ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)

15 ஜனவரி 2022

 உழவர்களுக்கு அளித்த உறுதிமொழியிலிருந்து பின்வாங்கும் அரசாங்கத்திற்கு எதிராக, நாடு தழுவிய அளவில் ஜனவரி 31ஆம் நாளை “துரோக தினம்” ஆக கடைப்பிடிக்க சம்யுக்த கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது !

லக்கிம்பூர் கேரி படுகொலை வழக்கில் வெட்கமில்லாமலும், உணர்ச்சியில்லாமலும் இருக்கும் பாஜகவுக்கு எதிராக, சம்யுக்தா கிசான் மோர்ச்சா நிரந்தர போராட்டக் களத்தை (மோர்ச்சாவை) அமைக்கும்; மிஷன் உத்தரபிரதேசம் தொடரும் !

பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆதரவு அளிக்கும் !

சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் பெயர் தேர்தலில் பயன்படுத்தப்பட மாட்டாது; தேர்தலில் பங்கேற்கும் விவசாயிகள் அமைப்புகள் மற்றும் தலைவர்கள் சம்யுக்த கிசான் மோர்ச்சாவில் இடம் பெறமாட்டார்கள் !

இன்று டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் நடைபெற்ற சம்யுக்தா கிசான் மோர்ச்சா கூட்டத்தில், எஸ்.கே.எம்.இன் நிகழ்ச்சி நிரல் மற்றும் எதிர்கால வழிமுறைகள் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. டிசம்பர் 9ஆம் தேதியிட்ட கடிதத்தின் அடிப்படையில்தான் மோர்ச்சாக்களை வாபஸ் பெற எஸ்.கே.எம்.முடிவு செய்தது. ஆனால் அதில் உள்ள எந்தவொரு வாக்குறுதியையும் இந்திய அரசு நிறைவேற்றவில்லை என்ற தனது வருத்தத்தையும், கோபத்தையும் எஸ்.கே.எம். வெளிப்படுத்தியுள்ளது. போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெறுவதாக உறுதியளித்த ஒன்றிய அரசு மற்றும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சல் அரசுகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரியானா அரசு சில காகித வேலைகளை மட்டுமே செய்துள்ளது. மற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசிடம் இருந்து கடிதம் கூட வரவில்லை. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரபிரதேச அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இழப்பீடு தொகை மற்றும் இழப்பீட்டின் தன்மை குறித்து அரியானா அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை பிரச்சினையில் அரசாங்கம், குழு அமைப்பதைக் குறித்தோ அல்லது குழுவின் தன்மை மற்றும் அதன் அதிகாரம் குறித்தோ எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட இந்தத் துரோகத்தைக் கண்டித்து, ஜனவரி 31ஆம் தேதி, “துரோக தினம்” ஆக நாடு முழுவதும், கடைப்பிடிக்கப்படும் என்றும், மாவட்ட, பிளாக் அளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும், எஸ்.கே.எம்., முடிவு செய்துள்ளது.

லக்கிம்பூர் கேரி படுகொலையில் அரசு மற்றும் பாரதிய ஜனதாவின் வெட்கக்கேடான அணுகுமுறையிலிருந்து, அது பொது வாழ்வில் கண்ணியத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்பது தெளிவாகிறது. சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையில், சதி இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டாலும், இந்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான அஜய் மிஸ்ரா டேனி, ஒன்றிய அமைச்சரவையில் நீடிப்பது, உழவர்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலிருக்கிறது. மறுபுறம், இந்த சம்பவத்தின்போது குறிக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட விவசாயிகளைச்
சிக்க வைத்து கைது செய்வதில் உத்தரபிரதேச காவல்துறை தீவிரமாக உள்ளது. இதை எதிர்த்து, லக்கிம்பூர் கேரியில் நிரந்தர மோர்ச்சாவை அமைப்பது பற்றி சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவிக்கவுள்ளது. “மிஷன் உத்தரபிரதேசம்” தொடரும் என்றும், இதன் மூலம் இந்த விவசாயி விரோத அரசியலுக்குப் பாடம் புகட்டப்படும் என்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெளிவுபடுத்தியுள்ளது.

பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில், நாட்டின் மத்திய தொழிற்சங்கங்கள், தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெறுதல், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. கிராமப்புற வேலைநிறுத்த வடிவத்தில் இந்த அழைப்பை SKM ஏற்றுக்கொண்டு ஆதரிக்கும்.

பஞ்சாப் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த சம்யுக்த கிசான் மோர்ச்சாவில் அங்கம் வகிக்கும் சில அமைப்புகளின் முடிவு குறித்து, எஸ்.கே.எம். தனது நிலைபாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது – எஸ்.கே.எம்.இன் பெயரையோ, பேனர்களையோ அல்லது மேடையையோ அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதை எஸ்.கே.எம். எப்போதும் தடைசெய்துள்ளது. தேர்தலுக்கும் இது பொருந்தும். “சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் பெயரையோ அல்லது பேனரையோ எந்த அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது”.

சம்யுக்த கிசான் மோர்ச்சாவுடன் தொடர்புடைய எந்த ஒரு விவசாய அமைப்போ அல்லது தலைவனோ, தேர்தலில் போட்டியிடும் அல்லது ஒரு கட்சியின் சார்பில் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அவர்கள் சம்யுக்த கிசான் மோர்ச்சாவில் தொடர்ந்து இருக்க முடியாது. தேவைப்பட்டால், ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தலுக்குப் பின், இந்த முடிவு பரிசீலனை செய்யப்படும்.

அறிக்கையை வழங்கியவர்கள்

டாக்டர். தர்ஷன் பால், ஹன்னன் மொல்லா, ஜக்ஜித் சிங் தலேவால், ஜோகிந்தர் சிங் உக்ரஹான், ஷிவ்குமார் சர்மா (காக்கா ஜி), யுத்வீர் சிங், யோகேந்திர யாதவ்

சம்யுக்த கிசான் மோர்ச்சா
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு :

ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here