உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்-ல் நடந்த இந்துமத ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நெரிசலில் சிக்கி இதுவரை 134 பேர் பலியாகி உள்ளனர். இதில் பெண்கள் குழந்தைகளும் அடங்குவர்.
ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே உள்ள முகல்கர்ஷி கிராமத்தில் சாமியார் போலே பாபாவின் ஆன்மீக நிகழ்ச்சி நேற்று நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றதாக தெரிகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் போலே பாபாவின் காலடி மண்ணை எடுத்துச் சென்றால் அவர்கள் பிரச்சினைகள் நீங்கும் என்ற மூட நம்பிக்கையில் முண்டியடித்து கூட்டம் சென்றதால் நெரிசலில் சிக்கி 130 பேர் இறந்துள்ளனர்.
யார் அந்த போலே பாபா?
இந்தியாவில் எந்த கட்டுப்பாடும் இல்லாத தொழில் என்றால் அது சாமியார் தொழில் தான். மூடநம்பிக்கை என்னும் முதலீட்டை மக்களிடம் விதைத்தால் போதும் கோடி கோடியாய் பணம் கொட்டும். அதனாலயே இந்தியாவில் சாமியார்கள் பிசினஸ் கொடிகட்டி பறக்கிறது.
134 பேரை பலிக் கொண்ட போலே பாபா சாமியார் உத்தர பிரதேச மாநிலம் எடா மாவட்டத்தில் படியாளி நகரைச் சேர்ந்தவர். உளவுத்துறையில் பணிபுரிந்துள்ளார். அதில் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தால் மக்களின் அறியாமையையும் வறுமையும் அரசின் தேவையும் உணர்த்து சாமியார் தொழிலுக்கு மாறியுள்ளார். தனது 26வது வயதிலேயே வேலையை விட்டுவிட்டு ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்த தொடங்கியுள்ளார்.
இவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள். வடக்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஹரியானா மற்றும் இந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட இவருக்கு செல்வாக்கு உள்ளதாக கூறுகிறார்கள். இந்த போலி சாமியார் போலே பாபாவின் நிகழ்ச்சி உபியின் அலிகாரில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கிறது.
பாதுகாப்பில்லாத ஏற்பாடு
போலே பாபாவின் ஆன்மீக நிகழ்ச்சிக்கு ஹத்ராசின் சப் கலெக்டர் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆன்மீக நிகழ்ச்சிகள் என்றாலே அதிகார வர்க்கம் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதி வழங்குவதும் அதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதும் வாடிக்கையாக்கி உள்ளது. கும்பமேளா அதற்கு ஒரு உதாரணம் எனலாம்.
உபியின் தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங் கூறுகையில் 80,000 பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சிக்கு விழா ஏற்பட்டார்கள் அனுமதி கேட்டு கேட்டுள்ளனர். ஆனால் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருந்ததாகவும் கூறுகிறார்.
மக்கள் எண்ணிக்கை அதிகமாயிருக்கும் போது அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்திருக்க வேண்டும். ஆனால் அரசும், சாமியார் கும்பலும் கண்டுகொள்ளாமல் விட்டதே உயிரிழப்பு அதிகரித்ததற்கான காரணம். மேலும் நெரிசலில் சிக்கி இறந்தவர்களை அல்லது படுகாயம் அடைந்தவர்களை எடுத்துச் செல்ல உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வரவில்லை என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதுதான் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் வைத்திருக்கும் யோகிநாத் யோகி ஆதித்யநாத் ஆளும் உபி யின் நிலை.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிப்பதற்கு போதுமான உபகரணங்கள் இல்லை என்று உள்ளூர் வாசிகள் குற்றம் சாட்டுகிறார்கள். உயிருடன் இங்கே கொண்டுவரப்பட்டவர்கள் கூட இப்போது இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று மருத்துவமனையில் உள்ள அடையாளம் தெரியாத நபர் கூறியுள்ளதாக தி வயர் இணையதளம் கூறுகிறது. மயக்கம் அடைந்தவர்களை மீட்க மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் இல்லை என்று மற்றொரு நபர் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவமனையின் வளாகமே பிணவரைப் போல காட்சியளிப்பது சமூக வலைதளங்களில் பரவும் காணொளிகள் மூலம் பார்க்க முடிந்தது. அந்த அளவுக்கு இறந்து போன மனிதர்கள் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் கிடத்தப்பட்டிருந்தார்கள்.
