அரசு மருத்துவர்- ஏழை நோயாளி முரண்பாடு: தீர்வுகாண வழி என்ன?

24 மணி நேரம் செயல்படக் கூடிய மருத்துவனைகளில் 1 மருத்துவர் மட்டுமே உள்ளதால் 24/7 சிகிச்சை அளிக்க முடியாத நிலைமை உள்ளதாக தமிழக அரசுக்கு தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம்  அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

3

மீபத்தில் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் இளைஞர் ஒருவர் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் தற்போது ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளதாக செய்திகளில் பார்க்க முடிகிறது. இதில் யார் மீது தவறு உள்ளது என பொதுவெளியில் விவாதங்கள் பரவலாக நடந்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த குறிப்பிட்ட பிரச்சினையை மட்டும் எடுத்துக் கொண்டு விவாதிப்பது ‘யூடியுப்’ சேனல்கள் கல்லா கட்ட வேண்டுமானால் உதவுமே ஒழிய எந்த மாற்றத்தையும் கொண்டு வராது.

ஒவ்வொரு நாளும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கும் மருத்துவருக்கும் இடையே பல்வேறு அளவுகளில் மோதல்கள் உருவாகிறது. வாக்குவாதம், கைகலப்பு தொடங்கியது கத்தி குத்து வரை வந்துள்ளது.

அந்த மருத்துவருக்கும் இளைஞருக்கும் முரண்பாடு வர அடிப்படை காரணம் அந்த இளைஞரின் தாய்க்கு மருத்துவர் பாலாஜி கொடுத்த மருத்துவம் பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்ற அந்த இளைஞரின் கருத்தே. அதில் உண்மை இருக்கிறதா? இல்லையா?. அப்படி இருந்தால் பின்விளைவுகள் தவிர்க்கப்பட்டிருக்க முடியுமா என்பதையெல்லாம் அந்த இளைஞருக்கு விளக்கி இருக்க வேண்டும். இவற்றை செய்ய அரசு மருத்துவர்களின் பணிச்சூழல் ஒத்துழைக்கிறதா? இதையெல்லாம் பரிசீலித்தால்தான் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

அரசு மருத்துவமனைகளில் என்ன நடக்கிறது! 

இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலத்தில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது. அதிகமான மருத்துவர்கள் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் தேசிய சராசரியை விட அதிகம்.

அரசு மருத்துவமனைகளை பெரும்பாலான அடித்தட்டு மக்களும் ஒரு சில நடுத்தர வர்க்கங்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர். சென்னை போன்ற தலைநகரங்களில் உயர் சிகிச்சை சில முக்கிய அறுவை சிகிச்சைகள், லட்சக் கணக்கில் செலவு செய்யக் கூடிய சிகிச்சைகள் கூட ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஸ்டேன்லி மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றில் சிறப்பாக செய்யப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட நோயாளிகளை  அரசு மருத்துவமனைகள் தேற்றியதும் உண்டு. அதனாலேயே சென்னையில் அதி தொழில்நுட்பம் கொண்ட அரசு மருத்துவமனைகளை நோக்கி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

எந்நேரம் கூட்டம் நிரம்பி வழியும் இந்த மருத்துவமனைகளில் காத்திருந்து அறுவை சிகிச்சை பெறக் கூடிய நிலைமை தான் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நீடிக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மக்கள் தொகை பெருக்கம், நோயாளிகள் அதிகரிப்பு ஏற்ப மருத்துவனைகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டாலும் அது போதுமான அளவில் இல்லை. நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிப்பதும் இல்லை.

மருத்துவர் பற்றாக்குறை

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.

இந்தியாவிலேயே அதிகமான மருத்துவர்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருந்தாலும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறையே நீடிக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தாலும் மருத்துவ சேவையை மறந்து பணம் சம்பாதிக்க தனியார் மருத்துவமனைகளை நோக்கி செல்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2,500 காலிப்பணியிடங்களும், புறநகர் மருத்துவமனைகளில் 1000 காலியிடங்களும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 2,500 காலிப்பணியிடங்களும், மகப்பேறு மருத்துமனைகளில் 250 காலிப்பணியிடங்களும் உள்ளது.

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் ஏற்கனவே உள்ள மருத்துவர்களுக்கு கூடுதல் சுமை சேர்கிறது. உதாரணத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிப்புரியக் கூடிய மருத்துவர் மருத்துவமனையிலும் சேர்த்து பணி செய்கிறார். மகப்பேறு மருத்துவர்கள் பல நேரங்களில் 24 மணி நேரம் தொடர்ந்து பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரம் செயல்படக் கூடிய மருத்துவனைகளில் 1 மருத்துவர் மட்டுமே உள்ளதால் 24/7 சிகிச்சை அளிக்க முடியாத நிலைமை உள்ளதாக தமிழக அரசுக்கு தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம்  அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.


