“குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் குடியிருக்க வீடு இல்லை” என்று புதுச்சேரி மாநிலம் முழுவதும் அன்றாடம் வேலைக்குச் சென்று உழைத்து வாழ்கின்ற அரைப் பாட்டாளிகள் கடும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
புதுவை மாநிலத்தை ஆண்டு வருகின்ற பாசிச பாஜக கூட்டணி ஆட்சியான என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி ஃபெஞ்சல் புயல் குறித்து எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது மட்டுமின்றி, மக்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிறகும் மெத்தனமாகவே செயல்படுகிறது.
”அரசுப் பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், அன்றாட தின கூலித் தொழிலாளர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் போன்ற வகையில் சுமார் 4000 பேர் பணிபுரிவதாக புதுச்சேரி மாவட்டத்தின் ஆட்சியாளர் குலோத்துங்கன் கூறுகின்றார்.
ஆனால் புயலில் விழுந்த மரங்களை அகற்றுவதற்கு பொருத்தமான மின்சார அறுவை இயந்திரங்கள், நீரை உறிஞ்சி எடுக்கின்ற ராட்சத மோட்டார்கள், பம்பு செட்டுகள், மின்சார ஜெனரேட்டர்கள் போன்றவை எதுவுமின்றி மண் வெட்டும் பொக்லின் எந்திரத்தைக் கொண்டு அந்தப்பக்கம் உள்ள நீரை வாரி இந்தப் பக்கம் ஊற்றுகிறது பாஜக கூட்டணி அரசு.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பாலங்கள் கட்டுமானங்கள் அனைத்தும் பிரெஞ்சுக் காலனியாதிக்கத்தின் போது கட்டப்பட்டவை; அதன் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரசு உள்ளிட்ட ஆட்சியாளர்களால் கட்டப்பட்டவை இந்த ஆட்சியில் அவை அனைத்தும் போதிய பராமரிப்பின்றி இந்த ஃபெஞ்சல் புயலில் கடுமையான சேதத்தை உருவாக்கியுள்ளது..
நவம்பர் 30 நள்ளிரவு முதல் காற்று மழையின் வேகம் அதிகரித்ததால், புதுச்சேரியின் பிரதான சாலையான அண்ணா சாலை, காமராஜர் சாலை, புஸ்ஸி வீதி, நேரு வீதி, இந்திராகாந்தி சிலை சந்திப்பு, ராஜீவ்காந்தி சிலை சந்திப்பு, கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. குறிப்பாக கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் மற்றும் ரெயின்போ நகர் பகுதிகளில் 3 அடிக்கு மேல் வெள்ளம் கரை புரண்டோடியது.
கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக 30 மணி நேரம் தொடர்ந்து 49 செ.மீ அளவு மழை பெய்திருப்பதால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளைத் தவிர, அனைத்து வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. வீட்டிற்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகிவிட்டன. தரை தளத்தில் வெள்ளம் புகுந்ததால், அனைவரும் முதல் மாடிக்கு சென்று விட்டனர். முதல் மாடி இல்லாதவர்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் தஞ்மடைந்திருக்கின்றனர். இதனால் கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர் பகுதிகள் நகரிலிருந்து துண்டிக்கப் பட்டு, தனித்தீவுகளாக காட்சியளிக்கின்றன.
படிக்க: புயல் கரையை கடக்க தாமதம் ஏன்?
புதுவை அரசாங்கத்தின் பொறுப்பற்ற போக்கு காரணமாக, புயலுக்கு முன்னரே போதுமான அளவு படகுகள் ஏற்பாடு செய்யாததால், பொதுமக்களை மீட்கும் பணி தாமதாகி வருகிறது. அதேபோல சாரம், சக்தி நகர், ராஜராஜேஸ்வரி நகர், பிருந்தாவனம், கோவிந்த சாலை, ஜீவா நகர், நெல்லித்தோப்பு, உப்பளம், வாணரப்பேட்டை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளையும் முழுமையாக வெள்ள நீர் சூழ்ந்து, அந்த மக்கள் மீட்புக்காகவும், உணவுக்காகவும் காத்திருக்கின்றனர்.
”கிராமப் பகுதிகளைப் பொறுத்தவரை வில்லியனூர், திருக்கனுர், பாகூர் போன்ற பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்திருக்கிறது. அங்கு தாழ்வான பகுதிகளில் வசித்த மக்களும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். முன்னெச்சரிக்கையாக வரவழைக்கப்பட்ட துணை ராணுவப்படையினரும், தீயணைப்பு வீரர்களும் படகுகளில் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். ஆனாலும் மீட்புப் பணியில் களப்பணியாளர்களும், படகுகளும் குறைவாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலும், உணவு வழங்குவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.” இதனை முதலாளித்துவ ஊடகமான ஆனந்த விகடனே கூறுகிறது.
மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் (கோவிந்த சாலை, லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்) உயிரிழந்துள்ளனர், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பாகூர் பகுதியில் 15 குடிசை வீடுகளும், வில்லியனூர் மற்றும் பாகூர் தொகுதிகளில் தலா ஒரு கல் வீடும் சேதமடைந்திருக்கின்றன. மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம்” என்கிறார் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்.
உழைக்கும் மக்கள் உணவிற்கும் நீருக்கும் குடியிருக்க வீட்டிற்கும் போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் உத்தரவாதமான வாழ்க்கை கொண்ட குட்டி முதலாளித்துவ கும்பல், அதாவது தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றுகின்ற பணியாளர்கள்; அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குலக்கொழுந்துகள், நேரத்தை எப்படி கழிப்பது என்று தெரியாமல் கேரம் போர்டு வாங்குவதற்கும், கேரம் போர்டு பவுடர் வாங்குவதற்கும், ரம்மி சீட்டு ஆடுவதற்கு கார்டுகளை வாங்குவதற்கும் அலைந்துக் கொண்டிருந்தது.
படிக்க: எது அழகு என்று புரியாமல் பலியாகும் நடுத்தர வர்க்க- மேட்டுக்குடி பெண்கள்!
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து நிற்கின்ற மக்கள் பள்ளிகளில் அல்லது திருமண மண்டபங்களில் ஆடு, மாடுகளைப் போல பட்டியில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை பார்த்து அவர்களுக்கு ஆறுதல் சொல்வதைக் காட்டிலும் பாலங்களுக்கு கீழே ஓடுகின்ற தண்ணீரை ரசிப்பதற்கும், செல்பி எடுத்து போடுவதற்கும், இந்த நடுத்தர வர்க்க, மேட்டுக்குடி கும்பல் காரை எடுத்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறது. விழுப்புரம்-புதுவை சாலையில் உள்ள சங்கராபரணி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள புதிய பாலம், திருக்காஞ்சி அருகில் உள்ள புதிய பாலம், உறுவையாறு அருகில் உள்ள பழைய பாலம் உள்ளிட்டு அனைத்து பாலங்கள் இருக்கின்ற பகுதிகளிலும் போக்குவரத்து இடைஞ்சலையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இயற்கை பேரழிவு என்பது எப்போதும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கடுமையான பாதிப்பையும், நடுத்தர-மேட்டுக்குடி கும்பலுக்கு விடுமுறையையும், அரசு கட்டமைப்பில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பணம் கொழிக்கின்ற நிகழ்வாகவும் உள்ளது என்பதையே தற்போது ஃபெஞ்சல் புயல் பாதிப்பு புதுச்சேரியில் நிரூபித்துள்ளது.
(மக்கள் அதிகாரம் தோழர்கள் உதவியுடன்)
- முகம்மது அலி.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி