டந்த ஜனவரி மாதத்துடன் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் போர் அதன் 100 நாட்களை கடந்தது.  அதன் சில நாட்களுக்குப் பிறகு, உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க 15 இஸ்ரேலிய வணிகர்கள் அடங்கிய ஒரு குழுவை அந்த மாநிலத்திலுள்ள அதிகாரிகள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர். சுமார் 10,000 தொழிலாளர்கள் தங்களது பொருளாதார தேவையை சரிசெய்துகொள்ள குளிர் என்றும் பாராமல் பல மணிநேரம் காத்திருந்து, இஸ்ரேலில் வேலை செய்ய முன்வந்தனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து 42,000 தொழிலாளர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தங்கள் உடன்படிக்கையானது. அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதத்தில் 64 இந்திய தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏப்ரல் 13 அன்று இஸ்ரேல் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டது.  அதில் இந்திய தூதரகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும், “அவர்களின் நடமாட்டங்களை குறைந்தபட்சமாக கட்டுப்படுத்துமாறும்” வலியுறுத்தியது. ஆனால் தற்போது இஸ்ரேலில் உள்ள கிட்டத்தட்ட 18,000 இந்திய தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக அங்கு சென்றுள்ளனர்.  வேலைக்கு சென்ற இடத்தில் வேலை செய்யாமல், வீட்டுக்குள் அடைபட்டு இருப்பது என்பது பலருக்கு சாத்தியமில்லை.

டிசம்பரில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனிப்பட்ட முறையில் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, போர் தொடங்கிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஏற்கெனவே அனுப்பியதைவிட இரண்டு மடங்கிற்கும் அதிகமான தொழிலாளர்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.  அதிக ஊதியங்களால் ஈர்க்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களில் இருந்து இந்திய தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக நாட்டைவிட்டு வெளியேற கையெழுத்திட்டனர். ஆனால், அவர்கள் வரும்போது அவர்கள் உணர்ந்தது என்னவென்றால், வீட்டைவிட்டு வெளியேறும்போது இந்திய அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்ட பாதுகாப்பு என்பது கொஞ்சமும் இல்லை என்பதுதான்.

இந்தியத் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளத்திற்காக தனது குடும்பத்தைவிட்டு, பல நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய தொழிலாளர்கள் மோசமான பணிச் சூழலை எதிர்கொள்ளும் நாடு வெறும் இஸ்ரேல் மட்டுமல்ல; சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளிலும் அடிமைகளாக நமது தொழிலாளர்கள் சுரண்டப்படுவது நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகிறது. செர்பியாவில் இந்திய தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டிக்கொண்டு ஊதியத்தை வழங்காத அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தாலியில், பஞ்சாபை சேர்ந்த ஒரு இளம் தொழிலாளி வேலைவாய்ப்பு ஏஜென்சி மற்றும் தான் வேலை செய்த முதலாளிகளிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். இதேபோன்ற கதைகளை ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலிலும் நாம் காணலாம்.  இதுபோல பல நாடுகளுக்கு அனுப்பப்படும் இந்திய தொழிலாளர்கள், ஆபத்தான வேலை நிலைமைகளுக்கு மத்தியில் தங்களுக்கான சம்பளத்தை சிறிதளவு மட்டுமே பெறுகின்றனர்.  இன்னும் ஒருசில இடங்களில் வேலையை வாங்கிக்கொண்டு சம்பளமே கொடுப்பதில்லை என்பதே உண்மையாக உள்ளது.

போர் மற்றும் மோதல் நடைபெறும் நாடுகளில் புலம்பெயர்ந்த இந்திய தொழிலாளர்களை பாதுகாக்க இந்தியா போதிய ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை.  குறிப்பாக 2014 ஆண்டில், நடந்த ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்ட வேண்டியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிட 40 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் ஈராக்கில் கடத்தப்பட்டனர். ஆனால், இவர்கள் ரஷ்யாவில் வேலை செய்ய அனுப்பப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்குமுன் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், உக்ரைனில் போரிட 35 இந்தியர்களுக்கு பயிற்சி கொடுத்து அனுப்பப்பட்டதாக இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு, ஆர்மீனியாவில், நாகோர்னோ-கராபாக் மோதலின் போது, அஜர்பைஜான் எல்லைக்கு அருகே ஷெல் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் காயமடைந்தனர்.

