பணக்காரர்கள், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் சொகுசு காரில் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தி அப்பாவிகளின் உயிரைக் குடிப்பது என்பது சர்வ சாதாரணமான நிகழ்வாக தற்பொழுது மாறிவிட்டது.
அதிலும் 18 வயது கூட நிரம்பாத ஓட்டுநர் உரிமம் பெறாத பணக்கார வீட்டு பிள்ளைகள் கார்களை ஒட்டி விபத்தை ஏற்படுத்தி உயிரை கொல்வது என்பதும் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் மே 19ஆம் தேதியன்று அதிகாலை 3:15 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் பூனே நகரில் இரு கொலைகள் நடந்துள்ளன. 17 வயது சிறுவன் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி வந்து இடித்ததில் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு பேர் சம்பவ இடத்தில் இறந்து விட்டனர். இவர்கள் இருவரும் 24 வயதான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
இந்த வழக்கை விசாரித்த சிறார் நீதி வாரியம் காரை ஓட்டி வந்த நபர் 17 வயதுடைய சிறுவன் என்பதால் அவனுக்கு சிறை தண்டனை கொடுக்கவில்லை. மாறாக சாலை விபத்துக்கள் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் 300 வார்த்தைகளில் கட்டுரை ஒன்றை எழுதுவது தான் ‘தண்டனை’ என்று வழங்கி இருக்கிறது. மேலும் இந்த கொலை காரனுக்கு 15 மணி நேரத்தில் பிணையையும் வழங்கி சிறார் நீதி வாரியம் அவனை விடுவித்து விட்டது.
இதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்தக் கொலைகாரனின் தந்தை தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
குடிபோதையில் காரை ஏற்றி இருவரை கொன்ற போது அந்த சிறுவன் குடிபோதையில் இருந்துள்ளது தெளிவாக தெரிகிறது. ஆனால் அந்த சிறுவன் குடிபோதையில் இருந்தானா என்பது குறித்து அறிய அவனது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரத்தப் பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் அவன் குடிபோதையில் இருந்தானா என்பது குறித்து கூறமுடியும் என்று காவல்துறை கதையளந்து கொண்டிருந்தது.
ஆனால் உண்மை நிலை என்ன? அவன் தனது நண்பர்களுடன் ஒரு பாரில் அமர்ந்து சாராயம் குடிக்கும் காட்சிகள் சிசிடிவி யில் தெளிவாக பதிவாகியுள்ளன. அதுமட்டுமின்றி அவர்கள் குடித்த சரக்கிற்கு ரூ.48,000 ஆன்லைனில் பணம் செலுத்தியதும் தற்பொழுது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது. இந்த காட்சிகள் பதிவான சிறிது நேரத்திற்குள் தான் இந்த விபத்து – கொலை நடந்துள்ளது. இனி வரும் நாட்களில் அவர்கள் பாரில் அமர்ந்து குடித்ததும் உண்மைதான். அதற்கு பணம் செலுத்தியதும் உண்மைதான். ஆனால் அவர்கள் குடித்தது சாராயம் அல்ல; ஏன் பீர் கூட அல்ல; வெறும் மோர் தான் என்று அறிக்கை வெளியிடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
Vedant Agarwal's alcohol test result is negative but in this video he is clearly seen consuming alcohol & partying with his friends.
This proves once again that if you have money, you can control everything.#PorscheCrash #Punepic.twitter.com/MxDcncbJj2
— Aarav Gautam (@IAmAarav8) May 21, 2024
பண பலமும் அதிகார பலமும் மிக்க இந்த கொலைகாரனின் குடும்பம் இவனை பாதுகாப்பதற்கு எல்லா முயற்சிகளும் செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கு எப்படி போகும் என்று இப்போதைக்கு யாராலும் சொல்ல முடியாது. மக்களின் உறுதியான போராட்டம் இருந்தால் தான் இந்த வழக்கு நியாயமாக நடத்தப்படுவதற்கு ஓரளவுக்காவது வாய்ப்புள்ளது என்பது தான் உண்மை.
2019 ஆம் ஆண்டில் போடப்பட்ட சட்டத்தின் படி ஒரு மைனர் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால் – உயிரிழப்பை ஏற்படுத்தினால் அந்த மைனரின் தந்தையை மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம். மேலும் அபராதமும் விதிக்கலாம் என்ற சட்டத்தின்படி கராராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதாவது அவனின் தந்தை சிறையில் தள்ளப்பட வேண்டும். அப்பொழுதுதான் இம்மாதிரியான குற்றங்கள் எதிர்காலத்தில் நடப்பது தடுக்கப்படும்.
படிக்க:
♦ உலக மனநல நாளும் சித்தா திரைப்படமும்!
ஒரு சிறார் இப்படி தவறு செய்து விட்டார் என்பதற்காக பெற்றோரை தண்டிப்பது நியாயமா? என்று இங்கு ஒரு கேள்வி எழலாம். தனது பிள்ளையை தறுதலையாக வளர்த்து – சாலையில் செல்பவரை குடிபோதையில் காரில் இடித்து கொல்லும் அளவிற்கு தருதலையாக வளர்த்து இருவரின் உயிரை குடித்ததற்கு யார் பொறுப்பேற்பது? உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் நிலை என்ன? அவர்களின் இழப்பிற்கு யார் பொறுப்பேற்பது?
ஒரு பணக்காரனின் உயிர் இப்படி பறிக்கப்பட்டு இருந்தால் வாகனத்தை ஓட்டிய சிறுவன் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவனாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? கேள்விக்கிடமின்றி இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும். அதாவது சிறுவனின் தந்தை சிறையில் தள்ளப்படுவது உறுதியாக்க பட்டிருக்கும். அதை சட்டம் தன் கடமையை செய்ததாக, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டதாக உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு – உயிரிழந்தவருக்கு நீதி வழங்கப்பட்டதாக வியந்தோதப்பட்டு இருக்கும்.
முதலாளித்துவ ஊடகங்களும் முதலாளித்துவ அறிஞர்களும் இந்த கருத்தை நாடு முழுக்க பரப்புவதில் மும்முரமாக ஈடுபட்டு இருப்பர் என்பது உறுதி.
உயிர் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அந்த உயிரைப் பறிக்கும் நபரையும் அதற்கு துணையாக இருந்த நபரையும் தண்டிப்பதற்கு தயங்குவதோ, காலம் தாழ்த்துவதோ கூடவே கூடாது. சாராயம் குடித்துவிட்டு சொகுசு காரை ஓட்டிச் சென்று இருவரை கொன்ற அந்த சிறுவனும் அவனது தந்தையும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். அப்பொழுதுதான் இது மாதிரியான கொலைகள் வருங்காலங்களில் நடப்பது குறையும் என்பது உறுதி.
—குமரன்