நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் சாதிய வன்மத்தால் வீடு புகுந்து அறிவாளால் வெட்டிய சம்பவத்தை தொடர்ந்து பள்ளி கல்லூரிகளில் சாதி மத பாகுபாடுகளை களையவும் நல்லிணக்கம் ஏற்படுத்தவும் அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தனி நபர் குழு அமைக்கப்பட்டது.

அதன்படி ஆய்வு செய்த குழுவானது 20 பரிந்துரைகள் அடங்கிய 650 பக்க அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் ஜூன் 18 ஆம் தேதி சமர்ப்பித்தார் நீதிபதி சந்துரு.

அறிக்கையில் உள்ள அம்சங்கள் வெளியான உடனேயே ஹெச் ராஜா போன்ற மத வெறியர்கள் பொங்க ஆரம்பித்தனர். பார்ப்பனியத்தின் அடிப்படையான சாதிய கட்டமைப்பை அசைப்பதால் இந்து முன்னணி, ஹெச். ராஜா போன்றோரின் அரசியல் பிழைப்பிற்கே வழியில்லாமல் போய்விடுமே, அடிமடியில் கை வைக்கிறார்களே என்ற அச்சம் அவர்களைத் தொற்றிக் கொண்டது.

மாணவர்களை பள்ளி பருவத்திலேயே சாதிவெறியூட்டி வளர்த்தால் தான் அவர்களை மத வெறியர்களாக ஆக்க முடியும் என்பதே காவி பாசிஸ்டுகளின் திட்டம். அதனால் தான் பள்ளி பாட புத்தகங்களிலேயே புதிய கல்விக் கொள்கையின் மூலம் சாதி மத தொடர்பான பாடங்களை புகுத்தி மாணவர்களிடம் தப்பெண்ணத்தை விதைக்கிறார்கள்.

ஜூன் 18 அறிக்கை வெளிவந்த மறுநாளே சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, முன்னாள் நீதிபதி சந்துரு வழங்கிய அறிக்கையின் பரிந்துரைகள் சர்ச்சைக்குரியதாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையிலும் உள்ளதாக இருக்கிறது என பதற்றத்துடன் பேசினார்.

சங்பரிவார் கும்பல் மற்றும் அவர்களின் அடிப்பொடிகளைத் தவிர மற்றவர்களால் இந்த பரிந்துரைகள் பெரிதும் வரவேற்கப்பட்டன. மாணவர்கள் கையில் சாதிக்கயிறு கட்டக் கூடாது, நெற்றியில் திலகம் இடக்கூடாது, சாதிய அடையாளங்களை பயன்படுத்தக் கூடாது, சாதிப் பெயர்களில் பள்ளிகள் இருக்கக் கூடாது என்பதற்கே துள்ளிக் குதிக்கிறது மதவெறி கும்பல். இதிலிருந்தே மாணவர்களிடம் சாதிய உணர்வை வளர்க்க இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இரண்டு மாதங்கள் கடந்து தற்போது சந்துருவின் பரிந்துரைகளுக்கு எதிராக ஒரு எதிர் குரல் எழுந்துள்ளது. அவர் வேறு யாருமில்லை சட்டத்தையும், தர்மத்தையும் சாதி பேதம் இன்றி காப்பாற்றி தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதி தான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த அறிக்கைக்கு எதிராக நாம் எப்போது நஞ்சை கக்கலாம் என காத்துக் கொண்டிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன், அந்த தருணம் கிடைக்காமல் போகவே சம்பந்தமில்லாத அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன்கள் நியமிக்க தொடரப்பட்ட வழக்கில், இப்படி பேசி உள்ளார்; “அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன்கள் நியமிக்கப்படவில்லை. ஆனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய பள்ளி, கல்லூரிகளில் சாதிய மோதல்களை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தீர்கள். அவர் பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக் கொண்டீர்கள்…” எனத் தொடர்ந்த சுப்பிரமணியன் “நீதிபதி சந்துரு பரிந்துரைகள் என்னை பொருத்தவரையில் ஏற்புடையதல்ல…” என்று நஞ்சை கக்கிவிட்டார். மேலும், “ஓய்வு பெற்ற நீதிபதியின் பரிந்துரைக்கு பின்னரே நான் பொட்டு வைத்து வருகிறேன்” என தனது விசுவாசத்தை நிரூபித்துள்ளார் நீதிபதி சுப்பிரமணியன். ‌

படிக்க:

 ’ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பரிந்துரையை அமுல்படுத்தாதே’ பார்ப்பனக் கும்பலின் வெறித்தனம்! வேடிக்கை பார்க்காதே!

