குற்றவாளிகள் இந்த சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என முடிவுச்செய்யும் காவல்துறை அதிகாரிகள் அதற்கு தகுதியானவர்களா? அவர்கள் அப்பழுக்கற்றவர்களா? உண்மை குற்றவாளிகளை சுடும் தகுதி காவல்துறைக்கு உள்ளதா? அப்படி உள்ளதென்றால் காவல்துறையில் உள்ள அயோக்கியர்களை யார் சுடுவது?

இந்த சமூகத்தாலும், முதலாளித்துவ ஆட்சி முறையாலும் உருவாக்கப்படும் கொள்ளையர்களும், கொலைகாரர்களும் இங்கு நடக்கும் அரசியலை உணராமல் கட்டப்பஞ்சாயத்து ரவுடிக் கும்பல் உருவாக்கும் சிலந்தி வலையில் ஈயை போல் சிக்கிக் கொண்டு மாண்டுப் போகிறார்கள் அல்லது காவல்துறையால் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

ஆரம்ப காலத்தில் பணம், செல்வாக்கு என காவல்துறைக்கு தெரிந்தே அவர்களுக்கு வலம் வருபவர்கள் ஒரு கட்டத்தில் யார் வளர்த்தார்களோ அவர்களாலேயே காவுக் கொடுக்கப்படுவதும் நிகழ்கிறது. பல கொலை, கொள்ளைகள் சம்பந்தப்படுபவர்கள் தனது குடும்பம் பிழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் ஏற்றுக் கொண்டு சிறை செல்கிறார்கள். சிலர் இங்கு நடக்கும் அரசியல் விளையாட்டுகளினால் போலி என்கவுண்டர்களால் கொல்லப்படுகிறார்கள்.

சில அப்பாவிகள்- சில்லறை வழக்குகளில் சிக்கியவர்கள் அதிகார வர்க்கத்தால் கொலை வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு போலி என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள். இந்த அப்பாவிகளின் குடும்பங்கள் காலம் முழுவதும் கொலைகாரன் குடும்பம் என்ற பட்டத்தை சுமக்கும். சமூகத்தில் மக்களால் புறக்கணிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த பாலியல் வல்லுறவு கொலை சம்பவத்தில் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு போலிசால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். தெலுங்கானா போலீசார் சுட்டக் கொன்ற நால்வரில் மூன்று பேர் சிறுவர்கள் கொல்லப்பட்டவர்கள் சாமானியர்கள். அவர்களுக்கு பின்புலமோ, சமூகத்தில் பலம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்தே இந்த படுகொலை  திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு புதிதாக திருமணம் ஆகி அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனை செய்த காவலர்களை சினிமா மோகத்தில் மூழ்கியிருக்கும் மக்கள் காவல்துறையை கதாநாயகர்கள் போல மாலை அணிவித்து மலர் தூவி பாராட்டினார்கள்.

சமீபமாக மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பள்ளிக்கூடம் ஒன்றில் சிறுமி ஒருவரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட 23 வயது துப்புரவு தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரிடமிருந்த துப்பாக்கியை புடுங்கி போலீசாரை நோக்கி சுட்டதனால் போலீஸ் அதிகாரிகள் தற்காப்பிற்காக அவரை சுட்டதாக ஒரு போலி மோதல் படுகொலையை நிகழ்த்தியுள்ளனர். இதனை வரவேற்று  மக்கள் மத்தியில் இனிப்புகள் கொடுத்து கொண்டாடியுள்ளது ஒரு கும்பல்.

பாலியல் வல்லுறவு போன்ற தீவிரமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வக்கற்ற காவல்துறை தனக்கெதிரே வரும் கேள்விகளை நீர்த்துப் போகச் செய்ய இதுபோன்ற போலி மோதல் படுகொலைகளை நிகழ்த்துகின்றன.

இதுபோல் பல என்கவுண்டர்கள் காவல்துறையால் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படுகின்றன. இதில் அவர்கள் சொல்லும் காரணங்கள் தங்களை தற்காத்துக் கொள்ள சுட்டோம் என்பது தான். இதே போல் மக்கள் தங்களை சமூக விரோதிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள சுட்டோம் அல்லது அடித்தோம் அல்லது கொன்றோம் என்றால் இந்த நீதிமன்றங்கள் ஒத்துக் கொள்ளுமா? அல்லது இந்த காவல்துறை பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்குமா?

