தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த (பட்டியலினம்) மென் பொறியாளர் கவின் செல்வகணேஷ். சென்னை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரும் திருநெல்வேலியில் சித்த மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் சுபாஷினியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

சென்னையில் பணியாற்றி வந்த கவின்  தமது தாத்தா விபத்து ஒன்றில் சிக்கி திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதைப் பார்க்க வந்துள்ளார். அப்போது சுபாஷினி உங்கள் தாத்தாவை தான் பணிபுரியும் திருநெல்வேலி மருத்துவமனையிலேயே சேர்த்து விட்டால் எளிதாக சிகிச்சை பெற வாய்ப்பு இருக்கிறது என்ற யோசனையை கூறியுள்ளார்.

அதனடிப்படையில், 2025 ஜூலை 28 அன்று கவின், அவரது அம்மா, அவரது மாமா மூவரும் திருநெல்வேலி சித்த மருத்துவமனையில் சுபாஷினியை சந்தித்து கலந்துரையாடி உள்ளனர். கவின் குமாரின் அம்மாவும், மாமாவும் சுபாஷினியிடம் கலந்தாலோசனை செய்து கொண்டிருந்த நேரத்தில் கவின் வெளியில் நின்று கொண்டு இருந்திக்கிறார். அந்த சமயத்தில், சுபாஷினியின் தம்பி சுர்ஜித், கவினிடம் இலகுவாக அணுகி, தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளான்.

தன் வீட்டு வாசலில் இறங்கியவுடன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளைஞர் கவினை வெட்டி வீழ்த்திப் படுகொலை செய்துள்ளான் சுர்ஜித். அதன்பின் அவன் காவல் நிலையத்தில் சரண் அடைகிறான். அவனைக் காவல்துறை கைது செய்துள்ளது.

சுர்ஜித்தின் பெற்றோர் இருவருமே காவல்துறையில் பணிபுரிகின்றனர். இக்கொலையில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்ற போதிலும் இதுவரை அவர்கள் இருவரும் கைது செய்யப்படவில்லை. இப்படிப்பட்ட ஈவிரக்கமற்ற வன்கொலைக்கு எப்படித்தான் முடிவு கட்டுவது?

பணம், நல்ல வேலை இருந்தால் சாதிமறுப்பு காதலை ஆதிக்க சாதியினர் ஏற்றுக் கொள்வார்கள் என்ற வாதம் தவறானது என்பதை கவின் படுகொலை உணர்த்தியுள்ளது.

தொடர்கிறது இந்நிகழ்வுகள். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும் என்பதில் கடுகளவும் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் சட்டங்களாலும்  தண்டனைகளாலும் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வினை எட்ட முடியுமா என்பது தான் நம்முன் உள்ள கேள்வி?

‘பெரியார் பிறந்த மண்’; ‘திராவிட மாடல் அரசு’ – சாதி வன்கொடுமைகளைத் தடுக்க என்ன செய்யப் போகிறது?

தமிழ்நாட்டில் ஆதிக்க சாதி வெறியாட்டங்கள் பல்லாண்டுகளாக தொடர்ந்து வண்ணம் தான் உள்ளன. இவை சாதி மறுப்பு திருமணங்களால் மட்டுமின்றி பலதரப்பட்ட பிரச்சனைகளின் அடிப்படையில்  பட்டியலின மக்கள் அழித்தொழிக்கப்படுவதில் குறைவின்றி நடந்து கொண்டிருக்கின்றன. பல்வேறு அவமானங்களையும் அவர்கள் கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

1978 களில் தற்போதைய சிவகங்கை மாவட்டம் உஞ்சனை கிராமத்தில் ஏரிக்கரையில் அமைந்திருக்கும் பொதுவான அனைத்து மக்களுக்குமான அய்யனார் கோவிலுக்கு குதிரை எடுப்பு விழா நிகழ்ந்த பொழுது, அங்கே ஆதிக்க சாதி வெறியர்களான கள்ளர்களுக்கும், பட்டியலின பள்ளர் மக்களுக்கும் பெரும் கலவரம் ஏற்பட்டு பட்டியலினத்தோரின் வீடுகள் பலவற்றை அடித்து நொறுக்கியதோடு, குதிரை எடுப்புக்கு தயாராக இருந்த மண் குதிரைகளையும் அடித்து நொறுக்கி, பட்டியலின ஐவரைக் கொலை செய்தனர் ஆதிக்க சாதி வெறிக் கள்ளர்கள். ஆனால் அதில் சம்பந்தப்பட்ட கொலைக் குற்றவாளிகள் 23 பேருமே குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லி நீதிமன்றம் விடுதலை செய்தது. 1968 கீழ்வெண்மணி படுகொலை தீர்ப்பை போல.

