விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே கீழ உப்பிலி குண்டு கிராமத்தில் சேது என்பவருக்கு சொந்தமாக ஆர்.எஸ்.ஆர் புளூ மெட்டல்ஸ் (RSR BLUE METAL) என்ற பெயரில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. சட்ட விதிகள் எதனையும் பின்பற்றாமல் நடத்தப்படும் இந்த கல்குவாரியில் இரவு – பகலாக தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 01.05.2024 –ல் அன்று மேற்குறிப்பிட்டுள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பாறைகளை உடைக்க பயன்படுத்தும் வெடிபொருட்களை வைக்கும் குடோனும் இக்கல்குவாரியில் உள்ளது. லாரியிலிருந்து வெடிபொருட்களை குடோனுக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது வெடிமருந்துகள் வெடித்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 5 கிலோ மீட்டர் தொலைவு வரை அதன் அதிர்வு இருந்ததாக மக்கள் அச்சத்தோடு கூறியுள்ளனர். சுற்றியுள்ள கிராமத்தின் வீடுகள் அருகாமை குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துள்ளது.
இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நடப்பது இது முதல் முறையல்ல என்றும், ஏதேனும் விபத்து நடந்தால் குவாரி மூடப்படுவதும்,சில நாட்களிலேயே திறப்பது என்பதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது என்றும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கொத்தடிமை நிலையில் தொழிலாளர்கள் :
கொத்தடிமை முறையா? எந்த காலத்திலங்க இருக்கீங்க என்பது பெரும்பான்மையானோரின் கேள்வி. தினப்பத்திரிக்கையில் அவ்வாறு வரும் செய்திகளை கூட எளிதில் கடந்து செல்லும் நிலை தான் உள்ளது. கல்குவாரி – செங்கல் சூளை – சுரங்கத் தொழில் – சாயப்பட்டறை – தோல் தொழில் – வட மாநில தொழிலாளிகள் செய்யும் அநேக வேலைகள், என அனைத்தும் கொத்தடிமைத்தனமான வேலை முறைதான். இவர்களுக்கு என எவ்வித உயிர்ப் பாதுகாப்போ, வேலைப்பாதுகாப்போ, சமூக பாதுகாப்போ இல்லை. வறுமையின் காரணமாக கிடைக்க கூடிய அத்துக்கூலிக்கு பணி செய்யும் சூழல் தான் இத்தகையோரது அன்றாட வாழ்க்கை முறை.
முதலாளிகளின் லாப வெறிக்காக `நரபலி`!
கல்குவாரி நடத்த அரசு கொடுத்திருக்கும் எந்த விதிமுறையையும் முதலாளிகள் பின்பற்றுவதில்லை. 30 அடி தோண்ட வேண்டிய இடத்தில் 400, 500 அடி என தோண்டுவதும், எல்லையை மீறி பாறைகளை உடைத்து கிரானைட் கல் தயாரிக்க எடுப்பதும், எம் சாண்ட் மணலாக எடுப்பதும் என அன்றாடம் நடக்கும் வேலைமுறை பற்றி அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தாலும் முதலாளிகளிடம் பணம் பெற்றுவிட்டு எதனையும் கண்டுகொள்வதில்லை. லோக்கல் அரசியல்வாதிகள் குறிப்பாக ஆளும் அரசில் இருக்க கூடிய அல்லது அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பணக்காரர்களுக்கே டெண்டர் வழங்கப்படுகிறது. இந்த பணக்காரர்கள் அரசியல் கட்சிக்கு நிதி உதவி செய்யக்கூடிய நபராக இருப்பதனால் எந்த பாதுகாப்பு விதிமுறைகளையும் மயிரளவு கூட மதிப்பதில்லை. அரசும் இவர்களை கண்டும் காணாமல் விட்டு விடுகிறது.
