காவிரி, தென்பெண்ணை, பாலாறு-தமிழ் கண்டதோர் வையை, பொருநை நதி-என மேவிய யாறு பல வோடத் – திருமேனி செழித்த தமிழ்நாடு”! என்று பாடினார் பாரதியார்.

பாரதியின் அரசியலில் நமக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் தமிழகத்தின் முக்கியமான நதிகளை பற்றி பாரதியார் எழுதிய இந்த கவிதை எப்போதும் நினைவில் நின்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் பாசன பரப்புகளை பாதுகாக்கின்ற மூன்று முக்கிய நதிகள் காவிரி பெண்ணை மற்றும் பாலாறு ஆகிய மூன்று நதிகளும் தமிழகத்திற்கு வெளியில் குறிப்பாக கர்நாடகத்திலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் உற்பத்தியாகி தமிழகத்தின் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.

இதன் காரணமாக காவிரி, பெண்ணையாறு மற்றும் பாலாற்றில் தண்ணீர் வருவது கர்நாடக, ஆந்திர அரசுகளின் தயவில் உள்ளது என்பது எந்த ஆட்சியிலும் நாம் எதிர்கொள்ளும் கொடுமையாகும். 

எடுத்துக்காட்டாக காவிரியில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் உரிமையை, பல்வேறு காலகட்டங்களில் போராடி நிலைநாட்டிய பிறகும் இன்று வரை காவிரி மேலாண்மை வாரியத்தின் கீழ் செயல்படுகின்ற காவிரி ஒழுங்காற்று கொடுக்கின்ற வழிகாட்டுதல்களை கர்நாடக அரசு எப்போதும் மதிப்பதே இல்லை. காங்கிரசும் இதற்கு விலக்கல்ல.

கர்நாடக காங்கிரசு அரசு புதிதாக மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறது. இருக்கின்ற தண்ணீரையும் முற்றாக முடக்குவதற்கு இந்த அணை கர்நாடகத்திற்கு பயன்படும். ஆனால் தமிழகத்தின் பாசனப் பரப்புகளை, குறிப்பாக காவிரி டெல்டா பாசனத்தை முற்றாக ஒழித்துக் கட்டிவிடும் என்பது தான் உண்மையாகும்.

அதேபோல தமிழகத்தின் வடமாவட்டங்களை பாதுகாத்து வருகின்ற பாலாறு 222 கிலோமீட்டர் ஓடி சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாயம் நிலங்களை விவசாயத்திற்கு பாதுகாத்து வருகிறது. ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கில் பல்வேறு புதிய புதிய அணைகளை கட்டி வருவதால் பாலாற்றில் தண்ணீர் வருவதே வரலாற்றில் முக்கியமான பேசு பொருளாக மாறியது. தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்கள் எதிர்ப்பைக் கடந்து 22 தடுப்பணைகளை ஆந்திரா அரசு கட்டியுள்ளது. அதையும் தாண்டி பாலாற்றில் தமிழக விவசாயிகளுக்காக ஆர்ப்பரித்து வரக்கூடிய தண்ணீரில் இதுபோன்ற தோல் பதனிடும் ஆலைகளின் கழிவுப் பொருட்களைக் கொட்டியும், தீயிட்டுக் கொளுத்துவதாலும் பாலாறு முற்றிலும் மாசடைகிறது என்கின்றனர் இந்தப் பகுதி விவசாயிகள்.

அதே போல் மற்றொரு நதியான பெண்ணையாறில் கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி சாலை, நாச்சிக்குப்பத்தில் இருந்து 8 கி.மீ., துாரத்தில், கர்நாடகா வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதி யார்கோள். இங்கு கட்டப்பட்டுள்ள யார்கோள் அணையின் நீளம் 1,410 அடி, உயரம் 164 அடி.மேலும் எதிர்காலத்தில், தமிழக அரசு சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் என்ற எண்ணத்தில், மதகுகள் இன்றி 164 அடி உயரத்திற்கு நீர் தேக்கும் வகையில், பெரிய தடுப்பணையாக கட்டப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 50 கோடி கன அடி.

அதேபோல் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு, அது காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி! சிபிஎம் ஆக இருந்தாலும் சரி! அணையில் 156 அடி நீரைத் தேக்குவதற்கு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாமல் பல்வேறு காரணங்களை கூறி நிராகரித்து வருகின்றனர் என்பதால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பெரும்பாலும் வறண்ட நிலங்களாகவே நீடிக்கின்றன.

