தேனி மாவட்டம் அணைக்கரை பட்டியில் பிறந்த விஜயகுமார் என்ற சாதாரண குடும்பத்தை சார்ந்த நபர் போலீசு வேலையில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி டி ஐ ஜி பதவி வரை உயர்வு பெற்று இருக்கிறார். போலீஸ் வேலையில் இருக்கும் ஒருவர் தான் செய்யும் தவறுகளை பற்றி சுய பரிசோதனை செய்வது என்பது எப்போதாவது நடக்கின்ற ஒரு அதிசயமாகும்.

டி ஐ ஜி விஜயகுமார் திருவாரூர் மாவட்டத்தில் வேலை செய்த போது தனக்கு ஒத்துழைப்பு நல்கிய போலீஸ்காரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் தான் பணியாற்றிய காலத்தில் மூர்க்கமாக நடந்து கொண்டிருந்தால், அது வேலை நிமித்தமாக ஏற்பட்டதுதானே ஒழிய தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக நிகழ்ந்தது அல்ல” என்று வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அப்படிப்பட்ட ஒருவருக்கு மன நோய் எவ்வாறு ஏற்பட்டது என்ற விசாரணை மற்றும் புலனாய்வு பல கோணங்களில் ஊடகங்களில் நடத்தப்படுகிறது.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த 2009ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். முதன்முதலாக வள்ளியூரில் ஏஎஸ்பியாக பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார்.

பின்னர் சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.

போலீஸ்காரருக்கு மட்டுமல்ல சாதாரண மனிதர்கள் யாருக்கும் மனநோய் என்பது வரக்கூடாது மனநோய் என்பதெல்லாம் ஒரு கற்பனை. அதுவும் லட்சியவாதம் பேசுகின்ற மனிதர்களுக்கு மனநோய் வரவே கூடாது என்று உளறி திரிகின்றனர் சில மாங்காய் மடையர்கள்.

“மனிதனாய் பிறக்கும் அனைவருக்குமே மன அழுத்தம் இருக்கும். ஏனென்றால், நாம் எல்லோருமே மகிழ்ச்சியாக, பிரச்னைகளே இல்லாத ஒரு வாழ்வை தேடிச் சென்று கொண்டிருக்கிறோம். அப்படியில்லாமல், பிரச்னைகளும் இருக்கும் அதுதான் வாழ்க்கை என்று உணர வேண்டும். சில பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு. சில பிரச்னைகளுக்குத் தீர்வில்லை. சில பிரச்னைகளுடன் வாழப் பழகவேண்டும். எப்போதும் தனிமையாக இல்லாமல், யாராவது ஒருவரிடமாவது மனம் விட்டுப் பேச வேண்டும் அப்படி இருந்தால் மன அழுத்தங்களை குறைக்க முடியும்”. என்கிறார் மன அழுத்தம் குறித்து மருத்துவத்தை மேற்கொண்டு வரும் மனநல மருத்துவர் அசோகன்.

நவீன ஏகாதிபத்திய முதலாளித்துவ காலகட்டத்தில் மீமிகு உற்பத்தி என்ற முறையில் குறுகிய நேரத்தில் எண்ணிக்கை கூடுதலாக பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நெருக்கடி தொழிலாளி வர்க்கத்தின் மீது சுமத்தப்படுவதைப் போல சமூகத்தில் உள்ள அனைவரின் மீதும் வேகமான வாழ்க்கை, உடனடி தீர்வு என்பதை முன் வைக்கும் கலாச்சாரம் திணிக்கப்படுகிறது.

குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நீண்டகால அடிப்படையில் சிந்திப்பது, தொலைநோக்குப் பார்வை போன்ற அம்சங்கள் அனைத்தும் அர்த்தமற்றது. ஏனென்றால் கொரோனா போன்ற கொடிய நோய்கள் திடீரென்று ஒரு சில நாட்களுக்குள் மரணத்தை தோற்றுவிக்கிறது என்பதால் இப்போதே மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அதற்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். அப்படி கூடுதலாக பணம் கிடைக்கின்ற தொழில் அல்லது வேலை எதுவாக இருந்தாலும், அதில் வரக்கூடிய அழுத்தங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு சம்பாதிப்பது, அதை வைத்துக்கொண்டு அந்த கணம் அல்லது அந்த வாரம் திருப்தியாக வாழ்வது என்பதே நடைமுறையாக மாற்றப்பட்டு வருகிறது.

