சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய திட திரவ கழிவுகளை உருவாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தற்போதைய மிக் ஜாம் புயல் வெள்ளம் பேருதவி செய்துள்ளது.

குறிப்பாக கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப் பகுதியான எண்ணூரில், ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் மழையால் வந்த புது வெள்ளம் மட்டும் சீறிப்பாயவில்லை. அந்த வெள்ள நீரோடு நீராக கழிவுகள் கலந்து பாய்ந்துள்ளது.

தற்போதைய எண்ணூர் துறைமுகத்தை ஒட்டி உள்ள முகத்துவாரப் பகுதியின் நிலைமையானது மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நிறம் மாறி, மணம் மாறி மீனவர்களை அச்சுறுத்துகிறது.

ஆறுகளில் வரும் வெள்ள நீர் கடலில் கலக்கும் இடத்தில், அதாவது ஆறுகளின் முகத்துவாரப் பகுதியில்தான் கடலில் உள்ள மீன்கள்  முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரமாகவும், கடல் வளத்தை பேணி பாதுகாப்பதாகவும் இந்த முகத்துவாரங்கள் இருக்கின்றன. ஆனால்,  தொழிற்பேட்டைகளை, கார்ப்பரேட் நிறுவனங்களை, சிறப்பு பொருளாதார மண்டலங்களை கடந்து வரும் ஆற்று நீரானது கழிவுநீராகவே மாற்றப்பட்டு வருகிறது. திருவேற்காட்டை தொட்ட பின்னர்தான் கூவத்தின் தன்மையே மாற்றப்படுகிறது.

தற்போது புயல் ஓய்ந்து வெள்ளம் வடிவதை தொடர்ந்து சென்னைவாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விட முடியும். ஆனால் மீனவர்களின் துயரம் அப்படிப்பட்டதல்ல. எண்ணெய் நிறுவனங்களின் கழிவுகள் ஆற்றிலும் கடலிலும் மிதந்து கொண்டிருக்கின்றன. இந்த கழிவுனூடாக மீன் பிடிப்பது சாத்தியமற்ற ஒன்று. மீறிப் பிடித்தாலும் அந்த மீனும் எண்ணெய் நாற்றத்துடனே இருக்கும் என்பதால் மக்கள் விரும்பி வாங்க மாட்டார்கள். சமைத்து உண்ண முடியாது. எனவே கரையில் வாழக்கூடிய மக்களுக்கு வெள்ளத்தால் பாதிப்பு. கடலில் தொழில் செய்து பிழைக்க கூடிய மீனவர்களுக்கு தற்போது வந்துள்ள வெள்ளத்தில் கழிவுகள் கலக்கப்பட்டதால்தான் பாதிப்பு.

ஒரு நிறுவனத்தை தொடங்கும்போதே, அதற்காக விண்ணப்பிக்கும் போது அது எத்தகைய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது? அதன் துணை விளைவாக எத்தகைய கழிவுகள் உருவாகும்? அந்த கழிவுகளை எப்படி அந்த நிறுவனம் கையாள போகிறது? என்பதை அரசு கண்டு கொள்வதே இல்லை. இவற்றை கண்டுபிடிக்கவோ, கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ பெரிய சிரமங்கள் எதுவும் இல்லை. ஆனால் எந்த கார்ப்பரேட்டுகளையும் சட்டத்திற்கு உட்பட்டு, விதிமுறைகளைப் பின்பற்றி, நேர்மையாக தொழில் செய்ய நிர்பந்திக்க அரசு தயாராக இல்லை. அதன் விளைவைத்தான் தற்போது கழிமுகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

வட சென்னையில் உள்ள கொசஸ்தலை  ஆறு மட்டுமல்ல;கூவம், அடையாறு உள்ளிட்ட பிற ஆறுகளும் கழிவுகள் கொட்டப்படுவதில் இருந்து தப்பவில்லை. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியது ஆலை கழிவு மட்டும்தான் என்பது இல்லை. மருத்துவமனை கழிவு, உணவகங்களின் கழிவு, குடியிருப்புகளின் கழிவு என அனைத்து கழிவுகளும் ஆற்றில் தான் விடப்படுகின்றன.

அதன் விளைவாக ஆறுகள் கடலில் கலக்கும் எந்த இடத்திலும் மூக்கை பொத்திக்கொண்டு தான் நிற்க வேண்டியுள்ளது. இதை நேப்பியர் பாலத்தின் மேல் செல்பவர்கள் தினமும் அனுபவிக்கின்றனர்..

ஒரு பைசா செலவு இல்லாமல் பல மாத கழிவுகளின் இருப்பை ஒரு நாளில் காலி செய்ததன் மூலம் கார்ப்பரேட்டுகள் இந்த மழை வெள்ளத்தை கொண்டாடுவார்கள் தான். இப்படி லாப வெறிக்காக இயற்கையின் சுற்றுச்சூழலையும் அளிக்கும் கொடுஞ்செயல் நடப்பது வட மாவட்டங்களில் தான் என்று இல்லை. காவிரியில் வெள்ளம் வரும்போது ஈரோடு பவானி பகுதியில் உள்ள சாயக்கழிவுகள், திருப்பூரில் உள்ள சாயக்கழிவுகள் உள்ளிட்ட அனைத்தும் தாராளமாக திறந்து விடப்படுவதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

இதையும் படியுங்கள்: 

மீனவர்கள் துயர் துடைக்க துடிக்கும் மங்குனி அமைச்சர்!

மெரினா அழகாகிறது! மீனவர்கள் வாழ்வு நாசமாகிறது!

பாலாற்றில் வெள்ளம் வந்தால் வேலூரில் தோல் தொழிற்சாலை கழிவுகள் இப்படித்தான் ஆறுகளில் திறந்து விடப்படுகிறது.

எனவே ஆறுகள் என்பது விவசாயத்திற்கான நீரை கொண்டு செல்வதாகவும், நாட்டு மக்களின் குடிநீருக்காக ஏரி குளங்களில் நிரப்பப்படுவதற்காகவும் ஓடுவதாகவும் நாம் மட்டும் தான் கருதுகிறோம். ஆனால் கார்ப்பரேட்டுகளை பொறுத்தவரை தமது ஆலைக் கழிவுகளை சுமந்து சென்று கடலில் சேர்ப்பதற்காக இருப்பதாகவே அணுகி வருகிறார்கள்.

கார்ப்பரேட் நல அரசுகள் – அரசு அதிகாரிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை நம்மால் நமது ஆறுகளையோ, கழிமுகங்களையோ, கடல் வளத்தையோ பாதுகாக்கவும் பராமரிக்கவும் நிச்சயமாக முடியாது.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here