அலிகாரின் இன்ஸ்பெக்டர் ஷலப் மாத்தூர் கூறுகையில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறினார். எப்படி ஆயினும் 134 பேர் பலியானதற்கு காரணமான போலே பாபா என்ற போலி சாமியார் கைது செய்யப்பட மாட்டார் என்பது மட்டும் உறுதி.
வறுமையும், அறியாமையும்!
எவ்வளவு உழைத்தாலும் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை என்ற அடித்தட்டு மக்களின் விரக்தியையும் பணமிருந்தும் மனம் நிம்மதி இல்லையே என்ற நடுத்தர வர்க்கத்தின் அறியாமையையும் அறுவடை செய்கிறார்கள் போlE பாபா போன்ற போலி சாமியார்கள். சத்சங்கம் போன்ற உபதேச சொற்பொழிவுகள் மக்களை உணர்வு ரீதியாக மழுங்கடிப்பதோடு ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் மனநிலையையும் தடுக்கிறது. அதனாலேயே போலி சாமியார்களின் நிகழ்ச்சிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இன்றி அனுமதி கொடுக்கிறது அரசு.
மறுபுறம் காவி கும்பலுக்கு ஆதரவாக மதவெறியை பரப்பும் பிரச்சாரர்களாகவும் போலி சாமியார்கள் செயல்படுகிறார்கள். போலி சாமியார்களை கடவுளின் அவதாரமாக பார்க்கும் மக்கள் அவர்களின் சொற்களை மீறாமல் இந்துத்துவத்திற்கு ஆதரவான முடிவை எடுக்கிறார்கள்.
படிக்க:
♦ ஹத்ராஸ் சிறுமியை மீண்டும் கொன்ற நீதித்துறை
♦ ஈஷாவின் மஹாசிவராத்திரி! கார்ப்பரேட் சாமியார் ஜக்கி விரிக்கும் சதிவலை!
தமிழ்நாட்டில் ஜக்கி வாசுதேவ் நித்தியானந்தா கல்கி உட்பட பலரும் காவிக்கும்பலின் ஊதுகுழலாகவே செயல்பட்டார்கள். அதுபோல் கர்நாடகாவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வட மாநிலங்களில் ஸ்ரீ நரசிங்கானந் என்ற காவி பயங்கரவாதி நேரடியாகவே ஆர் எஸ் எஸ் கும்பக்கு ஆதரவாக செயல்பட்டான். இப்படி அசிமானந்தா, பாலியல் குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் ஆசாரம் பாபு, அவரது மகன் மற்றும் பாலியல் கொலைக்காக சிறையில் இருக்கும் குருதீப் ராம் ரஹீம் சிங் உட்பட பலரும் மக்கள் செல்வாக்கோடு வளம் வந்தவர்கள் தான். இவர்களைப் போல் பலரும் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தங்கள் பிரச்சனைக்கான முடிவினை கடவுளிடமும் போலி சாமியார்களிடமும் தேடுவதன் விளைவு தான் இவர்களின் அபரிதமிதமான வளர்ச்சிக்கு காரணமாய் உள்ளது. இன்னொரு புறம் அரசும் தனது தேவைக்காக இவர்களை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
மக்கள் தன்னுடைய வாழ்வின் அவலநிலைக்கு யார் காரணம், யார் நம்முடைய எதிரி என்று அடையாளம் காணாமல் பிரச்சினையை எளிதாக தீர்த்துக் கொள்ளும் வழியாக சாமியார்களை தேடிச் செல்வது மேலும் அவர்களின் பிரச்சினையை அதிகரிக்குமே ஒழிய தீர்க்காது என்பதை மக்கள் தங்கள் சொந்த அனுபவத்திலேயே உணரலாம்.
- நந்தன்
கட்டுரை “நறுக்” என்று உள்ளது. Short and sweet.