மீபத்தில் ஒரு தகவல் வந்தது. அதாவது பெங்களூரில் ‘ஆண்கள் வாடகைக்கு ‘என்று ஒரு ஆப் உருவாக்கப்பட்டு பரவி வருகிறது. பெங்களூரில் உள்ள இளம் பெண்கள் தனது ஆண் நண்பர்களுடன் சண்டை போட்டு பிரிந்துள்ள நிலையில், மன வருத்தம், மன உளைச்சலுடன் இருக்கிறார்கள். எனவே வெளியே சுற்ற வாடகைக்கு ஆண் இளைஞர்கள் தேவை!

இப்படிப்பட்ட இளம் பெண்களுக்காகவே தனியாக ஒரு ‘ஆப்’ (app) உருவாக்கப்பட்டு செயல்படுவதாக தெரிவிக்கிறது ஒரு செய்தி.

பரவி வரும் பெஸ்டி (Bestie)கலாச்சாரம்!

சென்னையில் ஒரு பெண் தனக்கு ஒரு காதலன் இருக்கும்போது துணைக்கு இன்னொரு ஆண் நண்பனுடன் பழகுகின்றனர். இது ஆண்களுக்கும் பொருந்தும். அவர்கள் தனது காதலியுடன் பழகுவதை, வாழ்க்கை துணையாகவும் மற்றொரு பெண்ணுடனும் பழகுவதை மனம் விட்டு பேசக்கூடிய மிகச்சிறந்த நட்பு என்றும் எண்ணுகிறார்கள் .இப்படி மாற்றாக பழகக் கூடியவர்களுக்கு பெஸ்டி என்று பெயர் வைத்துள்ளனர். அது ஆண் பெஸ்டி, பெண் பெஸ்டி என்று சமீப காலமாக பரவுகிறது.

காதலர்கள் தமக்குள் அந்தரங்கமாக மனம் விட்டு பேசிக்கொள்வதை விட தத்தமது பெஸ்டிக்களுடன் தான் நெருக்கமாக பழகுகிறார்கள் இதனாலேயே காதலர்களுக்குள் இடைவெளி அதிகரித்து பிரிந்து போவதும் நடக்கிறது.

வீக் எண்டு பார்ட்டி கலாச்சாரம்!

ஒரு நாள் மகாபலிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி பேருந்தில் பயணித்தேன். அன்று சனி இரவு 10 மணி இருக்கும். இசிஆரில் ஒரே கடுமையான போக்குவரத்து நெரிசல். நான் வந்து கொண்டிருந்த பேருந்து இன்ச் இன்ச் ஆக ஊற ஆரம்பித்தது.

என்ன காரணம் என்று பார்த்தால் சனிக்கிழமை இரவுகளில் ஈசிஆர் இல் உள்ள ரிசாட்களில், தீம் பார்க்கில் நடக்கும் கொண்டாட்டங்கள். நடுத்தர வர்க்க, மேட்டுக்குடியினரான பெரும்பாலானவர்கள் கார்களில் வருவதால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கார்கள் சாலையினுள் நுழைகின்றன. பைக்கில் வந்தவர்களும் உண்டு என்றாலும் போக்குவரத்து நெரிசலுக்கு அவர்கள் காரணமல்ல. கொண்டாட்டங்கள் முடிந்து ஒரே நேரத்தில் வெளிவரும் நூற்றுக்கணக்கான கார்களால் இருபுறமும் வாகனப் போக்குவரத்து அடியோடு நின்று ஊர்ந்து செல்வதாக மாறுகிறது.

இதில் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் ஜோடியாக பேருந்தில் வந்துவிட்டு கொண்டாட்டங்களை முடித்து மீண்டும் பேருந்தில் ஏறுகின்றனர். அனைவர் கைகளிலும் கடிகாரத்துக்கு பதிலாக க்யூ ஆர் கோடு போட்ட பேண்ட் கட்டப்பட்டிருந்தது.

அதாவது முன்கூட்டியே பணம் கட்டி மொத்தமாக கொண்டாட்டங்களுக்கு புக்கிங் செய்கிறார்கள். அனுமதிக்கான கூப்பன்களுக்கு பதிலாக ஹைடெக்காக க்யூ ஆர் கோடு பேண்டுகளை கொடுத்து விடுகின்றனர்.

முட்டுக்காட்டில் இருந்து திருவான்மியூர் செல்ல பாண்டிச்சேரி பேருந்தில் 50 ரூபாய் கட்டணம் குறைந்தபட்ச கட்டணம் என்று கண்டக்டர் விளக்கினாலும் ,பரவாயில்லை! என்று கூட்டம் கூட்டமாக ஏறுவதையும் பார்க்க முடிந்தது.

எதை நோக்கிச் செல்கிறது இளைய தலைமுறை?