இத்தகைய கொடூரமான சமூக சூழலில் வசிக்கின்ற ஒருவர் தன்னுடைய வேலைச் சுமையின் காரணமாகவோ அல்லது தனது குடும்பத் தேவைக்கு ஏற்ப தன்னால் சம்பாதிக்க முடியாத வேலையே கிடைக்கின்றது என்ற நிலை உருவாகின்ற போது கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றார். அதுபோல சமூகத்தில் நிலவும் உயரிய விழுமியங்களுக்கு மதிப்பு கொடுத்து வாழ்கின்ற மனிதர்களுக்கும் மன அழுத்தம் உருவாகிறது என்பதுதான் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளின் முடிவாகும்.

“மன அழுத்தம் என்பது நமது எண்ணம் சற்று நிலைகுலைந்து போவது. பல காரணங்களால் நமக்கு மன அழுத்தம் வரும். இது மனிதன் தன்னுடைய வாழ்கையில், தான் எதிர்பாராத விதமாக ஏதாவது நடந்தால் வரும். எடுத்துக்காட்டாக நன்றாக படிக்கும் ஒரு மாணவன் தேர்வில் தோல்வி அடைந்தாலோ, அல்லது நெருக்கமான யாராவது இறந்து விட்டாலோ, இத்தகைய சூழலில் அதை நம் மனம் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதால் நாம் மன அழுத்தத்திற்குள் செல்கிறோம். மன அழுத்தம் உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், மன ரீதியாகவும் வரலாம். இதை ஆங்கிலத்தில் REACTIVE DEPRESSION என்பார்கள் இவை ஏதாவது பிரச்னைகளால் வருவது.

ஆனால், பிரச்னைகள் இல்லாமலும் மன அழுத்தம் வரும் அதனை ஆங்கிலத்தில் ENDOGENOUS DEPRESSION என்பார்கள் இது குடும்பத்தில் அல்லது நெருங்கிய தொடர்புடைய சொந்தம் யாராவது மன அழுத்தத்தில் இருந்தாலோ, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாலோ, பரம்பரையாக அவர்கள் குழந்தைகளுக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது. இது காரணங்களே இல்லாமல் உடலில் ஏற்படும் சில மாறுதல்களால் வருவது. மொத்தமாக 30-40 வகையான மனஅழுத்தங்கள் உள்ளன. ஆனால், அடிப்படையாக REACTIVE DEPRESSION, ENDOGENOUS DEPRESSION இரண்டும் தான் இருக்கின்றது”. என்று மன அழுத்தத்தில் உள்ள பல்வேறு வகைகளை இனம் பிரித்து விளக்குகிறார் மருத்துவர் அசோகன்.

தன்னுடன் இருந்து கொண்டே தனக்கு எதிராக குழிபறிக்கின்ற சிலரை கண்டவுடன் அல்லது சிலரிடம் பேசியவுடன் மன அழுத்தம் என்ற நோய் தானாகவே அதிகரிக்கும். தன்னுடன் வேலை செய்பவர்களின் தகாத செயல்களை தொடர்ச்சியாக அவதானிக்கும் ஒருவர் தனக்கு மன அழுத்தம் தோன்றியதற்கு என்ன காரணம் என்று யாராவது கேட்டால் “என்னைச் சுற்றி ஒரே துரோகிகளாக இருக்கின்றனர். ஆகவே எனக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளது” என்று பதிலாக கூறுவார்கள்.

இதைத்தான் மன அழுத்தம் என்ற நோய் என்று வரையறை செய்கிறார்கள். மனநல மருத்துவர்கள் அவர்கள் கூறுகின்ற முக்கியமான விஷயம் இங்கு கவனிக்கத்தக்கது மனிதர்களுக்கு மன அழுத்தம் வரும் என்று கூறுவதன் மூலம் உண்மையான மனித உணர்வு உள்ள யாரும் இது போன்ற நோய்களிலிருந்து தப்ப முடியாது என்பது புலனாகிறது.

சமூகத்தின் விழுமியங்கள், பண்பாடுகள் மற்றும் தனது பணியிடத்தில் விதிக்கப்படும் விதிகள் ஆகியவற்றை நேர்மையாக கடைபிடிக்க வேண்டும் என்று சிந்திக்கின்ற எவருக்கும் இப்படிப்பட்ட நோய் வருவது ஆச்சரியம் இல்லை.. ஆனால் வள்ளலார் கூறுவதைப் போல உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் யாருக்கும் மனநோய் வருவதில்லை. ஏனென்றால் அவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வதற்கு கூச்சப்படுவதில்லை அல்லது யாருக்கும் தெரியாமல் சாமர்த்தியமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற துணிச்சலில் அவர்களுக்கு மனநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதே இல்லை.

