
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் அரியநாயகபுரம் கிராமத்தை சார்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தேவேந்திர ராஜாவை ஆதிக்க சாதிவெறியர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் அம்மாணவன் படுகாயம் அடைந்துள்ளான்.
இப்போதெல்லாம் சாதிவெறி மாணவர்கள் மத்தியிலும் ஊடுருவ ஆரம்பித்து விட்டது. நாங்குநேரியில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த மாணவன் நன்றாக படிக்கிறான் என்ற ஒரே காரணத்திற்காக வெட்டினர். சிவகங்கையில் இளைஞன் புல்லட் ஓட்டியதற்காக வெட்டினார்கள். 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை சக நண்பனே சாதிய காரணத்திற்காக முட்புதரில் தள்ளிய நிகழ்வும் இங்கு தான் நிகழ்ந்தது.
தற்போது தேவேந்திர ராஜா மீதான தாக்குதல், கபடிப் போட்டியில் தேவேந்திர ராஜா பங்கேற்ற அணி வெற்றி பெற்றது என்ற காரணத்திற்காக கடந்த 10 ஆம் தேதி பள்ளிக்கு பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த மாணவனை பொதுமக்கள் மத்தியில் கீழே தள்ளி சராமாரியாக தலையிலும் கையிலும் வெட்டியுள்ளது ஆதிக்க சாதிவெறி கும்பல். இந்த தாக்குதலில் கடும் காயத்துடன் மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளான்.
விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அதிலும் சாதியை நுழைத்து குளிர்காய்கிறது சாதிவெறி அமைப்புகளும், கட்சிகளும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடக்கும் போட்டியை இந்தியா – பாகிஸ்தான் யுத்தம் என்ற அளவுக்கு சித்தரித்து தேசிய வெறியூட்டுகிறது ஒரு கும்பல். இந்திய அணி வெற்றியைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் மசூதிகளுக்கு அருகில் கூச்சலிடுவது, வழிபாட்டில் இடையூறு செய்து கலவரத்தைத் தூண்டுவது ஆகிய வேலைகளில் காவிக் கும்பல் ஈடுபடுகிறார்கள்.
விளையாடும் இருநாட்டு வீரர்களும் அதற்கு பலியாகாமல் சகோதரத்துவத்துடனே பழகுகிறார்கள். ஆனால் பார்க்கும் ரசிகனின் மனநிலையை வேறாக மாற்றி வைத்திருக்கிறது ஆளும் வர்க்கம். அதே நிலை தான் உள்ளூரில் நடைபெறும் விளையாட்டிலும் அரங்கேற்றப்படுகிறது. விளையாட்டில் வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் தோல்வியுற்ற இளைஞர்களை கீழ்சாதிகாரனிடம் தோற்று விட்டாயே என உசுப்பி விட்டு அவனை சமூகத்தில் சாதிவெறியனாக மாற்றும் வேலையை செய்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல். இதைப்பார்த்து நமது 2000 வருட உழைப்பு வீண் போகவில்லை என்று குதூகலிக்கிறது பார்ப்பனியம்.
படிக்க:
🔰 நாங்குநேரி- பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை மீதான சாதிவெறித் தாக்குதல்! |பத்திரிக்கை செய்தி
🔰 தமிழகத்தில் அதிகரித்து வரும் பட்டியலின மக்கள் மீதான ஒடுக்குமுறை! முடிவு கட்டு!
தென்மாவட்டங்களில் சாதிய தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இது தமிழகம் முழுவதும் பரவுவதையே இந்துத்துவ கும்பல் விரும்பும். சாதிவெறி அரசியலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயலும். படிக்கும் மாணவர்களிடம் சாதிய எண்ணங்கள் துளிர்விடும் பொழுதே அரசு அதனை அவர்களது சிந்தனையில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். சமூக நீதி அரசு என்ற பெயரில் இட ஒதுக்கீடு, இந்தி திணிப்பு போன்ற விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. சாதி ஒழிப்பின் அவசியத்தை உணர்த்தும் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் சாதிய சிந்தனை அடுத்த தலைமுறையிடம் வேரூன்றுவதை தடுக்க முடியாது.

மறுபுறம், சமூகத்தில் நிலவும் வேலையின்மை, நிலையற்ற வாழ்க்கை நிலைமை – விழுமியங்கள் அற்ற உதிரி கும்பல் ஒன்றை எல்லா தளத்திலும் உருவாக்கி வருகிறது. அதனை பயன்படுத்திக் கொள்ளும் சாதிவெறி, மதவெறி கும்பல் தங்களுக்கான அடியாட்களாக அவர்களை பயன்படுத்துகிறது. இப்படிப்பட்ட உதிரி கும்பல் உருவாவதை தடுப்பதும், சாதிவெறி, மதவெறி அமைப்புகளைத் தடை செய்வதுமே அதிகரித்து வரும் சாதிய வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும்.
அதனை இன்றுள்ள காவிமயமான, ஆதிக்க சாதி மனநிலை கொண்ட அரசு கட்டமைப்பைக் கொண்டு மாற்ற முடியாது. சாதி ஒழிப்பைத் தனது திட்டமாக கொண்ட புதிய அரசு கட்டமைப்பை நிறுவுவதே தீர்வாக அமையும்.
- நந்தன்
எதிர்பார்த்த கட்டுரை வந்தது குறித்து மகிழ்ச்சி. சுருக்கமாயினும் நறுக்குத் தெறித்தாற்போல் உணர்த்தியுள்ளது.