உஞ்சனை அருகில் உள்ள கண்டதேவி கோவில் தேரோட்டமும் அனைத்து சாதியினரும் இணைந்து தேர் இழுப்பதை ஏற்றுக்கொள்ளாத ஆதிக்க சாதி வெறி கூட்டம் இதே சாதி பிரச்சனைக்காக பல்லாண்டுகளாக தேர் இழுக்கப்படாமல் நிறுத்தப்பட்டு இந்த வருடம் இழுக்கப்பட்டது போன்ற ஒரு பாவனையை அதிகார வர்க்கம் செய்து முடித்துள்ளது. அரசாங்கமும் அதில் பெயர் ஈட்டிக் கொண்டதாக காண்பித்துக் கொள்கிறது.

அதேபோன்று மதுரை மாவட்டம் மேலூரில் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த முருகேசன் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் ஆதிக்க சாதி வெறியர்களான கள்ளர் சாதியினரால்.

அண்மையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிப் பருவ மாணவர்கள் ஒன்றிணைந்து பாடம் கற்க வேண்டிய சூழலில் பட்டியலின மாணவன் அதிக மதிப்பெண் பெறுகிறான்; விளையாட்டுகளில் சிறந்த திறமையை வெளிப்படுத்துகிறான் என்ற பொறாமை உணர்வில் சக ஆதிக்க சாதி சமூக மாணவன் கத்தியை வைத்து கீறுவதும், முதுகில் கத்தியால் கிழித்து விடுவதும் காலில் காயங்கள் ஏற்படுத்துவதும் கொலை செய்வதற்குமே அஞ்சாத சூழலை உருவாக்கினான்.

பட்டியல் இன மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் ஆதிக்க சாதி வெறியர்கள் மலத்தைக் கலந்து விடுகின்றனர். ஆனால் அந்த வழக்கு திசை திருப்பப்படுகிறது.

படிக்க:

 கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கு: கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி!

 அழகேந்திரன் ஆணவப்படுகொலை! மக்களுக்கு விடப்படும்  எச்சரிக்கை!

சுடுகாட்டுக்குப் பிரச்சனை; சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில் பிரச்சனை; இரட்டைக் குவளை பிரச்சனை… இப்படி பட்டியலின மக்கள் பாதிக்கப்படுவது ஒன்றல்ல இரண்டல்ல அடுக்கிக் கொண்டே போகலாம்.

இது போல் தான் சாதி மறுப்பு திருமணம் செய்யும் காதலர்கள் இருவரையும் சேர்த்தோ அல்லது தனிநபர் ஒருவரையோ கொலை செய்யும் கொடுஞ்செயல்கள் தொடர்ந்து வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இது ‘பெரியார் பிறந்த மண்’, ‘திராவிட மாடல் அரசு’, ‘சனாதனத்தை எதிர்க்கும் மண்’ என்றெல்லாம் வெற்று ஜம்பம் அடிப்பதில் என்ன பெருமை இருக்கிறது?  மேம்போக்காக சில மாற்றங்களோடு‌ திருப்தி கொள்ள போகிறோமா?

ஆணவப் படுகொலைகள் தான் எத்தனை? எத்தனை?

கடந்த ஏப்ரல் மாதம் பல்லடம் அருகே பறுவாய் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான வித்யா என்ற முதுகலைப் பட்டதாரி மாணவியைக்கொலை செய்து இருக்கிறான் அவனது உடன்பிறந்த அண்ணன் சரவணகுமார்.

