ந்திராவில் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இது போன்று விபத்துகள் அங்கு நடப்பது முதல் முறையல்ல.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது கிடையாது. ரசாயன தொழிற்சாலைகளில் நிலைமை மிக மோசம். ஆலை முதலாளிகள் தொழிலாளர்களின் பாதுகாப்பை ஏட்டளவிலேயே பராமரிக்கிறார்கள். உண்மையை கூற வேண்டுமானால் தொழிலாளர்களின் நலனில் முதலாளிகளுக்கு எவ்வித அக்கறையும் இல்லை.

இதற்கு ஆந்திராவில் நிகழும் தொடர் ஆலைப் படுகொலைகளே உதாரணம் எனலாம்.

எந்த சட்டமும் நம்மை கட்டுப்படுத்தாது என்ற முதலாளிகளின் மமதையின் காரணமாக தொழிலாளர்கள் ஆலையில் லாபவெறிக்காக பலியிடப்படுகிறார்கள். அதற்கு ஏதுவாக தொழிலாளர் சட்டங்களையும் ஆளும் பாசிச மோடி அரசு நீர்த்து போக செய்துள்ளது.

தற்போது நிகழ்ந்துள்ள இந்த விபத்து Escientia Advanced science என்ற மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலையில் நடந்துள்ளது. ஏப்ரல் 2019-ல் 200 கோடி முதலீட்டில் உற்பத்தியை தொடங்கிய இந்த நிறுவனம் அச்சுதாபுரத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளது. 40 ஏக்கர் நிலத்தை இந்த நிறுவனத்திற்கு ஆந்திர அரசு அளித்துள்ளது.

இந்த ஆலையில் இரண்டு சிப்ட்டில் 381 தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். விபத்து மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டு மணி அளவில் ரியாக்டர் வெடித்ததால் 17 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்கள். இதனால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அனகாபள்ளி மற்றும் அச்சுதாபுரத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இது முதல் முறையல்ல! 

கடந்த மாதம் ஆந்திர பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலையில் அணு உலை வெடித்ததில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். இரண்டு பேர் காயமடைந்தனர்.

வசந்த் கெமிக்கல்ஸ் என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது. இது ராம்பில்லி தொகுதியின் அச்சுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளது.

இது மட்டுமல்ல இதுபோன்று ஏராளமான விபத்துக்கள் ரசாயன ஆலைகளில் நடக்கின்றன. ஆனால் அதை சரி செய்வதற்கு அரசு எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை என்பதே விபத்துக்கள் தொடர்ந்து நடப்பதில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

கடந்த 2023 ஜூன் ஆந்திராவில் இதே அச்சுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையான சாஹிதி பார்மாவில் அணு உலை வெடித்த விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

அதே ஆண்டு அச்சுதாபுரத்தில் நடந்த மற்றொரு விபத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த 121 பெண் தொழிலாளர்கள் விஷவாயு கசிவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கால்நடை மருந்து ஆய்வகத்திலிருந்து இந்த விஷவாயு கசிந்ததாக கூறப்படுகிறது. அதே இடத்தில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏழு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

ஜூன் 3 அன்று இதே போல் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் விசவாயு கசிவு ஏற்பட்டதில் பாதிக்கப்பட்டு 170 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

படிக்க:

♦ தொடரும் ஆலைச்சாவுகள்  ஆந்திரா ஆலை விபத்து!
♦ இந்திய தொழிலாளர்கள் விற்பனைக்கு!

இவ்வளவு விபத்துக்கள் நிகழ்ந்திருந்தாலும் அரசும் முதலாளிகளும் தொழிலாளர்களை கண்டு கொள்ள தயாராக இல்லை. இழப்பீடு என்று சொற்ப பணத்தை கொடுத்து வாயடைக்கவே பார்க்கிறது. இதனை எத்தனை காலம் பொறுத்துக் கொள்வது.

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் கார்ப்பரேட் கும்பலுக்கு கட்டற்ற அதிகாரம் வழங்குகிறது அரசு. சங்கம் வைக்கவோ போராடவோ உரிமை மறுக்கப்படுகிறது.

முதலாளிகள் கொடுக்கும் அற்ப கூலிக்காக ரத்தம் சிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் உயிரையும் இழக்க வேண்டுமா? இதுவரை நடந்த ஆலை விபத்துகளில் முதலாளிக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டுள்ளது? அதிகபட்சமாக அந்த நிறுவனத்தின் மேலாளரை கைது செய்திருப்பார்கள் அவ்வளவுதான்.

பல்லாயிரம் மக்களை பலி கொண்ட போபால் விஷவாயு விபத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முதலாளி ஆண்டர்சனுக்கு 30 வருடங்கள் கழித்து வழங்கப்பட்ட தண்டனை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் மட்டுமே! நிர்வாகிகளுக்கு 2 வருட சிறைத் தண்டனை. இவ்வளவு தான் இந்திய அரசும் நீதித்துறையும் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறை.

போபால் படுகொலை கண்முன்னே உள்ள உதாரணமாக இருந்தாலும் தொழிலாளர்களை படுகொலை செய்யும் ஆலைகளை அரசு மூட மறுக்கிறது. ஏனென்றால் இது மக்கள் நல அரசு அல்ல. முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்ட அவர்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு. அதனால் மக்கள் போராட்டத்தின் மூலமே நாசகர ஆலைகளுக்கு முடிவு கட்ட முடியும்.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here