12-8-2023

பத்திரிக்கை செய்தி


நாங்குநேரி- பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை மீதான சாதிவெறித் தாக்குதல்!
சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டிய கொடூரம்!

அய்யோ! என்ன செய்யப்போகிறோம்!

பெற்றோர்களின் சாதி பெருமித உணர்வு, பள்ளியில் படிக்கும் பிள்ளைக்கு சாதி வெறியாக மாற்றி வீச்சு அறிவாளை கொடுத்து சகமாணவனை வீடு புகுந்து வெட்ட சொல்லியது எது?

தடுக்க வந்த சிறு பெண் பிள்ளையான தங்கையையும் வெட்ட எப்படி மனம் வந்தது? தமிழகத்தில் இதை அனுமதிக்க முடியாது!

நேர்மையான திறமையான உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் முழு விசாரணை செய்யப்பட வேண்டும்!

தேர்தல் அரசியலுக்கு மாணவன் சின்னதுரையின் ரத்ததுளிகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்!

சாதிய சாக்கடையை பாதுகாக்கும் சனாதனத்தை ஒழித்து சமூக மாற்றத்திற்கு இச்சம்பவத்தை ஒரு எச்சரிக்கையாக எடுத்து கொண்டு செயல்பட வேண்டும்!

முற்போக்கு ஜனநாயக புரட்சிகர இயக்கங்கள், எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காமல் தடுக்க தீவிரமாக செயல்படுவது பற்றி ஒருங்கிணைந்து பரிசீலிக்க வேண்டும்!

திருநெல்வேலி மாவட்டம் நாந்குநேரியில் சின்னத்துரை எனும் 12-ஆம் வயது படிக்கும் தலித் மாணவன், தனது ஆசிரியரால் பாராட்டப்பட்டதால், அதைப் பொறுக்காத அதே வகுப்பில் படிக்கும் மறவர் சாதியைச் சேர்ந்த 6 மாணவர்கள், இரவு நேரத்தில் அந்த மாணவனின் வீடு புகுந்து வெட்டியிருக்கிறார்கள். அவரைக் காப்பாற்ற வந்த அம்மாணவனின் தங்கையை வெட்டியது அந்தக் கும்பல். பேரப்பிள்ளைகள் வெட்டுபட்டதை பார்த்த அதிர்ச்சியில் தாத்தா மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இது வரை 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு சிறைக்கு அனுப்ப பட்டுள்ளனர். இவர்கள் செய்த தவறுக்கு வருந்தி திருந்தி சக மனிதனாக வர வேண்டும். அதற்கு இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை உருவாக்க வேண்டும்.

சக மாணவனை வெட்டிய இச்சம்பவத்தை எதிர்ப்பவர்கள் அமைதியாக இல்லாமல் தங்கள் கருத்துக்களை வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும் எதிர்ப்பாக பதிவு செய்ய வேண்டும்.சனதன சக்திகளுக்கு எதிராக பொது கருத்து உருவாக்க வேண்டும்.
இதுவும் கடந்து போகும் என்றால் அமைதி காத்தால் இந்த மாணவர்கள் வெளியே வந்தவுடன் சாதி சங்கங்களும் பா.ஜ.கவும் யுவராஜ் போன்று இவர்களை வீரனாக கொண்டாடி விடும் பெரும் ஆபத்து இருக்கிறது.

நாந்குநேரியில் தாக்கப்பட்ட மாணவனின் தலை முதல் கால் வரை வெட்டுப்படாத இடமே இல்லை எனும் கொடூரமான முறையில் கண் மண் தெரியாமல் சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த அளவிற்கு சாதிவெறி விசம் அம்மாணவர்கள் மனதில் அடி ஆழம் வரை வேர் விட்டுப் பரவியுள்ளது. இதற்கு அம்மாணவர்கள் மட்டுமே காரணமல்ல, சாதிப் பெருமை பேசித் திரியும் ஆதிக்க சாதிவெறிச் சமூகமும் முக்கியமாக அவர்களின் பெற்றோர்களும் தான் காரணம். மாணவன் சின்னத்துரை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய மாணவர்களின் பெற்றோர்களையும் இவ்வழக்கில் சேர்க்க வேண்டும். சக மாணவனை செதில் செதிலாக வெட்ட வேண்டும் எனும் அளவிற்கு சாதிய மனப்பான்மையை வளர்த்து விட்ட அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.

சாதிப் பெருமையைப் பேசி சாதியைக் கெட்டிப்படுத்தும் ஆதிக்க சாதிவெறிச் சங்கங்கள் உடனே தடை செய்யப்பட வேண்டும். சாதிய கட்சிகள் கலைக்கப்பட வேண்டும்.அத்துடன், சாதிய படிநிலையை உருவாக்கி, தாங்கி பிடிக்கும் இந்துத்துவா கொள்கையும் இதனை நடைமுறைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி-யினை சமூக புறக்கணிப்பு செய்யப்பட வேண்டும்.

தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என சட்டமியற்றி பள்ளியிலிருந்தே பேசுவது போல் மட்டும் நிறுத்தாமல், இதற்கு அடிப்படையாக உள்ள சாதியும் ஒரு சமூகக் குற்றம் என சட்டமியற்ற வேண்டும்.

சிறார் பள்ளியிலிருந்தே இதனை போதிக்கும் வகையில் கல்விமுறையில் மாற்றம் கொண்டு வருவதும் சமூக ஒழுங்கிற்கான பாடங்களைக் கட்டாயமாக்குவதும் வேண்டும். இவை தான் இது போன்ற ஆதிக்க சாதி கொலைவெறியாட்டங்களைத் தடுப்பதற்கான சிறு துவக்கமாக அமையும்.

இன்றைய சமூகத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான உழைக்கும் மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, வாழ்வே சூனியமாகி, சோத்துக்குத் திண்டாடும் நிலையிலும், அதற்கான அரசியல் காரணங்களைக் கூட தேடாமல், சாதிப் பெருமையைப் பேசித் திரியும் மொன்னைச் சமூகமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் தான், தனது சாதிக்காரன் சாதிவெறிக்காக எந்தவொரு கீழ்த்தரமான வேலை செய்தாலும் அதைக் கொண்டாடும் மனநிலையில் ஊறிய சமூகமாக உள்ளது. எனவே,சாதிகளற்ற சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

தோழமையுடன்

வழக்கறிஞர் சி.ராஜூ
பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here