பாராளுமன்றத்தில் பதவியேற்ற காங்கிரஸ் கூட்டணி எம்பிகள், அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடியே உறுதிமொழி எடுத்துள்ளனர். இது தற்போது மிகவும் தீவிரமாக ஊதி பெருக்கப்படுகிறது.

ஊடக மாமாக்களாக வலம் வரும் சவுக்கு சங்கர் போன்றவர்களை நாம் பொருட்டாக எடுக்க தேவையில்லை. அவதூறு பரப்புவதையே முழு நேரமாக செய்யும் சங்கிகள் நடத்தும் சேனல்களையும் நாம் பொருட்டாக எடுக்க தேவை இல்லை.

ஆனால் மக்கள் மீது அக்கறை கொண்டு பதிவுகளை வெளியிடும் சேனல்கள் குறித்து அப்படி அலட்சியப்படுத்த முடியாது. முற்போக்காக செய்திகளை தரும் சேனல்களில் கூட செய்தியை பரபரப்பாகி சந்தைப்படுத்தும் போட்டி மேலோங்கி உள்ளது.

வகை மாதிரிக்கு சிலவற்றை பரிசீலிப்போம். தமிழ் கேள்வி சேனல் “நாடாளுமன்றம் தொடங்கிய முதல் நாளே அதிரவிட்ட இந்தியா கூட்டணி ஆடிப்போன மோடி ” என்று தலைப்பிட்டு இருந்தது.

இதற்கு முன்னர் “ஆட்சி அமைக்கும் இந்தியா கூட்டணி! ஓகே சொன்ன சந்திரபாபு நாயுடு! “ என்று அரண்செய் ஒரு வீடியோவுக்கு தலைப்பு போட்டு வெளியிட்டிருந்தது.

TRIBES சேனலில் ஒரு வீடியோவுக்கு “கதறி அழுத தமிழிசை நாம் இரக்கப்படலாமா?” என்று தலைப்பு போட்டிருந்தார்கள்.

தமிழ்குரலில் ஒரு வீடியோவின் தலைப்பாக ” ராகுலுடன் பேசிய சந்திரபாபு. மோடியின் கதை முடிஞ்சுது. தூதுவிடும் என் டி ஏ தலைவர்கள். ராஜ்நாத் சிங் அவசர கூட்டம்” என்று போட்டிருந்தனர்.

யூடூ புரூட்டஸில் “இந்த தேர்தல் செல்லாது ஓங்கி அடித்த உச்சநீதிமன்றம். பதற்றத்தில் மோடி” என்று தலைப்பிட்டு வீடியோ போட்டுள்ளனர்.

இன்றைய தொழில் போட்டி உலகில் ஒருவர் மற்றொருவரை விஞ்சினால் மட்டுமே தாக்குப்பிடித்து பிழைத்திருக்க முடியும். சுனங்குபவர்கள் காணாமல் போவார்கள். இதற்கு மீடியாக்களும் விதிவிலக்கல்ல.

தமிழக அளவில் மீடியாக்களை எடுத்துக் கொண்டால், youtube சேனல்களை எடுத்துக் கொண்டால் சிறு விஷயங்களைக்கூட பூதாகரமாக்கி, பரபரப்பூட்டி கருத்து சொல்வதில், கருத்துருவாக்கம் செய்வதில் தமக்குள் இடை விடாமல் போட்டி போடுகின்றனர்.

நேற்று வரை EVM மோசடி குறித்து நீதிமன்றம் கடுமையாக நடவடிக்கை எடுக்கப் போவது போலவும், பல தொகுதிகளில் பாஜகவின் வெற்றி செல்லாது என தீர்ப்பு வரப் போவது போலவும் பரபரப்பூட்டினர். EVM மோசடி குறித்து வழக்கு போடப்பட்டுள்ளதையே, விசாரணைக்கு வருவதையே இப்படி ஊதிப் பெருக்குகின்றனர்.

