78 வது சுதந்திர தினத்தை கொண்டாடி களைத்திருப்பவர்களுக்கு இந்த செய்தி அயர்வூட்டலாம். ஆனால் இதை கண்டிப்பாக பேச வேண்டும். அரியலூர் நந்தினி, நிர்பயா, ஆசிஃபா தற்போது கொல்கத்தா மருத்துவர் என இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது. நாளை நமது வீட்டில் ஒருவராகவும் இருக்கலாம்.

இந்தியா சுதந்திர நாடு என்பதில் நமக்கு என்ன பெருமை இருக்கிறது. பெண் மருத்துவர் வேலை களைப்பில் உறங்குவதற்கு கூட இந்த சுதந்திரம் அனுமதிக்கவில்லை. அவரை பிய்த்துப் போட்டுவிட்டது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 9 ஆம் தேதி ஆர் ஜி கர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் அதிகாலையில் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இந்த மருத்துவமனை பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் தனியார் மருத்துவமனையாகவும், அதிகாரம் கை மாறிய பிறகு அரசு மருத்துவமனையாகவும் மாற்றப்பட்டு இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தினமும் பல ஆயிரம் நோயாளிகளை கையாளும் மருத்துவமனையாகும். இங்கு தான் பெண் மருத்துவருக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது.

நீட் எனும் மருத்துவ நுழைவுத்தேர்வு திணிக்கப்பட்ட பிறகு இன்று மருத்துவராவது எவ்வளவு சவால் நிறைந்த விசயம் என்பது அனைவருக்கும் தெரியும். கொல்லப்பட்ட மருத்துவர் மவ்மிதா இளங்கலை மருத்துவம் முடித்து முதுகலை மருத்துவத்திற்கான நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

மருத்துவ துறையை பொருத்தவரையில் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து 24, 36 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய மோசமான சூழல் உள்ளது. பணி நேரத்தில் சிறிது ஓய்வெடுப்பார்கள். அப்படி தான் நீண்ட பணிச்சுமைக்கு பிறகு அதிகாலை 2 மணிக்கு கருத்தரங்கு மண்டபத்தில் (ஓய்வறை இல்லாத காரணத்தால்) சிறிது ஓய்வெடுக்க செல்கிறார்.

அதிகாலை 6 மணியளவில் மருத்துவ பணியாளர்கள் பார்க்கும் போது கொலை செய்யப்பட்டு அரை நிர்வாணமாக கிடந்துள்ளார்.

பெற்றோருக்கு பொய்யான தகவல்

அவர் சடலம் மீட்கப்பட்ட 3 மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவனையிலிருந்து பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. முதல் போனில் உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார்கள். அடுத்த 22 நிமிடம் கழித்து போன் செய்து இறந்துவிட்டதாகவும், தற்கொலை செய்துக் கொண்டார் என்றும் பொய்யாக கூறியுள்ளார்கள்.

ஏன் பொய் சொன்னார்கள், கொலையை மறைக்கப் பார்த்தார்களா? கொலையாளிகளை தப்பிக்க வைக்க முயற்சித்தார்களா? என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

தற்கொலை செய்துக் கொண்டதாக கூறியதில் சிறிதளவும் உண்மையில்லை என்பதை அவரது உடலில் உள்ள காயங்களே உறுதிபடுத்தியது. அவரது வாய் கிழிக்கப்பட்டிருந்தது. உதட்டில் காயங்கள் இருந்தது. பிறப்புறப்பில் காயம் இருந்தது. உடலில் ஏராளமான இடங்களில் காயங்கள் இருந்தன. இவை யாவும் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார் என்பதை உணர்த்தியது.

பிரேத பரிசோதனை அறிக்கை ஏற்படுத்திய கொந்தளிப்பு!

மருத்துவரின் கொலைக்கு நீதிக் கேட்டு போராடியவர்களுக்கு பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியை உண்டாக்கியதோடு மட்டுமில்லாமல் கோபத்தை அதிகரித்தது.

அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதற்கு அறிகுறி  இருத்ததாக டாக்டர் டி.ஆர்.சுபர்ணா கோஸ்வாமி கூறுகிறார். பிரேத பரிசோதனையில் இருந்த பல மருத்துவர்களும் இந்த கருத்தை உறுதிப்படுத்துகின்றனர்.

அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிக்கை கூறுகிறது. மேலும் அவர் கத்தாமல் இருப்பதற்காக வாய் கட்டப்பட்டிருந்ததாகவும், அவரது கால் முறிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை ஒருவர் மட்டும் செய்ய வாய்ப்பில்லை என்றும் அந்த மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவர் (HOD) கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் அவரைப் பற்றி தெரிந்த நபர்கள் தான் செய்திருப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.

மொத்தத்தில் இது கூட்டு பாலியல் வல்லுறவு கொலை என்று உறுதியாகிறது.

இந்த கொலையில் கைது செய்யப்பட்ட ஒருவன்!

அதே மருத்துவமனையில் காவல்துறையில் குடிமை தன்னார்வலரான(Civil Volunteer) பணிபுரியக் கூடிய 33 வயதான சஜ்சய் ராயை கைது செய்துள்ளது காவல்துறை. கொலை செய்யப்பட்ட இடத்தில் அவனது ப்ளூடுத் ஹெட்போன் ஆதாரமாக சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அவன் கருத்தரங்குக்குள் சென்று வந்ததாக சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய்ராயின் குடும்ப வாழ்க்கையும் மோசமாக உள்ளது. காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவனுக்கு நான்கு முறை திருமணம் நிகழ்ந்துள்ளதாகவும் மற்ற மூவரும் அவனை பிரிந்துச் செல்ல காரணம் படுக்கையறையில் மூர்க்கதனமாக நடந்துக் கொண்டதும், அடித்து துன்புறுத்தியதும் என காவல்துறை விசாரணை சொல்கிறது.

இது குறித்து கம்பிளையிண்ட் செய்தும் சஞ்சய் ராய் காவல்துறையில் பணிபுரிந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். அவன் வசிக்கும் பகுதியில் அவனது நடத்தையும் சரியில்லை என்று கூறுகிறார்கள். இத்தனையும் தெரிந்த காவல்துறை எப்படி அவனை வேலைக்கு சேர்த்துக் கொண்டது? ஒருவேளை இது தான் காவல்துறைக்கான தகுதியோ?

பெண் மருத்துவரின் கொலைக்கு ஒரு வகையில் காவல்துறையும் உடந்தையாக இருந்துள்ளது அவர்களது விசாரணையில் தெரிகிறது. இது கூட்டு பாலியல் வல்லுறவு கொலை என்றால் மற்ற கொலையாளிகள் யார் என்பது இதுவரை தெரியவில்லை.

மருத்துவர்களின் போராட்டம்!

கொலை நடந்த போது ஆர் ஜி கர் மருத்துவக்கல்லூரியின் தலைவராக இருந்த சந்தீப் கோஷ் இந்த பிரச்சினையில் அவரது செயல்பாட்டின் காரணமாக பலத்த எதிர்ப்பை சந்தித்தார். இதிலிருந்து தப்பிப்பதற்காக பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கல்கத்தாவில் வேறொரு மருத்துவக் கல்லூரியில் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களுக்கு இது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

கொல்கத்தாவில் சுகாதார பணியாளர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், கொலையாளிகளை கைது செய்து தண்டனை வழங்குமாறும் கோரிக்கை வைத்து போராடுகிறார்கள். ஆரம்பத்தில் அவசர சிகிச்சையை தவிர்த்து மற்ற மருத்துவர்கள் போராட்டக் களத்தில் இருந்தார்கள். வழக்கில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால் அனைத்து மருத்துவர்களும் களத்தில் குதித்துள்ளார்கள். இதனால் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில அரசின் விசாரணையில் பெரிய முன்னேற்றம் ஏற்படாததால் நீதிமன்றம் தலையிட்டு வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளது.

இந்நிலையில் சுதந்திர தினத்தன்று மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மம்தா பானர்ஜி அரசு கட்டவிழ்த்த வன்முறையை கண்டித்தும் மருத்துவ மாணவியின் கொடூர கொலைக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் 17, 18 தேதிகளில் 24 மணி நேரமும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்த போவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதே நேரம் அவசர சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் செயல்படும் என்றும் அறிவித்துள்ளது.