தற்போது அந்த வரிசையில் சிலந்தி  ஆற்றுப் பிரச்சனையும் இணைந்துள்ளது. திருப்பூரை அடுத்துள்ள உடுமலையில் இருந்து சுமார் 25 கிமீ. தொலைவில் அமைந்துள்ளது தான் அமராவதி அணை.. 90 அடி உயரம் கொண்ட இந்த அணை 4 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்டது. 1958இல் கட்டப்பட்ட இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், இந்த அமராவதி ஆற்றுப்படுகை மூலம் 110 கூட்டுக் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது

அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்கள் என்று பார்த்தால் அவை பாம்பாறு, தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை ஆகும்.. இதற்கிடையே இடுக்கி மாவட்டம் தேவிகுளம் பகுதியில் பெருகுடா என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இந்த தடுப்பணை அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவை குறைக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த கொடுமைகளுக்கு மத்தியில், ”தமிழகத்தில் இயற்கையின் அருட்கொடையான நதிகளையும், நீராதாரங்களையும் நாம் சரியாகப் பராமரிக்கவில்லை என்பதைத் தாமதமாக உணர்ந்திருக்கிறோம். மேலே சொன்ன பட்டியலில், பல நதிகள் தற்போது வரைபடங்களில் மட்டுமே இருக்கின்றன. நீர்நிலைகளின் நிலை அதைக் காட்டிலும் மோசம். நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947-ல் (அன்றைய சென்னை மாகாணத்துக்குள் இருந்த) இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர்நிலைகள் இருந்தன. இன்றைக்கு அது பாதிக்கும் குறைவாகிவிட்டது. வெறும் 20,000 நீர்நிலைகள் மட்டுமே எஞ்சியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

படிக்க:

♦ காவிரியில் தமிழகத்தின் உரிமைப்படி நீரைப் பெற போராடுவோம்!

♦ முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவோம்! 2018 மீள்பதிவு

மதுரை, சென்னை மாநகரங்களைச் சுற்றி மட்டும் 500 ஏரிகள், குளங்கள் காணாமல் போய்விட்டன. பழவேற்காடு ஏரியை ஆந்திர அரசு சிறிது சிறிதாக அபகரித்துக்கொண்டது. சென்னைக்குக் குடிநீர் வழங்குகிற வீராணம் ஏரியிலும்கூட சரியான பராமரிப்பு இல்லை. அரசின் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் இன்றைக்கு 18,789 பொதுப்பணித் துறை ஏரிகள், 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் இருக்கின்றன. நிஜத்தில் எத்தனை என்பதை ‘சர்வே’ செய்துதான் கண்டறிய வேண்டும். நிலத்தடி நீரும் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் 1.10 கோடி ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய நிலத்தின் பரப்பும் சுருங்கிக்கொண்டே வருகிறது” என்கிறார் திமுகவின் கே எஸ் ராதாகிருஷ்ணன்.

தமிழகத்திற்கு வெளியில் இருந்து வரும் முக்கிய ஆறுகளின் மீது தமிழகத்திற்கு உள்ள உரிமையை அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா அரசுகள் மறுத்து வருகின்றன. அதற்கு எதிராக தொடர்ச்சியாக தமிழக மக்கள் போராடி வருகின்றனர். அதை மீறி வரும் தண்ணீரை பாதுகாக்கவே போராடுகிறோம்.

தற்போதைய அரசு கட்டமைப்பில் நதிநீர்களுக்கு இடையில் உள்ள சிக்கலை தீர்க்கவே முடியாது. அனைத்து தேசிய இனங்களையும் சமமாக கருதுகின்ற ஜனநாயக கூட்டரசு ஒன்று தான் நதிநீர் சிக்கல்கள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் ஜனநாயக முறையில் கையாளும்.

கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத கும்பல் 3வது முறையாக தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கு வெறித்தனமாக அலைந்து கொண்டிருக்கும் சூழலில், நதிநீர் சிக்கல்கள் ஒருபோதும் தீர்க்கப்படாது. எனவே பாசிசத்தை வீழ்த்தி அமைக்கப்படும் ஜனநாயக கூட்டரசு உடனடி தேவையாக மாறி உள்ளது.

  • மாசாணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here