ஒரு கொலை அல்லது கொள்ளை நடந்தால் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை பொறுத்தே காவல்துறையின் நீதி அமையும். கொலை செய்பவர்கள் அனைவரும் போலி என்கவுண்டரில் கொலை செய்யப்படுவதில்லை. அதே போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் எல்லோரும் கொடூரமான குற்றவாளிகளும் இல்லை. உதாரணமாக எடுத்துக் கொண்டால் குஜராத் பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அவர்களது சாதியின் அடிப்படையிலும் நன்னடத்தை எனக் கூறியும் குஜராத் அரசும் அலகாபாத் நீதிமன்றமும் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. 3 வயது குழந்தையை கொடூரமாக பாறையில் அடித்துக் கொன்றவர்கள் தான் நன்னடத்தை உள்ளவர்கள் என்கிறது அரசு.

இதிலிருந்து இந்த சமூகத்தில் யார் குற்றவாளிகள் என்பதை அவர்களது தகுதியை வைத்தே அதிகார வர்க்கம் முடிவு செய்கிறது. அவர்கள் தவறே செய்திருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தாமல் என்கவுண்டர் செய்வது சரியா என்பதை கேள்வி எழுப்பாமல் கொலை செய்பவர்களை கதாநாயகர்களாக சித்தரிக்கும் மனநிலையை மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் சிறு சிறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்கள் என்று திட்டமிட்டே புகைப்படத்துடன் செய்தியை வெளியிடும் காவல்துறை. இதனை நய்யாண்டி தொனியில் செய்திகளாக வெளியிடும் ஊடகங்கள். பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர்கள் பெரும்பாலும் சாதாரண அடித்தட்டு மக்களாக இருப்பதன் காரணம் என்ன என்று நாம் சிந்திக்க வேண்டும். இது திட்டமிட்டு போலீசால் நடத்தப்படும் வன்முறை என்று தெரிந்த பின்பும் நீதித்துறை கண்டுக் கொள்ளமால் இருப்பது ஏன்? இதில் நீதித்துறைக்கும் பங்கிருக்கிறது என நமக்கு தோன்றும் அல்லவா?

படிக்க:

 தெலுங்கானா என்கவுண்டர்: போலீசு செய்த படுகொலை!
 6 ஆண்டுகளில் 190 கொலைகள்! உத்திரபிரதேச போலீசின் ரத்த வெறியாட்டம்!!

குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜக கட்சியில் அண்ணாமலை அதன் தலைவராக பொறுப்பேற்ற பின்பு அதிகமான ரவுடிகளை கட்சியில் இணைத்துக் கொண்டார். தாங்கள் அடித்த கொள்ளையையும் கொலையையும் மறைக்க சிலர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இவர்கள் எல்லாம் அதிகார வர்க்கத்தால் ஞானஸ்தானம் வழங்கப்பட்டு நல்லவர்களாக்கப்பட்டுள்ளார்கள்.

காவல்துறை அதிகாரத்திற்கு அஞ்சியும் அவர்களது அடியாட்களிடம் அதிகாரத்தை காட்டுவதும் இந்த சமூகத்தில் இயல்பான பண்பாய் மாறியுள்ளது. உதாரணமாய் கார் டயருக்கு குனிந்து தனது அடிமைத்தனத்தை நிரூபிப்பவர்கள், கரைவேட்டிக் கட்டிக் கொண்டு தனது தொகுதிகளில் அதிகார பாவனையுடன் வலம் வருவதை போன்று காவல்துறையும் தனது முதலாளியிடம் வேகத்தை காட்ட முடியாமல் அவர்களது அடியாட்களிடம் சமயம் வரும் பொழுது என்கவுண்டர் தனது அதிகாரத்தை நிரூபிக்கும்.