பிண அரசியல் செய்யும் பாலியல் ஜல்சா கட்சி!

கத்துவா, ஹத்ராஸ், அரியலூர் என பாலியல் வல்லுறவு கொலைகளுக்கு பெயர் போன சங்கி கும்பல் மருத்துவ மாணவியின் கொலைக்கு நியாயம் கேட்பது நாடகத்தை நடத்துகிறது.

படிக்க: 

♦ மணிப்பூர் பாலியல் வன்முறை! ஆர்எஸ்எஸ் பாஜக காரனை நடமாட விடாதே!

மணிப்பூரில் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட போது நவதுவாரங்களை மூடிக் கொண்டிருந்த மோடி முதல் குஷ்பு வரை கொல்கத்தா கொலையை தனது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள். அவரகளுக்கு என்ன கவலை இருக்குமென்றால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் 4 சீட் அதிகமாக கிடைத்திருக்கும் என்பது தான் அவர்களது கவலை.

தற்போது இதனை வரப்போகும் சட்டமன்றத் தேர்தலுக்காக பயன்படுத்திக் கொள்வார்கள் அல்லது சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவார்கள். இது மிகைப்படுத்தல் அல்ல. கடந்த கால பாஜகவின் செயல்பாடுகளே நம்மை இவ்வாறு சிந்திக்க தூண்டுகிறது.

கத்துவா சிறுமி ஆசிஃபா கொல்லப்பட்ட பொழுது கொலைகாரனுக்கு ஆதரவாக தேசியக் கொடி ஊர்வலம் நடத்திய கும்பல் தான் பாஜக. உன்னாவ் பாலியல் வல்லுறவு படுகொலை குற்றவாளி பாஜக எம்.எல்.ஏ-வான குல்தீப்சிங் செங்காருக்கு ஆதரவாக உபி பாரதிய ஜனதா நிற்கிறது.

படிக்க: 

♦ மனுதர்மத்தின் ஆட்சியும், பாலியல் கொலை குற்றவாளிகள் விடுதலையும்!

குஜராத் படுகொலையின் போது ஒரு குடும்பத்தையே பாலியல் வல்லுறவு செய்து 3 வயது சிறுவனை பாறையில் மோதி கொலை செய்த மனித மிருகங்களை நன்னடத்தை எனக் கூறி விடுதலை செய்தது குஜராத் பாஜக. இந்த படுகொலைக்கு சாட்சியாக நிற்கிறார் பில்கிஸ் பானோ.

இவ்வளவு கொடூரமான இரத்தக்கறை படிந்த வரலாற்றுக்கு சொந்தமான பாஜக கொல்கத்தா மருத்துவ மாணவி கொலையில் கலவரத்தை உருவாக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறது.

நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்திய மருத்துவர்கள் சங்கம் 2 நாள் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவை கேட்டுள்ளது. இதில் கலந்துக் கொள்வது நமது கடமை. இன்று ஏராளமான பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது பாதிக்கப்படுகிறார்கள். 2020,2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள் என அறிக்கை கூறுகிறது. ஆனால் உண்மை புள்ளி விவரங்களை விட அதிகமாய் இருக்கலாம்.

இது வரும் ஆண்டுகளில் அதிகரிக்காமல் தடுக்கப்பட வேண்டும். முறையான பாலியல் கல்வி இல்லாத நாட்டில் ஆபாச வீடியோக்களை பரப்பும் இணையதளங்களை தடை செய்ய வேண்டும்.

மருத்துவர்களின் வேலைச் சுமைக்கு காரணமாக இருக்கும் மருத்துவர்கள் காலி பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்புவதும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்வதும் பணி பாதுகாப்பு வழங்குவதும் அரசின் கடமை. இதனை நிறைவேற்ற நாம் மருத்துவர்களுடன் இணைந்து போராட வேண்டும்.

வெறும் தண்டனைகள் மட்டும் இந்த பிரச்சினைக்கு முடிவுக் கட்டாது. ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் பெண்களை போகப் பொருளாக பார்க்கும் பார்ப்பனியமும், நுகர்வுவெறியை உருவாக்கி பெண்களை தனது சந்தைக்காக பயன்படுத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவமும் வீழ்த்தப்பட வேண்டும்.

நந்தன்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here