ஆனால் கொலை செய்ததை மறைத்து தன் தங்கை மேல் பீரோ விழுந்து இறந்து விட்டதாக பசப்பி உடல் அடக்கம் செய்து விட்டனர். பின்பு அப்பெண்ணின் காதலன் வெண்மணி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்து விசாரணை தொடங்கிய பின் தங்கையை கொலை செய்த உண்மையை ஒப்புக்கொள்கிறான் அண்ணன் சரவணகுமார். வழக்கு ஓடிக்கொண்டிருக்கிறது.

மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீரங்க ராயன் ஓடை பகுதியை சேர்ந்த கருப்புசாமி – பூவாத்தாள் தம்பதியரின் மகன்கள் வினோத்குமார் (25), கனகராஜ் (22), கார்த்திக் (19). மூவருமே சுமை தூக்கும் தொழிலாளர்கள் மட்டுமே. ஆனால் இவர்களுக்கு ஆதிக்க சாதி பின்புலம் இருக்கிறது. இவர்களில் கனகராஜ் பட்டியல் இனத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியாவை காதலிக்கிறார்.

ஆதிக்க சாதி கனகராஜ் வீட்டிலும் எதிர்ப்பு; அச்சத்தின் காரணமாக பட்டியலின வர்ஷினி வீட்டிலும் எதிர்ப்பு. வர்ஷினி தனது வீட்டை விட்டு வெளியேறி கனகராஜ் வீட்டில் தஞ்சம் புகுகிறார். கனகராஜ் பெற்றோரோ நீங்கள் இருவரும் வேறு வீடு பார்த்துச் செல்லுங்கள்; பின்னர் நானே முன்னின்று திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்கின்றனர். ஆனால் இம்முடிவிற்கு கனகராஜின் சகோதரர்கள் இருவரும் உடன்படவில்லை. எனவே பெற்றோரின் ஏற்பாட்டை விரும்பாத கனகராஜ் அண்ணன் வினோத்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது தம்பி கனகராஜை வெட்டி வீழ்த்துகிறான். வெட்டுண்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் விடுகிறான்.

தடுக்க வந்த வர்ஷினியையும் அவரது தாய் அமுதா முன்னிலையில் வெட்டுகிறான். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின் சிகிச்சை பலனின்றி வர்ஷினியும் இறக்கிறாள். இவ்வழக்கில் வினோத் குமாருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

இதைப்போல நெல்லையில் மதன் என்ற பட்டியலின இளைஞனும், ஆதிக்க சாதி பெண்ணான உதயதாட்சனியும் ஒருவருக்கொருவர் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 2024 ஜூன் 13ஆம் தேதி திருமணம் செய்து கொள்கின்றனர். அதனைப் பதிவு செய்வதற்கு நேரடியாக செல்வதற்கு அஞ்சி, நெல்லை மார்க்சிஸ்ட் கட்சி உதவியை நாடியுள்ளனர். இதை அறிந்த பெண் வீட்டாரின் பந்தல் ராஜா என்பவனும் அவனோடு சேர்ந்த பெரும் கும்பலும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தை அடித்து நொறுக்கி அங்குள்ள பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சிதைத்து விட்டனர்.

2024-ல் நிலக்கோட்டை அருகில் பெண் ஒருவர்  பட்டியல் இனத்தைச் சேர்ந்த சேர்ந்த இளைஞரை திருமணம் செய்தமைக்காக ஊர் நடுவில் நாயை கட்டும் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டார். பின் ஊரில் பணம் வசூலித்து ஒரு தண்ணீர் லாரியை கொண்டு வரச் செய்து அதில் மஞ்சள் கலந்து ஊரையே கழுவி சுத்தம் செய்தனராம். மூன்று நாட்களில் அப்பெண் கொலை செய்யப்பட்டார்.

இந்த ஆண்டு துவக்கத்தில் பட்டுக்கோட்டை அருகே MBC வகுப்பு பெண் ஒருவர் பட்டியலின வகுப்பு இளைஞரை காதலித்து திருமணம் செய்தமைக்காக பெண்ணின் தந்தையே தான் பெற்ற  மகளை ஒரு மரத்தில் தூக்கிலேற்றி கொலை செய்து உள்ளார்.

கோகுல்ராஜ், சங்கர், கவின்குமார் என ஆணவக் கொலைகள் அனைத்து ஆட்சிக் காலத்திலும் நடந்து கொண்டே இருக்கின்றன.