என் அருகில் உட்கார்ந்த இரண்டு கல்லூரி பெண்களும் சிரித்து பேசிக்கொண்டு குதூகலமாக வந்தனர். அவர்களின் ஆண் நண்பர்கள் அருகில் நின்றபடி வந்தனர். அப்பொழுது ஒரு பெண்ணின் செல்போன் அடித்தது. அவர் இயல்பாக ஆங்கிலத்தில் கல்லூரி முடித்து வெளியில் வந்து விட்டு விடுதிக்கு செல்வதாகவும் சொல்கிறார்.  ஓகே டேக் கேர் டாட்” என்று இயல்பாக பேசி முடிக்கிறார். அப்பொழுது மணி 11.00 இருக்கும். நல்ல வேலையாக அப்பெண்கள் சரக்கு எதுவும் அடித்திருக்கவில்லை.

நள்ளிரவை தாண்டியும் நடக்கும் கொண்டாட்டம்!

சில பார்ட்டிகள் 10 மணிக்குள் முடியாது. இரவு 12 ஐயும் தாண்டும். கூடி கூத்தடித்து முடிந்து சரக்கு போதையில் சொகுசு காரில் வெளிவந்து ECR இல் அதிகாலையில் நடக்கும் விபத்துக்களுக்கு குறைவேதும் இல்லை.

குடும்பத்துடன் அதிகரிக்கும் இடைவெளி!

ஏகாதிபத்தியம் உருவாக்கும் நுகர்வு வெறி, சென்னையில் பூத்துக் குலுங்கும் ஐடி நிறுவனங்களின் வீக்கெண்ட் பார்ட்டி கலாச்சாரம் என இன்றைய இளம் தலைமுறை சீரழிக்கப்படுகிறது.

பெற்றோர்களுடன் நட்பாக பழக இவர்கள் தயாராக இல்லை. இவர்களின் பழக்க வழக்கங்களை, விருப்பங்களை அங்கீகரிக்க பழமையை விரும்பும் பெற்றோர்களும் தயாராக இல்லை. இதில் மேட்டுக்குடியினரில் விதிவிலக்கு உண்டுதான்.

இதையும் படியுங்கள்: எது அழகு என்று புரியாமல்  பலியாகும் நடுத்தர வர்க்க- மேட்டுக்குடி பெண்கள்!

எனவே தனித்து வாழும், லிவிங் டுகெதர் முறையில் வாழும் இளம் தலைமுறை எளிதாக தமது துணையை கைவிடுவதும், புதிதாக ஒன்றைத் தேர்வு செய்வதும் நடக்கிறது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள வாடகைக்கு ஆட்களை அனுப்பவும் கார்ப்பரேட்டுகள் ஆப்பை (App) உருவாக்கி கடை விரிக்கின்றன.

நாம் ஆணாதிக்க அடிப்படையிலான, சாதி வெறி பெருமித அடிப்படையிலான, பழைய பண்ணையார் பாணியிலான, கிராம குடும்ப அமைப்பை அப்படியே நீட்டிக்க வேண்டும் என்று வாதாடவில்லை. அதே நேரம் குடும்பமே தேவையில்லை, உறவுகளே தேவையில்லை என்று எதார்த்தத்தில் இருந்து விலகி, மாய உலகத்திற்குள் செல்லும், போதை பழக்கத்திற்குள் செல்லும், நுகர்வு வெறிக்குள் அமிழும் இளம் தலைமுறையின் சீரழிவுகளை அப்படியே ஆதரிக்கவும் முடியாது.

அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

ஏகாதிபத்தியம் கடை விரிக்கும் கேடுகெட்ட பண்பானது, அவர்களின் நாட்டில் இளைஞர்களை குடும்பத்தில் இருந்து துண்டித்து, ரோட்டில் அலைய விடுகிறது. சிலர் நல்ல வேலை கிடைத்து முன்னேறிக் கொள்கிறார்கள். பலர் விரும்பிய துறையில் விரும்பிய வேலை,பதவிக்கு உயர முடியாமல் கைவிடப்பட்டு, போதைக்கு அடிமையாகி, தற்கொலைக்கும் தள்ளப்படுகிறார்கள். அல்லது மற்றவர்களை சுட்டுத்தள்ளிவிட்டு சாகிறார்கள்.

தமிழகத்திலும் சென்னை போன்ற மெட்ரோ பொலிட்டன் சிட்டிகளில் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. பெங்களூர் போன்ற நகரங்களிலும் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக ஐடி துறையினர் படித்து நுகர்வு வெறிக்குள் தள்ளப்பட்டு வாழ்க்கையை தொடங்கிய சில வருடங்களிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.

அடுத்த தலைமுறையை பாதுகாப்பது எப்படி?

நாம் என்ன செய்ய வேண்டி உள்ளது? ஏகாதிபத்தியம் பரப்பும் நுகர்வு வெறியை, சீரழிவு கலாச்சாரத்தை விட்டு வைக்கப் போகிறோமா அல்லது துடைத்தெறிய போகிறோமா? முடிவை நாம் எடுப்போம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here