Youtube சேனல்களின் வாசகர்கள், பின் தொடர்பவர்கள் பலரும் அவ்வப்போது பரபரப்பூட்டப்படும் செய்திகளால், அல்லது பரபரப்பை கூட்டவே இட்டுக்கட்டப்படும் தலைப்புகளால் ஈர்க்கப்படுகிறார்கள். பரபரப்புக்கு பழக்கப்படுத்தப்படும் இவர்கள் நான்கு நாட்களுக்கு முன்னர் சொல்லப்பட்டதற்கும் தற்போது நடப்பதற்கும் உள்ள தொடர்பையோ, தொடர்பற்ற தன்மையோ சிந்திக்க முடியாதபடி பலியாகின்றனர்.

youtubeசேனல்களின் ‘நெருக்கடி’ நிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்களை ஐபிஎல் இன் 20 / 20 மேட்ச் வர்ணனையாளர்களின் நிலையில் இருப்பதாக ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

அதாவது பேட் செய்யும் அணியின் பக்கம் இருந்தோ, அல்லது பந்து வீசும் அணியின் பக்கம் இருந்தோ, ஒவ்வொரு பந்துக்கும் பரபரப்பை கூட்டி வர்ணனை செய்வார்கள். அவர்கள் ஒரு முன் முடிவை ஒரு கணிப்பை கூறி வாயை மூடும் முன்னரே நேர்மாறாக விக்கெட் விழுந்திருக்கும் அல்லது சிக்சர் பறந்திருக்கும். சற்று முன் தான் பேசியது குறித்து சிறிதும் கூச்சம் இல்லாமல் கட்சி மாறி அதை புகழ்வார்கள்.

அப்படி சிறப்பாக பரபரப்பூட்டும் பேச்சாளரே சிறந்த வர்ணனையாளராக நீடிப்பார்.

கிரிக்கெட் வர்ணனையாளர்களைப் போலவே செய்தி சேனல்களும் செயல்படுகின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு வீடியோக்களை யாவது பதிவேற்ற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். எனவே கன்டன்ட்டை(content) பிடித்தாக வேண்டும்; அல்லது உருவாக்கியாக வேண்டும் என்ற நிலையிலே இப்படிப்பட்ட அற்ப விஷயங்களையும் ஊதிப் பெருக்கும் போட்டி முன்னுக்கு வருகிறது.

செய்தியை மிகைப்படுத்தி சந்தைப்படுத்தும் இந்த பொதுப் போக்கிற்கு முற்போக்காக பேசக்கூடிய, நாட்டின் நலன் கருதி தவறிழைப்பவர்களை கறாராக விமர்சிக்க கூடிய, காவி கும்பலை அம்பலப்படுத்தக்கூடிய சேனல்களும், அதில் உள்ள பேச்சாளர்களும் கூட பலியாகின்றனர் என்பதும் வருத்தத்துக்குரியது.

ஒருதகவல் கிடைத்த உடனேயே, சில மணி நேரங்களில் அது தொடர்புடைய விவரங்களை தொகுத்துக் கொண்டு, பொருத்தமான பேச்சாளரை தேர்வு செய்து ஸ்டுடியோவுக்கு வரவைத்து, கிடைத்துள்ள விவரங்களை விளக்கி ஒரு பேட்டியை எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் தவிக்கின்றனர். இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்க்க வேண்டும் என்றால், அதற்கு தரப்படும் தலைப்பு வாசகர்களை சுண்டி இழுத்தாக வேண்டும். இதில்தான் மிகைப்படுத்தல்கள் நடக்கின்றன.

படிக்க:

♦ அடிவருடி ஊடகங்களின் மூலம் அடித்து விளையாடும் பாஜக!

♦ ரூட்ஸ் தமிழ் யூடியூப் சேனல் முடக்கம் ஜனநாயக விரோதமானது! கண்டனத்துக்குரியது!

