த தொழிலாளர்களுக்கு சற்று ஆறுதலையும் அமைப்பு மற்றும் தோழர்கள் மீதும் நம்பிக்கையை கொடுத்தது.

இந்த கொடுமைக்கு சற்றும் குறைவில்லாமல் கரூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கந்துவட்டி கொள்ளையர்களால் திட்டமிட்டு குறி வைக்கப்பட்டு பொருளாதார மற்றும் இதர பல வகையில் சுரண்டப்படுகின்றனர்.

கரூர் மாநகராட்சி மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து நகரம், மாநகரங்களிலும் தூய்மைப் பணியாளர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் அருந்ததிய மக்களாகவே உள்ளனர். இவர்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக் போன்ற ஆவணங்கள் அனைத்தும் இவர்கள் வசம் பெரும்பாலும் இருப்பதில்லை.  இந்த ஆவணங்கள் அனைத்தையும் கந்துவட்டி கொள்ளையர்களிடம் அடமானம் வைத்து கடன் வாங்கி படும் துயரம் சொல்லி மாளாது.   பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது உட்பட இன்னும் பல வகையில் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து தனி கட்டுரையாக மட்டுமல்ல தனி வெளியீடாகவே கொண்டு வரும் அளவிற்கு அவர்களின் வாழ்வில்  துயரம் மட்டுமே நிரம்பிக் கிடக்கிறது.

அதுபோல் தான்தோன்றி மலை வ.உ.சி நகரைச் சேர்ந்த கதிரேசன் (அருந்ததியர்) என்பவர் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.  இவர் தனது சக ஓட்டுநர் ஆனந்திடம் ரூ. 10,000 கடன் வாங்கி, பிறகு முதலும், வட்டியுமாக சேர்த்து ரூ.20,000 திருப்பி கொடுத்துவிட்டார். ஆனாலும் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வட்டியாக இன்னும் 50,000 தர வேண்டும் என்று கடன் கொடுத்த ஆனந்த் மிரட்டியுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கந்துவட்டி காரனுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:

தான்தோன்றி மலை காவல் நிலையத்தின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்தும் ஆனந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், ஜனநாயக வழியில் ஆதித்தமிழர் பேரவையினர் சுவரொட்டி ஒட்டி அம்பலப்படுத்த முயன்ற பொழுது, ”சுவரொட்டி ஒட்டக்கூடாது” என மிரட்டி காவல்துறையினர் சுவரொட்டிகள் சிலவற்றை பிடுங்கி சென்றனர்.   பிறகு மீதமிருந்த சுவரொட்டிகளை தோழர்கள் ஒட்டிச் சென்றுள்ளனர். காவல்துறையினரின் இந்த ஜனநாயக விரோத செயலை பார்க்கும்போது கந்துவட்டி கொள்ளையர்களோடு காவல்துறையும் கள்ளக் கூட்டு வைத்துள்ளதோ என்ற சந்தேகம் இயல்பாக எழுந்தது. சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பேச்சும் அமைந்திருந்தது.   கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து, ”நீங்கள் சம்மதப்பட்டு தானே பணம் வாங்கினீர்கள்.  கொடுத்தவன் கேட்கத்தான் செய்வான்” என்று கந்து வட்டியின் நீதியைப் பேசி தன்னை யார் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட இசக்கி குடும்பத்தினரை கந்துவட்டிக்காரனின் மிரட்டலும், புகாரளிக்க சென்ற இடத்தில் காவலதிகாரியின் மிரட்டலும் தான் அவர்களை கொன்றது. இவ்வளவுதான் மக்களின் நண்பன் என்று பீற்றிக் கொள்ளும் காவல்துறையின் யோக்கியதை. புகார்தாரரையே குற்றவாளியாக மாற்றும் நடைமுறை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது.

சாயப்பட்டறை முதலாளிகள், கந்துவட்டி கொள்ளையர்கள், காவல்துறையினர் என முத்தரப்பு தாக்குதலுக்கு அப்பாவி அருந்ததிய மக்கள் ஆளாகி வருவது துயரத்திலும் துயரம்.

கரூர் மாவட்டத்தில் அருந்ததிய மக்கள் மீது தொடுக்கப்படும் இந்த தாக்குதல்களை, வெறுமனே பொருளாதார சுரண்டலுக்கானது என சுருக்கி பார்ப்பது தவறு. இதனுள் ஆதிக்க சாதி வன்மமும் அடங்கியுள்ளது என்பதை பார்க்க தவறக் கூடாது

இந்த பொருளாதார மற்றும் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக சாதி கடந்த ஜனநாயக சக்திகளாக, உழைக்கும் மக்களாக ஒரணியில் திரண்டு போராடி அருந்ததிய மக்களுக்கான நீதியை பெறுவதே நமக்கு முன்னால் இருக்கும் ஒரே வழி

  • அகிலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here