இஸ்ரேலைப் பொறுத்த வரையில், நெதன்யாகு மற்றும் மோடிக்கு இடையே கடந்த ஆண்டு தொடங்கிய இருதரப்பு உடன்படிக்கைகளின்படி இந்திய தொழிலாளர்கள் அனுப்பப்படுகின்றனர்.  ஆனால், உண்மையில் இஸ்ரேலின் விவசாய மற்றும் கட்டுமான வேலைகளில் நீண்டகாலமாக பாலஸ்தீனிய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  போர் தொடங்கியதில் இருந்து பாலஸ்தீனிய தொழிலாளர்களுக்கு பதிலாக இந்திய தொழிலாளர்களை அந்த வேலைகளில் இட்டுநிரப்ப இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல்களுக்குப் பின்னர், மேற்குக் கரையில் இருந்து சுமார் 1,50,000 பாலஸ்தீனிய தொழிலாளர்களும், காசா பகுதியைச் சேர்ந்த மற்றொரு 18,500 பாலஸ்தீனிய தொழிலாளர்களும் ஒரே இரவில் இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி ஹெர்சி ஹலேவி ஆகியோர் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை முடக்கியதால் அங்கு வேலை செய்யும் அனுமதியை பாலஸ்தீன தொழிலாளர்கள் இழந்துள்ளனர்.

மோதல் உள்ள நாடுகளில், குறிப்பாக வெளிநாடுகளில் பணிபுரியும் போது, இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கோட்பாட்டளவில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய ‘இ-மைக்ரேட்’ அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். இஸ்ரேல் நாடு அந்த ‘இ-மைக்ரேட்’ திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அதுபோலவே ரஷ்யா மற்றும் ஆர்மீனியா நாடுகளும் சேர்க்கப்படவில்லை.  மோதல் ஏற்படும் அந்த நாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்களை ஆபத்தில் விட்டு வேடிக்கை பார்க்கிறது இந்திய அரசு.

அதுமட்டுமன்றி இஸ்ரேலில் உள்ள இந்தியத் தொழிலாளர்கள் ஓராண்டிற்கு குறையாமல் வேலை செய்ய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்ற உண்மை இன்னும் ஆபத்தானதாக உள்ளது. அதில், அவர்களுடைய வேலையும் அதிகபட்சமாக 63 மாதங்கள் (5.25 ஆண்டுகள்) என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் மக்கள்தொகை, குடிவரவு மற்றும் எல்லை ஆணையம் “எந்தவொரு இந்திய தொழிலாளியும் மோதல் மண்டலத்தில் அல்லது அதற்கு அருகில் வைக்கப்பட மாட்டார்கள் என்று தொடர்ந்து உறுதியளித்துள்ளது” என்று பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரம் ஒன்று ”தி டைம்ஸ் ஆப் இந்தியா” விடம் தெரிவித்துள்ளது. ஆனால் மார்ச் 5ம் தேதி பாட் நிபின் மேக்ஸ்வெல் என்ற 31 வயது தொழிலாளி லெபனான் எல்லைக்கு அருகே ஒரு பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஹெஸ்பொல்லா ஏவுகணைத் தாக்குதலில் அக்கணமே கொல்லப்பட்டார். கடந்த ஜனவரியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுடன் மேக்ஸ்வெல் இஸ்ரேலுக்கு வந்திருந்தார்.  இப்போது அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் அவர்களின் ஐந்து வயது மகளை விட்டுச் சென்றுள்ளார். அதே பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த மேலும் இரண்டு இந்தியர்களும் பலத்த காயமடைந்தனர். மேலும் ஐந்து பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