கிரிக்கெட் லைவ் ஒளிபரப்பில் வர்ணனையாளர்களின் பேச்சு நமக்கு சுவாரசியமாக இருப்பது உண்மைதான். அதையே ஒரு வாரம் கழித்து மீண்டும் பார்த்தால் சலிப்பூட்டும் அர்த்தமற்ற பேச்சாகவே தெரியும். இதை அனுபவத்தில் உணர்ந்ததால்தான் முக்கியமாக ஹைலைட்டை மட்டுமே நாம் பார்க்க விரும்புவோம். அந்த மட்டத்திற்கு தற்போது வந்து குவியும் செய்திகளின் வீடியோக்களின் பதிவுகள், அதற்கு அவர்கள் வைக்கும் தலைப்புகள் தரம் தாழ்கின்றன.

அச்சு ஊடகத்தைக் காட்டிலும் தற்போதைய இணைய வசதிகளின் மூலம், காணொளிகள் மூலம் யூடியூப் சேனல்கள் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வகையில் தீவிரமாக வினையாற்றும் சேனல்களுக்கு, தீவிரமாக பதிவிடும் முகநூல்களுக்கு அவ்வப்போது தடைகள் போடப்பட்டு முடக்கப்படுகின்றன. இதையும்தாண்டித்தான் சமூக ஊடகங்களில் வலைத்தளங்களில் கருத்துப் பரிமாற்றம் நடந்து வருகிறது.

இந்த சூழலில் நமது இருப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தொழில் போட்டி காரணமாக, சிறு விஷயங்களை பூதாகரமாக்கி பரபரப்பூட்டுவதன் மூலம் வாசகர்களை நாம் போலி நம்பிக்கைக்கு தள்ளுவது கவலைக்குரியது. ஒரு லட்சம் வாசகர்களையாவது SUBSCRIBE செய்து பின் தொடர வைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் யூடியூப் சேனல்கள் இயங்கி வருகின்றன. அப்பொழுதுதான் அதிலிருந்து வருவாய் ஈட்டி, தமது நடைமுறை நிர்வாக செலவுகளை சமாளிக்க முடியும் என்ற எதார்த்தம் அவர்களை போட்டிக்குள் தீவிரமாக தள்ளுகிறது.

எனவே ஒரு கருத்தையோ, கண்ணோட்டத்தையோ, நிலைப்பாட்டையோ சொன்னால் அதற்கு பொறுப்பெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளின் பிரதிநிதிகளை காட்டிலும், இப்போதைய பரபரப்புக்கு தீனி போடும் வகையில் எப்படி வேண்டுமானாலும் கருத்தை மாற்றி மாற்றி பேசிக் கொண்டே செல்லலாம் என்று சுதந்திரமாக கருத்து கூறும் தனிநபர்களையே அதிகமாக பேச வைக்கின்றனர்.

மாறாக சந்தை போட்டிக்கு பலியாகாமல், எதார்த்தத்தில் உள்ளதை அறிவியல் பூர்வமான அணுகுமுறையில் பரிசீலித்து, பொருத்தமானதை வாசகர்களுக்கு தருவதுதான் ஊடக அறமாக இருக்க முடியும். ஒருவேளை பரபரப்புக்கு பலியானவர்கள் அதை உணர்ந்தால் மொத்தமாக முற்போக்கு சேனல்களின் மதிப்பும் கூட குறையவே செய்யும். மேலும் அவர்கள் சேனல்களையே புறக்கணிக்கும் அபாயமும் உள்ளது. இதனால் வெளியேறுபவர்களுக்கு ஈடாக புதியவர்களை ஈர்த்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் youtube சேனல்களுக்கு அதிகரிக்கும். மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுபவர்கள் தொழில் போட்டிக்கு பலியாகாமல் தம்மை நிதானித்துக் கொள்வது அவசியம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here