♦ நாங்குநேரிகளுக்கு தீர்வு காண்பது எப்படி?

இரண்டு மாதங்களாக தனது மனதில் உள்ள பாரத்தை இறக்கி விட்டார் நீதிபதி சுப்ரமணியன். இதற்காக அவர் கையாண்ட ஒப்பீடு எவ்வளவு அபத்தமானது! மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தர டீன்களை நியமிக்க வேண்டும் என்பதில் நமக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை. மாறாக, ஆன்லைன் ரம்மி தடை, சாதி மோதல் தவிர்க்க ஆய்வு இவையெல்லாம் ஒன்றா என்பதை நீதிபதி சுப்பிரமணியன் சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம். அவரது சாதிப்பற்று கருத்தானது இந்த வழக்கில் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று.

இதிலிருந்து எச். ராஜா, இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறார் நீதிபதி சுப்ரமணியன். இவரைத்தான் முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு அழைத்து சிறப்பித்து இருந்தார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. நீதிபதியின் சாதிப்பற்று கருத்துக்கு எதிர்வினை ஆற்றுவாரா சேகர் பாபு? இல்லை கமுக்கமாக கடந்து போவாரா?

சாதிய கட்டுமானங்களை பாதுகாத்தால் தான் பார்ப்பனியமும் காவி கும்பலும் தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும். 2000 வருடங்களாக கட்டிக் காப்பாற்றிய சாதியத்திற்கு ஆபத்து ஏற்பட்டால் தங்கள் பொறுப்பை உணர்ந்து குரல் கொடுக்கிறார்கள் ஹெச்.ராஜா வகையறாக்கள். அவர்களில் ஒருவர்தான் நீதிபதி சுப்பிரமணியனும்.

ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பல் தமிழகத்தில் காலூன்ற தொடங்கிய நாள் முதல் மாணவர்களிடம் சுயசாதிபற்றை ஊட்டி வளர்க்க சாதி கட்சிகளையும், அமைப்புகளையும் பயன்படுத்திக் கொண்டது. அதனால் ஏற்படும் விளைவுதான் சக மாணவனின் முதுகில் பிளேடால் கிழிப்பது, வீடு புகுந்து வெட்டுவது தாக்குவது பொது இடங்களில் அடித்துக் கொள்வது என தொடர்கிறது. அதற்கு சாதி அடையாளங்களாக சாதிக்கு ஏற்றவாறு பல வண்ண கயிறுகளை கட்டி விடுகிறார்கள். இந்த கேடான செயல்களுக்கு சில பெற்றோர்களும் பலியாகி விடுகிறார்கள்.

தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆய்வில் அருணா ஜெகதீசன் அறிக்கையை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டது போல், நீதிபதி சந்துரு அறிக்கையை கிடப்பில் போடாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதுவே நீதிபதி சுப்பிரமணியனுக்கு கொடுக்கும் பதிலடியாகஇருக்க முடியும்.

நலன்.

2 COMMENTS

  1. நாங்குனேரியில் பட்டியலின ஏழை மாணவனை ‘மேல் சாதிக்காரன்’ என்ற திமிரில் வீடு புகுந்து அநியாயமாக நஞ்சூட்டப்பட்ட இளமாணவன், அறிவாளால் வெட்டிச் சாய்த்தபோது பாராமுகமாக இருந்த- வாய் திறவாத நீதிபதி சுப்பிரமணியன், இத்தகு இழிவான செயல்கள் தொடரக் கூடாது என்பதற்காகத் தமிழக அரசால், ஓயவு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்துத் தக்கப் பரிந்துரைகளும் பெற முனைந்தால் சம்பந்தமில்லாத வழக்கில் இக்குழுவையும், நீதிபதி சந்துரு பரிந்தரையையும் சம்பந்தமில்லாத வழக்கு ஒன்றில் நிராகரித்துக் கருத்துப் பதிவு செய்துள்ள நீதிபதி சுப்பிரமணியனின் செயல் சரியானது அன்று. RSS சங்பரிவார் H.ராஜா கும்பலுக்கு வலிந்து ஆதரவுக்கரம் நீட்டுவதாக அமைந்துள்ளது நீதிபதியின் கருத்து. சர்வமும் காவிமயமாகிறது!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here