அறிவியல் ரீதியாக ஏன் இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதையும், அது என்ன விளைவுகள் ஏற்படுத்தும் என்பதையும் பற்றி தமிழ் இந்து பத்திரிகையில் மனநல மருத்துவர் செல்வராஜ் எழுதியிருந்த செய்தியை பார்ப்போம்.

மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை அழித்துவிடும். ‘கார்டிசோல்’ என்பது ப்ரைமரி மன அழுத்த ஹார்மோன். மன அழுத்தம் ஏற்படும்போது, இது சுரப்பதால் எதிர்ப்பு சக்திகளை அடக்கி விடுகிறது. மேலும், இன்ஃப்ளமேட்டரி வழியையும் சிதைக்கிறது. இதனால் உடல் பேக்டீரியா மற்றும் வைரஸுடன் போராட முடியாமல் உடல் சீரற்று போய்விடும்.

  • மன அழுத்தத்தால் தசை மற்றும் எலும்பு பகுதிகளும் பாதிப்படையும். இயல்பாகவே உடலின் சதைப் பகுதி, உடலின் உட்புற பாகங்களை பாதுகாக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஆனால், மன அழுத்தம் ஏற்பட்டால் தசைப் பகுதிகள் வலுவிழக்கும் மற்றும் தோள்பட்டை, கழுத்து, முதுகு பகுதிகளில் வலி ஏற்படும். தலைவலி பலமாக இருக்கும்.
  • மன அழுத்தத்தினால் இரத்த ஓட்டம் அதிகமாகும். மனம் திரும்ப பழைய நிலைக்கு வந்துவிட்டால், சரியாகிவிடும். ஆனால் தொடர்ந்து ஒரு நபர் ஒரே விஷயத்தாலோ அல்லது ஒரே அளவில் மன அழுத்தத்தில் இருந்தால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • மன அழுத்தத்தினால் நாளமில்லா அமைப்பு பாதிக்கப்படும். நாளமில்லா அமைப்பு உடலில் அதிக வேலை செய்கிறது. சிந்தனை, திசுக்களின் செயல்பாடுகள், மெட்டாபாலிஸம் இதனால் பாதிக்கப்படும். மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ், நாளமில்லா அமைப்புடன் நரம்பு மண்டலத்தை இணைக்கிறது. மன அழுத்தம் ஏற்படும்போது இதுதான் கார்டிசோலை தூண்டுகிறது.
  • மன அழுத்தம் ஏற்படும்போது இரைப்பை குடலில் பாதிப்புகளும் ஏற்படும். சரியான செரிமான இருக்காது. மன அழுத்தத்தின் போது உணவுப் பழக்கம் மாறும். அதை இரைப்பை ஏற்காது. இதனால் வயிறு வலி, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்: மனமே! ரிலாக்ஸ் ஆகாதே ப்ளீஸ்

மன அழுத்தத்தின் விளைவாக இனப்பெருக்க அமைப்புகள் பாதிக்கப்படும். தொடர் மன அழுத்தத்தால் டெஸ்டோஸ்டெரோன் மற்றும் ஸ்பெர்ம் உற்பத்தியாவது பாதிக்கப்படும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படும்’’ என்கிறார் மனநல மருத்துவர் செல்வராஜ்.

“என் மகன் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் தனது வேலையை செய்து வந்தான்” என்று அவரது உடலின் மீது விழுந்து கதறி அழுதுள்ளார் டி ஐ ஜி விஜயகுமாரின் தாயார். இதுதான் அவர் எதிர்கொண்ட பிரச்சனை என்றே மதிப்பிட முடிகிறது. சமூகத்தின் விழுமியங்களுக்கு அச்சப்பட்டு வாழ்கின்ற வாழ்க்கையே அவருக்கு இந்த மன அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.

இன்றைய நவீன உலகத்தில் சாதாரண வாழ்க்கை வாழ்வது என்பதே பெரும் பாடாக உள்ளது. யாருக்கு மன நோய் வரும் என்பதை எல்லாம் ஆருடம் கூற முடியாது என்ற போதிலும், சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ள முயற்சிக்கும் நபர்கள் இத்தகைய சிக்கலில் அதிகம் பாதிக்கப்படாமல் தப்பலாமே ஒழிய உண்மையான மனித உணர்வு கொண்டவர்களுக்கு அதாவது சமூகத்தின் விழுமியங்கள், பண்பாடுகள் போன்றவற்றின் மீது நேர்மையான மதிப்பீடு கொண்டவர்களுக்கு மனநோய் உருவாவதை தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனமாகும்.

  • செல்வம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here