படிக்க: பெண்களுக்கான உரிமைகள் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை! மருத்துவர் அனுரத்னா


அதீத பணிச்சுமைக் காரணமாக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடமும் அவர்களுடன் துணைக்கு வருபவர்களிடமும் சில நேரங்களில் எரிந்து விழுகிறார்கள். மருத்துவ துறையில் உள்ள பிரச்சினைகளை அறிந்துக் கொள்ளாத சாமனிய மக்கள் மருத்துவர்களிடம் அரசு மருத்துவர்களும் அரசு மருத்துவமனையும் இப்படித்தான் என முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் இதெற்கெல்லாம் காரணம் அரசு தான் என்பதை உணர காலம் எடுக்கிறது.

சாமானிய மக்களை இளக்காரமாக பார்ப்பதும் நடக்கிறது!

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவர்களது தகுதியை பார்த்து அணுகுவதும் நடக்கத்தான் செய்கிறது. அரசு மருத்துவமனைகளை பெரும்பாலும் சாமானிய மக்கள் தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை மேலே பார்த்தோம். அப்படிப்பட்ட சாமானிய மக்கள் சில மருத்துவர்களாலும், செவிலியர்களாலும் ஒழுக்கமின்றி கையாளப்படுவதும், தகாத வார்த்தைகளில் பேசுவதும் நடக்கிறது. இந்த வெறுப்பெல்லாம் மக்களுக்கு மருத்துவமனைகளின் மீதே திரும்புகிறது.

பல மருத்துவர்கள் அரசு மருத்துவமனை வேலை போக தனியாக கிளினிக் வைத்து நடத்துவதும் உண்டு. அங்கு வரும் நோயாளிகளிடம் காசு வாங்கிக் கொண்டு கனிவாக பேசுவது போல் அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களிடம் அப்படி நடந்துக் கொள்வதில்லை.

அவர்களுக்கு போதுமான சம்பளம் கொடுத்து அரசானது மருத்துவமனைக்கு அருகிலேயே வீடு கொடுத்து பாதுகாத்தது என்றால் இது போன்ற பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால் அரசோ இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் ஒப்பந்த முறையில் மருத்துவர்களை நியமிப்பதானது பொதுமக்களை அரசு மருத்துவமனைகளிலிருந்து தனியார் மருத்துவமனையை நோக்கி செல்ல வைக்கும் செயலாகும்.

வயது முதிர்ந்து வரும் நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் காரணமாக மாத்திரைகளை வாங்கி செல்பவர்களுக்கு சரியாக பேப்பர் கவரோ, என்ன மாத்திரை எப்போது சாப்பிட வேண்டும் என்ற விவரமோ இல்லாமல் கொடுக்கும் அவலமும் நிகழ்கிறது. இந்த சின்ன பிரச்சினைகளை கூட அரசு செய்யாமல் இருப்பது அவமானகரமானது.

இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம் என்ற சுய தம்பட்டம் எல்லாம் ஒன்றுக்கும் உதவாது. அதிக மருத்துவர்கள் யாருக்கு பயன்படுகிறார்கள், யாருக்குச் சேவை செய்கிறார்கள் என்பதிலிருந்தே அதன் பயன் அடங்கும்.

அதனால் தான் மருத்துவருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் நோயாளிகள் திருப்தி அடையாத நிலைமையும் நீடிக்கிறது. இதன் பிறகாவது உணர்ந்து மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளை கனிவாக நடந்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் உணர்த்த வேண்டும்.

மருத்துவம் சேவையாக இருந்த வரையில் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் இல்லாமல் இருந்தது. அது எப்போது காசு கொழிக்கும் துறையானதோ அன்றிலிருந்தே அது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாகியது. இதற்கு அடிப்படை காரணமாக உள்ள தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அப்போது தான் இந்தநிலை மாறும்.

  • நந்தன்

3 COMMENTS

  1. ,அரசு மருத்துவர்= பணக்கார மருத்துவர் என்று பொருள் கொள்ளலாம்.

  2. அரசு மருத்துவர்கள் நிலை ஏழை நோயாளிகள் நிலை அரசின் நிலை இவற்றை முழுமையான கண்ணோட்டத்தில் பரிசீலனை செய்து தகுந்த ஆலோசனைகளை இக்கட்டுரை மேற்கண்ட முத்தரப்பிற்கும் மட்டுமன்றி மக்களுக்கும் வழிகாட்டும் வகையில் அமையப் பெற்றுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் அனைத்து வகைகளிலும் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும். கட்டுரை எழுதிய தோழருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!

  3. மருத்துவத்துறை சார்ந்த பல அனுபவங்களையும் மருத்துவமனையில் நடக்கும் குறைபாடுகளையும் தமிழ்நாடு அரசின் அலட்சிய போக்கையும் விரிவாக விளக்கி எழுதப்பட்டுள்ளது இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியருக்கு மிக்க நன்றி.

    DI ஆலோசனையாக
    தமிழக அரசு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்யும் முறை. அதற்கு விடப்படும் டெண்டர். மருந்துகளின் தரம் மருந்து தயாரிக்கும் கம்பெனிகளின் பெயர்கள்/ மருந்து மாத்திரை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் போன்றவற்றை குறித்து கட்டுரை எழுதினால் சிறப்பாக இருக்கும் இது தெய்வீகன் ஆலோசனை
    நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here