டந்த செப்டம்பர் 5 அன்று சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசு பள்ளிகளில் மஹாவிஷ்ணு என்ற ஒரு ஆன்மீக அண்ணாமலையை “தன்னம்பிக்கை பேச்சாளர்” என்ற போர்வையில் அழைத்துவந்து மாணவ-மாணவிகள் மத்தியில் பேசவிட்டிருக்கின்றனர் அப்பள்ளிகளின் நிர்வாகிகள்.

ஆனால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதற்குப் பதிலாக மறுஜென்மம், பாவம், புண்ணியம், கர்மா என்று தனது ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளையும், வாட்சப் வதந்திகளையும் உளறிக்கொட்டி தனது அரிய கண்டுபிடிப்பான மாற்றுத்திறனாளிகளாகப் பிறப்பது முன்ஜென்மத்து சாபம் என்று கூறியுள்ளார். அதற்கு அங்கிருந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் எதிர்ப்புத்தெரிவித்ததும் அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த சம்பவங்களுக்கு மத்தியில் அந்த ஆன்மீக ஆட்டுக்குட்டி கைது செய்யப்பட்டுள்ளதும் அறிந்ததே.

இதில் நாம் கவனிக்கவேண்டியதும் கவலைப்படவேண்டியதும் என்னவென்றால் தம்மிடம் கல்வி கற்க வரும் மாணாக்கர்களின் அறிவை வளர்த்தெடுத்து, அறிவியல்பூர்வமாக சிந்திக்கச்செய்து, சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், மதம், இனம் வேறுபாடுகளையும் கடந்து மனிதகுலத்தை அடுத்தகட்டத்துக்கு முன்னேற்றிச்செல்லும் சமூக அக்கறையுள்ள மனிதர்களாக வளர்தெடுக்க வேண்டிய ஆசிரியர்களே மூடநம்பிக்கைகளில் மூழ்கிப்போய், அறிவியலுக்குப்புறம்பான நம்பிக்கைகளில் ஊறி பிற்போக்குத்தன சேற்றில் நெளிந்து கொண்டிருப்பதுதான்.

மாணாக்கர்களின் சிந்தனையை விரிவடையச் செய்வதற்குப்பதில் ஆன்மிகம், பக்தி, பெரியோரை தண்டமிட்டு வணங்குதல், ஆசிரியர்களின் காலை கழுவவைத்தல் என்றெல்லாம் போதித்து எந்தக் கேள்வியும் கேட்காமல் சொல்வதை நம்பும்படி வலியுறுத்துகிறார்கள். அதனால்தான் அந்த குறிப்பிட்ட நிகழ்வில் ஒரே ஒரு ஆசிரியரைத் தவிர மற்ற அனைவரும் வாய்மூடி மௌனியாகி கடந்துபோகிறார்கள். சில நிமிடங்களே ஓடும் அந்த வீடியோவைப் பார்த்ததுமே நமக்குள் பல கேள்விகள் எழுகின்றன. ஆனால் அந்த இடத்தில் இருந்த ஆசிரியர்களில் ஒருவருக்கும்கூட எந்தக் கேள்வியும் எழவில்லையா அல்லது அந்த மூடன் சொல்வது எல்லாம் வாட்சப் வாந்திகள் என்பது உரைக்கவில்லையா?. அவன் சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? முன்ஜென்மத்தில் செய்த பாவம்தான் ஏழையாக இருப்பது, மாற்றுத்திறனாளியாக இருப்பது என்று துணிந்து சொல்கிறானே அதற்கு அவனிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று யாருக்கும் கேட்கத் தோன்றவில்லையா? இந்தியாவில் 3 லட்சத்து 25 ஆயிரம் குருகுலங்கள் இருந்தன என்று எப்படி சொல்கிறான்?, யார் எடுத்த கணக்கு இது?, பிரிட்டிஷார் வருகைக்கு முன் இந்தியா என்ற ஒரு நாடாவது இருந்ததா? இதைப்போன்ற அடிப்படையான கேள்விகள் கூட அங்கிருந்த ஆசிரியர்கள் யாருக்கும் எழவில்லையா? இதுதான் மிக மிக ஆபத்தானது. வருங்கால சமுதாயத்தைப் படைக்கப்போகும் மாணவர்களை இந்த மூடநம்பிக்கையாளர்களிடம் விட்டால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? இந்திய சமுதாயம் இப்போது இருப்பதுபோல இன்னும்பல படித்த மூடர்களால், பார்ப்பன அடிமைகளால் நிரம்பிவழியும்.

ஆனால் பள்ளிகளில் இவன் நடிகர் தாமு போன்ற வேலையாட்களுக்கு என்ன வேலை? ஏன் இவர்களை அழைத்துவந்து மாணவர்களிடத்தில் பேச வைக்கிறார்கள்? என்ற அடிப்படையான கேள்விகள் நமக்கு எழுகின்றன.

ஏற்கனவே சாதி, மதம், இனம், மொழி, பால் என்று பிளவுபட்டு மோதிக்கொண்டிருக்கும் அரைநிலப்பிரபுத்துவ சமூக அமைப்பும், முதலாளித்துவ சீர்கேடுகளும் நிறைந்த இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஏறக்குறைய 1-1/2 ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டன.