2017-ம் ஆண்டு துவக்கம் முதல் 2025 ஜூன் வரை மட்டும் சுமார் 65 ஆணவப் படுகொலைகள்/தாக்குதல்கள் நடந்துள்ளன.

பட்டுக்கோட்டை, திருமங்கலம், சென்னை சீனிவாசா நகர் மற்றும் பள்ளிக்கரணை, சத்தியமங்கலம், மதுரை அவனியாபுரம், விருதுநகர், நெல்லை இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.

இவற்றில் கொலை செய்யப்பட்டோரில் தம்பதியர் இருவருமோ அல்லது ஒருவர் மட்டுமோ கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இக்கொடுமைகளுக்கு முடிவு தான் என்ன?

ஆங்கிலத்தில் பெருமிதமாக சொல்லப்படும் ‘Honour Killings’எனப்படும் ஆணவப் படுகொலைகள் பெரும்பாலும் சொந்த குடும்பத்தாராலேயே கௌரவத்திற்கு இழுக்கு எனச் சொல்லிக் கொன்று குவிக்கின்றனர்.

இந்திய அளவில் இதற்கு பிரதான காரணம் பார்ப்பனீய சனாதனம் வகுத்தளித்த மனஸ்மிருதி  பகவத் கீதையின் படியிலான சாதிய படிநிலை கட்டுமானங்கள் தான் என்றாலும், தமிழ்நாட்டில் இந்த பார்ப்பனர்கள் ஒதுங்கி நின்று தொந்தியை வளர்த்துக் கொண்டு ஆணவப் படுகொலை ‘காட்சி’களை ரசித்து கொண்டுள்ளனர்.

மக்கள் மூடநம்பிக்கைகளில் ஆன்மீகம் என்ற பெயரில் மூழ்கிக் கிடந்து வேல் குத்துவது, தீ மிதிப்பது பாதயாத்திரை செல்வது இப்படி நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கிறார்களே ஒழிய அறிவை விருத்தி செய்து கொள்வதற்கான எந்த முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள தயாரின்றி உள்ளனர். அந்த வகையில் பார்ப்பனர்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை மென்மேலும் பின்னுக்குத் தள்ளி, அவர்கள் உண்டு கொழுத்து அனைத்து அதிகார வர்க்க பணிகளில் அமர்ந்து கொண்டு ஆட்சி புரிகின்றனர்.

நமது மக்களோ சகல வழிகளிலும் வதைபடுகின்றனர். அதே சமயம், ஊர் பெரியவர்களே சாதிய உணர்வுகளை ஊட்டி வளர்ப்பதும், அதன் காரணமாக தத்தம் பிள்ளைகளை – இளைஞர்களை சாதி வெறிக்கு ஆட்படுத்துவதும் மாணவப் பருவத்திலேயே  இளைஞர் பருவத்திலேயே சாதி வெறியை ஒவ்வொரு குடும்பத்து உறுப்பினர்களின் மூளைகளில் பதிய வைக்கும் கொடுமை நிலவுகிறது.

சாதி வெறியை வளர்த்து விடுவதில் வாக்கு வங்கியை எதிர்நோக்கும் அனைத்துக் கட்சிகளும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தும்பொழுது கூட தொகுதியின் சாதிப்பலம்; வேட்பாளரின் பணபலம்; செல்வாக்குப்பலம் இவற்றை கணக்கீடு செய்தே தேர்வு செய்யப்படுகின்றனர். ஓட்டுக் கட்சிகளில் இவ்விடயத்தில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. அப்படியெனில் கொள்கை வழிப்பட்ட இயக்கமாக வெளியில் தான் காண்பித்துக் கொள்கிறார்களேயொழிய, விதிவிலக்காக சற்று வேறுபாடுகளை முன் பின் காண்பித்துக் கொள்கிறார்களே ஒழிய சாதிய கட்டுமானத்தை அடித்து நொறுக்கி சமூகம் மாற்றம் காண்பதற்கான வழிவகைகளை அவர்கள் தன்னகத்தே கொண்டோராயில்லை. பிழைப்பு வாதங்களே கோலோச்சுகிறது.