சொல்லப்போனால் இங்கிருக்கும் குற்றவாளிகள் காவல்துறைக்கு புதிதானவர்கள் அல்ல. குற்ற செயல்களில் ஈடுபவர்கள் குறிப்பாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்துபவர்கள் அதற்குரிய கமிசனை காவல்துறையிடம் கொடுத்துவிட்டே இதனை செய்கிறார்கள். கொலை, கொள்ளையில் ஈடுபடுபவர்களும் காவல்துறையுடன் நெருக்கமானவார்களே. அதே நேரத்தில் சமயம் வரும் பொழுது அவர்களை பலிக் கொடுக்க தயங்கமாட்டார்கள் காவல்துறையினர். காவல்துறை எனும் போது அதில் இருக்கும் கீழ்நிலை காவலர்களை குறிப்பிடவில்லை அதிகாரிகளே அனைத்தையும் செய்கிறார்கள் என்பதே உண்மை.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடக்கும் தொடர் என்கவுண்டர்கள் திட்டமிட்டே நடந்து வருவதை “சென்னை மாநகர காவல்துறை ஆணையராக அருண் பதவியேற்ற பின் ரவுடியிசம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பேசுவோம்’ என்ற பதிலில் இருந்து புரிந்துக் கொள்ள முடிகிறது.

இந்த பேட்டிக்கு பின்னர் இதுவரை 4 என்கவுண்டர்கள் நடந்துள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலையை ஒட்டி நடந்த என்கவுண்டரும் அதன்பிறகு இரண்டு ரவுடிகள் மீது நடத்தப்பட்ட என்கவுண்டரிலும் துப்பாக்கி சூட்டை தவிர்த்திருக்கலாம். அல்லது காவல்துறைக்கு உள்ள வழிகாட்டுதல் படி முட்டிக்கு கீழே சுட்டிருக்கலாம் ஆனால் அது எதையும் செய்யாமல் நேரடியாக கொல்வது அதிகாரம் நம் பின்னால் இருக்கிறது என்ற பலத்தினால் தான்.

இந்த சமூகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களுக்கு அரசு பொறுப்பேற்காமல் அதனை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் என்கவுண்டர் நடத்தினால் பிரச்சினை சரியாகிடுமா என்பதே நம்முன் உள்ள கேள்வி?

இதே நடைமுறையை தான் உத்திரபிரதேசத்தை ஆளும் காவிபாசிச பாஜக அரசு செய்து வருகிறது. மக்களுக்கு என்கவுண்டர் குறித்த போதிய அரசியல் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சாமியார் யோகி ஆதித்யநாத் நடத்தும் படுகொலைகளை அம்மாநில மக்கள் ஆதரிக்கின்றனர். 6 ஆண்டுகளில் 2023 மே வரை 183 என்கவுண்டர் படுகொலைகளை நடத்தியுள்ளது யோகி ஆதித்தியநாத் அரசின் காவல்துறை. காவல்துறைக்கு கட்டற்ற அதிகாரம் வழங்கி மக்களை எந்நேரமும் அச்சத்தில் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இதுவரை 16 என்கவுண்டர்களை நிகழ்த்தியுள்ளது. உபி அரசோடு ஒப்பிடுகையில் குறைவு தான் என்றாலும் காவல்துறைக்கு இவ்வளவு அதிகாரம் வழங்குவது கட்டபஞ்சாயத்து ரவுடிக் கும்பலுக்கு வழங்குவதற்கு ஒப்பானது. ஏனென்றால் காவல்துறை என்றுமே சாமானியர்களுக்கு சாதகமாக செயல்பட்டதில்லை என்பதை நடைமுறையில் இருந்து புரிந்துக் கொள்ளலாம். தனக்கு பிடிக்காதவர்களை அதிகாரத்தை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை.

இந்தியாவில் நிலவி வரும் சமூக ஏற்றத்தாழ்வும் அதிகரித்து வரும் வேலையின்மையும் இதிலிருந்து இளைஞர்களை திசைதிருப்புவதற்கு கஞ்சா, சாராயம் உள்ளிட்ட போதை பொருட்களை சமூகத்தில் புழங்கவிடுவதின் காரணமாக குற்றவாளிகளை உருவாக்குகிறது குற்றங்கள் உருவாகும் காரணிகளை உருவாக்கும் இந்த அரசும் அதிகார வர்க்கமும். குற்றவாளிகளை ‌தண்டிப்பதில் தீவிரமாக இருப்பதாக‌ காட்டிக் கொள்ளவும் தனது குண்டாந்தடி அதிகாரத்தை நிறுவிக்கொள்ளவும் நடத்தும் நாடகமே என்கவுண்டர் படுகொலைகள்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here