அக்காலகட்டத்தில் கல்வி பயில்வது, சமூகமாக இயங்குவதிலிருந்து முழுவதுமாக துண்டிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் மத்தியில் கல்வி, தனிமனித ஒழுக்கம், கூட்டுத்துவம் போன்றவற்றில் மாற்றம் ஏற்பட் டுள்ளது. அதனால் பள்ளிகள் மீண்டும் திறந்தபிறகு வந்த மாணவர்களின் எண்ணிக்கையிலும் கற்றுக்கொள்ளும் திறனிலும் பெருத்த பின்னடைவு ஏற்பட்டது. மாணவர்கள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இன்றியும், செல்போனில் மூழ்கிக்கிடப்பது, போதை பொருட்களை பயன்படுத்துவது போன்ற கேடான பழக்கத்துக்கு ஆளாகி பெற்றோர், ஆசிரியர்களை மதிக்காமல், எந்த ஒரு விடயத்திலும் பற்றில்லாமல் விட்டேத்திகளாக மாறிவிட்டனர். இதனால் மாணவர்களை கையாள்வதில் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது, ஆகையால் வெளியிலிருந்து தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், சுயஒழுக்கம் குறித்து பேசும் பேச்சாளர்களை பயன்படுத்திக்கொள்ளவும் அதனை அரசு பள்ளிகளை உறவாடிக்கெடுக்க அரசு நியமித்துள்ள NGO-க்கள் மூலம் ஏற்பாடுகள் செய்துகொள்ளவும் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. அதன்படியே காசுவாங்கிக்கொண்டு கண்டதையும் வாந்தியெடுக்கும் இவனைப்போன்ற கூமுட்டைகளையெல்லாம் வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது..

படிக்க: 

♦ கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் ; தீர்வுகள்

♦ காவிக்கூடங்களாகும் கல்விக்கூடங்கள்!

சில பல வாட்சப் வதந்திகளை படித்துவிட்டு தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், சுயஒழுக்கம் என்ற பெயரில் பார்பனீயத்துக்கு வால்பிடிக்கும் இவர்களின் வாந்தியெல்லாம் எப்படி ஆசிரியர்கள் விழுங்கி ஜீரணிக்கின்றனர்? தங்களுக்கு மேலாக நின்றுகொண்டு மாணவர்களை குற்ற உணர்ச்சியில் தள்ளுவதையும், அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்கு கருத்துகளை விதைப்பதையும் எப்படி ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்? ஏனென்றால் ஆசிரியர்கள் எதையுமே படிப்பதில்லை, சமூகத்தை முன்னோக்கி நகர்த்தும் கருத்துகளை காதுகொடுத்து கேட்பதும் இல்லை, மொத்தத்தில் சமுதாய அக்கறை சிறிதும் இல்லை. இது தவிர ஆசிரியர்களுக்கு ஆசிரியப்பணியல்லாத வேலைகளும், பல்வேறு நிர்வாகப் பணிகளும் சுமையாக அழுத்துகின்றன. அதனாலும் அவர்கள் நினைத்தாலும்கூட பாடபுத்தகத்தைத் தவிர வேறு எதுவும் படிக்கமுடியாத சூழல் உள்ளது. “தனியார் பள்ளிகளுக்கு இணையாக” என்ற ஒரு டேக் லைனின் கீழ் பொதுத்தேர்வுகளில் ரிசல்ட் காட்டவேண்டிய கூடுதல் சுமையும் அழுத்துவதால் ஆசிரியர்களும் வாங்கும் கூலிக்கு மாரடித்து பாடப்புத்தகத்தை மட்டும் நடத்திவிட்டு முடித்துக்கொள்கிறார்கள். வாழ்க்கைச் சிக்கல்களும், பணி சிக்கல்களும் அவர்களை ஆன்மீகத்தை நோக்கி நெட்டித்தள்ளுகின்றன, அவர்களும் படிப்படியாக மூட நம்பிக்கைகளில் மூழ்கிப்போய் இத்தகைய மூடர்களிடம்போய் சிக்குகிறார்கள். இந்த வாய்ப்பை பற்றிக்கொள்ளும் RSS பின்னணியிலிருக்கும் அமைப்புகள் பார்ப்பனீய விஷ கருத்துகளை மாணவர்களிடம் விதைக்கின்றனர். இதைக்குறித்து முன்னாள் RSS முழுநேர ஊழியரான சுதீஷ் மின்னி தனது “நரக மாளிகை” என்ற புத்தகத்தில் விளக்கியிருப்பார்.

இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வுதான் என்ன? 

பள்ளிகளில்  மூடநம்பிக்கையை பரப்பும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று அறிவித்து அதனை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். எதிர்கால சமுதாயத்தின் சிற்பிகளான ஆசிரியர்களை முதலில் மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். அதன் முதல் படியாக அவர்களை ஆசிரிய பணியில்லாத வேலைகளிலிருந்து விடுவித்து சரியான பணிசூழலையும், முற்போக்கு நூல்களை படிக்க நேரமும் கொடுக்கவேண்டும். இதற்கு தடையாக இருப்பது பள்ளிகளில் நிர்வாகத்துக்கென்று ஊழியர்களையும், போதுமான ஆசிரியர்களையும் நியமிக்காத அரசுதான், அரசு சிரமேற்கொண்டு ஏற்றுக்கொண்டிருக்கும் GATT ஒப்பந்தம்தான். இந்தியா அவ்வொப்பந்தத்திலிருந்து வெளிவருவதுதான் நிரந்தரத் தீர்வு என்றாலும் மேற்கண்ட மஹாவிஷ்ணு போன்ற ஆன்மீக மூடர்களிடம் எச்சரிக்கையுடன் இருந்து நமது குழந்தைகளைக் காப்பதுவே நமது உடனடி கடமையாகும்.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here