மானாமதுரை பகுதியில் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞன் புல்லட் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ததற்காக அந்த இளைஞனின் இரண்டு கரங்களையும் வெட்டினார்கள் ஆதிக்க சாதி வெறியர்கள்.

இப்படிப்பட்ட துணிச்சலும் வன்மமும் ஏன் அந்த ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஏற்படுகிறது?

விலைவாசி உயர்வும், வேலையில்லா திண்டாட்டமும், பசி பஞ்சம், பட்டினியும்,தொழிலாளர்கள் கொடுக்கும் முறையும், வேலை பறிப்பும் மற்றும் இழப்பும் சாதி பார்த்து வருவதில்லை. இவை அனைத்து இன்னல்களும் அனைத்து சாதி உழைக்கும் மக்களுக்கும் பொதுவானது என்பதனை உணராமல் வெற்றுத்தனமான ஜாதிய வெறி ஜம்பத்தில் மூழ்கிக் கிடப்பது வெட்கக்கேடானது என்பதை உழைக்கும் மக்கள் உணராத வரை, அவர்களுக்கு உணர்த்தப்ப டாத வரை இப்பிரச்சனைகள் நீடித்த வண்ணமே இருக்கும்.

இது ஒரு புறமெனினும், கல்விச்சாலைகளில், பாடப்புத்தகங்களில், மாணவர்களுக்கு புகட்ட வேண்டிய சமூகப்பற்றுதலை, சாதி மறுப்பு சிந்தனைகளை பெருமளவு ஊட்டுவதற்கான வாய்ப்புகளே இல்லை என்பது நிதர்சனமான உண்மை. மற்றொன்று இதை கண்காணிக்க வேண்டிய அதிகார வர்க்கமும் கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரிய பெருமக்களும் கூட ஆதிக்க சாதி வெறி கண்ணோட்டத்தை உடையவர்களாக இருக்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இவற்றுக்கு  பார்ப்பன சங்பரிவார் இந்துத்துவ கோட்பாடுகள் அடித்தளமாக இருக்கின்றன

புரட்சிகர சிந்தனைகளும் புரட்சிகர சமூக மாற்றமுமே ஒரே தீர்வு!

இடது சாரி சிந்தனையாளர்கள், புரட்சிகர இயக்கங்கள், பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்ட்கள், கற்றறிந்த ஆய்வாளர்கள், சகலவித முற்போக்காளர்கள்…இவர்களின்  ஒருங்கிணைவும் மக்களிடம் ஊடுருவி இத்தகைய சாதிய பாகுபாட்டை தெள்ளத் தெளிவான – விஞ்ஞானபூர்வமான தீர்வுகளுடன் சென்று பணியாற்றவதும்- குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பங்களிப்பு செய்ய வேண்டியது பாரியக் கடமையாக உள்ளது- தவிர வேறு வழி இல்லை. அதுவரை தூத்துக்குடி மாவட்டம் கவினுக்கு ஏற்பட்டது போன்ற ஈவிரக்கமற்ற கொடுமைகள் முற்றுப் பெறச் சாத்தியமில்லை.இருக்கக்கூடிய பெயரளவிற்கான சட்ட நடவடிக்கைகள் மட்டும் கூடவே பயணிக்கும்.

  • எழில்மாறன்

2 COMMENTS

  1. தோழர் நீண்ட நெடிய பதிவு மிக அற்புதமாக தெளிவாக ஆதிக்க சாதிகளை தோல் உரித்து எழுதி உள்ளீர்கள் சிறப்பாக உள்ளது இந்த ஆணவ கொலைக்கு காரணமாக இருக்கும் பார்ப்பன கொள்கையே காரணம் இதனை ஒழிக்காமல் இந்த கால இளைஞர்களுக்கு விடிவு என்பது இல்லை

  2. தலித்துகள் மீதான தாக்குதல்கள் படுகொலைகள் அதன் விவரங்கள் நெஞ்சை பதபத்தக்க வைக்கிறது தமிழக அரசு இதுபோன்ற சாதியை தாக்குதல்கள் ஆணவ படுகொலைகள் போன்ற சம்பவங்களில் உடனடியாக அதற்கான சட்டங்களை வகுத்து மனித சமூக இழிவை போக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here