ஏதோ ஒரு வேலை, குறைந்த சம்பளம் இருந்தாலும் பரவாயில்லை; பிழைத்தாக வேண்டுமே என்ற காரணத்திற்காக உயிரை பணயம் வைக்கும் வேலைகளில் ஈடுபட துணிகின்றனர் தொழிலாளர்கள். முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக எவ்வித பயிற்சியும் அற்ற தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது என்பது வாடிக்கையாக நடக்கிறது.
வெடிமருந்துகளை கையாள போதிய பயிற்சிகள் கல்குவாரி பணியில் ஈடுபடுவருக்கு வழங்கப்படுகிறதா? போதிய பயிற்சிக்கு பிறகு இத்தகைய வேலைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனரா? என்றால் இல்லவே இல்லை. கல்குவாரி பணிகளில் ஈடுபடுபவர்களை குவாரி இருக்கும் இடத்தில் சின்ன சின்ன கொட்டாய்களில் தங்க வைத்து, நினைத்த நேரத்தில் வேலை வாங்குவதும் நடக்கிறது. இப்படி பணக்காரர்களுக்காகத்தான் தொழிலாளர்களின் உழைப்பு ஒட்டச் சுரண்டப்படுவதோடு, உயிரும் காவு வாங்கப்படுகிறது.
இதனை அனுமதிக்க முடியுமா ?
யாரோ ஒரு சில முதலாளிகளுக்காக தொழிலாளர்களாகிய நாம் ஏன் நம் உயிரை, உடல் உறுப்புகளை இழக்க வேண்டும்? இறந்து போன தொழிலாளர்களுக்கு இழப்பீடு என பெயரளவுக்கு அறிவித்துவிட்டு பத்தோடு பதினொன்றாக அரசும், அதிகாரிகளும், முதலாளிகளும் இதனை கடந்து செல்வர். நாம் அவ்வாறு கடந்து செல்ல முடியுமா?
சட்ட, பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல், தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சியினை வழங்காமல் குறைந்த கூலிக்கு அதிக லாபம் என தனது லாபத்திற்காக செயல்படும் இத்தகைய முதலாளிகளின் சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, உயிரிழந்தவர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் மக்கள்விரோத அரசு கட்டமைப்பு ஒரு போதும் இதனைச் செய்யாது. அரசும், அரசு அதிகாரிகளும் முதலாளிகளின் கால் மயிர் கீழே விழுவதைக் கூட விரும்பமாட்டார்கள். அதனால் தான் இதனை முதலாளித்துவ அரசு என்கிறோம்.
இதையும் படியுங்கள்:
என்ன தீர்வு ?
உலகம் முழுவதையும் தன் பிடிக்குள் வைத்துக்கொண்டு இயற்கை வளங்களை அழித்து, மண், மலை, காடு என அனைத்தையும் தன்னுடைய லாபவெறிக்காக இடைவிடாமல் விழுங்கும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது ஆளும் பாசிச பாஜக அரசு. சட்டங்களும் இத்தகைய கார்ப்பரேட் முதலாளிகளுக்காக மாற்றியமைக்கப்படுகிறது. இதில் மாநிலத்தில் ஆளும் திமுக அரசும் மேல்மா சிப்காட், பரந்தூர் விமான நிலையம் போன்ற திட்டங்களில் இணங்கியே செல்கிறது.
பாதிக்கப்படும் மக்கள் இது முதலாளிகளுக்காக உழைக்கும் அரசு கட்டமைப்பு என்பதையும், முதலாளிகளின் நலன்களுக்காக அவர்களை காப்பாற்றுவதற்காக எப்படிப்பட்ட கேடு கெட்ட, கீழ்த்தரமான, கொலைபாதக செயலையும் செய்யும் என்று புரிந்து கொள்வது அவசியம்.
நமக்கான பாதுகாப்பை போராடுவதன் மூலமே பெற முடியும் என்ற அடிப்படையில் அமைப்பாக, வர்க்கமாக ஒன்று திரள்வது அவசியம். முதலாளித்துவத்தை வீழ்த்த, அப்படி திரண்டு போராடித்தான் நமக்கான அரசை கட்டியெழுப்ப முடியும்.
- சந்தோஷ்