அதிக சம்பளம் வழங்கப்படுவதால் போர் நிலை இருந்தபோதிலும் இந்திய தொழிலாளர்கள் இஸ்ரேல் மற்றும் பிற போர் நடக்கின்ற நாடுகளுக்கு செல்ல ஆர்வமாக உள்ளனர். இஸ்ரேலில் உள்ள ஒரு தொழிலாளி வீட்டில் வேலை கிடைத்தால், இந்தியாவில் அவர் வீட்டில் சம்பாதிப்பதை விட 10 மடங்கு அதிகமாக சம்பாதிக்க முடியும். இஸ்ரேலில் பணிபுரியும் இந்தியர்களின் சம்பளம் சராசரியாக ரூ.1.5 லட்சமாக உள்ளது. பல தொழிலாளர்கள் இந்த பாதுகாப்பற்ற ஒப்பந்த வேலைக்காக வேலைவாய்ப்பு தரகர்களுக்கு தங்கள் குடும்பங்களின் முழு சேமிப்பையும் செலவழிப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் அந்த நாட்டிற்கு சென்ற பிறகுதான், சில தொழிலாளர்கள் தங்கள் வேலைக்காக காண்டிராக்ட் முதலாளிகளுக்கு சிறிய ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுவதை உணர்கிறார்கள். வடக்கு இஸ்ரேலில் ஒரு விவசாய தொழிலாளி ”ஃபாரின் பாலிசிக்கு” கூறுகையில், வார இறுதி நாட்கள் உட்பட 12 மணி நேர ஷிப்டுகளில் கடுமையாக வேலை செய்ததாகவும், சட்டப்பூர்வமாக வழங்கபடும் குறைந்தபட்ச ஊதியத்தை விட மிகக் குறைவாகவே அவருக்கு ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் அவர் கூறினார்.  மாத இறுதியில் தனக்கு சம்பளமே கொடுப்பதில்லை என்றும், அதற்கு பதிலாக, அவரது சம்பளம் வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அனுப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: 

உள்வரும் ஏவுகணைகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகின்றன; கடந்த ஆண்டில் கொல்லப்பட்ட கிட்டத்தட்ட அரை டஜன் தொழிலாளர்களில் மேக்ஸ்வெல்லும் ஒருவர்.  ஒரு ஏவுகணைத் தாக்குதல் சம்பவத்தில் என்ன செய்வது என்பது குறித்து அவர்களிடம் போதுமான அளவு தயாரிப்பு இல்லாததாக தெரிவித்திருந்தனர்.  அதுமட்டுமின்றி, ”பெரும் மன அழுத்தத்தின் கீழ்தான் நாங்கள் தொடர்ந்து வேலை செய்து வருகிறோம்” என பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய இலாப நோக்கற்ற தொழிலாளர் அமைப்பான Kav LaOved நடத்திய விசாரணையில், ஏவுகணை தாக்குதல்களை எச்சரிக்கும் அவசரகால செயலிகளை இஸ்ரேல் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.  ஆனால், இந்த செயலியை இஸ்ரேல் அல்லாத மற்ற நாட்டு மக்கள் தங்கள் தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்ய முடியாது. இருப்பினும், அதனை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டியதில்லை. ஏனெனில், பெரும்பாலும் அருகிலுள்ள பகுதிகளில் ஏவுகணைகள் தாக்கப்பட்ட பின்னரே எச்சரிக்கை மணி ஒலிக்கும்.

இந்தியா தனது விலைமதிப்பற்ற மனித வளத்தை – தனது மக்களை – உலகெங்கிலும் வேலை செய்ய அனுப்ப ஆர்வமாக இருக்கலாம். ஆனால் அந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு குறைந்தபட்சம் பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கொண்ட அதிகமான நாடுகளைச் சேர்க்க இ-மைக்ரேட் முறையை விரிவுபடுத்துவது ஒரு தொடக்கமாக இருந்தாலும், இதன்மூலம் குடும்ப சேமிப்பிலிருந்து வேலைக்கு பணம் செலுத்தும் தொழிலாளர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் வேலைவாய்ப்பு முகமைகளுக்கு முடிவுக்கட்ட வழிவகுக்கும் என நம்புகிறோம். ஆனால் இப்போதைக்கு, இந்தியத் தொழிலாளர்கள் மேற்குறிபிட்ட நாடுகளின் போரில் செலவழிக்கத்தக்க உயிரிழப்புகளாக (அடிமைகளாக) அனுப்பப்படுகிறார்கள் – நடத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை!

நன்றி: கரோல் ஷாஃபர் (தி டெலிகிராஃப்)

தமிழில்: சிறகினி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here